முல்லை பெரியாறு விவகாரத்தில், தமிழகத்திற்கு சாதகமாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழக விவசாயிகள் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஆனால் கேரள பகுதியில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் வகையில் கேரள பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. கேரள பகுதியில் பந்த் நீடிப்பதால் தமிழக பேருந்துகள் அனைத்தும் கூடலூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பயணிகள் நடந்து கேரள பகுதிக்கு செல்கின்றனர்.
குமுளி, இடுக்கி பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் பகுதி தொழிலாளர்களே வேலை செய்து வருகின்றனர். ஆனால் இன்று பேருந்துகள், லாரி, ஆட்டோக்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடாததால் தொழிலாளர்கள் தவித்தனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கேரளா பகுதியான வண்டிபெரியாறு, குமுளி, இடுக்கி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அப்பகுதியில் பலத்த மழை பெய்துவருவதால் போராட்டக்காரர்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
கேரளாவில் உள்ள தேக்கடி, மூணாறு பகுதி சிறந்த சுற்றுலா தலமாகும். தற்போது முழு அடைப்பு காரணமாக இங்கு படகு சவாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஓட்டல்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.