ஹோமோ செக்ஸ் பற்றி ஹிட்லர்
ஹிட்லரின் கட்சி ஹோமோ செக்ஸுக்கு எதிராக வெளியிட்ட பிரகடனத்தில் இப்படி சொல்லியிருந்தது. ‘நீங்களும், நாங்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தேவையில்லை. ஜெர்மன் மக்கள் தான் வாழ வேண்டும். உங்களது பழக்கம் அசிங்கமானது. அசிங்கத்துக்கு எதிராகப் போராடினால் தான் ஜெர்மனியர்கள் வாழ முடியும். போராட்டம் தான் வாழ்க்கை. ஆண்மைத்தனம் இருந்தால்தான் போராட முடியும். செக்ஸ் விஷயத்தில் ஒழுக்கம் இருந்தால்தான் ஆண்மைத்தனம் கிடைக்கும். ஒழுக்கமற்ற, இயற்கைக்கு முரணான செக்ஸை நாங்கள் வெறுக்கிறோம். அப்படி இருக்கும் யாரும் ஜெர்மன் மக்களுக்கு எதிரிகள். அவர்களை வேரறுப்பது எங்கள் கடமை.’
ஹிட்லர் கட்சியின் செக்ஸ் போதகர்
இது தவிர ‘செக்ஸ் சுகாதாரம்’ பற்றி ஹிட்லருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருந்தன. மியூனிச் பல்கலைக் கழகப் பேராசிரியரான மேக்ஸ்வான் குரூபெர் என்பவர் தான் நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட செக்ஸ் போதகராக இருந்தார். அவர் எழுதிய ‘செக்ஸ் சுகாதாரம்’ என்ற புத்தகம் தான் நாஜிக்களின் வேத புத்தகம் ஆனது. மலிவு விலைப் பதிப்பாக சுமார் மூன்றே கால் லட்சம் பிரதிகள் அச்சிட்டு, இது ஜெர்மன் முழுக்க விநியோகிக்கப்பட்டது.
‘செக்ஸ் உறவு என்பது திருமண பந்தத்துக்குள் தான் நிகழ வேண்டும். மற்ற எந்த வகை செக்ஸ் உறவும் மன்னிக்க முடியாத குற்றம். அவற்றை சமுதாயமும், அரசும் ஏற்றுக்கொள்ளாது. திருமணம் செய்து கொள்வதே குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும் தான். ஜெர்மனியின் தேசிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தம்பதியும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தினார் அவர்.
கல்யாணத்துக்கு கடன்
பெண்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள அரசு வற்புறுத்தியது. ‘திருமணக் கடன்’ என்ற பெயரில் பெண்களுக்குக் கல்யாணம் செய்து கொள்ள கடன் தரப்பட்டது. அவர்கள் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் கடனில் இருபத்தைந்து சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டது. நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்கள், வாங்கிய கடனைத் திருப்பித் தரத் தேவையில்லை.
லட்சக்கணக்கான பெண்கள் இப்படி கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டனர். ‘நவீன கால வரலாற்றில் எந்த அரசும் இவ்வளவு மோசமாகக் குடும்பங்களுக்குள் ஊடுருவி செக்ஸ் பற்றி அட்வைஸ் செய்ததில்லை’ என்று சொல்கிற அளவுக்கு இருந்தது ஹிட்லரின் ஆட்சி.