Tuesday, 18 February 2014
பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கிய பெண், கோர்ட் உத்தரவுப்படி கல்லால் அடித்துக் கொலை
இன்றைய சூழலில், பேஸ்புக் பலரின் வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கில் கணக்கு வைத்து கொண்டிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், சிரியா நாட்டை சேர்ந்த பெண், பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியதற்காக, அவரை கல்லால் அடித்து கொல்லும் படி, நீதிமன்றம் உத்தரவு இட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த அல் ஜஸ்ஸிம் என்றப் பெண் மீது ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகள் பேஸ்புக் தளத்தில் அக்கவுண்ட் தொடங்கினார் எனக் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து, அப்பெண் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பேஸ்புக் அக்கவுண்ட் முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தார். அதனைத் தொடர்ந்து அப்பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்குத் தண்டனை ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. மூவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
பணத்திற்காக நடிக்கும் கமலுக்கு எதற்கு பத்ம பூஷன்? கமல் ரசிகர்களைக் கடுப்பேற்றும் தங்கர் பச்சான்
நடிகர் கமல் ஹாசனுக்கு சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. காசு வாங்கி கொண்டும் நடிக்கும் கமலுக்கு எதற்கு அந்த விருது என பரபரப்பான பேச்சை ஆரம்பித்து இருக்கிறார், இயக்குநர் தங்கர்பச்சான்.
இதைப் பற்றி அவர் பேசுகையில், "கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேணாங்கல. ஆனால் அவர் ஒண்ணும் சேவை செய்யலையே. காசு வாங்கிட்டுதானே நடிக்கிறார். அவருக்கு இருக்கிற வசதிக்கு உலகம் முழுக்க கூட சுத்தலாம். ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே? இவரைப்போல இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படணும். ஆனால் இப்போதெல்லாம் இந்த விருதுகள் கொடுக்கப்படறதை விட வாங்கப்படுதுன்னுதான் சொல்லணும்..." என்று தங்கர் பச்சான் கூறியிருக்கிறார்.
தங்கர் பச்சானின் பேச்சு, கமல் ரசிகர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் கூறுவதில் என்ன தவறு என்றும் சிலர் கேட்கின்றனர்.
தங்கர்பச்சானின் கருத்தில், உங்களுக்கு உடன்பாடு இருந்தால், லைக் போடுங்கள்!
ஐ.ஏ.எஸ் அதிகாரியை அடித்து, மோசமாக நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ராமதாஸ்
சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள பீடா கடை அருகில் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவுடன் காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டு, அவரது சட்டைக் காலரை பிடித்து தள்ளியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரிடம் இருந்த செல்போனை பறித்த காவலர்கள், முகத்தில் சரமாரியாக தாக்கினார்கள் எனவும், அதனால் தர்மேந்திர பிரதாப்பின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது எனவும். கைகளிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது எனவும், இதற்காக அந்த அதிகாரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரை ஒரு குற்றவாளி போல இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையத்திலும் அவரை மிகக்கேவலமான முறையில் நடத்தியுள்ளனர். அவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அவரது நண்பர் கூறிய போதிலும் அதை காவலர்கள் பொருட்படுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. பின்னர் இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வந்து நிலைமையை விளக்கிய பிறகே தர்மேந்திர பிரதாப்பை காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருக்கும் டாக்டர் ராமதாஸ், அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுவதைத் தான் இந்த சம்பவம் காட்டுகிறது. தர்மேந்திர பிரதாப் யாதவ், ஐ.ஏ.எஸ் அதிகாரி எனத் தெரிந்தும் அவரை காவல்துறையினர் கேவலமாக நடத்தி தாக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்து முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)