BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 22 May 2014

ராஜபக்சேவை பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"புதிய பாரதப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்‌ஷேவுக்கு இந்தியாவின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற கவலை தரும் செய்தியை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆகியோரின் மனஎழுச்சி மற்றும் கொந்தளிப்பு அனைவரும் நன்கு அறிந்தவையே.

நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடைபெற்று, ஒரு சில நாட்களில் புதிய மத்திய அரசு பதவியேற்க இருக்கிறது என்றாலும், இந்த மாற்றம், தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கெனவே உள்ள இறுக்கமான உறவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதியில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள், இனப் படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியவை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை இந்த நாடே, ஏன் இந்த உலகமே நன்கு அறியும்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை விடுத்ததோடு, போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தி, விசாரணைக்கு அவர்களை உட்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் ஒன்றை இந்தியா முன்னின்று கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஆனால், முன்பிருந்த மத்திய அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி, தமிழர்களின் உணர்வுகளை மிதித்துவிட்டது.

புதிதாக மத்தியில் அமையவிருக்கும் அரசு, தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் பரிவுடன் செயல்படுமென்றும், தமிழ்நாட்டுடன் நட்புணர்வு பாராட்டும் என்றும் நாங்கள் நம்பினோம். ஆனால், புதிய பிரதமரும், புதிய மத்திய அரசும் பதவியேற்று செயல்படத் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்திருக்கிற இந்த துர்ப்பாக்கியமான செயல் தமிழ்நாட்டு மக்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய உணர்வுகளை மீண்டும் காயப்படுத்தியுள்ளது. இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

புதிதாக மத்தியில் அமையவுள்ள அரசிடம் இதனை மிகுந்த மன வேதனையுடன் நாங்கள் சுட்டிக்காட்ட விழைகிறோம். தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்தச் செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மோடியிடம் தொலைபேசியில் இன்று வாழ்த்து தெரிவித்த ராமதாஸ்


இந்தியாவின் பிரதமராக பதவியேற்க போகும் நரேந்திர மோடிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

தொலைபேசி உரையாடலின் தொடக்கத்தில் நரேந்திர மோடி தமிழில் வணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து மோடியிடம் பேசிய ராமதாஸ், "இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவிருக்கும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன் என்ற உங்களின் மந்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒட்டுமொத்த நாட்டு மக்களும் உங்களுடன் இருக்கிறார்கள்.

உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

கேஜ்ரிவால் சிறையில் அடைப்பு: வீடு வீடாக சென்று ஆம் ஆத்மியினர் பிரச்சாரம்

அரவிந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.

பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற பிரமாண பத்திரம் அளிக்க மறுத்த கேஜ்ரிவால் இரண்டு நாள்கள் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆதரவாளார்கள் திஹார் சிறையை முற்றுகையிட்டு நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் திஹார் சிறை இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று யோகேந்திர யாதவ், மனிஷ் சிசோடியா, ராக்கி பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது, இனி ஆம் ஆத்மி கட்சியினர் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுப்பட வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கேஜ்ரிவாலின் நேர்மைக்கு பரிசாக அவரை சிறையில் அடைத்துள்ளது குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

பிரதமராக பதவியேற்கும் மோடி, தமிழக மக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும்: திமுக


மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ள விவகாரத்தில், அவரை அழைக்காமல் பாஜக தவிர்த்திருக்கலாம் என திமுக செய்தித் தொடர்பாளரும்,  திமுக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமானடி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: "தமிழக மக்கள் உணர்வுகளை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையால் தமிழக மக்கள் இலங்கை மீது கோபத்தில் இருக்கின்றனர்.
சார்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாட்டின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சேவுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருக்கலாம்.  இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி தமிழர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழர் நலனே காரணம்- பொன். ராதாகிருஷ்ணன்


சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

"நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. இலங்கை தமிழர் நலன் கருதியே ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

"சார்க் நாடுகளின் தலைவர்களுள் ஒருவராக, இலங்கை அதிபர் ராஜபக்சே இருக்கிறார். இதன் அடிப்படையில்தான் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசின் ஆதரவோடு, இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்தவர்தான் ராஜபக்சே. ஆனால், ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழர் நலனே காரணம். தனி ஈழம் அமைவது என்பது ராஜபக்சேவின் கையில்தான் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கான உரிமைகளை ராஜபக்சே வழங்க வேண்டும்.

தமிழக மீனவர் பிரச்சினையைப் பொருத்தவரையில், பாஜக தலைமையிலான அரசு நிச்சயம் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. நான் பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. தொகுதிக்காகவும், தமிழக நலனுக்காகவும் பாடுவடுவதுதான் முதல் நோக்கம்" என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மாபாவி ராஜபக்சேவை, பதவியேற்பு விழாவில் அனுமதிக்க கூடாது என‌ மனவேதனையுடன் கேட்டு கொள்கிறேன்-வைகோ


நரேந்திர‌ மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கிறது.

தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.

இலங்கையின் சிங்கள அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த்தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி இராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் இராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.

எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, இராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை, இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என வைகோ கூறியுள்ளார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும், இரவு வேளைகளில் அதிகாரிகளை அழைத்து எனது வேலையை முடித்தேன்- மோடி


ஆனந்திபென் படேலை குஜராத் முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு, பாஜக எம்.எல்.ஏக்கள் மத்தியில், நரேந்திர மோடி கூறியதாவது:

"முதல்வர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன், இனி நான் முன்னாள் முதல்வர்தான், இருப்பினும் ஒரு கோப்பைக் கூட நான் நிலுவையில் வைக்கவில்லை, தேர்தல் பிரச்சாரத்தில் நான் ஈடுபட்டிருந்தபோதும் இரவு வேளைகளில் நான் அதிகாரிகளை அழைத்து எனது வேலையை முடித்தேன்.

இப்போது அமித் ஷாவின் புகைப்படத்தைப் பார்த்தாலே எதிர்கட்சியினர் அஞ்சுவார்கள். தேசத்திற்கு உழைக்க ஒருவர் முடிவெடுத்தால் ஒருவர் என்னவெல்லாம் செய்து காட்ட முடியும் என்பதற்கு அவரே சிறந்த உதாரணம். இப்போது ஒவ்வொரு மட்டத்திலும் திறமையான தலைவர்களை நான் பார்க்கிறேன். இது எனது சாதனையல்ல அவரவர் கடினமாக உழைத்ததன் விளைவு.

எனது காங்கிரஸ் நண்பர்கள் இங்கு மத்தியப் புலனாய்வுத் துறையினரை அனுப்பி தேநீர் விற்பவர்களை அவமரியாதை செய்தனர், அது தேநீர்-புரட்சியாக மாறியது. அவர்கள் அனைவரும் காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பினர். இதுதான் சுயமரியாதையின் சக்தி."

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

வைகோ நாணயமானவர், நேர்மையானவர்; ஆனால் விஜயகாந்தை அப்படி கறைப்படியாதவராக கூறமுடியாது- தமிழருவி மணியன்

பாஜக கூட்டணியில் தமிழக முதல்வர் வேட்பாளருக்கு வைகோ தான் தகுதியானவர். விஜயகாந்த் கறைபடியாதவர் என்று என்னால் சொல்ல முடியாது என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது குறித்து, செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த போது அவர் கூறியதாவது, "தமிழக மக்கள் பலன் பெற வேண்டுமென்றால், பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளராக வைகோவையே அறிவிக்க வேண்டும். அவரது ஒழுக்கம், நேர்மை, நாணயத்தை யாரும் குறை சொல்ல முடியாது. அப்படிப்பட்ட கறைப்படியாதவராக, களங்க மற்றவராக விஜயகாந்தைக் கூற முடியாது. " என்று கூறினார்.

 மோடி பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பது குறித்து பேசிய மணியன், ‘‘ரத்தக்கறை படிந்த ராஜபக்‌சேவுக்கு பாஜக அரசு அப்படியொரு ரத்தினக்கம்பளம் விரிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். எங்கள் எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்துவோம். மோடி மற்றும் ராஜ்நாத் சிங்குடன் ஏற்கனவே இதுகுறித்து பேசியுள்ளோம். " என்று கூறினார்.

ராஜபக்‌சேவின் நண்பர் சுஷ்மா சுவராஜுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கிடைத்தால், வைகோவின் லட்சியமான தமிழீழம் கிடைக்குமா என கேட்டபோது, ‘‘எந்த அரசு வந்தாலும், இலங்கையை பகைத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழீழம் பெற்றுத் தர மாட்டார்கள். ஆனால், இலங்கை இன அழிப்புக்கு எதிராக தண்டனை அளிக்கும் பொது வாக்கெடுப்புக்கு, காங்கிரஸைப் போல் பாஜக அரசு, இலங்கைக்கு துணை நிற்காது’’ என்று மணியன் பதிலளித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media