BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 April 2014

சேலத்தில் மோடியிடம் விஜயகாந்த் 7 அம்ச கோரிக்கைகள் நிறைந்த மனுவை அளித்தார்

தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சேலத்தில் தேமுதிகவுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவரிடம் விஜயகாந்த் ஒரு மனுவை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

'இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்லத் தேவையான நேர்மையும், தைரியமும், தேசப்பற்றும் கொண்ட தலைவர் நீங்கள். நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி. விரைவில் பிரதமராகப் போகும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் வரலாறு காணாத குடிநீர் மற்றும் மின்வெட்டுப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினையால் விவசாயம் நலிந்து விட்டது. மின்சாரப் பற்றாக்குறையால் பல சிறு, குறு தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் முடங்கிவிட்டன. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்ததால் அவர்கள் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.

மேலும், பெரும்பாலான இளைஞர்கள், பெண்கள் சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை குறைந்து வாழ்கிறார்கள். அதிமுக, திமுக ஆட்சிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இவர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து விட்டது.

விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் ஏழைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து, அவர்களை மேலும் பரம ஏழைகளாக மாற்றிவிட்டது.

விரைவில் தங்கள் தலைமையில் அமைய உள்ள மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள கீழ்க்கண்ட முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

* குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.

* நதிகளை இணைத்து தேசிய மயமாக்கி, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் செய்ய வேண்டும்.

* தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

* கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.

* தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

* அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அரசுப் பள்ளி, கல்லூரிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.

இவை மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமையும் அரசு செய்யவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று அந்த மனுவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஐ.பி.எல். வழக்கில் குற்றச்சாட்டுகளை பார்த்தும் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது-உச்சநீதிமன்றம்


ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசாரணையின் போது நீதிமன்றம் கூறியதாவது: "ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் விசாரணை முடியும் வரை பிசிசிஐ தலைவராக தொடர முடியாது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீதான விசாரணையை பிசிசிஐ மேற்கொள்ள வேண்டும். குற்றச்சாட்டுகளை கண்டும் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது. ஐபிஎல் சீசன்-7 போட்டிகளுக்கு தலைமை செயல்பாட்டு அதிகாரியாக தொடர சுந்தர் ராமனுக்கு அனுமதி வழங்கப்படுகிறது". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக சுந்தர்ராமன் தொடர பீகார் கிரிக்கெட் வாரியம் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், பிசிசிஐ இடைக்கால தலைவர் காவஸ்கார், சுந்தர்ராமன் ஐபிஎல் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக தொடர ஆட்சேபனை தெரிவிக்காததால் சுந்தர் ராமனுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு நாளில்கூட பூத் சிலிப்பை பெறலாம்

மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தல் நடக்கும் ஏப்ரல் 24-ம் தேதியன்று கூட பூத் சிலிப்களை வாக்கா ளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார். இது குறித்து நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட 13.62 லட்சம் பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை இப்பணிகள் நடக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டும், பூத் சிலிப் பெறாதவர்கள், தேர்தல் நடக்கும் நாளில்கூட பூத் சிலிப்பை பெற்றுக்கொள்ளலாம். வாக்குப் பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வெளியே தேர்தல் அலுவலர்கள் அவற்றை விநியோகம் செய் வார்கள். அதைப் பெற்று தேர்தலில் வாக்களிக்கலாம். இதுதவிர, வாக்காளர் அட்டையில் புகைப்படம் மாறியிருப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்பட அடையாள அட்டையில் புகைப்படம் சரியாக இல்லாவிட்டாலோ, வேறு பிரச்சினைகள் இருந்தாலோ வாக்காளர்கள் புகைப்பட ஆதாரத்துக்காக 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் அசலை எடுத்துவர வேண்டும்.

புதிய தொகுதிக்கு ஒருவர் குடிபெயர்ந்திருந்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால் போதும். அவர் தனது பழைய தொகுதியில் வழங்கப்பட்டிருக்கும் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு வாக்களிக்கலாம். ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

மோடி தனக்கு சாதகமான தொகுதியைத்தான் தேர்வு செய்துள்ளார். என்னை போல கட்சியின் பலம் இல்லாத தொகுதியை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும்-நக்மா

காங்கிரஸ் சார்பில் உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மக்களவைத் தொகுதியில் நடிகை நக்மா போட்டியிடுகிறார். அவர் இன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சத்ய நாராயணனை ஆதரித்து வாக்கு சேகரித்தபோது, "நாட்டில் எங்கும் மோடி அலை எல்லாம் வீசவில்லை." என்று கூறினார்.

மேலும் அவர் மோடி தனக்கு மிகவும் சாதகமான தொகுதியைத்தான் தேர்வு செய்துள்ளதாகவும், வாரணாசி தொகுதியில் பாஜக நல்ல நிலைமையில் உள்ளதால், அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கி, நாடெங்கும் மோடி அலை வீசுகிறது என்று கூறுவதில் பொருள் இல்லை என்றும் நக்மா கூறினார். த‌ன்னைப் போல கட்சியின் பலம் இல்லாத தொகுதியை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது மேலும் நக்மா பேசியது:

மத்தியப் பிரதேசமும், குஜராத்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில் முன்னிலை வகிக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில், சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் 4 வயது குழந்தைகூட பலாத்காரத்தால் பாதிக்கப்படுகிறது. ஊழலுக்கும் இந்த மாநிலம் குறைந்தது அல்ல. சுரங்க ஊழல், முதியோர் ஓய்வூதியம், நில அபகரிப்பு, போட்டித் தேர்வு முறைகேடு என அனைத்து விதமான ஊழல்களும் இங்கு நடந்துள்ளன.

போட்டித் தேர்வு முறைகேட்டால் 75 லட்சம் குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக மத்தியப் பிரதேச அரசு ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை?

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அரசு சிபிஐ மூலம் விசாரணையை மேற்கொண்டு, உண்மைகளை வெளியே கொண்டுவரும் என்றார் நடிகை நக்மா.

சென்னையில் ஜெயலலிதா 3 நாட்கள் வீதிவீதியாக வேனில் சென்று தீவிர பிரச்சாரம்

முதல்வர் ஜெயலலிதா வரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) முதல் சென்னையில் 3 மக்களவைத் தொகுதிகளிலும் ஆலந்தூர் சட்ட மன்றத் தொகுதியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார். 19-ம் தேதி மாலை போயஸ் கார்டனில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும் ஜெயலலிதா, ஆலந்தூர் சட்ட சபைத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து தில்லை கங்கா நகர், ஆலந்தூர் நீதிமன்றம், ஆகிய இடங்களில் பேசுகிறார். பின்னர் மத்திய சென்னை தொகுதியில் எம்எம்டிஏ காலனி மெயின் ரோடு வழியாக சென்று ரசாக் கார்டன் சந்திப்பிலும் அயனாவரம் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சூளை வழியாக வந்து சூளை தபால் நிலையம் அருகிலும் பின்னர், வால்டாக்ஸ் சாலை சந்திப்பு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு ஆகிய இடங்களிலும் உரையாற்றுகிறார்.

ஏப்ரல் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். திருவொற்றியூர் தேரடி, மணலி நெடுஞ்சாலை சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர், பெரவள்ளூர் சந்திப்பு ஆகிய இடங்களில் உரையாற்றுகிறார்.

அதைத் தொடர்ந்து 21-ம் தேதி தென் சென்னை தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடி, சைதாப்பேட்டை ஐந்து விளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், தி.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பேசுகிறார்.

நாங்கள் வெளியேறியதை மக்கள் பாராட்டுவார்கள் என்று நினைத்தோம் , ஆனால் மக்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

மோடியை எதிர்த்து போட்டியிடும் கெஜ்ரிவால் வாரணாசியில் அடுத்த மூன்று வாரம் அங்கே தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார் . வாரணாசியில் பல இடங்களில் அவரை எதிர்த்து பதாகைகள் இருந்தன .

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் , நாங்கள் பதவியை தியாகம் செய்து தவறு செய்துவிட்டோம் . கொள்கைக்காக தான் பதவியை துறந்தோம் . பதவி ஏற்கும் முன் மக்களை சந்தித்ததுப் போல பதவியை துறக்கும் முன்னரும் மக்களிடம் பேசி விளக்கியிருக்க வேண்டும் . பாஜக , காங்கிரசு இணைந்து செயல்பட்டதால் அவசரமாக பதவியை விட்டு விலகினோம் . நான் முதல்வர் பதவியிலேயே இருந்து இருக்கலாம் ஆனால் என் மனசாட்சி அனுமதிக்கவில்லை என்றார் .

காங்கிரஸ் கட்சி தமிழர்களின் தற்போதைய எதிரி, பாரதீய ஜனதாவோ பரம்பரை எதிரி

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து திருச்செங்கோட்டில் 'நாம் தமிழர்' கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், "காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் தற்போதைய எதிரி, பாரதீய ஜனதாவோ பரம்பரை எதிரி." என்று கூறினார்.

பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:

நமது தொப்புள் கொடி உறவுகள் 1½ லட்சம் பேரை கொன்ற பிறகும் இலங்கையை நட்பு நாடு, ராஜபக்சேவை நண்பன் என்கிறது காங்கிரஸ் அரசு. அதையே தான் தனது வெளியுறவு கொள்கை என பாரதீய ஜனதாவும் சொல்கிறது. 840 தமிழக மீனவர்களை கொன்றதற்கு இந்த இரண்டு கட்சிகளும் ஏதாவது எதிர்ப்பு காட்டி உள்ளதா? ஏதாவது போராட்டம் நடத்தி உள்ளதா? கச்சத்தீவு பிரச்சினையிலும் 2 கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

வணிகம் செய்ய வந்தவன் நாட்டை பிடித்தான், அவனுக்கு எதிராக போராட காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், பிறந்தார்கள். இன்று அப்படி ஒருவன் பிறப்பது தெரிந்தால் கருவிலேயே அழித்து விடுவார்கள். இந்தியாவில் 47 கோடி பேர் ஒரு வேளை உணவுக்கு வழியில்லாதவர்களாக இருக்கிறார்கள்.  பணக்கார இந்தியா, நடுத்தர இந்தியா ஏழை இந்தியா என இந்த மூன்றில் எந்த இந்தியாவுக்கு மோடி பாடுபடப் போகிறார்?  கப்பல் வழியாக வந்தவர்களை விரட்டி விட்டு விமானத்தில் வருகிறவர்களை வரவேற்கிறோம்.

ஒட்டுமொத்த தமிழினத்தை கொன்று குவிக்க காரணமாக இருந்தது காங்கிரஸ் கூட நின்று கும்மி அடித்தது திமுக. இவர்களுக்கு பாடம் புகட்ட எங்களுக்கு கிடைத்த கருவி அதிமுக ஆயுதம் இரட்டை இலை.

மீத்தேன் வாயுத்திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். கமிஷனுக்காக ஒப்பந்தம் போட்டது திமுக. 6 மாவட்டத்தை சேர்ந்த 60 லட்சம் மக்களின் மண்ணையும் வாழ்வையும் காக்க, அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது அ.தி.மு.க.

இலங்கையில் 1½ லட்சம் தமழிர்களை கொன்ற சிங்கள ராஜபக்சே அரசுக்கு தடை, சிறையில் வாடும் 7 பேரின் விடுதலைக்கு சிறப்பு தீர்மானங்கள் என நன்மைகளை செய்த அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

முள்வேலி முகாம்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் இருந்து இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் நிறைவேற்றி தருவார் என நம்புகிறேன்.

இவ்வாறு சீமான் பேசினார்.

மக்களை ஏமாற்றும் கருணாநிதியின் கதை, வசனம் எல்லாம் இனிமேல் எடுபடாது- சரத்குமார்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர் ராஜாவை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

இந்த‌ தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தாக 120 கோடி மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக உள்ளது. காரணம் 10 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கி உள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டின் வளர்ச்சி என்றால் அந்த நாடு பொருளாதாரரீதியாக வளர்ச்சி அடைய வேண்டும். அந்த நாட்டில் ஏழைகளே இல்லாத நிலை இருக்க வேண்டும். உலகத்திலேயே 25 நாடுகள் தான் உண்மையான ஜனநாயக நாடுகளாக இருக்கின்றன. நமது நாடு அந்த பட்டியலில் இல்லை. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வாழ்கின்ற 53 நாடுகள் குறையுள்ள ஜனநாயகம் உள்ள நாடுகளாக உள்ளன. இந்த குறையுள்ள நாடுகளில் தான் இந்தியா உள்ளது.

இந்திய அரசு தமிழக மீனவர் பிரச்சினையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. மீனவர்களை காக்க முதல்வ‌ர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தவர் இந்திராகாந்தி. அதற்கு துணையாக இருந்தவர் கருணாநிதி. தற்போது கருணாநிதி கச்சத்தீவை மீட்போம் என்று கூறுகிறார். மக்களை ஏமாற்றும் அவரின் கதை, வசனம் எல்லாம் இனிமேல் எடுபடாது.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, எல்லையில் ஊடுருவலை தடுப்போம் என்று முதல்வ‌ர் ஜெயலலிதா உறுதிபட கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஊழல் கட்சிகளை விரட்டியதுபோல இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கட்சிகளை விரட்டியடிக்க வேண்டும்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது குஜராத் எந்த துறையிலும் வளர்ச்சி பெறாத மாநிலம்- தங்கபாலு

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாஜக. பிரதமர் வேட்பாளர் மோடி, அவர் முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலத்தை பற்றி பல தவறானதகவல்களை தெரிவித்து வருகிறார்.

உண்மையில் குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலம் அல்ல. தொழில் துறை வளர்ச்சியில் குஜராத் 5-வது இடத்தில்தான் உள்ளது. முதலாளிகளுக்காக விவசாயிகள் நிலத்தை பறித்து ஆட்சி செய்பவர்தான் மோடி. அங்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் 27 சதவிகிதம் மக்கள் வசித்து வருகின்றனர். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது குஜராத் எந்த துறையிலும் வளர்ச்சி பெறாத மாநிலம். உண்மைக்கு புறம்பான நம்பகத்தன்மையற்ற மோடி ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மின்வெட்டுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக-வின் சதிதான் காரணம், இதனால் மின் நிலையங்களின் இயக்கம் பாதிக்கப்படுவதாக ஜெயலலிதா கூறி வருகிறார். முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள மின் நிலையங்களில் யார் சதி செய்ய முடியும்? அப்படி நடந்திருந்தால் அந்த சதியை அவர்தான் கண்டுபிடிக்க வேண்டும். மின்வெட்டுக்கு சதி என்று கூறுவது, அவர் கடமையை செய்ய தவறிய செயல். முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள மின் நிலையங்களுக்கு அவரைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. இயந்திரக் கோளாறு காரணம் என்றால் யாரும் செல்ல முடியாது. மத்திய அரசோ, வேறு கட்சியினரோ அப்பகுதிக்கு செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது சதி என்பதை ஏற்க இயலாது.

தேர்தலுக்கு பின் மதச் சார்பற்ற அணிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். இவ்வாறு தங்கபாலு தெரிவித்தார்.

வருமான வரி வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தேர்தலுக்குப் பின் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

சசி எண்டர்பிரைசஸ் நிர்வாகிகளாக இருந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை, 3 ஆண்டுகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குக்கு தடை விதிக்க முடியாது என கடந்த ஜனவரி 30-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 4 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் சசி எண்டர்பிரைசஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "இந்த வழக்கில் மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, “ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, “அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராக மறுப்பதால் வழக்கு விசாரணை பாதிக்கிறது. பிப்ரவரி 6, 13, 26 தேதிகள், மார்ச்சில் 13, 20, ஏப்ரல் 3, 10, என தொடர்ந்து எந்த வாய்தாவிலும் ஆஜராகவில்லை. இனிமேலும் அவர்களுக்கு அவகாசம் அளிக்க கூடாது” என்று வாதிட்டார்.

தேர்தல் நேரம் என்பதால் இப்போது ஆஜராக உத்தரவிட முடியாது என்று மறுத்த நீதிபதிகள், தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

மதுரை அழகர்கோவிலுக்கு சென்ற திண்டுக்கல் கவுன்சிலர் முத்துப்பாண்டி வெட்டி கொலை



திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி,  சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்றவர். 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான இவர் மீது பல கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

2012 ஜனவரி 10-ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7-வது குற்றவாளி இந்த முத்துப்பாண்டி.  இவர் மீது கோபத்தில் இருந்த‌ பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள், முத்துப்பாண்டியை பழிவாங்கும் நோக்கில் 2013 மார்ச் மாதம் திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு பின்புறம் சென்று கொண்டிருந்தபோது முத்துப் பாண்டி வாகனத்தின் மீது பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் வெடி குண்டு வீசினர். இதில் அதிர்ஷ்ட வசமாக முத்துப் பாண்டி உயிர் தப்பினார். இதையடுத்து ஏப்ரல் 14-ம் தேதி மாலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நான்கு பேருடன் மதுரை அழகர்கோவிலுக்கு வந்த முத்துப்பாண்டி கோயில் வளாகத்திலேயே தங்கினார்.

அதிகாலையில் எழுந்து, வெளிப்பகுதியில் கழிப்பறை செல்ல நடந்து சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் முத்துப்பாண்டி, அவருடன் இருந்த கண்மணி, தாமரைச்செல்வனை ஆகியோரை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றது. இதில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கண்மணி, தாமரைச்செல்வன் ஆகியோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி போலீஸார் கூறும் போது, பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிவாங்கவே முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளரான நடராஜன் என்பவரைத் தேடி வருகிறோம். இவரது தந்தை பெரியசாமியை, 2007-ம் ஆண்டு முத்துப்பாண்டி காரை ஏற்றி கொலை செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. எனவே நடராஜனை பிடிக்க முயற்சித்து வருகிறோம் என்றனர்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media