BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 6 March 2014

தமிழக மீனவர்களைப் பிடித்து வாட்டும், இலங்கை கடற்படையினரை சர்வதேச போலீஸ் வைத்து கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்



தமிழக மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார், பாமக நிறுவனர் ராமதாஸ். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நேற்று முன்னாள் மியான்மரில் ராஜபக்சேவை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை மனித நேயத்துடன் அணுகும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராஜபக்சே ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், இந்த சந்திப்புக்கு அடுத்த நாளே தமிழக மீனவர்களை சிங்களப்படை அத்துமீறி கைது செய்துள்ளது என்பதிலிருந்தே இந்தியப் பிரதமருக்கு இலங்கை எந்த அளவுக்கு மரியாதை தருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது பிரதமருக்கு மட்டுமின்றி, இந்திய இறையாண்மைக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.

ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 121 மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மேலும் 57 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த விதிக்கும் கட்டுப்படாமல் இந்தியாவை தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் இலங்கையிடம் இனியும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதில் எந்த பயனும் இல்லை.

எனவே, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 178 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் அடுத்த 24 மணி நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசும், தமிழக அரசும் எச்சரிக்க வேண்டும். அதன்படி, மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு மறுத்தால், தமிழக மீனவர்களை கடத்தியதாக ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சிங்கள கடற்படையினரை சர்வதேச காவல்துறை (இண்டர்போல்) உதவியுடன் கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெ. மற்றும் இரட்டை இலை படங்களை மறைக்க கோரி ஸ்டாலின் வழக்கு


ஏற்காட்டில் நடந்த இடைத்தேர்தலின்போது தமிழக அரசின் சிறிய‌ பஸ்கள், குடிநீர் பாட்டில்கள், அரசு சிமெண்ட் ஆகியவற்றில் உள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா படம் மற்றும் இரட்டை இலை சின்னங்களை மறைக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் நீலகண்டன் இன்று நீதிபதி ராஜா முன்பு ஆஜராகி கூறியதாவது:

அரசு பொது நிறுவனங்கள் மூலம் சிமெண்ட் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஜெயலலிதா படமும், இரட்டை இலைகள் மட்டும் பொறிக்கப்பட்டு உள்ளன. இதேபோல அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கும் சிறிய‌ பஸ்களிலும் இதே மாதிரி படங்கள் இடம் பெற்றுள்ளன.

தற்போது பாராளுமன்ற தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அரசின் சிறிய பஸ், குடிநீர் பாட்டில்கள், அரசு சிமெண்ட் பைகள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதா மற்றும் இரட்டை இலைகள் படங்களை திரையிட்டு மறைக்க தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு உத்திரவிட வேண்டும். இது தொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கறிஞர் நீலகண்டன் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.

மோடியால் குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை, அம்பானியும், அதானியும் தான் வளர்ந்திருக்கிறார்கள்


குஜராத்தில், நரேந்திர மோடி கூறுவது போல் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என்று நேரில் சென்று ஆய்வறிய‌, நேற்று குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அரவிந்த் கேஜ்ரிவால்.

நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்த கேஜ்ரிவால், "என்னை தடுத்து நிறுத்தும் விதமாக நரேந்திர மோடியும் அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு செயல்பட்டனர். எனது வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தும்படி, கருப்புக் கொடியுடன் சிலரை மோடி அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இப்படி செய்வார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். நான் பார்த்த வரையில் மோடி கூறுவது போல் குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை’ என்று தெரிவித்தார்.

மேலும் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடியை விமர்சித்து பேசிய கேஜ்ரிவால், "அம்பானிக்கும், அதானிக்கும் மட்டுமே மோடி வளர்ச்சியை தருகிறார். குஜராத் வளர்ச்சி பெற்றதாக ஊடகங்களின் வாயிலாக மோடி அறிக்கை வெளியிட்டு வருகிறார். அந்த வளர்ச்சியை யாராவது பேசி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? மக்கள் அவர்களுடைய வேதனையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். " என்று கூறினார்.

கேஜ்ரிவால் கூறுவதில் உண்மை இருக்கிறது என நினைத்தால், லைக் போடுங்கள்!

ஃபேஸ்புக், ட்விட்டரை புகழ்ந்து தள்ளும் கருணாநிதி

  ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களின் புகழ் பாடியிருக்கிறார், கருணாநிதி. இது தொடர்பாக 'இளைஞர்கள் உருவாக்கிய இணைய உலகம்' என்ற தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் கருணாநிதி பகிர்ந்தது:

இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு இணைய உலகம். கோடிக்கணக்கில் மக்கள் இணைய உலகின் குடிமக்களாக (Netizen) உள்ளனர். உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் கருத்துலகில் ஒன்றாகி முகநூல் (FaceBook) ட்விட்டர்களில் (Twitter) குடியிருக்கிறார்கள்.

முகநூல் 4.2.2004 இல் தொடங்கப்பட்டிருக்கிறது. மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) என்பவர் உருவாக்கி இருக்கிறார். அப்போது அவர் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர். தனது அறை நண்பர்கள் மற்றும் உடன் படிப்பவர்களுடன் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்.

மாணவர்களுக்காக மாணவர்கள் உருவாக்கிய முகநூல் இன்று வீடு, அலுவலகம், நண்பர்கள், உறவினர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் என்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கணக்கு தொடங்க முடிகிறது. வங்கிகளில் கூட கணக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் முகநூலில் கணக்கு இல்லை என்றால் முகம் வாடிப் போகிறது.

அதேபோல் ட்விட்டர். 140 எழுத்துகளில் உள்ளத்தில் உள்ளதை உடனுக்குடன் வெளிப்படுத்த 50 கோடி மக்கள் இப்போது ட்விட்டரில் இருக்கிறார்கள்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவராக இருந்த ஜாக் டார்சியின் (Jack Dorsey) மூளையில் விளைந்த பயிர், வளர்ந்து பயன் தந்துகொண்டிருக்கிறது 21.3.2006 இரவு 9.50 மணிக்கு முதல் ட்விட்டர் செய்தி, "just setting up my twttr" என்று டார்சியால் அனுப்பபட்டிருக்கிறது. பின்னர், 'twttr', 'twitter' ஆகியிருக்கிறது. ட்விட்டர் எனும் பெயர் ஒரு பறவையின் கீச்சொலியின் ஒலிபெயர்ப்பாம்.

முகநூல், ட்விட்டர் வரும்வரை, செய்தித் தொடர்பு ஒருவழிப் பாதையாகத்தான் இருந்தது. பதிலுக்குக் காத்திருக்க வேண்டியிருந்தது.

முகநூலும், ட்விட்டரும் செய்தித் தொடர்பை இருவழிப்பாதை ஆக்கியிருக்கின்றன. கருத்தும் சிந்தனையும் ஏற்படுத்தும் அதிர்வுகளை உடனுக்குடன். உலகம் அறிந்துகொள்ள பயன்படுகின்றன. சாதி, மதம், நாடுகளின் எல்லைகள் கடந்து மக்கள் உறவாடவும் உரையாடவும் முகநூலும் ட்விட்டரும் வழியமைத்திருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கணியன் பூங்குன்றனாரின் கனவுலகம் மெய்ப்பட்டிருக்கிறது.

அதற்குக் கடந்த பிப்ரவரி பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ள முகநூலுக்கும், உருவாக்கிய மார்க்-குக்கும், வரும் மார்ச் 21 ஆம் நாள் எட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடும் ட்விட்டருக்கும், உருவாக்கிய டார்சி-க்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி மற்றும் ராகுலை விட பிரதமர் ஆவதற்கான தகுதிகள் என்னிடமே அதிகம்- நிதிஷ் குமார்


பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி இன்று நிதிஷ் குமார் 'சங்கல்ப் யாத்திரை' மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "பிரதமர் பதவிக்காக வலம் வருபவர்களைவிட, நான் அதிக தகுதிகளைக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

நரேந்திர மோடி பெயரையோ, ராகுல் காந்தி பெயரையோ அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும்,  "ஒருவருக்கு நாடாளுமன்றத்தைப் பற்றி எந்த அனுபவமும் இல்லை, இன்னொருவருக்கு மாநிலத்தில் ஆட்சி செலுத்துவது எப்படி என்பது தெரியாது. ஆனால் நாடாளுமன்ற அரசியல் அனுபமும், ஆட்சி செலுத்தும் அனுபவமும் என்னிடம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது பிரதமர் பதவிக்கு எனக்கே முழு தகுதியும் இருக்கிறது" என்று  நிதிஷ் குமார் கூறியிருந்தார்.

பிரதமர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, நிதிஷ் குமார், "ஐக்கிய ஜனதா தள கட்சியின் முதன்மை இலக்கு மக்களுக்கு சேவை செய்வதே ஆகும். இருந்தாலும், மக்கள் மத்தியில் ஆதரவைப் பெருக்க வேண்டும் என்ற கொள்கை எங்களுக்கும் இருக்கிறது." என்று பதில் அளித்தார்.

நிதிஷ் குமார் சொல்வது போல், ராகுல் காந்தி மற்றும் மோடிக்கு பிரதமர் ஆக தகுதி இல்லை என நினைத்தால், ஏன் என்று உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்!

இலங்கைக்கு தொடர்ந்து ராணுவப் பயிற்சியளிப்பதாக இந்தியா உறுதி, தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு


கடலோர பாதுகாப்பு குறித்து இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகளின் பாதுகாப்பு செயலாளர்கள் மட்டத்திலான கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது. இக்கூட்டத்தின் போது, நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிசங்கர் மேனனை கோத்தபய ராஜபக்சே சந்தித்தபோது, அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கப்படும் என அவரிடம் உறுதியளித்தார்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை ராணுவம் அடித்து துன்புறுத்தி, சிறை பிடித்து செல்லும் நிலையில் அந்நாட்டுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது தொடரும் என மேனன் கூறியது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்


மாண‌வர்களின் பாதுகாப்பு கருதி சென்னை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 32 மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்கெனவே 20 பள்ளிகளில் கேமராக் கள் பொருத்தப்பட்டு உள்ளன. இனி மீதமுள்ள 12 மேல் நிலைப்பள்ளிகளிலும் மற்றும் அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில், இந்த கண்காணிப்பு தேவையா என்கிறது சில மாணவர் சங்கங்கள். பெரம்பூர் மார்க்கெட் தெருவில் 1643 பெண்கள் பயிலும் மேல் நிலைப் பள்ளியில் குடிநீர் வசதியில்லை. ஆனால் கேமரா இருக்கிறது என்று கூறுகிறார் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் மருது.

கேமரா மூலம் கண் காணித்து, மாணவ மாணவியர் இயல்பாக பேசிக் கொள்வதை தவறாக புரிந்து கொள்வதாகவும் பெண் ஆசிரியர்களை ஆண் ஆசிரியர்கள் தகாத முறையில் பார்ப்பதாகவும் புகார்கள் வருவதாகவும் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் நிருபன் தெரிவித்தார்.

ஆம் ஆத்மியை சேர்ந்த 14 பேர் கைது


அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று குஜராத் மாநிலத்திற்கு அரசியல் காரணங்களுக்காக சென்றிருந்த போது, பாஜகவினர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதை தொடர்ந்து, போலீச்சார், கேஜ்ரிவாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பின்னர் விடுவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆத் ஆத்மி - பாரதிய ஜனதா கட்சியினரிடையே நேற்று மோதல் வெடித்தது.

மோதலில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 14 பேரை டெல்லி போலீசார் புதன் கிழமை இரவு கைது செய்தனர்.

வன்முறையில் ஈடுபட்டது, அரசு ஊழியரை பணியை செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி முக்கிய பிரமுகர்கள் அசுதோஸ், சாஷியா இல்மி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகின்றனர்.

ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது போல், பாஜகவையும் வெளியேற்றுவோம்- ராகுல் காந்தி


அவுரங்காபாத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, "ஆங்கிலேயரை இந்த நாட்டை விட்டு அகிம்சை வழியில் விரட்டியடித்ததுபோல் பா.ஜனதா கட்சியினரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்” என்று கூறினார்.

மேலும், பாஜகவில் இருப்போர் இந்துக்கள் என்று தங்களை அழைத்து கொள்கிறார்களே தவிர, அவர்கள் பகவத் கீதையை கூட படித்திருக்கமாட்டார்கள் என்றும், "பகவத் கீதையை பாஜகவினர் படித்து இருந்தால், காங்கிரஸ் என்பது ஒரு அமைப்பு அல்ல; அது ஒரு கொள்கை என்றும், யாராலும் அதை அசைக்க முடியாது என்பதையும் அவர்கள் உணர்ந்து இருப்பார்கள்” என்றும் நேற்று பிரச்சாரத்தின் போது ராகுல் கூறியிருந்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, அமலுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிகள், 'அம்மா' குடிநீர் பாட்டிலில் முதல்வர் படம் கூடாது



நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்,  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறினார்.

நிதி உதவித் திட்டங்கள் எதையும் மாநில அரசு அறிவிக்கக் கூடாது. எந்தவித வாக்குறுதியும், புதிய திட்டங்கள், புதிய நிதி ஒதுக்கீடுகள்  எதையும் அறிவிக்கக் கூடாது. அமைச்சர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிலோ அல்லது புதிய திட்டத் தொடக்க விழாவிலோ பங்கேற்கக் கூடாது. சாலை அமைத்துத் தருவதாகவோ, குடிநீர் உள்ளிட்ட இதர வசதிகளை செய்து தருவதாக வோ உறுதி அளிக்கக் கூடாது. அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிய நியமன ங்கள் மற்றும் தற்காலிக நியமனங்கள் எதுவும் செய்யக் கூடாது. அமைச்சர்கள், தங்களது அரசு அலுவல் பணிகளையோ, அரசு முறைப் பயணங்களையோ தேர்தல் பணிகளுடன் ஒன்றாக வைத்துக் கொள்ளக் கூடாது. அரசு இயந்திரங்களை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தவே கூடாது என்று அமைச்சர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு பற்றி கூறினார்.

அம்மா குடிநீர் பாட்டில்களில் முதல்வர் படம் இடம்பெறுவதை உடனே நிறுத்த வேண்டும். முதியோர் ஓய்வூதியம் வழங்குதல், 100 நாள் வேலைத் திட்டம் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.

ஓட்டுக்காக பணம் வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரவீன் குமார் தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media