தென் சீனக் கடல் பகுதியில் புதிதாகப் பெரும் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெஃப்ரி போல் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை கூறியது: தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகள் பகுதியில் பெரும் அளவில் மண்ணை நிரப்பி, புதிதாகப் பெரிய தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருகிறது.அங்கு விமான தளம் அமைக்கும் விதத்தில் தீவு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தக் கடற்பகுதியில் பல்வேறு இடங்களில் மணலை நிரப்பி, நிலப் பரப்பை சீனா விஸ்தரித்து வருகிறது. எனினும், இந்தக் குறிப்பிட்ட தீவில் நடைபெறும் பணி மூலம், விமான தளம் அமைக்கும் அளவுக்கான புதிய நிலப் பரப்பை அந்நாடு உருவாக்குகிறது.
இதைத் தவிர, பெரிய எண்ணெய் சரக்குக் கப்பல்களும் போர் கப்பல்களும் நிறுத்தும் அளவுள்ள ஒரு துறைமுகம் அந்தத் தீவின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது என்றார் அவர். கடந்த மூன்று மாதங்களாக, மணல் வாரும் பெரும் இயந்திரங்கள் மூலம் மணல் நிரப்பி ஏறத்தாழ 3 கி.மீ. நீளம், 200-300 மீட்டர் அகலத்துக்கு ஒரு தீவை சீனா உருவாக்கி வருகிறது என்று ஜேன்ஸ் டிஃபன்ஸ் என்கிற பாதுகாப்புத் துறை விவகாரங்களுக்கான பிரபல ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்தில் ஃபயரி கிராஸ் என்ற பகுதியில், 3 தீவுகளை சீனா உருவாக்கியுள்ளது. நான்காவதாக உருவாக்கி வரும் தீவு தொடர்பான பணிகள் கடந்த 12 முதல் 18 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.இதன் நிலப் பரப்பு முன்னர் உருவாக்கியதைவிட மிகப் பெரியதாகும் என அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. வியத்நாமுக்கு கிழக்கே, தென் சீனக் கடலில் அமைந்துள்ள ஸ்ப்ராட்லி தீவுக் கூட்டத்துக்கு, சீனா, வியத்நாம், தைவான், பிலிப்பின்ஸ், மலேசியா, புருணை சொந்தம் கொண்டாடி வருகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.