BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 April 2014

வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய திருச்சி வந்திருந்த‌ பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் நேற்று நிருபர்களை சந்தித்து கூறியதாவது:

இந்த தேர்தலில் பாஜக 272-லிருந்து 300 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும்.  நிச்சயம் மோடி பிரதமர் ஆவார். மத்தியில் பாஜக ஆட்சியமைக்க அதிமுக உள்ளிட்ட வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியிலிருக்கும்போது ஒருவரை யொருவர் பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இவர்களுக்கு மாற்றாக இங்கு பாஜக ஐந்து கட்சிகளைச் சேர்த்து ஒரு வானவில் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த அணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழகத்தில் பாஜக அணி 20-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும்.

வைகோ போன்ற அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்.

தமிழக மீனவர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களின் நலன் காக்க தேசிய மீனவர் நல ஆணையம் உருவாக்கப்படும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு முக்கியத்துவம் தராமல் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுப்போம்.

மோடி பிரதமரானால் நாடு பிளவுபட்டுவிடும் என்று சொல் வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குஜராத்தில் அவர் 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது அந்த மாநிலம் பிளவுபடவில்லை. காங் கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை விழுங்கிவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்த நிலையை மாற்றுவோம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறினார்.

குஜராத்தில் விவசாய நிலங்களை பறித்து, தொழிலதிபர் அதானிக்கு ஒரு மீட்டர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு கொடுத்தார் மோடி- ராகுல் குற்றச்சாட்டு

அசாம் மாநிலம் நாகான் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்: "நரேந்திர மோடி 'குஜராத் மாதிரி' வளர்ச்சி பற்றி பேசுகிறார். ஆனால் அங்குள்ள ஏழை விவசாயிகளிடம் 35,000 ஏக்கர் நிலத்தை ஒரு மீட்டர் ஒரு ரூபாய் வீதம் தொழிலதிபர் அதானிக்கு பறித்துக் கொடுத்திருகிறார்.

இந்த நிலத்தைப் பெற்ற அதானி, ஒரு மீட்டர் ரூ.3000-க்கு விற்றுள்ளார். இதன் மூலம் அதானி நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதைத் தான் 'குஜராத் மாதிரி' வளர்ச்சி என கூறுகிறார் மோடி.

நீங்கள் அதானி குழுமத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ஒரு மிட்டாய் கொடுத்துவிட்டு ஒரு மீட்டர் நிலத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஒரு மிட்டாய் விலை ஒரு ரூபாய் மட்டுமே. மோடி கூறுவது போல் ஒரு தனி மனிதரால் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்தே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்று ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசினார்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!

வைகோ, சில ஆயிரம் வாக்குகளில் வென்றால் போதாது; அவர் லட்சம் வாக்குகளுக்கும் மேல் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற வேண்டும். -ராஜ்நாத் சிங்

விருதுநகரில் வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக தலைவர் ராஜ்நாத்  சிங், "வைகோ, சில ஆயிரம் வாக்குகளில் வென்றால் போதாது; அவர் லட்சம் வாக்குகளுக்கும் மேல் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற வேண்டும். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக வரும்போது, ஒரு சாதாரண உறுப்பினராக மட்டுமே இருக்க மாட்டார். மாறாக, அரசாங்கத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் அவர் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்." என்று கூறினார்.

வைகோவை ஆதரித்து மேலும் அவர் பேசியதாவது:

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள், அடிப்படையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகின்ற வகையில்தான் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அனைவருக்கும் சமநீதி என்று பாரதிய ஜனதா கட்சி சொல்லுவதைத் திசை திருப்ப முயல்கின்றார்கள். இந்தியாவின் அனைத்துக் குடிமக்களையும் ஒருசேர அரவணைத்துச் செல்வோம். இந்தியாவை ஒரு வல்லரசாக ஆக்கிக் காட்டுவோம்.

இந்தத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி பொறுப்பு ஏற்கப் போவது போல், அடுத்து இந்தத் தமிழகத்தில் எப்போது சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும், இங்கே உருவாகி இருக்கின்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும்; அதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியுறவுக் கொள்கையில் தோல்வி அடைந்து விட்டது. அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுத்து இருந்தால், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைத்து இருக்கும். ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

தமிழக மீனவர்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து இந்திய மீனவர்களுக்கும் நான் ஒரு உறுதிமொழி அளிக்க விரும்புகிறேன். மத்தியில் நம்முடைய அரசு அமைந்தவுடன், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தேசிய மீனவர் நல வாரியம் அமைப்போம்; அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்."

இவ்வாறு ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

நான் திமுகவில் இணைந்த மாதிரி இருக்கும் ஆனால் இணையவில்லை, கலைஞர் என்னை அணைத்த மாதிரி இருக்கும் ஆனால் அணைக்கவில்லை- டி.ராஜேந்தர்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லட்சிய திமுக கட்சி தலைவர் டி.ராஜேந்தர், "நான் திமுகவில் இணைந்த மாதிரி இருக்கும் ஆனால் இணையவில்லை, கலைஞர் என்னை அணைத்த மாதிரி இருக்கும் ஆனால் அணைக்கவில்லை" என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

"திமுக என்னை வெளியேற்றிய பிறகு மீண்டும் கலைஞரை சந்தித்தேன் என்றால், அது நானாக சென்றதல்ல. ஆற்காடு வீராசாமி என் வீட்டிற்கே வந்து வற்புறுத்தி அழைத்துச் சென்றார். சூழ்நிலை கைதியாகத்தான் திமுக தலைவரை நான் சந்தித்தேன். சந்திப்பின்போது, கருணாநிதி ராஜதந்திரமாக எதுக்கு தனியாக கட்சி நடத்தி சிரமப்பட வேண்டும், திமுகவில் இணைந்துவிடு என்றார். ஏற்கெனவே இப்படிதான் திரும்பி வந்த என்னை தாயக மறுமலர்ச்சி கழகத்தை கலைக்க சொல்லி தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார். அதனால், இந்த முறை நான் ராஜதந்திரமாக கட்சியை கலைக்க மறுத்துவிட்டேன்.

நான் லட்சிய திமுகவை ஒரு போதும் கலைத்துவிடவில்லை. நான் திமுகவில் சும்மா கைகட்டி இருக்க விரும்பவில்லை, அப்படி இருக்க நான் ஏன் அங்கு போக வேண்டும்? கட்சிக்குள் முடிவெடுக்கும் அதிகாரம் கலைஞரிடம் இல்லை. கலைஞரே முடிவு எடுத்துவிட்டபிறகு நான் திமுகவில் சேர்வதை தடுத்த சக்தி எது?

திரைப்படத்திற்கு கூட இரண்டு பாகம் உண்டு. என்னை பொறுத்தவரையில் முடிந்திருப்பது முதல் பாகம் இனிமேல் தான் இருக்கிறது இரண்டாம் பாகம். இந்த தேர்தல் காலம் ஒரு இடைவேளை. எதிர்காலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் தனித்து நிற்கின்ற அளவிற்கு லட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே என் முதல் வேலை. தேர்தலில் களம் இறங்காமல் இருந்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் எந்த நிலையிலும் தரம் இறங்கி போகமாட்டேன்".

இவ்வாறு டி. ராஜேந்தர் பேசினார்.

மோடி காஷ்மீர் விவகாரமாக என்னிடம் அணுகினார் - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷயத் அலி ஷா கிலானி !!

கிலானி கூறுகையில் மார்ச்சு 22 ஆம் தேதி மோடியின் 2 ஆட்கள் என்னை சந்தித்து , நான் ஒத்துக்கொண்டால் மோடி என்னை சந்திக்க தயாராக உள்ளதாக கூறினர் . மேலும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொண்டனர் . நான் ஆனால் இதை மறுத்து விட்டேன் என்று கூறினார் .

ஆனால் இதை மறுத்து உடனே பாஜக கட்சியினர் அறிக்கை விட்டனர் . அந்த அறிக்கையில் பாஜக கட்சியில் இருந்து யாரும் கிலானியை காஷ்மீர் விஷயமாக சந்திக்கவில்லை . கிலானியின் குற்றச்சாட்டு குறும்புத்தனமாக உள்ளது . மேலும் கிலானி போன்ற தலைவர்களின் அரசியல் காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பற்றதாக இருக்கிறது என்றும் அறிக்கையில் கூறினர் .

ஈஸ்டர் தின வாழ்த்து செய்திக் கூறும் வைகோவின் அறிக்கை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,  ஈஸ்டர் தின வாழ்த்து செய்திக் குறித்து வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, ரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதி பதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான்.

இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.

‘தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்’ என்று நிந்தித்தனர்.

சிலுவையிலே ஆவியை நீத்த இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததையே, இன்று உலகம் கொண்டாடுகிறது.

கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்து ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய காங்கிரசின் பிடியிலிருந்து இந்தியா விடுபடவும்; தாய்த் தமிழகத்திலும் ஈழத்திலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறவும் இந்த புனித வெள்ளிக்கிழமையன்று சபதம் ஏற்போம்.

மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத் துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட 'நமோ சவ்னே கமோ' படத்திற்கு தடை கோரும் காங்கிரஸ்

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து ‘நமோ சவ்னே கமோ’ (நமோவை அனைவரும் நேசிக்கின்றனர்) என்ற பெயரில் குஜராத்தி மொழி திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகனாக நடித்தவர் ஷரத் ஷர்மா. சுமார் 1 1/2 ஆண்டுகளாக இந்த படத்தை தயாரிக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். குஜராத் மாநிலம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.

 இந்நிலையில், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குஜராத் மாவட்ட காங்கிரஸ் சட்டத் துறை ஒருங்கிணைப்பாளர் நிகுஞ்ச் பாலார் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ‘இந்த யுக்தி தேர்தல் காலத்தில் மோடியை விளம்பரப்படுத்தும் பிரச்சார முயற்சியாகும். ஆனால், இவ்விவகாரத்தில் பா.ஜ.க.வின் பங்கு ஏதுமில்லாதது போல் காட்டிக் கொண்டு, இந்த விளம்பர செலவு முழுவதும் அந்த சினிமாவின் தயாரிப்பாளருடையது என்று காட்டிக் கொள்ள நினைக்கும் பா.ஜ.க.வின் போக்குக்கு தேர்தல் கமிஷன் இடம் அளித்துவிடக் கூடாது. எனவே, தேர்தல்கள் நடந்து முடியும் வரை இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்’ என்று அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதே கோரிக்கையுடன் குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சந்தோஷ் சிங் என்பவரும் மாநில தேர்தல் கமிஷனை அணுகியுள்ளார்.

இதற்கிடையில், இந்த படத்தை திரையிடுவதாக இருந்த பல திரையரங்குகள் சர்ச்சைகளுக்கு இடம் அளிக்காத வகையில் நேற்றைய ரிலீஸை ஒத்திவைத்துள்ளன.

இந்தியாவில் மோடி அலை, தமிழ்நாட்டில் விஜயகாந்த் அலை - பிரேமலதா

கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா. திறந்த வேனில்  நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கான கூட்டணி, இளைஞர்களுக்கான கூட்டணி, இளம் சிங்கங்களின் கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கூட்டணி. நாளை சரித்திரம் படைக்கப்போகும் கூட்டணி. நிச்சயமாக யார் தயவும் இல்லாமல் 300 இடங்களுக்குமேல் பிடித்து இந்த கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும்.

குஜராத்தை விட தமிழகம் முதன்மையான மாநிலம் என ஜெயலலிதா சொல்கிறார். இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல முடியுமா? குஜராத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது. நர்மதா ஆற்றில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் ராட்சத பைப்புகள் அமைத்து குடிநீர், தொழிற்சாலை, விவசாயம் என அனைத்திற்கு தண்ணீர் தட்டுப் பாடின்றி கிடைக்கிறது.

குஜராத்தில் முதன்மையான தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. லஞ்ச, ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. நதிநீர் இணைப்பைப் பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அறிவிப்பு அரசியலை அவர் மீண்டும் தொடங்கி விட்டார்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் கேப்டன் (விஜயகாந்த்) அலை வீசுகிறது. 2 பேரும் சேர்ந்து நல்ல ஆட்சியைத் தரப்போகிறார்கள். மோடி மூலம் இந்தியா வல்லரசு ஆகும். கேப்டன் மூலம் தமிழ்நாடு நல்லரசு ஆகும்.

தமிழ்நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சியை எங்காவது பார்த்து இருக்கிறீர்களா? சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் வளமாக இருக்கிறார்கள். தமிழகம் டாஸ்மாக் வருமானத்தில் தான் வளர்ச்சியை அடைந்துள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டுமே பழிவாங்கும் அரசியல் நடத்தி மக்களை பழி வாங்குகிறார்கள். எனவே பா.ஜ. கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

என் மீது தாக்குதல்கள் நடத்துவது பாஜக தான்- கெஜ்ரிவால்

வாரணாசியின் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக வளாகத்தின் அருகே ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வியாழக்கிழமை பேசும்போது அவர் மீது ஒரு இளைஞர் கூட்டம் கற்கள் மற்றும் செங்கற்களை வீசியதாகவும், கற்களால் தாக்குதலை நடத்தியவர்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவான வாசகங்களை கோஷமிட்டதாகவும் செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபகாலமாக கெஜ்ரிவால் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் மீது தாக்குதல்கள் நடக்கிறது. அதற்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இதுகுறித்து வாரணாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசுகையில், 'கன்னத்தில் அறை, முகத்தில் குத்து என ஆரம்பித்து நேற்று முன்தினம் கற்களால் தாக்கப்பட்டது வரை அனைத்து தாக்குதல்களுக்கும் பின்னால் காரணமாக இருப்பது பா.ஜ.க. தான்' என்றார்.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பா.ஜ.க.வின் குஜராத் மாநில தலைவர் சுனில் ஓசா 'வாரணாசி மக்கள் ஒருபோதும் முட்டை வீச்சு போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டதில்லை. கெஜ்ரிவாலுக்கு அவரது பாதுகாப்பு குறித்து கவலை என்றால் பா.ஜ.க. தொண்டர்களின் மூலமாக அவருக்கு பாதுகாப்பு அளிக்க எங்களால் முடியும்' என்றார்.

ஜெயலலிதா, அவர் கொடுத்த 177 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில். 150-ஐ நிறைவேற்றிவிட்டார்- சரத்குமார்

தென்காசி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் தலைவரும், தென்காசி தொகுதி எம். எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்த போது, இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டில் தீவிரவாதம் கை தூக்க காங்கிரஸ் அரசு காரணமாகிவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் பல்வேறு பாராளுமன்ற தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எழுச்சியாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட தயாராகிவிட்டனர்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கடந்த 33 மாத ஆட்சியில், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது 177 வாக்குறுதிகளை அவர் கொடுத்தார். அதில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அதுமட்டும் இல்லாமல், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத சலுகைகளையும் வழங்கி இருக்கிறார்.

மத்திய அரசில் 14 ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க. அங்கம் வகித்தது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மைகள் செய்தார்கள்? ஈழத் தமிழர்களை படுகொலை செய்யப்பட்டபோது, மத்திய அரசில் இருந்து கொண்டு தி.மு.க. வேடிக்கை பார்த்தது. மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூறுகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு, மத்திய மந்திரிசபை கூடி முடிவு எடுத்த போது, அதில் அங்கம் வகித்த, தி.மு.க. பெட்ரோல் விலை உயர்வை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? மத்திய மந்திரி சபையில் சம்மதம் தெரிவித்துவிட்டு, மாநில அரசை இப்போது குற்றம் சாட்டுகிறார்கள். இதன் மூலம் தி.மு.க.வின் இரட்டை வேடம் புரிகிறதா?.

பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க., ம.தி.மு.க. கட்சிகள் அமைத்து இருப்பது கொள்கை இல்லாத கூட்டணி. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தின் போது என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. தே.மு.தி.க.வுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளை முதல் அமைச்சர் பெற்றுக் கொடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், பா.ம.க.வை சாதிக்கட்சி என்று கூறினார். தற்போது, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது.

இவ்வாறு ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.

தெனாலிராமன் - திரை விமர்சனம், கம் ஆன் வடிவேலு



அரசியல் புயலில் சிக்கி சின்னாபின்னமான வடிவேலு மூன்றாண்டுகளுக்கு பின் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார், ஒரு பெரிய இடைவெளிக்கு பின் வடிவேலு நடிக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்தது.

கதை நாமெல்லாம் சிறுவயதில் கேட்டு ரசித்த தெனாலிராமன் கதைகளில் சிலவற்றையும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் கதையை கொஞ்சம், சீன வாணிபம், அயல்நாட்டு வணிகத்திற்கு அனுமதி என்று கொஞ்சம் கரண்ட் பாலிடிக்ஸ்சை கலந்து மிக்சியில் அடித்து கொடுத்துள்ளார்கள்.

வடிவேலுவின் பாடிலாங்க்வேஜ், டயலாக் டெலிவரி எல்லாம் அப்படியே முன்பு போலவே இருக்கின்றது. மக்களை மகிழ்விப்பது மட்டும் தான் என் வேலை அது மட்டும் தான் என் தொழில் என்று ஒரு டயலாக்கை சொல்வார் வடிவேல், அரசியலில் சிக்காமல் அதை மட்டும் செய்துக்கொண்டு இருந்திருந்தால் படம் முழுவதும் மொக்கை போடும் பரோட்டா சூரி போன்ற காமெடியன்களை பரோட்டா காமெடியோடு நிறுத்தியிருந்திருப்போம்.

தெனாலிராமன் கதைகள் பகுதியை குழந்தைகள் விரும்புவார்கள், ஒருமுறை குழந்தைகளோடு சென்று பார்க்கலாம், வடிவேலுவிற்காகவும் பார்க்கலாம், வெல்கம் பேக் வடிவேலு சார்,

நீங்கள் தெனாலிராமன் படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கருத்து என்ன என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்?

தெனாலிராமன் படம் பார்த்தவர்கள், பார்க்க விருப்பம் உள்ளவர்கள் லைக் போடவும்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media