காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரும் ஹரியானாவின் மாநில அமைச்சருமான ரந்தீப் சுர்ஜிவாலா, பாஜக தலைவர்கள் பதவிக்காக அலைகிறதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்தர மோடி வாரணாசி தொகுதியை தேர்ந்தெடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் குஜராத்திலும் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. இது தனது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாமல் அவர் தவிப்பதைக் காட்டுகிறது.
இவரைபோல் பாஜகவின் அனைத்து தலைவர்களும் அங்கும் இங்கும் அலைபாய்ந்து வருகின்றனர். பாதுகாப்பான தொகுதிகளுக்காக ஒருவர், மற்றவருடைய தொகுதியைப் பறிப்பதும் நிகழ்கிறது.
காஜியாபாத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்பப்பரிடம் தோற்றுவிடுவோம் எனப் பயந்து காஜியாபாத்தில் இருந்து லக்னோவிற்கு ஓடி விட்டார் ராஜ்நாத்சிங்.
உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்றத் தலைவரான கல்ராஜ் மிஸ்ரா வழக்கமாக போட்டியிடும் கிழக்கு லக்னோ தொகுதியை விட்டு, தேவரியாவில் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேசத்தின் டீக்கம்கரையைச் சேர்ந்த உமா பாரதியை உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் எம்.எல்.ஏவாக்கினார்கள். அவர் அங்கேயே எம்பி தொகுதிக்கு போட்டியிடாமல் ஜான்சிக்கு மாறி விட்டார்.
டெல்லியை சேர்ந்த அருண்ஜெட்லி அதன் ஏழு தொகுதிகளில் ஒன்றில்கூட போட்டியிட மறுத்து பாதுகாப்பான சீட் என அமிர்தசரஸில், மற்றொருவரின் வாய்ப்பை பறித்துக் கொண்டார். மூத்தவர்களுக்கு மதிப்பளிக்கும் கலாச்சாரம் கொண்ட பாஜக அதன் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தனது விருப்பத்தை தெரிவித்தும் இன்னும் சீட் ஒதுக்காமல் இருக்கிறது எனத் தெரிவித்தார்.