BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 30 October 2014

சிந்தனை களம் : செய்யும் வேலையில் ஈடுபாடு


வேலையிலே மனசு வையுங்க! காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவியின் கையில் பலமாகப் பாய்ந்தது. துறவி வலி தாங்காமல் அலறினார். சத்தம் கேட்டு ராஜா ஓடினான். ""சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் அந்தப் பக்கமாக வந்ததை நான் கவனிக்கவில்லை.வேண்டுமென்றே செய்ததாக தயவுசெய்து தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை மன்னியுங்கள்,'' என்று அழாக்குறையாக பேசினான். அது வேண்டுமென்றே நடக்கவில்லை என துறவிக்கும் தெரியும்.மன்னனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர்.
""கையில் பாய்ந்திருந்திருக்கும் அம்பை யாராவது எடுத்து விட்டால், காயத்துக்கு மருந்து வைக்க நான் தயார்,'' என்றார் 

வைத்தியர். மந்திரி ஒருவர் அதற்கு உடன்பட்டார். இதற்குள் துறவிக்கு தியானநேரம் வந்து விட்டது. எப்படித்தான் அவரது கண்கள் மூடியதோ, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதுதான் சமயமென, மந்திரி அம்பை உருவி எடுக்க, துறவியோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார்.இதைப் பயன்படுத்தி வைத்தியரும் கையை நன்றாகத் துடைத்து மருந்து வைத்து கட்டி விட்டார். சற்றுநேரம் கழித்து கண்விழித்த துறவி, ""இதெல்லாம் எப்படி நடந்தது?'' என்று கேட்டார். தியானத்தில் மனம் ஒன்றிப் போனதால், நடந்தது எதுவும் தெரியவில்லை. ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

ஐ.நா.பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு



ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் மறு தேர்வு பெற்ற ஒரு வாரத்துக்குள் இந்தியாவுக்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றி இதுவாகும். 193 நாடுகள் உள்ள ஐ.நா. சபையில் பொருளாதார, சமூக அமைப்புக்காக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 183 வாக்குகளை இந்தியா பெற்றது.

இந்த அமைப்புக்கான தேர்தலில், ஆசிய-பசிபிக் நாடுகளில் இதுவரை அதிகளவு வாக்குகள் பெற்ற நாடுகளில் இந்தியா முதன்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொருளாதார, சமூக அமைப்பில் மொத்தம் 54 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில் 18 உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தற்போது நடைபெற்றது.

தரமற்ற உணவு : அரசு மருத்துவமனை உணவு விடுதிக்கு சீல்


தரமற்ற உணவு விற்பனை செய்வததாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அரசு மருத்துவமனை உணவு விடுதிக்கு புதன்கிழை சீல் வைக்கப்பட்டது. மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒரு உணவு விடுதி இயங்கி வந்தது.

இந்த விடுதியில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு அடிக்கடி புகார்கள் சென்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் விடுதியை கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி, தரமுள்ள உணவுகளை விற்பனை செய்யுமாறு எச்சரிக்கை விடுத்தனர். எனினும் உணவு பாதுகாப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லட்சுமி நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் குழு, மீண்டும் உணவு விடுதியை புதன்கிழமை ஆய்வு செய்தனர். அதில் தரமற்ற உணவு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, உணவு விடுதியைப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மரக்காணம் கிழக்கு கடற்கரைசாலையில் போலீஸ் குவிப்பு



மாமல்லபுரத்தில் நடைபெறும் அன்புமணி மகள் திருமண நிகழ்வையொட்டி, மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் மகள் திருமணம், மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள பாமகவினர் மாமல்லபுரத்துக்கு மரக்காணம், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் செல்கின்றனர்.

ஏற்கெனவே மாமல்லபுரம் மாநாட்டுக்கு வாகனங்களில் சென்றவர்களுக்கும், மரக்காணம் பகுதி உள்ளூர் மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதுபோன்று பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள், 19 காவல்துறை ஆய்வாளர்கள், 52 காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200 போலீஸார் இப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் எஸ்.பி. விக்கிரமன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை பங்குச் சந்தை சரிவுடன் துவக்கம்



மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கியது. இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27,111.33 என்ற புள்ளிகளாக இருந்தன. ஆனால் இதே நிலையே தேசிய பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை குறியீட்டு எண் நிப்டி 8,090.45 என்ற புள்ளிகளுடன் சரிவு நிலையிலேயே துவங்கியது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media