BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 1 May 2014

நெருக்கடியான நேரத்தில் முதல்வர் தலைநகரில் இல்லை: கருணாநிதி கண்டனம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் மறைந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தோர் விரைவில் நலம் பெற விழைவினையும் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கேட்பாரற்ற நிலையிலே இருப்பதாகவும், அதுபற்றி அக்கறையோடு முறையாக நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்றும் நான் பல நாட்களாக தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசினர் அதைக் காதில் போட்டுக் கொள்ளவும் இல்லை; கவனம் செலுத்தவுமில்லை.

பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ்.ஐ. உளவாளி, ஜாகீர் உசேன் என்பவரைத் தமிழகக் காவல் துறை கைது செய்துள்ளது. காவல் துறையினர் என்ன தான் திறமையாகப் பணியாற்றிய போதிலும், அவ்வப்போது ஆய்வு செய்து, அவர்களை வழி நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டிய

அந்தத் துறையின் பொறுப்பினை ஏற்றுள்ள முதலமைச்சர் நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால் தான், இன்று காலையில்சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. வெடிக்காத பைப் வெடி குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்படிப்பட்ட நிர்வாகச் செயல்பாடுகள் இல்லாமல் காவல் துறையினர் எப்படி முடிவெடுப்பது என்று புரியாமல் திசை அறியாத நிலையில் இருப்பதாகவும் கூறப் படுகிறது.

ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், தீவிரவாத நடவடிக்கைகள் என்ன என்று உடனடியாக முறைப்படி முழுமையான விசாரணைகள் நடைபெற்றிருக்குமானால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்காமலே கூடத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகள் மேலும் என்னென்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் நுண்ணறிவுப் பிரிவின் ஆலோசனையுடன் காவல் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் காவல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மீண்டும் கொடநாடு சென்று விட்டார்".

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது; இது கோழைத்தனமானது.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.45 மணிக்கு நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

 "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இது கோழைத்தனமானது.

விரக்தியில் சில கோழைகள் இவ்வாறு செய்துள்ளனர். இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை குறிவைத்து நடத்தப்படும் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் மத்திய அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகி வருகிறதா??



அமைதி பூங்காவான சென்னையில் இன்று குண்டு வெடித்த பின் மக்கள் அனைவரிடமும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது .

நுண்ணறிவு அறிக்கையின் படி சென்னையில் ஏராளமான செயல்படும் ஸ்லிப்பர் செல்கள் இருக்கின்றனர் . இந்த நுண்ணறிவு அறிக்கைகள் இதற்கு முன்னரே  சென்னையில் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தொடரந்து தகவல் கொடுத்துள்ளது . மேலும் இலங்கையைச் சார்ந்த உளவாளி சாகிர் ஹுசைன் நேற்று முன்தினம் சென்னையில் பிடிபட்டார் . ஆனால் இவர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஒரு அமைப்பிற்காக வேலை பார்ப்பது தெரிய வந்துள்ளது .

இந்த செயல்களினால் பல பாதுகாப்பு அமைப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

'ஆசை' படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் பாணியில் கொலை, தன் குற்றத்தை டிவியில் ஒப்புக் கொண்ட பெண்


சென்னையைச் சேர்ந்த பேபி கலா என்ற பெண் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தன் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

2010ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தனது கள்ளக்காதலன் கவுரி சங்கருடன் சேர்ந்து கணவனின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சுத் திணற வைத்து கொலை செய்ததாக பேபி கலா தெரிவித்தார். பின்னர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்த பேபி கலாவின் மாமியார், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேபி கலாவையும், கவுரிசங்கரையும் கைது செய்தனர்.

கள்ளக்காதலன் தனக்கு துரோகம் செய்ததையடுத்து பேபி கலா, 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உண்மையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலம்


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 11-வது நாளாக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இறுதி வாதம் புதன்கிழமையும் தொடர்ந்தது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரும் ஆஜராகவில்லை.

தனது இறுதிவாதத்தை தொடர்ந்த பவானி சிங், சென்னையைச் சேர்ந்த வருமான வரி இணை ஆணையர்கள் சீனிவாசன், சுப்பாராவ், சீத்தாராமன் ஆகியோர் அளித்த 76 பக்க வாக்குமூலத்தை வாசித்தார்.

1988 முதல் 1991-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஜெயலலிதா பல்வேறு இடங்களில் வாங்கிய வீடு, பங்களா, தோட்டம், எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகள் தொடர்பாக தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை தேதி வாரியாக குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து 8.9.1995 அன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தை பவானி சிங் வாசித்தார். ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஏ.ஆர்.ரகுமான் அவ‌ரை சந்தித்தார்.

இதுதொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் அளித்த வாக்குமூலத்தில், ''சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகில் மிக மூத்த கலைஞரின் குடும்பவிழா என்பதால், பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன். இதற்காக ஜெயலலிதாவின் வீட்டி லிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்குமச் சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர்'' என கூறியுள்ளார்.

சந்திரபாபுநாயுடு போட்ட ஓட்டு, நோட்டாவின் கீழ் செல்லாத ஓட்டாக அறிவிக்கிறோம்- மாநில தேர்தல் அதிகாரி அறிவிப்பு


தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் ஓட்டுச்சாவடிக்கு, தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

பின்னர் வாக்குச்சாவடி அருகில் நிருபர்களிடம் பேசிய அவர், " நான், எனது மனைவி புவனேசுவரி, மகன் லோகேஷ், மருமகள் பிராம்மணி ஆகியோர் வாக்களித்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். நான் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் தாமரை சின்னத்தில் தலா ஒரு வாக்கை பதிவு செய்தேன்." என்றார்.

வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பது தேர்தல் விதிமுறைப்படி தவறாகும். சந்திரபாபு நாயுடு தனது வாக்குரிமையை பகிரங்கப்படுத்தியதால், அவர் பதிவு செய்த வாக்கை நோட்டாவின் கீழ் செல்லாத ஓட்டாக அறிவிக்கிறோம் என்று தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி பன்வர்லால் அறிவித்தார்.

மோடி மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டது


நேற்று காலை காந்திநகர் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு திரும்பிய நரேந்திர மோடி, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அவர் தனது கையில் பாஜகவின் தாமரைச் சின்னத்தை பிடித்தபடி பேசினார். இந்தப் பேட்டி நேரலையில் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பானது.

தன் கையில் தாமரைச் சின்னத்தை வைத்தபடி செய்தியாளர்களிடம் மோடி பேசும்போது, "மத்தியில் பாஜக நிலையான ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல் நாட்டின் விதியை மாற்றி அமைக்கும். தாய் - மகன் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. தேச நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள அனைத்து கேடுகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அகற்றும். நான் தேசத்துக்கு உள்ள அச்சுறுத்தலை போக்க நினைக்கிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி என்னை அகற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. குஜராத் மக்களுக்கு நன்மை செய்துள்ளது போல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காகவே தேர்தலில் வாக்களித்துள்ளேன்" என்றார்.

இதன் தொடர்ச்சியாக, மோடி தனது கையில் கட்சி சின்னத்தை ஏந்தியபடி பாஜவுக்கு வாக்களிக்கும்படி வெளிப்படையாக கோரிக்கை விடுத்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இது குறித்து, காங்கிரஸ் உடனடியாக தேர்தல் ஆணையத்தை அணுகியது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக, நரேந்திர மோடி மீது புகார் அல்லது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்று குஜராத் காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன் படியே, மோடி மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாக குஜராத் மாநில காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்காளர்கள் மத்தியில் சின்னத்தை காட்டி பேசியது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126(1)(ஏ), 126(1)(பி) ஆகிய பிரிவுகளில் உள்ள விதிகள் மீறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

இவ்வாறான செயல்பாடுகள், ஒரு மாநிலத்தில் மட்டுமின்றி, நாடடின் வேறு பகுதிகளில் நடக்கும் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றவைப்பது போலவுமே இருக்கும் என தேர்தல் ஆணையம் கருதுகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media