BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 April 2014

விசா மோசடி வழக்கை அடுத்து, ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த வழக்கிலும் சிக்கினார் தேவயாணி

அமெரிக்க விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, அதில் இருந்து விடுபட்டு ஒரு வழியாக இந்தியா திரும்பிய, அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தேவயாணி கோப்ரகடேவிற்கு இன்னொரு சிக்கல் வந்துள்ளது.

ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் தேவயானி கோப்ரகடேவிற்கு வீடு ஒதுக்கியது தொடர்பாக அவர் மீதும், அவரது தந்தை மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ முடிவு செய்துள்ளது.

வீடு ஒதுக்குவதற்காக தவறான ஆவணங்களை தேவயானி தாக்கல் செய்துள்ளது குறித்து சி.பி.ஐக்கு தற்போது தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு மும்பையில் உள்ள ஓஷிவாராவில் உள்ள அரசு குடியிருப்பில் தேவயானி கோப்ரகடேவிற்கு சொந்தமாக அடுக்கு மாடி குடியிருப்பு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது தந்தையான உத்தம் கோப்ரகடே அதை மறைத்து போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். எனவே கோப்ரகடே மற்றும் அவரது தந்தை மீது வரும் சில வாரங்களில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அம்பானி, வீரப்ப மொய்லி, முரளி தியோரா மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை

இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய மந்திரி வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா ஆகியோர் மீது டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்தபோது அம்மாநில ஊழல் தடுப்பு பிரிவு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

இது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில்,  'ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணை முடிவடையும் வரை, இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடர டெல்லி அரசுக்கு உரிமையில்லை என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடந்தபோது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட மாநில அரசுகளுக்கு உரிமையில்லை என்று கூறினார், மேலும் அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என பேசிய அவர், இவ்வழக்கை கெஜ்ரிவால் அரசு, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அப்படியொரு வழக்கை பதிவு செய்ததாக தனது வாதத்தின்போது தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு-ஜெயலலிதா

மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து ஜெயலலிதா பேசியதாவது:

"நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகின்ற சாதாரணத் தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருகின்ற தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கின்ற தேர்தல், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவை மீட்கும் தேர்தல், ஊழல் சாம்ராஜ்யத்தில் இருந்து இந்திய நாட்டை விடுவிப்பதற்காக நடைபெறுகின்ற தேர்தல்.

விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; திருமண உதவித் தொகையுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்; என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூகநீதி நிலைநாட்டப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே முதன் முதலாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக, நலனுக்காக, பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், தி.மு.க. என்ன செய்தது? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, விவசாயிகளின் வாடிநவாதாரத்திற்கு, வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காததோடு, விவசாயத்தை வீடிநத்தும் பணியிலும் ஈடுபட்ட கட்சி தி.மு.க.

சேது சமுத்திரக் கால்வாயில் பயணிக்கும் கப்பலின் ஆழம் 10 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தக் கால்வாயில் 20,000 டன் எடை கொண்ட கப்பல்கள் தான் செல்ல முடியும். இது போன்ற சிறிய கப்பல்கள் தற்போது மிகவும் குறைவு. தற்போது உலகில் ஆழம் அதிகம் கொண்ட கப்பல்கள் தான் வடிவமைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி துறைமுகத்தில் பெரும்பாலும் பெரிய சரக்குக்கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தப் பெரிய கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்லவே முடியாது.

எனவே, சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பெரிய கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர முடியும் என்பதும், இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பொய்; வடிகட்டிய பொய். "

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தில் உரையாற்றிருந்தார்.

நக்மா, ஹேமமாலினி ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பு-தேர்தல் கண்காணிப்புக் குழு

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை மனு அனுப்பியது. அதில், மீரட் தொகுதியில் போட்டியிடும் திரைப்பட நடிகை நக்மாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தேர்தல் குழு ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த மாதம் 27-ம் தேதி, மீரட்டில் பிரச்சாரத்திற்குச் சென்ற நக்மாவை இளைஞர் ஒருவர் சீண்டினார். இதனால், கோபத்திற்கு உள்ளான நக்மா, அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தார். இதைத் தொடர்ந்து, அவரின் பாதுகாப்பை அதிகரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

இதேபோல், மதுரா தொகுதியில் போட்டியிடும் ஹேமமாலினிக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால் வேட்பாளர் கைது செய்யப்படுவார்

இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி பயன்படுத்திதான் பிரச்சாரம் செய்யக் கூடாது. ஆனால், நள்ளிரவிலும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது கிரிமினல் குற்றமாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால் வேட்பாளர் இந்திய தண்டனைச் சட்டம் 451 பிரிவின் கீழ் கைது செய்யப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

வேட்பாளர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்தால், அந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கான செலவுகள் முழுவதும் வேட்பாளரின் செலவுக் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்ற விதிமுறையை எதிர்த்து ஜெயலலிதா வழக்கு தொடர போவதாக கூறியிருப்பதை பற்றி கேட்ட போது, அது தேர்தல் ஆணையத்தின் பழைய விதிமுறை என்று பிரவீண்குமார் பதிலளித்தார்.

பாலைவனமான திண்டுக்கல்லை, பால் வளமாக்குவேன்னு எங்க வேட்பாளரு சொல்லியிருக்காரு, சொன்னதச் செய்யல... பெண்டு எடுத்துருவேன்- விஜயகாந்த்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியது:

தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணியின் வாகனத்தை ஆளும்கட்சியினர் கற்கள் வீசி தாக்கி உள்ளனர். தோல்வி பயத்தில் அவர்கள் தாக்கத் தொடங்கி விட்டனர். இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு இருவழிச் சாலை போடுறதா சொன்ன அதிமுக,  குடிக்க தண்ணீர்கூட கொடுக்கவில்லை. ஒரு குடம் 10 ரூபாய்க்கு விற்கிறது. அதிமுக.வும் திமுக.வும் மாறி மாறி மக்களை ஏமாற்றினர். அவர்களை விரட்டத்தான் பாமக, பாஜக, மதிமுக.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்.

தேனிக்காரர் ஓ. பன்னீர் செல்வம் முதல்வரானார். அவரால் கொடைக்கானலுக்கு தண்ணீர் கொண்டுவர முடிந்ததா? மலைவாழ் மக்களுக்கு பட்டா கொடுக்க முடிந்ததா?. ஆனா, தமிழக அரசியல்வாதிகள் அனைவருக்கும் கொடைக்கானலில் பினாமி பெயரில் பட்டாவுடன் சொத்துகள் உள்ளன. ஆட்சியாளர்கள் ஊழலில் ஊறிப்போனதால், இந்த சுற்றுலா நகரங்களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லை.

ராத்திரி ஓட்டு கேட்டா தப்பில்லை என்கிறது தேர்தல் ஆணையம். ராத்திரி ஓட்டா கேட்பாங்க?, பணம்தான் கொடுப்பார்கள். பழைய சட்டம் போதும். எதற்காக புதுப்புது சட்டங்கள் கொண்டு வருகிறீர்கள்?

திமுக.வுக்கு ஏற்பட்டதுதான் அதிமுக.வுக்கும், கடந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எங்கள் பெயரை சொல்லவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என அனைவருக்கும் தெரியும். இந்தமுறை அதிமுக எங்கள் பெயரை சொல்லவில்லை. இவங்களுக்கும் திமுக.வுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்படப் போகிறது.

எங்க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பாலைவனமான திண்டுக்கல்லை பால் வளமாக்குவேன்னு சொல்லி இருக்கிறார். சொன்னதை கண்டிப்பா செய்வார். செய்யா விட்டால் பெண்டு எடுத்துருவேன் (சிரித்தபடி).

இவ்வாறு விஜயகாந்த் பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

பாஜக கூட்டணி 323 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும், காங்கிரஸ் செய்த துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது: வைகோ

சென்னையிலுள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து முத்தமிழ்நகர் மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது வைகோ பேசியதாவது:

நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி. இத்தேர்தலில் பாஜக கூட்டணி 323 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தியது மட்டுமல்லாமல், சமையல் காஸ் விலையையும் மத்திய அரசு ஏற்றியுள்ளது. இதனால் ஏழை மக்கள் குடும்ப வருமானத்தை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு பிரச்சினை, இலங்கை பிரச்சினை, மீனவர்களுக்கு பாதிப்பு என பல் வேறு கொடுமைகளுக்கு இந்திய அரசுதான் காரணமாக இருந்துள்ளது. எனவே, தமிழக மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது. அந்த கட்சியுடன் ஒட்டி உறவாடிய திமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஈழத்தமிழர்களை படுகொலை செய்தபோது திமுக உடந்தையாக இருந்தது. இந்த தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லை.

இவ்வாறு வைகோ கூறியிருந்தார்.

அமெரிக்க போலீஸ் அதிகாரி டெல்லியில் கைது, இந்தியாவின் பழி வாங்கும் படலமா?!

டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய நியூ யார்க் போலீஸ் அதிகாரி மேன்னி என்கார்னேஷன், தன்னுடைய பையில் மூன்று துப்பாக்கி குண்டுகளை வைத்து இருந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீனில் விடுவிக்க பட்டு இருந்தாலும், இந்திய நாட்டை விட்டை விட்டு வெளியேற கூடாது என்றும், ஏப்ரல் 17 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஊடகங்கள், தேவயாணி கைதிற்காக, இந்தியாவின் பழி வாங்கும் நடவடிக்கையே என்று கூறுகின்றன.

"எங்கள் நாட்டு தூதர்களை ஆடைகள் அகற்றி சோதனை செய்வீர்களா.." என்று டெல்லி விமான நிலையத்தில் உள்ள அதிகாரி, மேன்னியை கைது செய்யும் போது கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து நியூயார்க் காவல் துறையிடம் இருந்து, இந்திய அதிகாரிகளுக்கு கடிதம் வந்திருக்கிறது. மேன்னி, தனது ஜாக்கெட்டில் மூன்று குண்டுகளை வைத்து இருந்தார் என்றும், ஆனால் அதைப் பற்றி மறந்துவிட்டு, தவறுதலாக அந்த ஜாக்கெட்டையும் தனது பையில் வைத்து கொண்டு பயணம் செய்து விட்டார், அவர் தெரியாமல் செய்த தற்செயலான தவறு என்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media