BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 25 November 2014

உணவே மருந்து : அழகு பானம்



முகத்தில் அடிக்கடி கட்டிகள் ஏற்படுகிறது. இது அழகை பாதிக்கிறது. வெளி அழகிற்கு நமது உணவுப் பழக்கமும் ஓர் முக்கியக் காரணமாய் அமைகிறது. ஆகவே நாம் நம் உணவுப் பழக்கத்தை சீராய் அமைத்தல் அவசியம். அதற்கு எளிய முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் சத்துள்ள பானம் ஒன்று தயாரிப்பது பற்றி இங்கே...

தேவையான பொருட்கள் :
கேரட் - 2, 
பீட்ரூட் - 1, 
பச்சை கொத்துமல்லி (மண் போக அலம்பி கட் செய்தது) - 1 கப், வெள்ளை முள்ளங்கி - 1, 
இஞ்சிச் சாறு - 1/2 ஸ்பூன், 
தேன் - 1 ஸ்பூன், 
தண்ணீர் - 1/2 தம்ளர்.

செய்முறை :  முள்ளங்கி, கேரட், பீட்ரூட் இவைகளை நன்றாகக் கழுவி தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். கொத்தமல்லியையும் சுத்தம் செய்து, மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி இஞ்சிச்சாறு, தேன் கலந்து பருகவும், மலச்சிக்கல் ஏற்படாது. முகம் பளபளப்பாகும். கட்டிகள் வராது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கூடச் சாப்பிடலாம்.

5ஆவது அதிசயத்துக்கு ஆபத்தா?



உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் 5ஆவது அதிசயமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் பெருந்தொடர், உலக வெப்பமயமாதல் காரணமாக அழியும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொன்னாலும் சொன்னார், பருவநிலை மாற்றம் பற்றிய விவாதம், சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 நாடுகள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேசியபோது தனது இந்தக் கவலையை ஒபாமா வெளியிட்டார். ஒபாமாவின் கருத்துக்கு பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தாலும், ஆஸ்திரேலிய அரசு கையை முறுக்கி கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

உண்மையில், பவளப்பாறைகளின் நிலைதான் என்ன?
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்து கடல் பகுதியில் சுமார் 2300 கி.மீட்டர் நீளத்துக்கு விரிந்துள்ளது இந்தப் பவளப்பாறைகள் தொடர் (GREAT BARRIER REEF). பருவநிலை மாற்றம், கடற்கரையோரம் நடக்கும் அளவுக்கதிகமான மேம்பாட்டு நடவடிக்கைகள், மீன்பிடிப்பு போன்றவற்றால் இந்தப் பவளப்பாறைகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்தான், ஒபாமாவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து கடற்கரையோரப் பகுதியில் நடந்து வரும் வேகமான தொழில்மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து யுனெஸ்கோவும் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் இரினா பொகோவா ஆஸ்திரேலியாவுக்கு நேரில் சென்று இந்தப் பவளப்பாறைகளின் நிலை குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த நேரத்தில் ஒபாமாவின் கருத்து வெளியானதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இந்தப் பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியாவின் மத்திய அரசும், குயின்ஸ்லாந்து மாகாண அரசும் ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளன என்றாலும், இன்னும் வரைவு வடிவத்திலேயே இருக்கும் அத்திட்டத்தால் பெரிய பலன் ஒன்றும் இருக்காது என ஆஸ்திரேலியாவின் அறிவியல் அகாதெமி தெரிவித்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அரசு இதை மறுக்கிறது. "பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளுக்கு ஆபத்து இல்லை; விவசாய நிலங்களிலிருந்து வெளியேறும் ரசாயன உரங்கள் கலந்த கழிவுகள், இயற்கைப் பேரிடர் இந்த இரண்டினால் மட்டுமே ஆபத்து. ஆனால், இந்த இரண்டும் நிகழ 200 ஆண்டுகளாவது ஆகும்' என்கிறார் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர். குயின்ஸ்லாந்து கடலோரப் பவளப்பாறைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வரும் யுனெஸ்கோ, அவை அழிவின் பிடியில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து அடுத்த ஆண்டு அறிவிக்கவுள்ளது. அவ்வாறு அழிவின் பிடியில் உள்ளதாக அறிவித்தால், சுற்றுலா உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள இயலாது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ள நிலையில், எந்த ஒரு பாரம்பரிய சின்னமுமே பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்காவின் தலையீட்டை ஆதிக்க மனப்பான்மையாக எடுத்துக்கொண்டாலும் சரி, அக்கறையாக எடுத்துக்கொண்டாலும் சரி.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை\
ஆஸ்திரேலிய அரசின் கருத்துக்கு நேர்மாறாக அந்நாட்டு விஞ்ஞானிகளே கருத்துத் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்து குளோபல் சேஞ்ச் இன்ஸ்டிட்யூட் பல்கலைக்கழக இயக்குநர் ஒபே ஹியூஜ் குல்ட்பெர்க் கூறுகையில் "பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கை போதாது. ஏற்கெனவே கடந்த 30 ஆண்டுகளில் பவளப்பாறைகள் பாதியாக சுருங்கிவிட்டன. வெப்பமயமாதல் இன்னும் 1.5 டிகிரி அதிகரித்தாலும் பவளப்பாறைகள் அழிந்துவிடும்' என எச்சரிக்கிறார் அவர். மற்றொரு விஞ்ஞானி சார்லி வெரோன் என்பவர், கரியமிலவாயு வெளியேற்றம் இதேபோல நீடித்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பவளப்பாறைகள் அழிந்துவிடும் என்கிறார். ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக தலைமை விஞ்ஞானி ஜோன் புரோடி கூறுகையில், பருவநிலை மாற்றம்தான் பவளப்பாறைகளுக்குப் பெரும் ஆபத்தாக உள்ளது. பவளப்பாறைகள் உள்ள கடல் பகுதியில் தண்ணீரின் தரத்தை மேம்படுத்த அரசு முயல்கிறது, ஆனால், அது மிகச்சிறிய நடவடிக்கையே என்கிறார்.

என்ன இருக்கிறது?
இதில் சுமார் 3000 தனித்தனி பவளப்பாறைகளும், 600 பாறைத் தீவுகளும், 150 சதுப்புநிலத் தீவுகளும் உள்ளன. சுமார் 100 வகையான ஜெல்லி மீன்களும், 3000 வகையான மெல்லுடலிகளும், 1600 வகையான மீன்களும், 130 வகையான சுறாக்களும், 30 வகையான திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களும் வாழ்கின்றன. இந்தப் பவளப்பாறைகள் தொடரை யுனெஸ்கோ 1981இல் உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்த்தது.

7 இயற்கை அதிசயங்கள்
இயற்கை அதிசயங்கள் பட்டியல் குறித்து சில முரண்பாடுகள் இருந்தாலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 அதிசயங்களை சி.என்.என். தொலைக்காட்சி பட்டியலிட்டுள்ளது. அவை:

1 எவரெஸ்ட் சிகரம்

2 அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கு

3 நார்தெர்ன் லைட்ஸ் பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் தோன்றும் பிரமாண்ட ஒளி

4 ரியோ டி ஜெனீரோவில் உள்ள இயற்கைத் துறைமுகம்

5 ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப்பாறைகள் தொடர்

6 மெக்ஸிகோவில் உள்ள பரிகுட்டின் எரிமலை

7 இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அருவி

நடவடிக்கை போதாது
"பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு இன்னும் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 50 வருடங்கள் கழித்து எனது மகள்கள் தங்களது மகனுடனோ, மகளுடனோ இந்தப் பவளப்பாறைகளைப் பார்க்க வர வேண்டும்'

- அமெரிக்க அதிபர் ஒபாமா

ஒபாமாவின் கவலை தேவையற்றது
"பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியா பல சாதனைகளைச் செய்துள்ளது. அதிபர் ஒபாமாவின் கவலை தேவையற்றது'

- ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் ஆண்ட்ரூ ராப்

"பவளப்பாறைகளுக்கு பருவநிலை மாற்றத்தால் ஆபத்து இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலியாவின் இயற்கைப் பொக்கிஷமான அதைப் பாதுகாக்க நாங்கள் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்'

குடும்ப அட்டைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு



குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் (2015-ஆம் ஆண்டு) வகையில், உள்தாள்களை ஒட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உணவுத் துறை வெளியிட்ட அறிவிப்பு: புதிய குடும்ப அட்டைகளை வழங்கவும், போலி குடும்ப அட்டைகளைக் களையவும், கணினி மயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயோ-மெட்ரிக் அடிப்படையில் குடும்ப அட்டைகளை வழங்குவதற்காக, இதுவரை தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்படி, 5 கோடியே 87 ஆயிரத்து 395 பேருக்கு உடற்கூறு பதிவுகளைச் சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 490 நபர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை வரும் ஆண்டுக்கும் (2015) புதுப்பிக்கும் வகையில் உள்தாள்கள் அச்சிடப்பட்டு, குடும்ப அட்டையில் இணைக்கப்படும். அதன்படி குடும்ப அட்டையின் செல்லத்தக்க காலம் 2015-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இருக்கும்.

எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் கணினி மூலம் புதுப்பித்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள்: நடப்பு சம்பா நெல் கொள்முதல் பருவத்தில் இதுவரை 167 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 4 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அறுவடையை முழுவீச்சில் தொடங்குவதற்கு முன்பாக விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 612 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், உணவுத் துறைச் செயலாளர் எம்.பி.நிர்மலா, உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் சூ.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 4-இல் கூடுகிறது சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 4-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு பேரவையைக் கூட்ட தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அறிவிக்கையை சட்டப்பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் திங்கள்கிழமை வெளியிட்டார். அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 174 (1)-ன் கீழ், சட்டப்பேரவையின் கூட்டத்தை டிசம்பர் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆளுநர் கே.ரோசய்யா கூட்டியுள்ளார். தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை நாள்கள் நடைபெறும்? ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவை குறுகிய கால அளவில் (குறைந்தது ஒரு வாரம்) கூடுவது வழக்கம். கடந்த 2012-ஆம் ஆண்டு ஐந்து நாள்களும், 2013-ஆம் ஆண்டு 6 நாள்களும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இந்தக் குழுவில் பேரவையிலுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பேரவை கூடும் தினமான டிசம்பர் 4-ஆம் தேதி காலையில் அலுவல் ஆய்வுக் குழு கூடும் எனவும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என அப்போது முடிவு செய்யப்படும் என்றும் பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. முக்கியப் பிரச்னைகளும், பிரதானத் தீர்மானங்களும்: தமிழக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பேரவையை எப்போது கூட்ட வேண்டுமென தமிழக அரசுக்குத் தெரியும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை தனது அறிக்கைகளின் வாயிலாக பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையைக் கூட்டுவதற்கான அறிவிப்பை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத் தொடரின் போது பல முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது. பருப்பு, முட்டை கொள்முதல், தருமபுரியில் குழந்தைகள் இறப்பு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் விவகாரம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை, யூரியா தட்டுப்பாடு என பல முக்கிய பிரச்னைகளை பேரவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எனத் தெரிகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு ஏற்கெனவே அரசின் சார்பிலும், அமைச்சர்களின் தரப்பிலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பிரச்னையை எழுப்பும் போது, அரசுத் தரப்பிலும் போதிய பதில்கள் விளக்கமாகத் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், நதிநீர் பிரச்னைகளில் சில முக்கியத் தீர்மானங்கள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இந்தக் கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கும் : பிரதமர் மோடி நம்பிக்கை



"நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறவும்,ஆக்கப்பூர்வமாக விவாதித்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்குவர்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ""நாட்டு மக்கள் எங்களுக்கு (ஆளும் கட்சிக்கு) அரசை நடத்துவதற்கான பொறுப்பை அளித்துள்ளார்கள். அதேபோல்,தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பல்வேறு கட்சியினர் உள்பட அனைவருக்கும், நாட்டை வழிநடத்துவதற்கான பொறுப்பையும் மக்கள் வழங்கியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில், நாட்டு மக்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு நற்செயல்கள், இதமான சூழ்நிலையில், இதமான மனநிலையில் எடுக்கப்படும் என நான் நம்புகிறேன். ஆகையால், இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடர் பயனுள்ளதாகவும், பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் வகையிலும் அமையும் எனக் கருதுகிறேன்.

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சியினரின் ஆக்கப்பூர்வமான பங்கேற்பு காரணமாக, நல்லவிதத்தில் பணிகளை ஆற்ற முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரிலும் அதுபோன்ற அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என்று பிரதமர் மோடி கூறினார். காப்பீட்டு மசோதா உள்ளிட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்க்கவும் கருப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் பல்வேறு எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கூட்டத்தொடரைத் தொடங்குவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது, அனைத்து முக்கியப் பிரச்னைகளும் ஒருமித்த நோக்கில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சிகளுக்கு உறுதி அளித்ததுடன், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரும் சுமுகமாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் வியூகம்: அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்புக்கு வழிவகுக்கும் காப்பீட்டு மசோதாவைப் பொருத்தவரை, இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க் கட்சிகள் பெரிய கூட்டணியாக ஒன்றுசேர்ந்து அதனை எதிர்க்க முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணியில் சேருமாறு அக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளபோதிலும்,காங்கிரஸ் இதுவரை பிடிகொடுக்கவில்லை. காப்பீட்டு மசோதாவில் என்ன திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதைப் பார்த்தபிறகுதான், அதுபற்றி முடிவெடுக்க முடியும் என மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2ஜி: ரூ. 200 கோடி சொத்துகளை முடக்கியது ஏன்? சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரி சாட்சியம்



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம் தொடர்புடைய, மத்திய அமலாக்கத் துறை வழக்கில், சில தனியார் நிறுவனங்களுக்கும் கலைஞர் டிவிக்கும் இடையே நடைபெற்ற ரூ. 200 கோடி அளவிலான பணப் பரிவர்த்தனை தொடர்புடைய சொத்துகளை முடக்கியது குறித்து தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநராக இருந்த பிரபாகாந்த் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தார். இவர் தற்போது நேரு யுவ கேந்த்ராவின் தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்புடைய மத்திய அமலாக்கத் துறை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் கடந்த வாரம் முதல் சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இதையொட்டி, அத்துறையின் இணை இயக்குநர் ஹிமான்ஷு குமார் லாலின் சாட்சியம் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, துணை இயக்குநராக இருந்த பிரபாகாந்த் சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

சொத்துகள் ஏன் முடக்கம்: அவரிடம் மத்திய அமலாக்கத் துறையின் வழக்குரைஞர் என்.கே. மட்டா, "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் சொத்துகளை முடக்க ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரபாகாந்த் அளித்த பதில்: "சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகளான ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனையில் மோசடி நடந்தது தொடர்பாக விசாரணையை நடத்தினர். இந்த வழக்கின் சாட்சிகள், ஆவணங்கள், விசாரணைக்கு வரும் சாட்சிகள் நடத்தப்படும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக நான் மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவேன். சாட்சிகள் தெரிவித்த வாக்குமூலங்களின் உண்மைத்தன்மை தொடர்பாகவும் நான் ஆராய்ந்தேன்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டைனாமிக்ஸ் ரியாலிட்டி, குசேகான் ஃப்ரூட்ஸ் அன்ட் வெஜிடேபிள்ஸ், சினியூக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறைந்த ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டு வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இவற்றின் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத கலைஞர் டிவிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளன. அதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லாதபோதுதான் அந்த நிறுவனங்களுக்கும் கலைஞர் டிவிக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனையில் சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில்தான், ஸ்வான் டெலிகாம் நிறுவனம் இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு கலைஞர் டிவிக்கு அளித்ததை கண்டுபிடித்தோம். இந்த பணப் பரிவர்த்தனையை கடன் தொகை என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கலைஞர் டிவியும் கூறுகின்றன. ஆனால், இவ்வளவு பெரிய தொகையை அளித்ததற்கு எவ்வித ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் 2007-இல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராசா மீது சிபிஐ விசாரணையை தொடங்கியது. இதையடுத்த, சில நாள்களில் பணத்தை அளித்த அதே தனியார் நிறுவனங்களுக்கு கலைஞர் டிவி பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்தியது. இந்தப் பரிவர்த்தனை சட்டப்பூர்வமானது என காட்டிக் கொள்வதற்காக அனைத்து பரிவர்த்தனையும் வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், வாங்கிய ரூ. 200 கோடிக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ,233 கோடி அளவுக்கு கலைஞர் டிவி தொகையை திருப்பி அளித்தது. இதனால்தான் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்படி, மத்திய அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து ரூ. 200 கோடி அளவிலான சொத்துகளை முடக்கும் உத்தரவிலும் நான்தான் கையெழுத்திட்டேன்' என்றார் பிரபாகாந்த்.

அவரது சாட்சியத்தைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, பிரபாகாந்திடம் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் செவ்வாய்க்கிழமை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media