சாதி உணர்வை தூண்டியதாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
தருமபுரி மக்களவைத் தொகுதியில் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் குறுந்தகடுகளை வினியோகம் செய்ததாகக் கூறி என் மீதும் பா.ம.க. நிர்வாகிகள் சரவணன், அரசாங்கம் ஆகியோர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தப் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தருமபுரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக என்னை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதைப் போலவே பரப்புரைக்காக நான் செல்லுமிடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி என்னை வரவேற்கிறார்கள்.
தருமபுரி தொகுதியின் பொது வேட்பாளராக கருதி எனக்கு பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். தருமபுரி முழுவதும் எனக்கு ஆதரவான அலை வீசுகிறது.
தருமபுரி தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். அப்போது தான் அனைத்து துறைகளிலும் தருமபுரி முன்னேறும் என்பதைத் தான் நான் பிரச்சாரம் செய்வதற்காக செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன்.
மனித வாழ்நிலை மேம்பாட்டுக் குறியீட்டில் தற்போது 28 ஆவது இடத்தில் இருக்கும் தருமபுரி மாவட்டத்தை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வருவேன் என்றும், மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தை அமைதியும், வளர்ச்சியும் நிறைந்ததாக மாற்றுவேன் என்றும் தேர்தல் பரப்புரையின் போது நான் அளிக்கும் வாக்குறுதிக்கு தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர், தோல்வி பயத்தில் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர்.
பா.ம.க. பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலம் எனது வெற்றியை தடுத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் ஆளுங்கட்சியினர், அதற்காகவே சாதி உணர்வை தூண்டுவதாகக் கூறி காவல்துறை மூலம் பொய் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
வாக்காளர்களிடையே வினியோகிக்கப்பட்டதாக கூறப்படும் குறுந்தகடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது; அந்த குறுந்தகட்டை நான் பார்த்ததும் இல்லை; அப்படி ஒரு குறுந்தகட்டை நான் கொடுக்கவும் இல்லை; கொடுக்கும்படி யாரிடமும் கூறவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நடக்காத ஒரு நிகழ்வுக்காக என் மீதும், பா.ம.க. நிர்வாகிகள் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சாதி உணர்வை தூண்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை.
மாறாக, தோல்வி பயத்தால் துவண்டு கிடக்கும் ஆளுங்கட்சியினர் தான் பா.ம.க.வினர் மீது வழக்குத் தொடருவதன் மூலம் சாதி உணர்வைத் தூண்டி மலிவான அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றனர். ஆளுங்கட்சியின் இந்த முயற்சிக்கு அதிகாரிகளும் துணை போயிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியினர் நினைத்தால் அவர்களே எங்களின் பெயரில் ஏதேனும் துண்டறிக்கைகளை வினியோகித்துவிட்டு, அதை நாங்கள் தான் செய்ததாகக் கூறி மீண்டும், மீண்டும் பொய் வழக்கு தொடரும் ஆபத்து உள்ளது.
எனவே, தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு, என் மீதும், பா.ம.க. நிர்வாகிகள் மீதும் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறும்படி ஆணையிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, இது தொடர்பாக விசாரணை நடத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்"
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.