காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. சபை திட்டவட்டமாக நிராகரித்தது.நீண்ட நாள்களாக நிலவும் இப்பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும்
பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபை
தெரிவித்து விட்டது. நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான்
கீ மூனின் துணைச் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம், காஷ்மீர்
விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடக் கோரி பான் கீ மூனுக்கு பாகிஸ்தான்
வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தார் அஜீஸ் கடிதம் எழுதியிருப்பது குறித்து
கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பான் கீ மூன், கடந்த வாரம் அறிக்கை
வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடையேயான அனைத்து
கருத்து வேறுபாடுகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ள
வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆக்கப்பூர்வமான
செயல்பாடுகளின் மூலமாக காஷ்மீரில் நீண்ட காலத்துக்கு அமைதியும்,
ஸ்திரத்தன்மையும் நிலவ வழிகாண வேண்டும் என்றும் பான் கீ மூன்
குறிப்பிட்டுள்ளார் என்றார் அவர். இந்தியா திட்டவட்டம்: இதனிடையே, ஐ.நா. பொதுச் சபையில் அண்மையில்
நடைபெற்ற 4ஆவது கமிட்டிக் கூட்டத்தில், காலனியாதிக்கத்தில் இருந்து
விடுபடுதல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது காஷ்மீர் விவகாரத்தை
பாகிஸ்தான் தூதர் எழுப்பினார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணாத
வரையில், காலனியாதிக்கத்தில் இருந்து விடுபடுதல் தொடர்பான ஐ.நா.வின்
திட்டம் முழுமையடையாது என்று அவர் கூறினார். அதற்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலர் அபிஷேக் சிங்
அளித்த பதிலில் கூறியதாவது: தீவிரவாதம் நிறுத்தப்பட்டால் மட்டுமே,
பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும். இதையே, ஐ.நா. சபைக்
கூட்டத்தில் அண்மையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதம் இல்லாத
அமைதியான சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக
இருப்பதாக குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின்
ஒருங்கிணனைந்த பகுதியாகும். அந்தப் பகுதி குறித்து பாகிஸ்தான் பேசுவது
வருந்தத்தக்கது என்றார் அவர்.
பிரச்னையை பாகிஸ்தான் திசை திருப்புகிறது: இந்தியா
புதுதில்லி,அக்.14: "பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக
உள்ள போதிலும், ஐ.நா.விடம் முறையிட்டு பிரச்னையை பாகிஸ்தான் திசை
திருப்புகிறது' என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையது
அக்பருதீன் கூறினார்.இதுகுறித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:ஜம்மு-காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும், சிம்லா
ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படையில், பாகிஸ்தானுடன்
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை
மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விருப்பமில்லாததுபோல்
பாகிஸ்தான் நடந்து கொள்கிறது. இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில்
தலையிடுமாறு, ஐ.நா. பொதுச்செயலாளருக்கு புகார் கடிதம் எழுதும் தந்திரத்தை
பாகிஸ்தான் கையாள்கிறது. அது ஒருபோதும் பலனளிக்காது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே சமாதானமும், கூட்டுறவும் ஏற்பட வேண்டுமெனில்,
அதற்கான பாதை, இஸ்லாமாபாதில் இருந்து, லாகூர் வழியாக தில்லியை வந்தடைய
வேண்டும். அவ்வாறு இல்லாமல், நியூயார்க் வழியாகச் சென்றால், அது எந்த விதத்திலும்
பலனளிக்காது. எனவே, எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தியாவுக்கு எதிராக
தீவிரவாதத்தைத் தூண்டுவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
சையது அக்பருதீன் தெரிவித்தார்.
மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: பாஜக
ஜம்மு,அக்.14: காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது என்று
பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா. சபை நிராகரித்திருப்பது, பிரதமர் நரேந்திர
மோடி தலைமையிலான அரசுக்கு ராஜதந்திர ரீதியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி
என்று பாஜக தெரிவித்தது.இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக தலைவரின் அரசியல் ஆலோசகர் ஹரி ஓம் தெரிவித்ததாவது: சர்தார் அஜீஸின் கோரிக்கையை ஏற்க முடியாது என ஐ.நா. மறுத்திருப்பது,
பாகிஸ்தான் அரசியல்வாதிகள், ராணுவ அமைப்புகளின் முகத்தில் விழுந்த அறை.
அதேபோல், காஷ்மீர் பிரிவினைவாதிகளான சையத் அலி ஷா கிலானி, மீர்வாய்ஸ் உமர்
பாரூக், யாசின் மாலிக், ஷபீர் ஷா உள்ளிட்டோருக்கும் மிகப்பெரிய
பின்னடைவாகும். அதேசமயம், இது பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கு
ராஜதந்திர ரீதியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியா தற்போது பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்றார் அவர்