BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 26 April 2014

பாஜகவில் இணைந்ததற்கான காரணங்களை கூறுகிறார் மன்மோகனின் சகோதரர்

"மோடி அலை வீசவில்லை" என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், அவரது சகோதரர் தல்ஜீத்சிங் கோலி (மன்மோகன் சிங் தந்தையின் 2–வது மனைவியின் மகன்) பா.ஜனதாவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதாவில் அவர் இணைந்ததை வரவேற்ற மோடி இதன் மூலம் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று கூறினார்.

பாரதீய ஜனதாவில் சேர்ந்தது குறித்து தல்ஜீத்சிங் கோலி கூறியதாவது:

பிரதமர் மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி நடத்திய விதம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் சுயமாக செயல்படவிடவில்லை. மத்திய அரசை நடத்த அவருக்கு முழு அதிகாரம் வழங்கவில்லை. அவருக்கு உரிய திறமைபடி வேலை செய்ய அனுமதிக்கவில்லை. இதனால்தான் பா.ஜனதாவில் இணைவது என்று முடிவு எடுத்தேன். பா.ஜனதா டிக்கெட் வழங்கினால் தேர்தலில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தல்ஜீத்சிங் கோலி பா.ஜனதாவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சியும், குடும்பத்தினரும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இது குறித்து மன்மோகன் சிங் பேசிய போது, "என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பெரியவர்கள் இவ்வாறு செய்கிறார்களே" என்று கூறினார்.

டைம் மேகசின் வெளியிட்ட 'செல்வாக்கு மிக்க 100 நபர்கள்' பட்டியலில் சேர்க்கப்பட்ட கோவையின் முருகானந்தம்!


நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால், எழுத்தாளார் அருந்ததி ராய் மற்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் ஆகிய நால்வரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு, ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் அத்து மீறல் தகவல்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், போப் பிரான்சிஸ், ரஷ்ய பிரதமர் விளாமிதிர் புடின் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரியை சந்தித்து காலை தொட்டு ஆசி பெற்ற ராஜ்நாத் சிங்


உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இன்று காலை மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அங்கு அவரது காலைத் தொட்டு ராஜ்நாத் சிங் வணங்கி ஆசி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் தேர்தலில் வெற்றி பெற திவாரி வாழ்த்து தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் மூன்று முறை திவாரி முதல் மந்திரியாக பதவி வகித்திருக்கிறார்.

திவாரியை சந்தித்து விட்டு, பின்னர் நிருபர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், “உத்தர பிரதேச சட்டசபையில் இருந்தபோது நான் உரையாற்றியதைக் கவனித்த திவாரி, உடனே என்னை அழைத்தார். இந்த மாநிலத்தின் எதிர்காலம் நீதான் என்று அப்போது வாழ்த்தினார்” என்று கூறினார்.

மோடியின் வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், நாட்டை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும்-சோனியா


பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சோனியா காந்தி, குஜராத் மாதிரி வளர்ச்சித் திட்டம் என்பது நிஜத்தில் மோடி மாதிரி வளர்ச்சித் திட்டம், அத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தால், கடவுள் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

அகாலி தள கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது வருத்தமளிக்கிறது. குஜராத்தில் சீக்கியர்கள் வாழ வழியில்லை. சீக்கியர்கள் நலனை பாதுகாக்காத குஜராத் முதல்வருக்கு அகாலி தளம் ஆதரவு அளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு மேல் குஜராத்தில் உள்ள சீக்கியர்கள் பிழைப்புக்கு வழியின்றி அங்கிருந்த வெளியேறும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தான் 'மோடி மாதிரி' வளர்ச்சித் திட்டத்தின் பயன்.

இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.11 சம்பாதிப்பவர்கள் ஏழைகள் அல்ல. குஜராத்தில் 5 வயதுக்கு உட்பட்ட பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 45,000 ஏக்கர் நிலங்கள் பெரும் முதலாளிகளுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதியான குடிநீர் வசதி கூட குஜராத்தின் பல கிராமங்களில் இல்லை. எனவே 'குஜராத் மாதிரி' வளர்ச்சித் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வராமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசியிருந்தார்.

தலித் வீடுகளுக்கு பிக்னிக், தேனிலவுக்காக ராகுல் காந்தி செல்கிறார் என கூறிய ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் தனது தொகுதியில் உள்ள தலித் மக்கள் வீடுகளுக்கு பொழுதுபோக்குவதற்காகவும், தேனிலவுக்காகவும் செல்கிறார் என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருந்தார்.

மேலும், ராகுல் காந்தி திருமண விவகாரம் குறித்தும் அவர் பேசிய போது, ராகுல் காந்திக்கு இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால், அவர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பிரதமர் ஆக முடியாது என சோனியா காந்தி கூறியதால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என கூறியிருந்தார்.

ராம்தேவின் கருத்துகள் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராம்தேவ் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திக்விஜய்சிங் கூறியதாவது: "ராம்தேவ் பேச்சு தலித் மக்களுக்கு எதிரானது. ராகுலை அவதூறாக பேசிய ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மோடியும், பாஜகவும் ராம்தேவ் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை-மன்மோகன்


பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர்: "என் சகோதரர் பாஜகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பெரியவர்கள் இவ்வாறு செய்கிறார்களே" என்றார்.

முன்னதாக பிரதமரின் சகோதரர் பாஜகவில் இணைந்தது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில்: "தல்ஜித் சிங் கோலி பாஜகவில் இணைந்தது மொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பாஜகவில் இணைந்த அவரது நோக்கம் தெரியவில்லை. இருப்பினும் அவர் விரும்பும் அரசியல் வாழ்க்கையை தேர்வு செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. பிரதமருக்கும் அவரது சகோதரருக்கும் பல ஆண்டுகளாக எவ்வித தொடர்பும் இல்லை"என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பேரறிவாளன் விடுதலையாகும் வரை போராடுவேன்

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்திருந்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று சந்தித்தார். அப்போது கண்ணீர் மல்க இருவரும் பேசிக் கொண்டனர். ஜெயிலில் பேரறிவாளனை சந்தித்து விட்டு வெளியே வந்த அற்புதம்மாள் கூறியதாவது:

உச்சநீதிமன்ற‌ தீர்ப்பு குறித்த தகவலை என் மகனிடம் தெரிவிக்க வந்தேன். பேரறிவாளன் விடுதலையை எதிர்பார்த்திருந்தான். அவன் மனதை தளர விடவில்லை. விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறான்.

அவன் விடுதலையாகும் வரை போராடுவேன். மீண்டும் போராடி வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசு மூன்றாவது அணியுடன் கை கோர்க்குமா ?

தேர்தலுக்கு பின் காங்கிரசு மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் அதை சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் வர்மா மற்றும் இடதுசாரிகள் தலைவர் ராஜாவும் இந்த முடிவை வரவேற்று பேட்டி அளித்தனர் .

ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில் மூன்றாவது அணி தான் பாதிக்கு மேற்பட்ட இடங்களை பிடிக்கும் . நாங்கள் இதுவரை பாஜக வை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளோம் . இனிமேலும் செய்வோம் என்றார் .

டி.ராஜா கூறுகையில் நாங்கள்  காங்கிரசு , பாஜக ஆகிய கட்சிகளுக்கு மாற்று கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றே தேர்தல் பிரச்சாரம் செய்தோம் , ஆனால் தேர்தலுக்கு பின் வரும் நிலையை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும் என்றார் .

ஆனால் காங்கிரசு கட்சிக்குள் சிலர் இந்த முடிவை எதிர்க்கின்றனர் . தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மூன்றாம் அணியுடன் சேருவதை விட எதிர் கட்சியாக இருப்பது சிறந்தது என சிலர் காங்கிரசு தலைவர்கள் எண்ணுகின்றனர் .



சோனியா காந்தி ஒன்றும் பிரதமர் பதவியை தியாகம் செய்துவிடவில்லை-ராஜ்நாத் சிங்


உத்தரப்பிரதேச மாநிலம் அவுரங்காபாத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், "கடந்த 2004 மக்களவை தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியை விட்டுக்கொடுத்ததால் சோனியா காந்தி எந்த தியாகமும் செய்துவிடவில்லை." என்று கூறினார். இது குறித்து அவர் விளக்கி கூறுகையில், "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ள பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகர் சஞ்சய பருவா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சோனியா காந்தி தான் நடத்தி வந்ததாக கூறியுள்ளார். அந்த புத்தகத்தில் மத்திய அரசை சோனியா காந்தி தான் நடத்தினார் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

பாஜக மதவாத கட்சி என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. மேலும், சமுதாயத்தை பாஜக பிரித்தாள முயற்ச்சிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், உண்மையில் சோனியா காந்திக்கு வரலாறு தெரியவில்லை. இந்தியப் பிரிவினைக்குக் காரணம் பாஜக‌ அல்ல, காங்கிரஸ் கட்சியே.

நரேந்திர மோடி, பாஜக பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்று கூறிய ராஜ்நாத் சிங், கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீர கலந்து ஆலோசித்த பிறகே மோடி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் என கூறினார்.

மோடியின் ஆட்சி காலத்தில் அதானியின் சொத்து மதிப்பு, 3000 கோடியிலிருந்து 40000 கோடி ஆனது எப்படி?


உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் நேற்று நடைபெற்ற, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சித்து பேசுகையில், “பெண்களை உளவு பார்ப்பதற்கு அக்கட்சியின் தலைவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்." என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

நாட்டின் காவல்காரனாக தன்னை நியமிக்கும்படி மக்களிடம் மோடி கேட்கிறார். ஆனால் குஜராத்தில் இவரின் ஆட்சிக்காலத்தில் தொழிலதிபர் அதானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பணம், நாடு முழுவதும் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் தொகைக்கு இணையானது. இவ்வளவு பணத்தை இந்த காவல்காரர் ஒரு நிறுவனத்துக்கு தந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பந்தல்கண்ட் பகுதிக்கு மத்திய அரசு ஒதுக்கியத் தொகை இங்கு வந்துசேரவில்லை. இப்பகுதிக்காக மத்திய அரசு ரூ.7,700 கோடி ஒதுக்கியது. ஆனால் இத்தொகை தலைநகர் லக்னோவிலேயே மாயமாகிவிட்டது.

பாரதிய ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆட்சியில் இப்பகுதியில் வேலை வாய்ப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்படவில்லை. ஆனால் பந்தல்கண்ட் வழியாக தொழில் வளாகச் சாலை செல்வதற்கு காங்கிரஸ் வகை செய் துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பந்தல்கண்ட் பகுதியில் குடிநீர் கிடைக்காமலும் பட்டினியாலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு ராகுல் காந்தி கூறியிருந்தார்.

சென்னை நோக்கியா ஆலை மைக்ரோசாப்ட் கட்டுப்பாட்டில் வரிப்பிரச்சனையால் சேர்க்கப்படவில்லை


சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 8,000 பேர் நேரடியாகவும், 12,000 பேர் மறைமுகமாகவும் பணிபுரிகிறார்கள். நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து சில மாதங்களுக்கு முன்பு வாங்கியது. இப்போது வரி பிரச்சினை காரணமாக சென்னை தொழிற்சாலை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ரூ.2,400 கோடி வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பிணையை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

வரிப்பிரச்சனை இருந்தாலும் ஒப்பந்தத்தின்படி நோக்கியா நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு மொபைல் போன்களை தயாரித்து தரவேண்டும்.

அப்சல் குரு தூக்கை வலியுறுத்திய பாஜக, ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்கள் குறித்து மௌனம் சாதிப்பது ஏன்?


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் உள்ளிட்டோர் குறித்து பாஜக மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக வலியுறுத்தியது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்த பட்டவர்கள் குறித்து பாஜக தலைவர்களில் ஒருவர்கூட எதுவுமே கூறவில்லை.

இந்த விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக மவுனம் காப்பது ஏன்? ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிகூட இதுவரை ஒருவார்த்தைகூட கூறவில்லை. இதன் மூலம் பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டு உள்ளது. அந்தக் கட்சி தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. வாக்கு வங்கி ஆதாயத்துக்காக மட்டுமே குரல் எழுப்புகிறது.

இவ்வாறு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சீரஞ்சீவி மீது முட்டை வீச்சு !!

சீரஞ்சீவி கொனேரு என்னும் இடத்தில் தேர்தல் பரப்புரை செய்தார் . அப்போது மோடியை அவர் ஹிட்லர் என்று கூறினார் . இதனால் பாஜக ஆதரவாளர்கள் அவர் மீது முட்டை வீசினர் . இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது . ஆனால் காவல்துறை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் .

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media