BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 December 2014

உணவே மருந்து : முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
  • முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
  • இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.
  • துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
  • இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டன்ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  • இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
  • வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

சீனா : ஜின்ஜியாங் பகுதியில் பர்தாவுக்குத் தடை

சீனாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த உய்குர் இனத்தவருக்கும், சீன ஹன் இனத்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் இன மோதல்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தப் பகுதியில் பர்தா அணிந்து வருவதற்குத் தடை விதிப்பது என புதன்கிழமை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது, மத உரிமையைப் பறிக்கும் செயல் என ஒரு சாரார் குற்றம் சாட்டியுள்ளனர்.

சி.ஐ.ஏ. விசாரணை முறை : உலக நாடுகள் அதிருப்தி

பயங்கரவாதத் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரிக்க அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு சித்ரவதையைக் கையாண்டதாக நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை வெளியானதையடுத்து, உலக நாடுகள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, மனித உரிமைக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பல நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளன. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி இதுகுறித்து புதன்கிழமை கூறுகையில், ""பயங்கரவாதம் தொடர்பான கைதிகளிடம் சி.ஐ.ஏ. மேற்கொண்ட விசாரணை முறைகள் சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானவை'' என்று தெரிவித்தார். சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும், அமெரிக்கா மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டின.

அமெரிக்கா விளக்கம்: இந்நிலையில், உலக நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது: நியாயத்தை நிலைநாட்டும் அமெரிக்காவின் உறுதிப்பாடு குலைந்திருந்தால், பயங்கரவாதத்துக்கு எதிராக 60 நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா அமைத்திருக்க முடியாது.

அந்தக் கூட்டணியில் ஏராளமான முஸ்லிம் நாடுகளும் உள்ளன: இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், மேற்காசிய நாடுகளைச் சேர்ந்த பல நாடுகள் எங்களுடன் கைகோத்துள்ளன. கைதிகளிடம் விசாரணை மேற்கொள்ளும் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அதிபர் ஒபாமா 2009-ஆம் ஆண்டே உத்தரவிட்டார். அதே ஆண்டில், அந்த சீர்திருத்தங்களை அமல்படுத்தும் செயல்குழுவும் உருவாக்கப்பட்டது. சித்ரவதை விசாரணை முறைகளை சட்ட விரோதமாக்குவதில் அதிபர் ஒபாமா உறுதியுடன் இருந்தார். மனித உரிமைகளைக் காப்பதில் அமெரிக்கா காட்டி வரும் அக்கறைதான், உலகம் முழுவதும் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது என்றார் ஜோஷ் எர்னஸ்ட்.

கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள இரட்டை கோபுரங்களில் அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 2,990-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போது, சி.ஐ.ஏ. உளவு அமைப்பு கைதிகளிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடைப்பிடித்த வழிமுறைகள் குறித்து, உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற மேலவைக் குழு விசாரித்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஒபாமா அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், போலி மரண தண்டனை நிறைவேற்றம், நிர்வாணப்படுத்துதல், தூங்கவிடாமல் செய்தல் உள்ளிட்ட கடுமையான விசாரணை முறைகளை பயங்கரவாதம் தொடர்பான கைதிகளிடம் சி.ஐ.ஏ. பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினி எல்லா நலமும், பெற்று நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துவித நுகர்வோர்களுக்குமான மின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு வெள்ளிக்கிழமை (டிச.12) முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக உத்தேச மின் கட்டண உயர்வை செப்டம்பர் 23-ஆம் தேதி அறிவித்தது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள், ஆலோசனைகள் கேட்கப்பட்டன. சென்னை, ஈரோடு, கோவையில் கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. அதன்பிறகு, மின் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, அனைத்து நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு இருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கு குறைப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக அறிவித்த உத்தேசக் கட்டண உயர்விலிருந்து கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குப் பிறகு தொழில் நிறுவனங்கள், உயர் மின் அழுத்தப் பிரிவினருக்கு அறிவித்த உத்தேச மின் கட்டண உயர்வு குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தப் பிரிவில் தொழில் நிறுவனங்களுக்கு உத்தேசக் கட்டண உயர்வு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.50-லிருந்து ரூ.7.22-ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இது யூனிட் ஒன்றுக்கு ரூ.6.35 என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்தப் பிரிவிலும் இதே அளவில் உத்தேசக் கட்டண விகிதத்திலிருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்தப் பிரிவில் ரயில்வேக்கு அறிவிக்கப்பட்ட உத்தேச மின் கட்டண உயர்வு யூனிட் ரூ.7.22-லிருந்து ரூ.6.35-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாடுக்கு யூனிட் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.8.05-லிருந்து ரூ.8-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மாறன் சகோதரர்களிடம் அமலாக்கத் துறை விசாரணை

ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் மத்திய முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோரிடம் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த அக்டோபர் மாதம் அமலாக்கத் துறை அனுப்பியிருந்த சம்மன் அடிப்படையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விசாரணையின்போது மாறன் சகோதரர்களிடம் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம், சில தனியார் நிறுவனங்கள் மூலம் சன் டைரக்ட் நிறுவனத்தில் பங்குகள் வாங்கியது, ஏர்செல் பங்குகள் கைமாற்றப்பட்ட போது மாறன் சகோதரர்களின் செயல்பாடு, சன் டைரக்ட் நிறுவனத்தின் பங்குகள், வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பானஆவணங்களை இருவரும் தனித்தனியாக தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. அவற்றின் அடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் மத்திய அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

மீண்டும் விசாரணை?: ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகள், 2004-06 ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது அவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சகோதரரின் நிறுவனத்துக்கு (சன் டைரக்ட்) சாதகமாகச் செயல்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதேபோல, தயாநிதி மாறனின் சலுகையைப் பயன்படுத்தி சில வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற்றதாக கலாநிதி மாறன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில், நிர்வாகம் மற்றும் அரசுப் பணி விதிமீறல் தொடர்பாக இருவரிடமும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மீண்டும் மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரஷியாவுடன் 20 ஒப்பந்தங்கள் : மோடி-புதின் முன்னிலையில் கையெழுத்து

எண்ணெய், எரிவாயு, பாதுகாப்பு, முதலீடு உள்ளிட்ட துறைகளில் இந்தியா -ரஷியா இடையே வியாழக்கிழமை 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மோடி, புதின் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்களின்படி, இந்தியாவில் அதிநவீன ஹெலிகாப்டர்களை ரஷியா தயாரிக்கும். இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 12 அணு உலைகளையும் அந்நாடு அமைத்துக் கொடுக்கும். இந்தியா வந்த ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது இரு தலைவர்களும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். மூன்றரை மணிநேரத்துக்கு இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. அதன் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது: இந்தியாவுக்கு வலிமை அளிக்கும் தூணாக ரஷியா திகழ்கிறது. அது இந்தியாவின் மிக முக்கிய பாதுகாப்புக் கூட்டாளியாகத் தொடர்ந்து நீடிக்கும். அதிபர் புதினும் நானும் புதிய பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம்.

"இந்தியாவில் தயாரிப்போம்' உள்ளிட்ட நமது முன்னுரிமைத் திட்டங்களுடனும் பாதுகாப்பு உறவுகளை எவ்வாறு இணைப்பது என்பது குறித்தும் பேசினோம். ரஷியா தனது அதிநவீன ஹெலிகாப்டரை இந்தியாவில் தயாரித்துத் தர முன்வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் ராணுவத்துக்கும், பொதுப் பயன்பாட்டுக்கும் உகந்ததாகும். அணு மின்சக்தித் துறையில் இரு தரப்பும் லட்சியத் திட்டத்தை வகுத்துள்ளன. அதன்படி, குறைந்தபட்சம் 10 அணு உலைகள் அமைக்கப்படும். அவை உலகத் தரத்தில் இருக்கும். இந்தத் திட்டத்தில் கருவிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றை இந்தியாவிலேயே தயாரிப்பதும் அடங்கும் என்றார் மோடி.

அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை, செய்தியாளர்களிடம் புதின் பேசியதாவது:
மோடியுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தை யதார்த்தமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திருந்தது. கூட்டு உயர் தொழில்நுட்பத் திட்டங்களை ரஷியா ஆதரிக்கும். இந்தியாவும் ரஷியாவும் நீண்ட காலமாக பாதுகாப்புத் துறையில் ஒத்துழைத்துச் செயல்பட்டு வருகின்றன. தற்போது இரு நாடுகளும் ராணுவத் தளவாடங்களை கூட்டாகத் தயாரிக்கும் நிலையை எட்டியுள்ளன. இந்தியாவில் ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பதை ரஷியா எதிர்க்கவில்லை. ஏற்கெனவே இரு நாடுகளும் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தின. ஜெட் போர் விமானத்தைக் கூட்டாகத் தயாரிப்பது குறித்து விவாதித்து வருகின்றன என்றார் புதின்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து: முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே மோடி, புதின் முன்னிலையில் பாதுகாப்பு, மருத்துவம், எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றில் ஆயில் இந்தியா நிறுவனத்துக்கும், ரஷியாவின் ஜருபேஸ்நெஃப்ட் நிறுவனத்துக்கும் இடையே புதிய ஹைட்ரோகார்பன்களைக் கண்டறிவது, உற்பத்தி செய்வது ஆகியவற்றுக்கான ஒப்பந்தமும் அடங்கும். மேலும், இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனத்துக்கும் ரஷியாவின் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்கும் இடையேயான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம், டாடா பவர் நிறுவனத்துக்கும், ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியத்துக்கும் இடையிலான எரிசக்தித் துறை ஒப்பந்தம் ஆகியவையும் அடங்கும். இந்தியாவின் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கும், ரஷியாவின் டாஸ் செய்தி நிறுவனத்துக்கும் இடையில் செய்திப் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தமும் மேற்கண்ட 20 ஒப்பந்தங்களில் அடங்கும்.

பயங்கரவாத ஒழிப்பு: இதனிடையே, இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஜம்மு-காஷ்மீரிலும், ரஷியாவின் செசன்யா பகுதியிலும் பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் இறந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுக்கான அனைத்துப் புகலிடங்களும் தாமதமின்றி ஒழிக்கப்படும் என்றும் பத்தாண்டுகளுக்குள் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் அந்தக் கூட்டறிக்கையில் இரு நாடுகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரு தரப்பும் வாய்ப்புகளை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 12 அணு உலைகளை அமைக்கிறது ரஷியா : பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவில் வரும் 2035ஆம் ஆண்டுக்குள் 12 அணு உலைகளை ரஷியா அமைத்துத் தரவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. தவிர, கூடங்குளத்தில் 3, 4ஆம் அணு உலைகளை அமைப்பது தொடர்பாக இந்திய அணு மின் நிறுவனத்துக்கும், ரஷியாவின் ஏஎஸ்இ நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், ரஷியாவில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் இந்திய ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதற்கும் இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media