BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 5 May 2014

சோனியா காந்தி வாயில், நெய்யுடன் கலந்த சர்க்கரையை போட வேண்டும்- நரேந்திர மோடி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

‘ஏ தில் மாங்கே மோர்’ (எனது மனம் நிறைய கேட்கிறது). தாமரை சின்னத்துக்கு நிறைய எம்.பி.க்களை தாருங்கள் என்று நான் மக்களிடம் கேட்டால், சோனியாவிக்கு பிடிப்பதில்லை. கேட்டுப் பெறுவதை அவர்கள் அவமானமாக கருதுகின்றனர். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை.

ஏழை தாய்க்கு பிறந்தவன் பிச்சை எடுக்காமல் என்ன செய்வான்? நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுமார் நான்கைந்தாயிரம் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் அம்மா- பிள்ளை ஆட்சியில்,  சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயர் நாட்டை விட்டே காணாமல் போய்விட்டது. 

இந்த அநீதிக்கு பதில் அளிக்கும் விதமாக சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே பெரிய நினைவிடத்தை குஜராத்தில் அமைக்க தீர்மானித்திருக்கிறேன். அமெரிக்காவுக்கு செல்கின்றவர்கள், அங்குள்ள சுதந்திர தேவி சிலையின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்துப் போகின்றனர். அதைவிட இரண்டு மடங்கு பிரம்மாண்ட சிலையை குஜராத்தில் அமைத்து, ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய ஒரு நினைவிடம் சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக அமைக்கப்படும்.

‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்று லால் பகதூர் சாஸ்திரி முழங்கினார். அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை இப்போது எப்படி உள்ளது?

நமது வீரர்களின் தலைகளை பாகிஸ்தானியர்கள் துண்டிக்கும் போது மத்திய அரசு எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது. கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிகையைவிட தற்கொலை செய்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகி, கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளது. 

அம்மா-பிள்ளை ஆட்சி இதற்கெல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை. ’ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கம் எல்லாம் போய் ’மர் கிசான், மர் ஜவான்’ (விவசாயி சாகட்டும், ராணுவ வீரர்கள் சாகட்டும்) என்பதே தற்போதைய முழக்கமாக இருக்கிறது.

நான் பிரதமராகி விட்ட நினைப்பில் பேசி வருவதாக சோனியா காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீங்களே(சோனியா) மோடி தன்னை பிரதமராக கருதிக் கொள்கிறார் என்று கூறும்போது, உங்கள் வாக்கு பலிக்கட்டும். உங்கள் வாயில் நெய்யுடன் கலந்த சர்க்கரையை போட வேண்டும் என்றுதான் என்னால் கூற முடியும்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

தமிழ் அமைப்புகள் மீதான தடையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ்


இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளின் பேரில், 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் 424 பேர் மீது விதித்த தடையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஈழத் தமிழர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிராக கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இப்போது தமிழினத்திற்கு எதிராக மீண்டும் ஒரு துரோகத்தை செய்திருக்கிறது.

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளுக்கும், அவற்றுடன் தொடர்புடைய 424 செயல்பாட்டாளர்களுக்கும் இந்திய அரசு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடந்த போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு, இப்போது அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் தமிழ் அமைப்புகளையும் முடக்கிப் போடுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில்தான் வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் 16 தமிழ் அமைப்புகளையும், அத்துடன் தொடர்புடைய 424 பேரையும் தடை செய்து கடந்த மாதம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கும்படி உலக நாடுகள் பலவற்றுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்தது.

இலங்கை 'எள்' என்றால் 'எண்ணெயாக' மாறி நிற்கும் இந்திய அரசு, மறு கேள்வியே எழுப்பாமல் இந்த 16 அமைப்புகளுக்கும், அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் தடை விதித்து ஆணையிட்டிருக்கிறது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயக விரோத செயலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் ராஜபக்சேவின் சகோதரர் இனப்படுகொலை குற்றவாளி கோத்தபாய ராஜபக்சே அளித்த பரிந்துரையின் பேரில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுகளில் தமிழ் அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக எந்த ஓர் ஆதாரத்தையும் இலங்கை அரசால் வெளியிட முடியவில்லை.

உண்மையில் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள பிரிட்டிஷ் தமிழ் ஃபோரம், குளோபல் தமிழ் ஃபோரம், உலகத் தமிழ் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளில் பல இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக போராடி வருகின்றன.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்திலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இவை குரல் கொடுத்தன. உண்மை இவ்வாறு இருக்கும் போது ஈழத் தமிழர்களுக்காக போராடுகின்றனவா, அல்லது தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனவா? என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் இந்த அமைப்புகளை இந்தியா தடை செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழ் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, இனப்படுகொலை குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இத்தகைய கோரிக்கையை முன்வைக்க எந்த தகுதியும் இல்லை என்று அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இவ்வளவுக்கு பிறகும் இந்த அமைப்புகளையும், அதனுடன் தொடர்புடையவர்களையும் இந்திய அரசு தடை செய்திருப்பதை பார்க்கும்போது இலங்கையின் எல்லா துரோகங்களுக்கும் இந்தியா துணை போவதாகத் தான் எண்ண வேண்டியிருக்கிறது.

எனவே, இலங்கையில் தாளத்திற்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தலையாட்டுவதை விடுத்து உண்மையை உணர்ந்து இந்திய அரசு செயல்பட வேண்டும். 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்கள் மீதான தடையை உடனே திரும்பப் பெற வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் அமைப்புகள் மீது தடை விதிக்க வேண்டுமென்ற‌ இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்ற இந்திய அரசுக்கு கண்டனம்

16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்காக இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டுமென்று இலங்கை அரசு உலக நாடுகளுக்கெல்லாம் வேண்டுகோள் விடுத்து, அந்த வேண்டுகோளை நம்முடைய இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று நாளேடுகள் சிலவற்றில் செய்தி வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் இருந்து மருத்துவச் சிகிச்சைக்காக தனது தாயை இந்தியாவிற்கு அழைத்து வந்தபோது தடை விதிக்கப்பட்ட 424 பேரில் ஒருவர் இந்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட மனிதாபிமானற்ற செயலும் நடந்திருக்கிறது.

இலங்கையின் தடை உத்தரவு கனடாவில் செல்லாது என்று அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரிட்டனும் அவ்வாறே தனது எதிர்ப்பினை ஏற்கனவே தெரிவித்து விட்டது.

இலங்கை அரசின் இந்த வேண்டுகோளை, அமெரிக்கா நிராகரித்ததோடு, "இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது பெருமளவில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடு பட்டதாக சர்வதேச அளவில் எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்படி உரிய விசாரணை மேற்கொள்ளாத இலங்கை அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது" என்றே திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்" இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசத்தில் பைசாபாத்தில் மோடி பிரச்சார மேடை பின்னணியில் ராமர் படம், மீண்டும் சர்ச்சை


உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நரேந்திர மோடி.  பிரச்சாரம் செய்த மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரச்சாரத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சிக்கு ராமர் பிறந்த பூமியில் வசிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.

ராமர் கோயிலை மீண்டும் கட்டுவது குறித்து நேரடியாக ஏதும் பேசாவில்லை. தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகளை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியதோடு ராமர் பிறந்த பூமியில் பிறந்த மக்கள் வாழ்க்கையை இழந்தாலும் வார்த்தை தவற மாட்டார்கள் என மறைமுகமாக ராமரை மேற்கோள்காட்டி பேசினார்.

இந்நிலையில், மேடையின் பின்னணியில் ராமர் படம் இருந்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. இத்தகவலை உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா உறுதிபடுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்ததாவது:

 "தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து குறைந்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

குறைந்த தாழ்வு நிலையானது தற்போது கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும். சென்னையை பொருத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 7 செ.மீ., இரணியலில் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது"என்றார்.

சென்னை ரயில் குண்டுவெடிப்பு: 3 பேர் அடையாளம் தெரிந்தது


ரயிலில் குண்டு வைத்ததாக 3 பேரை சிபிசிஐடி போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகப்படும் மூன்று பேரில் இருவரின் பெயர், விவரங்கள் தெரிந்தன. குண்டுகள் வெடித்த ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அகமது உசேன், ஜான்சன் என்ற 2 பேர் தட்கல் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர். பெங்களூர் ரயில் நிலையத்தில் கடந்த 29-ம் தேதி காலை தட்கலில் இரண்டு டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அகமது உசேன் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம் மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் குவாஹாட்டி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களைக் கொடுத்து தட்கல் டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. ஜான்சன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் போன் நம்பர் எதுவும் இல்லை.

அகமது உசேன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் செல்போன் நம்பர் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது, கடந்த ஒரு மாதமாக அது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இரண்டு பேர் கொடுத்துள்ள முகவரிகளும் போலியானவை. எனவே இவர்கள் இருவரும் சேர்ந்து ரயிலில் குண்டு வைத்திருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருவரும் குண்டு வைத்து விட்டு வாலாஜா, காட்பாடி, அரக்கோணம் அல்லது சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெங்களூர் ரயில் நிலையம் மற்றும் முன்பதிவு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடையில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றபோது, குண்டுகள் வெடித்த எஸ்-4, எஸ்-5 பெட்டிகளுக்கு அடுத்துள்ள எஸ்-3 பெட்டியில் இருந்து ஒருவர் இறங்கி ஓடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

குண்டுகள் வெடிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு அவர் முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு இறங்கி ஓடுகிறார். அவரது பெயர் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இவருக்கும் குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் பலமாக நம்புகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் இந்த 3 நபர்கள் மீது சந்தேகப் பார்வை விழுந்துள்ளதால் மொத்த விசாரணையும் இவர் களைச் சுற்றியே தற்போது நடந்து வருகிறது.

பகத்சிங் ஆதாரம் இல்லாமல் தூக்கிலிடப்பட்டார - பாகிஸ்தான் நீதிமன்றத்தில் மனு !!

பகத்சிங் நினைவு அறக்கட்டளையின் தலைவர் குரேஷி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் . அந்த மனுவில் , ஆங்கிலேய அதிகாரி சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாகூர் அனார்கிலி காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது . ஆனால் அந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் இல்லை . ஆனால் பகத்சிங் தூக்கிலிடப்பட்டார் . பகத்சிங் சார்பாக ஆஜாரன வழக்கறிஞரை குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை . எனவே வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு பகத்சிங் அப்பாவி என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார் .

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது .

ஸ்மிருதி இராணி யார் என்று கிண்டலாக கேட்டார் பிரியங்கா காந்தி !!

இந்த தேர்தலில் கடைசி நேர பிரச்சாரத்தில் குதித்த பிரியங்கா காந்தி  அனைவரின் கவனங்களையும் கவர்ந்து வருகிறார் . தனது அண்ணன் போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார் . அப்போது ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இராணி குறித்து கேட்கும் போது , அவர் யார் என்று கிண்டல் அடிக்கும் வகையில்  கேட்டார் .

இதற்கு பதில் அளிக்கும் வகையில் , தனது குடும்பத்தினரின் உழல் அனைத்தையும் மறந்தவர்க்கு எப்படி என் பெயர் ஞாபகம் இருக்கும் என ட்விட் செய்தார் ..
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media