BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 27 April 2014

நரேந்திர மோடியை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம்- லதா ரஜினிகாந்த்


நரேந்திரமோடி கடந்த 13–ந் தேதி சென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது போயஸ் கார்டனில் உள்ள‌ நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்திடம் கேட்ட போது, ‘‘மோடி எனது நெருங்கிய நன்பர் அந்த வகையில் என்னை சந்தித்தார்’’ என்று கூறினார்.

இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரஜினி-மோடி சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நண்பராவார். ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார்’’ என்று கூறினார்.

ராபர்ட் வதேராவின் நில மோசடிகள் குறித்த வீடியோ மற்றும் கையேட்டை பாஜக‌ வெளியிட்டது

பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக பிரியங்கா காந்தி விமர்சித்து வரும் நிலையில், பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேராவின் நில மோசடி குறித்த தகவல்களை 8 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் தொகுத்து பா.ஜ.க தனது பதில் தாக்குதலை தொடுத்துள்ளது.

இன்று இது தொடர்பான வீடியோ மற்றும் 6 பக்க கையேட்டை வெளியிட்ட பா.ஜ.க செய்தி தொடர்பாளரான ரவி சங்கர் பிரசாத், காந்தி குடும்பத்தின் உதவியால் தான் வதேராவின் வளர்ச்சி இந்த அளவுக்கு உயர்ந்ததாக கூறினார். நில விவகாரங்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு முரணாக வதேராவின் நில பேர வர்த்தகங்கள் நடைபெற்றதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் ஆண்ட மாநிலமான ராஜஸ்தானிலும், அக்கட்சி தற்போது ஆண்டுவரும் மாநிலமான அரியானாவிலும் வதேரா மிகப்பெரிய அளவில் முறைகேடான வகையில் சொத்து செய்திருப்பதாக தெரிவித்த அவர், 1 லட்ச ரூபாயை முதலீடாக கொண்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வதேராவால் எப்படி இவ்வளவு லாபம் சம்பாதிக்க முடிந்தது என அவரும் காங்கிரஸ் கட்சியும் விளக்கவேண்டும் என ரவி சங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டார்.

தேர்தலில் பணபலத்தைத் தடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு ராமதாஸ் 10 யோசனைகள்

தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் 10 அம்ச யோசனைகளை வழங்கியுள்ளார். அவை கீழ்வருமாறு:

 1) தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாநில முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விழிப்புணர்வு விளம்பர படங்களில் தோன்றி, "எங்கள் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம் & வேறு ஏதேனும் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது குறித்து தேர்தல் ஆணையத்திடமோ அல்லது தேர்தல் அதிகாரிகளிடமோ புகார் அளிக்க வேண்டும்" என அறிவுரை வழங்க வேண்டும். இந்த விழிப்புணர்வுப் படங்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திரையிடப்பட வேண்டும்.

2) மக்களவைத் தேர்தல்கள் இப்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் போட்டியிட்ட அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்ட வேண்டும். இந்த தேர்தலில் பணப் பயங்கரவாதம் எந்தளவுக்கு தலைவிரித்தாடியது என்பதை விளக்கி, இனி எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். அடுத்து வரும் தேர்தல்களுக்கு முன்பாகவும் இதேபோன்ற கூட்டத்தைக் கூட்டி , ‘ஓட்டுக்கு பணம் தர மாட்டோம்’ என்ற வாக்குறுதியை பெற வேண்டும்.

3) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பில் பணம் தரப்பட்டது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதற்கு அந்தக் கட்சியின் வேட்பாளர் தான் பொறுப்பு என்று அறிவித்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

4) தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.

5) ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக வழக்கு பதிவாகியிருந்தால், அந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை அத்தொகுதியின் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.

6) இதனால், ஜனநாயக நடைமுறைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் தொடர்பான வழக்குகள் வாக்குப்பதிவு முடிவடைந்த ஒரு மாதத்திற்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும். இதற்காக தேர்தல் கால சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் ஆராயலாம்.

7) ஒரு தேர்தலில் ஏதேனும் ஓர் கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கட்சியின் வேட்பாளர் விசாரணையின்றி தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் செல்லாதவையாக அறிவிக்க வேண்டும்.

8) வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் தருவதை கையும் களவுமாக பிடித்துக் கொடுப்பதுடன், குற்றச்சாற்றுகளை விசாரிக்க துணை நிற்பவர்களுக்கு ஒரு லட்சரூபாய் பரிசாக வழங்க வேண்டும்.

9) அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு வாகனங்களையும், பேருந்துகளையும் அனுப்பும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

10) தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் காவல்துறை உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தேர்தல் ஆணையத்தால் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதாலும், ஆட்சியாளர்களைத் தான் தாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்பதாலும், எந்த ஒரு அதிகாரியும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையை மாற்றி தேர்தல் காலத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை உடனடியாக பணி இடை நீக்கம் செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும்; அவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி தம்மை குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவரை மீண்டும் பணியில் சேர்க்கக் கூடாது.

சுதந்திரமான, நேர்மையான, நியாயமான தேர்தல்களை நடத்துவதற்காக நான் முன்வைத்துள்ள மேற்கண்ட யோசனைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சை தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகச் செல்வதாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார் யோகா குரு ராம்தேவ்.  அவர் பேச்சின் எதிரொலியால், தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், இதனை மீறுவோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு பேசுவோர் மீது சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

யோகா குரு ராம்தேவ் லக்னோ மாவட்டத்தில் மே 16-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், உத்தரப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படவில்லை.

இதனிடையே, தலித் சமுதாயத்தை இழிவுபடுத்திய ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மோடி பிரச்சாரத்திற்கு ரூ. 1000 கோடி செலவு என ஆம் ஆத்மி புகார்


ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா வாரணாசி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், மோடியின் பிரச்சாரத்துக்கு ரூ.1000 கோடி செலவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வாரணாசியில் நடைபெற்ற மோடியின் பேரணியில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக பா.ஜனதா தெரிவித்துள்ளன. அதில் பாதி பேர் பா.ஜனதாவின் சின்னங்கள் அல்லது அதனை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகள், பொருட்களை அணிந்து வந்தனர். பேரணியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தொப்பிகள், புடவைகள், கொடிகள், முகமூடிகள், பேனர்கள்‘, டி.சர்ட்டுகள் ஆகியவற்றுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

மோடி வந்த ஹெலிகாப்டருக்கு ரூ.70 லட்சம் வாடகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைக்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு புடவை, டி.சர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (1)–ன்படி எதிரானதாகும்.

இதேபோல் வாரணாசி தொகுதி முழுவதும் பேனர்கள் வைக்க பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.

கோடநாடு செல்லும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரும் அதிமுகவினர்


தேர்தல் முடிவடைந்து இன்று கோடநாடிற்கு வருகை தரவிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணைய விதிகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. முதல்வர் கோடநாட்டுக்கு வரும்போதெல்லாம் கட்-அவுட், போஸ்டர், ஆடல்-பாடல், வெடி வெடித்து அமர்க்களப்படுத்தும் அ.தி.மு.க-வினர், தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முன்பு போல ஆரவாரமாக வரவேற்பு கொடுக்க முடியுமா என குழப்பம் அடைந்துள்ளனர்.

வரவேற்புச் செலவுகள் வேட்பாளரின் கணக்கில் வருமோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். முதல்வரை வரவேற்க தட்டி மற்றும் போஸ்டர் ஒட்ட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.

சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் சுமார் 1 மணியளவில் கோடநாடு செல்கிறார். அங்கு அவர் தேர்தல் முடிவுகள் வரை தங்கியிருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக் ஆயுக்தா குஜராத்தில் அமைக்கப்படும் போது, மோடி ஜெயிலுக்கு போவார்- ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில், தேவ்கத் பரியா என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

இங்கே (குஜராத்) லோக் ஆயுக்தாவோ, போதுமான  அளவு தகவல் அறியும் உரிமை கமிஷனர்களோ இல்லை. 10 தகவல் அறியும் உரிமை கமிஷனர்களை நியமிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் 5 பேர் மட்டுமே உள்ளனர்.

மற்ற மாநிலங்கலில் எல்லாம் லோக் ஆயுக்தா அமைப்பு இருக்கிறது. ஆனால் ஊழல்வாதிகளை பிடிக்கும் அதிகாரம் படைத்த அந்த அமைப்பு இங்கு இல்லை. இங்கே லோக் ஆயுக்தா வரும் போது, தேவையான அளவு தகவல் அறியும் உரிமை கமிஷனர்கள் நியமிக்கப்படும் போது, உங்கள் காவல்காரன்(மோடி) ஜெயிலுக்குள் போவார்.

குஜராத் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் கல்விக்காக போடப்படும் வருடாந்திர பட்ஜெட்டை விட 5 மடங்கு அதிகத் தொகையான சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அதானிக்கு மோடி கொடுத்துள்ளார்.

எல்லா வகையான மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், பொய்களை சொல்லி, மற்றவர்களிடம் இருந்து பறித்து, ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்று மோடி நம்புகிறார்.

இது குஜராத் மாடல் அல்ல, அதானி மாடல். குஜராத் மாடலைப் பற்றிய உண்மை நிலையை நான் அம்பலப்படுத்திய பிறகு குஜராத் மாடலைப் பற்றி பெருமை பேசுவதை மோடி நிறுத்திக் கொண்டார். 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஒரு ரூபாய் என்ற மிட்டாயின் விலையில் அதானிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரம் மிட்டாய்களை தந்துவிட்டு ஆயிரம் ஏக்கர் நிலத்தை அதானி வாங்கிக் கொண்டார். அதே போல், நீங்களும் மிட்டாய்களை தந்து அரசிடமிருந்து நிலம் வாங்க முயன்றால் அடித்து விரட்டப்படுவீர்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால், அமெரிக்க டாலர் விலை ரூ.61-ல் இருந்து 2 ஆண்டுகளில் ரூ.35-ஆக மாறும்


மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால், தற்போது 61 ரூபாயாக உள்ள அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டே ஆண்டுகளில் 35 ரூபாயாக மாறும் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.

வாரணாசியில் ஒரு கருத்தரங்கில் பேசிய அவர், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்ப்பது ஏன்? என்ற தனது நிலைப்பாட்டுக்கு விளக்கம் அளிக்கையில், ’வால்மார்ட் நிறுவனம் தொழில் செய்ய வங்கியில் இருந்து 2 சதவீத வட்டிக்கு கடன் வாங்குகிறது. அதே வேளையில், இந்தியாவில் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் வங்கிக் கடனுக்கு 12 முதல் 18 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் இவ்வளவு வேறுபாடு இருக்கையில் சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்திய வியாபாரிகள் எப்படி போட்டிப் போட்டு தொழில் செய்ய முடியும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

மோடியின் ஆட்சியை பற்றி புகழ்ச்சியாக பேசிய சுப்ரமணியன் சுவாமி, "மோடி தலைமையிலான அரசு, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மிகவும் முன்னேறிய மாநிலமாக குஜராத்தை உயர்த்தியுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 சதவீதம் அளவுக்கு அங்கு விவசாய வளர்ச்சி உள்ளது. " என்று கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media