மு.க.ஸ்டாலினுக்காக மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது, அஞ்சாநெஞ்சனாக திமுகவின் அடுத்த தலைவர் ஆக இருந்தவர் இப்படி செல்லாக்காசாகி இன்று பலவீனமான நிலையில் திமுகவை விட்டு விலக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கு கருணாநிதி சப்போர்ட், கருணாநிதி ஸ்டாலினுக்கு வெண்ணையையும் அழகிரிக்கு சுண்ணாம்பையும் வைத்தாரா என்று பார்த்தால் உண்மையில் ஸ்டாலினுக்கு தான் சுண்ணாம்பை வைத்தார் கருணாநிதி, அழகிரிக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார் கருணாநிதி. அத்தனையையும் வீணடித்துள்ளார் அழகிரி.
அஞ்சா நெஞ்சன் அழகிரியாக தொண்டர்களுடன் நெருங்கி பழகுபவராக, அனைத்து தொண்டர்கள் வீட்டு கல்யாணத்துக்கும் காதுகுத்திக்கும் சென்று வருபவராக, தன் ஆதரவாளர்களை எந்த சூழலிலும் கைவிடாதவராக, எதிர்கட்சிகளையும் எதிரிகளையும் தேர்தல் களத்திலும் பிற நேரங்களிலும் அச்சுறுத்தும் விதமாக அதிரடியாக அரசியல் நடத்தியவர் தான் அழகிரி.
அந்த நேரத்தில் ஸ்டாலின் மென்மையான போக்கை கடைபிடிப்பவராக, தன்னுடைய தீவிர ஆதரவாளர்களுக்கு கட்சியில் சிக்கல் வரும்போது அவர்களுக்காக மேலிடத்தில் வாதாடாமல் கைவிட்டவராக தொண்டர்களுடன் நெருங்கி பழகாதவராக, எதிர்கட்சிகளை சரியாக கையாள தெரியாதவராக அவர் மேல் விமர்சனங்களை திமுகவினரே கூட சில ஆண்டுகளுக்கு முன் வைத்தனர்.
திருமங்கலம் தேர்தல்களில் அழகிரியின் அகாசாய நடவடிக்கைகள், அவரின் உழைப்பு, பாராளுமன்ற தேர்தலில் திமுகவினரே தோல்வியை எதிர்பார்த்த நிலையில் தென்மாவட்டங்களில் எல்லாம் வெற்றிபெற வைத்த உழைப்புகள் எல்லாம் திமுகவினரிடமே மந்தமான ஸ்டாலினுக்கு இவர் பரவாயில்லை என்று பேச்சு கிளம்பியது. இந்த எதிர்பார்ப்புகள் வாய்ப்புகளை தானே வீணடித்தார் அழகிரி.


அழகிரி தன் அருகில் அட்டாக் பாண்டி போன்ற ரவுடிகளையும் பொட்டு சுரேஷ் போன்ற புரோக்கர்களையும் வைத்து அரசியல் நடத்தி அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஸ்டாலினோ தன் அருகில் பொன்முடி, கே.என்.நேரு போன்ற தலைவர்களை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தி வந்தார்.
அழகிரி தென்மாவட்ட முக்கிய திமுக தலைவர்களை எடுத்தெறிந்தும் மரியாதையின்றியும் அரசியல் நடத்திய நேரத்தில் ஸ்டாலினோ தன் ஆதரவாளர்களாக இல்லாத ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களையும் பகைத்துக்கொள்ளாமல் மரியாதையுடன் நடத்தி வந்தவர்.
தா.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களை அழகிரி ஆதரவாளர்கள் போட்டு தள்ள தன்னை கடுமையாக எதிர்த்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அவரது சாதியில் இருந்தே பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் என்பவரை உருவாக்கி அவர் வழியாக தான் எதிர்ப்பு அரசியல் செய்து வந்தார் ஸ்டாலின்.
விளைவு மதுரை முதல் கன்னியாக்குமரி வரை இருந்த ஆதரவு போய் சாத்தூர் ராமச்சந்திரன், சுரேஷ், தூத்துக்குடி பெரியசாமி போன்றவர்கள் எல்லாம் ஸ்டாலினை நோக்கி செல்ல காரணமாகிவிட்டார், கடைசியில் தங்கம் தென்னரசுவும் கூட ஸ்டாலினிடம் அடைக்கலமாக அழகிரி ஆதரவு பரப்பளவு சுருங்கிக்கொண்டே வந்தது.
ஸ்டாலின் தென்மாவட்டங்களில் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கும் நேரத்தில் வடமாவட்டங்களில் வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றோர் அழகிரிக்கு ஆதரவாக செயல்பட வந்த நேரத்திலும் அதை முறையாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.
தா.கி.கொலை, மதுரை தினகரன் அலுவலகம் எரித்து மூன்று பேர் கொலை என ரவுடி இமேஜை அழகிரி பொதுமக்களிடம் பெற ஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக தன் அமைதி நடவடிக்கைகள் மூலம் ஜென்டில்மேன் அந்தஸ்தை பெற்றார்.
2011ல் ஆட்சியை திமுக இழந்த உடன், இதற்காகவே காத்திருந்தது போல மு.க.ஸ்டாலின் உடனடியாக சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார், கட்சித்தலைவர்களையும் சோர்ந்திருந்த தொண்டர்களையும் போய் சந்தித்தார், ஆனால் அழகிரியோ நினைத்தாலும் கூட சுதந்திரமாக சுற்ற முடியாதவாறு அதிமுக அரசின் வழக்குகள் இறுக்க பங்களாவில் போய் பதுங்கி கொண்டார். இதை சரியாக பயன்படுத்திய ஸ்டாலின் முழு திமுகவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது மட்டுமின்றி மதுரையின் உள்ளேயும் அழகிரியின் ஆதரவாளர்களை இழுத்தார், புரோக்கர் பொட்டு சுரேஷ்க்காக தன்னுடைய பல ஆதரவாளர்களை ஸ்டாலினிடம் இழந்தார் அழகிரி.

கடைசியில் அட்டாக் பாண்டி பொட்டு சுரேஷையும் போட்டு தள்ள, பொட்டு சுரேஷூம் போய் சேர்ந்தார், வழக்குகள் போய் தென்மாவட்டத்தில் கட்சியில் இருந்த பிடியும் போய் கடைசியில் மதுரையிலேயே தன் பிடியை இழந்த அழகிரி தன் நிலையை உணர்ந்து பதுங்கியிருக்கலாம், பெற்றோரிடம் முரண்டு பிடித்து முரண்டு பிடித்து அடிவாங்கி சத்தம் போட்டு கைகால்களை உதைத்து அழும் குழந்தை கடைசியில் எதுவுமே நடக்காது என்பதை அறிந்து அழுகை குறைந்து தேம்பி தேம்பி தூங்கி போவதை போல செல்லாக்காசாக கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் அழகிரி.
அதிரடிகளும், ஆவேசமும், முரட்டுத்தனமும், அச்சுறுத்தலும் தளபதிகளுக்கு தான் அழகு, தலைவர்களுக்கல்ல, அழகிரி தளபதியாக இருக்கதான் லாயக்கு, தலைவராக இருக்க அல்ல.
இந்த நிலைக்கு அழகிரி தள்ளப்படவில்லை, அழகிரி தன்னை தானே இந்த நிலைக்கு தள்ளிக்கொண்டார்.
# அலசல் பிடித்திருந்தால் ஒரு லைக் போட்டு ஷேர் செய்யுங்கள்