BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 21 April 2014

மோடி பற்றி 'நோ கமென்ட்ஸ்'- 2002 கலவரத்தில் சிக்கி, உயிர் பிழைத்த குதுபுதீன்

2002ல் நடந்த குஜராத் கலவரத்தின் போது, ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுபுதீன் அன்சார் என்பவருடையது.  உடலில் காயங்களுடனும், சட்டையில் ரத்தக் கறைகளுடனும், இரு கைகளையும் கூப்பியவாறு அவர் உயிர்ப் பிச்சை கேட்கும் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகிற்கு உணர்த்தியது. கலவரத்தின் போது, ராணுவ உதவியால் உயிர் தப்பிய குதுபுதீன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

உங்களுக்குத் தெரியும், குஜராத் கலவரத்தின் போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை.

நாங்கள் இப்போது முன்பைவிட மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம். இத்தனை தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில்தான் நாங்கள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. எனக்குத் தெரிந்து இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட் காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்ற வர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை.

குஜராத்தில் மோடியால் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்: முலாய‌ம்சிங்


உத்தரபிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் பேசியதாவது:

 “மோடியின் ஆட்சியில் உரங்களின் விலை அதிகமானதால் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் உள்ள முஸ்லீம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களின் நிலையை மாற்ற எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை.

நரேந்திர மோடி பிரதமராவதை எங்களுடைய கட்சியால் மட்டுமே தடுக்க முடியும். எனவே மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது. மூன்றாவது அணியில் சமாஜ்வாடிக் கட்சி மிகப்பெரிய கட்சியாக அதிக இடங்களை பிடித்து மத்தியில் புதிய அரசை உருவாக்கும்” என்று கூறினார்.

தனது மகன் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை பாராட்டிய அவர், "2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் இரண்டு வருடத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சமாஜ்வாடி அரசு அதிக எண்ணிக்கையிலான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனை ஒவ்வொரு மாநிலமும் பின்பற்றுகின்றன” என்று முலாயம் சிங் பேசியிருந்தார்.

ஜனநாயகத்தை பணநாயகம் விலைக்கு வாங்கும் அவலநிலை: ராமதாஸ்

வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணம் விநியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நேற்று முதல் வாக்குகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

செய்தித்தாள்களுக்குள் வைத்து பணம் வழங்குதல், பால் பாக்கெட்டுகளுடன் சேர்த்து பணம் வினியோகித்தல், பேனாக்களில் ரீஃபிலை எடுத்துவிட்டு, ரூ.1000 தாள்களை வைத்து வழங்குதல் என பலவகையான உத்திகளை அ.தி.மு.க.வினர் கடைபிடித்து வருகின்றனர். இன்னும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பட்டப்பகலிலேயே வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மற்ற தொகுதிகளைவிட தருமபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப் பட்டு வருகிறது. இத்தொகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை செலவிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் வழங்கப்படுவதாக மக்களே குற்றம்சாற்றியுள்ளனர்.

பல இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை அப்பகுதியில் உள்ள பெண்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், பணம் கொடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அவர்களை பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீதே வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்போவதாக மிரட்டி வருகிறது.

குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை அம்பலப்படுத்தியோரை மிரட்டுவது தான் நியாயமான, நேர்மையான, சுதந்திரமான முறையில் மக்களவைத் தேர்தலை நடத்தும் இலட்சணமா?இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகளோ கண்களை மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் விழிப்புடன் செயல்படும் வேட்டை நாயாக திகழ வேண்டிய தேர்தல் ஆணையம், பெயரளவுக்கு மட்டும் பயமுறுத்தும் சோளக்கொல்லை பொம்மையாகவே உள்ளது. இதே வேகத்தில் செயல்பட்டால் தமிழகத்தில் நியாயமான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறாது.

ஜனநாயகத்தை பணநாயகம் விலைக்கு வாங்கும் அவலநிலை தான் ஏற்படும். எனவே, இனியாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும், அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல்கள் நியாயமாக நடப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினை பொருட்டாக நினைக்கவில்லை. என்னிடம் திறமை இருக்கிறது. நான் என்னுடைய தந்தை பெயரை சொல்லிக் கொண்டு நிற்கவில்லை.

லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், "திமுக-வில் உட்கட்சி பூசல் பூதாகரமாய் நிற்கிறது. ஸ்டாலின் பிரச்சாரத்தை தவிர திமுக தரப்பில் மற்ற யாருடைய பிரச்சாரத்தையும் தொலைக்காட்சியில் காட்டுவதில்லை. திமுக-வினருக்கே இந்த நிலை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்? என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர்,  ’திமுக-வுக்கு ஆதரவான அலையை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது’ என்கிறார் கலைஞர். அது என் மனதை ரொம்பவே புண்படுத்தியது. ஒருவேளை காலம் கனிந்து, எதிர் அணியில் நின்று நான் களமாடியிருந்தால் கலைஞரால் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்க முடியுமா? அதனால்தான் நான் இப்போது பேச வேண்டி இருக்கிறது. விஜயகாந்த்துக்கு பின்னால் அலைந்த கலைஞர் ஏன் என்னை கூப்பிட வேண்டும் என்ற கேள்வியையும் டி.ராஜேந்தர் எழுப்பியிருந்தார்.

"திமுக-வின் பிரச்சாரத்தை பலப்படுத்த என்னை அழைத்த கருணாநிதியால் அதை செயல்படுத்த முடியவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிர். அது எல்லாமும் எனக்கு தெரியும்." என்று கூறிய டி.ராஜேந்தர், திமுக பொருளாளர் ஸ்டாலின் பற்றி பேச எதுவும் இல்லை. அவரை பொருட்டாக நினைக்கவும் இல்லை. என்னிடம் திறமை இருக்கிறது. நான் என்னு டைய தந்தை பெயரை சொல்லிக் கொண்டு நிற்கவில்லை. எத்தனை கலைஞர் என்னை கைவிட்டாலும், கடவுள் துணையோடு என் பயணத்தைத் தொடருவேன் என்று கூறியிருந்தார்.

தமிழக முதல்வருக்கு பிரேமலதா எச்சரிக்கை

தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமாரை ஆதரித்து கொட்டாம்பட்டியில் பிரேமலதா ஞாயிற்றுக்கிழமை பேசியது:

இது முக்கியமான தேர்தல். 5 முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. அதை சிதறாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளித்து அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த கூட்டணியின் சார்பில் மோடி பிரதமராவது உறுதியாகிவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் ‘எக்ஸ்பிரஸ்’ செங்கோட்டை போய் சேராது. வழியிலேயே ஒவ்வொரு பெட்டியாக கழன்று விழுந்துவிடும்.

சென்னையில் முதல்வர் பிரச்சாரம் செய்தபோது, அதிக அளவில் பிரச்சாரத்தை ரத்து செய்தவர் என தேமுதிக தலைவர் விஜயகாந்தை மறைமுகமாகப் பேசியுள்ளார். அதற்கு ரமணா பாணியில் புள்ளி விவரத்துடன் பதிலளிக்க நாங்கள் தயராக உள்ளோம். மார்ச் 3-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா இதுவரை 18 நாள் ஓய்வு எடுத்துள்ளார். ஆனால் மார்ச் 16-ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த் இதுவரை 39 தொகுதிகளிலும் 2 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளார். 60 மணி நேரம் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார். இதன்மூலம் பிரச்சாரத்தில் அதிக நேரம் பேசிய தலைவரும் அவர்தான். பிரச்சாரத்தின்போது வேன் பழுதானதால் 2 நாளும், தொண்டையில் புண் வந்ததால் ஒரு நாளும் என 3 நாள் மட்டுமே ஓய்வு எடுத்துள்ளார்.

பறந்து பறந்து சென்று, எழுதிக் கொடுத்ததை வாசித்து பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, பிரச்சாரம் தொடங்கிய 48 நாளில் 18 நாள் ஓய்வு எடுத்துள்ளார். வீணாகப் பேசி விஜயகாந்திடமும், தேமுதிகவிடமும் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.

கொடநாட்டில் தங்கி, ஓய் வுக்கே ஓய்வு கொடுக்கும் ஜெயலலிதாவுக்கு விஜயகாந் தைப் பற்றி பேசத் தகுதி இல்லை. அவரது வேலையை மட்டும் பார்க்கட்டும். தொடர்ந்து பேசினால் ரமணா பாணியில் இன்னும் நிறைய புள்ளிவிவரங்களை தெரி விப்போம் என எச்சரிக்கை செய்கிறேன் என்றார்.

வயதை மறைத்த பேஸ்புக் காதலியை சுட்டு கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மரணம்


உ.பி. முஸாபர்நகரின் பச்சண்டாகலா கிராமத்தை சேர்ந்த வினித்குமார்(24) கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த ஜோதி கோரி பேஸ்புக் மூலம் அறிமுகமானார்.

சுமார் 2 வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் உருவான நட்பு காதலாக மாறியது. ஜோதியை நேரில் சந்திக்க விரும்பிய வினித், கடந்த புதன்கிழமை ஜபல்பூர் சென்றுள்ளார்.வெள்ளிக்கிழமை காலை ஜபல்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜோதிக்கு போனில் பேசியுள்ளார். ஜோதி கூறியபடி இருவரும் பேடாகாட்டின் மலை உச்சியில் சந்தித்துள்ளனர். அப்போது, நீண்ட நேர பேச்சுக்கு பின் தன்னுடன் கொண்டு வந்திருந்த கள்ளத்துப்பாக்கியால், கோரியை சுட்டிருக்கிறார் வினித். உடனடியாக கோரியின் உயிர் பிரிந்துள்ளது. பிறகு, ஒரே ஒரு குண்டை மட்டும் ‘லோடு’ செய்யும் கள்ளத்துப்பாக்கியில் மற்றொரு குண்டைப் போட்டு தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டார் வினித்.
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்ற இரண்டு தரப்பு வீட்டாரும் நம்புவதற்கு நீண்ட நேரம் பிடித்துள்ளது.ஜோதிக்கு 22 வயதில் பொறியியல் பயிலும் மகளும் மற்றும் 19 வயது ப்ளஸ் 2 பயிலும் மகளும், 18 வயதில் 10-ம் வகுப்பு பயிலும் மகனும் உள்ளனர். கணவர் ம.பி அரசு நீர்வளத்துறையில் அலுவலராகப் பணியாற்றுகிறார்.

கிரிராஜ் சிங் தன் கருத்தை மறுபரிசீலனை செய்ய மறுத்தார் !!

கிரிராஜ் சிங் முன்பு அளித்த பேட்டியில் , மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று கூறி இருந்தார் . பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையிலும் அவர் தன் கருத்தை மாற்றி கொள்வதாக இல்லை .

ஆனால் பாஜக கட்சியோ உடனடியாக செயல்பட்டு அவரை கட்சியில் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்  கட்சிக்கும் கிரிராஜ் சிங்கின் கருத்துக்கும் சம்பந்தமில்லை .மோடி ஒரு ஆக்கப்பூர்வமான பரப்புரை செய்து வருகிறார் . நாங்கள் இதுபோன்ற கருத்துக்களை பரப்புவதில்லை என்றார் .

பாஜக ஆட்சியை பிடிப்பதில் தீவிரமாக பரப்புரை செய்து வரும் நிலையில் இதுபோன்ற கருத்துக்கள் அவர்களுக்கு சொந்ந செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம் .

"முஸ்லிம் மக்களின் இடஒதுக்கீட்டுக்கு முதலில் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதாதான்" எனக் கூறும் 8 முஸ்லிம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக 8 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமத், இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவர் எம்.தாவூத் மியாகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ஏ.பாத்திமா முஸாபர், அகில இந்திய தேசிய லீக் தலைவர் இனாயதுல்லா, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கடுமையாக போட்டி நிலவுகிறது. 19 தொகுதிகளில் 5 முனைப் போட்டியும், மற்ற தொகுதிகளில் 4 முனைப் போட்டியும் நடக்கிறது. இந்நிலையில், பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்று பலர் மாறி மாறி பேசி வருகின்றனர். முஸ்லிம் மக்களின் இடஒதுக்கீட்டுக்கு முதலில் நடவடிக்கை எடுத்தவர் முதல் வர் ஜெயலலிதாதான். இது தொடர் பாக ஆணையம் அமைத்து இட ஒதுக்கீடு வழங்கும் நேரத்தில் ஆட்சி மாறிவிட்டது. இதையடுத்து, ஆணையத்தின் நிர்ப்பந்தத்தால்தான் அப்போதைய முதல்வர் கருணாநிதி, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினார்.

எங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்க தற்போது முதல்வரிடம் கேட்டுள்ளோம். அதை நிறைவேற்றித் தருவதாக கூறியுள்ளார். மேலும், திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், சிறையில் அவதிப்படும் 55 முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளார். முக்கியமாக தேர்தல் முடிந்த பிறகும், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம். அதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெங்களூர் புறப்பட்ட மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்


166 பயணிகளுடன், ஞாயிறு இரவு பெங்களூர் புறப்பட்ட மலேசிய விமானம் எம்.எச்-192 தொழில்நுட்ப கோளாறு காரணமாக உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.56 மணியளவில் மீண்டும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பியது. லேண்டிங் கியரில் கோளாறு இருந்த போதும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, விமானி நூர் ஆதம் ஆஸ்மி அப்துல் ரசாக்கை மலேசிய விமான போக்குவரத்து அமைச்சர் வெகுவாக பாரட்டினார்.

சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மலேசிய ஏர்லைன்ஸுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media