BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 11 November 2014

உணவே மருந்து : செம்பருத்தி பூ மருத்துவ பயன்கள்

செம்பருத்தி மூலிகை தைலத்தின் மகத்துவத்தையும், அதை எப்படி பயன்படுத்தினால் அதன் பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பதை இங்கு காண்போம். செம்பருத்தி மலர்கள் 25 எடுத்து மர உலக்கையால் இடித்து சாறெடுக்கவும்,அதற்கு சம அளவு நல்லெண்ணை சேர்த்து காய்ச்சவும், சிவப்பு நிறம் இறங்கி தைலப்பதம் வந்ததும் வடிகட்டி ஆறவிட்டு எடுத்து வைக்கவும். இந்த தைலத்தை கூந்தலுக்கு பூசி வர, கூந்தல் கருமையாக செழித்து வளரும். இளநரை கூட மாறிவிடும். உடல்

சூடு தணிய :

தண்ணீரை காய்ச்சி குடிப்பது தான் சுகாதாரம். செம்பருத்தி பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வர உடல் சூடு தணியும். கண் எரிச்சல் இருக்காது. குளுமை வேண்டினால் செம்பருத்தி தான் நல்ல சாய்ஸ்.

இதய நோயை விரட்ட :

செம்பருத்தி பூக்களை சேகரித்து நிழலில் வைத்து காயவிடவும். மொறு மொறுவென காய்ந்ததும் மிக்சியில் இட்டு அரைத்து தூளாக்கி சலித்து கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் பசும் பாலில் விட்டு காய்ச்சி தினமும் ஒருவேளை அருந்தி வர, தாது புஷ்டி ஏற்படும். உடலில் மினுமினுப்பு ஏற்படும். ஒரு டம்ளர் செம்பருத்தி தூளை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தினமும் அருந்தினால் இதய நோய் உங்களை நெருங்கவே நெருங்காது.

மாதவிடாய் கோளாறு :

ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி தூள் ஒரு தேக்கரண்டி தேன், தேக்கரண்டி ரோஜா இதழின் பொடி சேர்த்து 48 நாட்கள் அருந்தி வர மாத விடாய் கோளாறுகள் குணமாகும். குறிப்பாக வெள்ளைப்பாடும், அதிக உதிரப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும்.

கருப்பை பலம் பெற :

கிராமப்புறங்களில் சிறுமிகள் பூப்படைந்ததும், செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட தருவார்கள். இதனால் அவர்களுடைய கருப்பை சம்பந்தப்பட்ட உறுப்புகள் பலம் பெறுவதோடு நல்ல வனப்பும் பெற்று அழகோடு மிளிர்வார்கள்.

இரும்பு டானிக் :

செம்பருத்தி வேரை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி செம்பருத்தி வேர் பொடியும் 2 ஆடு தொடா இலைகளை சேர்த்து குடிநீரில் காய்ச்சி வடிகட்டி அருந்த இருமல் உங்களிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பறந்துவிடும்.

எதுவும் வேண்டாங்க! தோட்டத்து பக்கம் போக நேரும் போதெல்லாம், ஒரு செம்பருத்தி பூவையோ, மொட்டையோ பறித்து மென்று சாப்பிட்டு விடுங்கள் இரும்பு டானிக் சாப்பிட்ட அளவுக்கு சத்து கிடைக்கும்.

பேச்சுவார்த்தை தோல்வி : வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்


ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோலிவியடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி புதன்கிழமை (நவம்பர் 12) வேலைநிறுத்தத்தில் ஈடுபட அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. பொதுத் துறை வங்கி ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள வங்கி நிர்வாகங்கள் மறுப்புத் தெரிவித்து வந்தன. இதனால், கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் நாடு முழுவதும் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பொதுத் துறை வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கான 10 சங்கங்களின் உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் தில்லியில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் (ஷ்ரம் சக்தி பவன்) மத்திய தலைமைத் தொழிலாளர் ஆணையர் பி.பி. மிஸ்ரா புதன்கிழமை (நவம்பர் 5) முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 11 சதவீதத்துக்கு மேல் ஊதிய உயர்வு அளிக்க முடியாது என்று இந்திய வங்கிகள் நிர்வாகம் பிடிவாதமாக இருந்தன. இதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறுகையில், இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் இரண்டாவது கட்டமாக திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, 25 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதைக் குறைத்துக் கொள்ளும்படி இந்திய வங்கிகள் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.  இதையடுத்து, 23 சதவீதமாகக் குறைத்துக் கொள்வதாக தெரிவித்தோம். ஆனால், 11 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியாது என இந்திய வங்கிகள் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித சுமூகத் தீர்வும் எட்டப்படவில்லை. எனவே, ஏற்கெனவே அறிவித்தப்படி நவம்பர் 12-ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றார்.பிராந்திய வேலைநிறுத்தம்: தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் (என்யுபிஇ) பொதுச் செயலாளர் எல். பாலசுப்ரமணியன் கூறுகையில், வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் டிசம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் பிராந்திய வாரியாக வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும். இந்த வேலைநிறுத்தம் தமிழகத்தில் 2-ஆம் தேதி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இந்திய வங்கிகள் சங்க (ஐபிஏ) பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏஐபிஓசி) பொதுச் செயலாளர் அர்விந்தர் சிங், ஒன்பது சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பின் (யுஎஃப்பியு) தலைவர் கே.கே. நாயர், அமைப்பாளர் என்.வி. முரளி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க (ஏஐபிஓஏ) பொதுச் செயலாளர் எஸ். நாகராஜன் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உருகும் பனி! ஒரு தீவுக்காக சீனா - ஜப்பான் இடையே 40 ஆண்டுகள் மறைமுக யுத்தம்



உலகின் 2ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனாவும், 3ஆவது பெரிய சக்தியான ஜப்பானும் மனிதர்கள் வசிக்காத ஒரு குட்டித் தீவுக்காக நடத்தும் பனிப்போர்தான் சர்வதேச அளவில் இப்போது பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. கிழக்கு சீனக்கடலில் உள்ள அந்தத் தீவுக் கூட்டம் "செங்காக்கு' என ஜப்பான் மொழியிலும், "டையாயூ' எனச் சீன மொழியிலும் அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் புவியியல் ரீதியாக முக்கியமான தீவு இது. 1894-95இல் நடந்த முதல் சீன-ஜப்பானியப் போரில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அத்தீவை ஜப்பான் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இருப்பினும், 1945இல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்ததையடுத்து, இத்தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 1972இல் இத்தீவை மீண்டும் ஜப்பானிடமே அமெரிக்கா ஒப்படைத்தது முதல் இத்தீவு ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால், அதே ஆண்டுமுதல் சீனாவும் இதற்கு உரிமைகோர ஆரம்பித்தது. 2012ஆம் ஆண்டு செங்காக்கு தீவுக்கூட்டத்தில் அடங்கிய 3 குட்டித்தீவுகளை ஜப்பானைச் சேர்ந்த தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிவிட்டதாக ஜப்பான் அறிவித்ததில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்கெட்டு, ஆயுத மோதல் ஏற்படும் அபாயத்தை உருவாக்கிவிட்டது. இரு நாடுகளும் தங்கள் கப்பல்களையும், விமானங்களையும் இத்தீவுப் பகுதிக்கு அனுப்பி கண்காணித்ததைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது.

"நாட்டின் இறையாண்மை போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களை ஜப்பான் கவனத்துடன் கையாள வேண்டும்' என சீனா கூறி வந்தாலும், அத்தீவு ஒரு பிரச்னைக்குரியது என்பதையே ஜப்பான் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இந்தச் சூழ்நிலையில்தான் சீனாவின் தூதரக அதிகாரி யாங் ஜெய்ச்சியும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சொடாரோ யாச்சியும் கடந்த நவம்பர் 7ஆம் தேதி பெய்ஜிங்கில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தம் இத்தீவுப் பிரச்னைக்கு ஒரு முக்கியமான திருப்பத்தைக் கொடுத்துள்ளது. அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இப்பிரச்னையில் இரு நாடுகளும் இரு வேறு நிலையில் இருக்கின்றன' என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அறிவித்தன. இதுவரை தீவு விவகாரத்தை ஒரு பிரச்னையாகவே கருதாத அல்லது அப்படிச் சொல்ல மனம் வராத ஜப்பான், முதல் முறையாக அதில் வேறுபட்ட நிலையில் இருப்பதாக ஒப்புக்கொண்டதையே பெரிய வெற்றியாகக் கருதுகிறது சீனா.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றுவரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபேயும் திங்கள்கிழமை (நவம்பர் 10) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையிலான கடல் பகுதி மோதலைத் தடுக்க ஒரு மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. "இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக நான் நம்புகிறேன்' என இந்தச் சந்திப்புக்குப் பின்னர் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர் அபே.

"சீனா-ஜப்பான் இடையிலான அடர்த்தியான பனியை உடைக்க ஊக்கமளிக்கக் கூடிய ஐஸ் பிரேக்கராக' இருக்கும் என, இரு தலைவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, சீனாவின் அதிகாரப் பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்தது. இப்போது திட்டமிட்டபடி இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்; பனி உருகத் தொடங்கியிருக்கிறது.

எங்கே இருக்கிறது? என்ன இருக்கிறது?: 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட செங்காக்கு தீவுக்கூட்டம் உட்சுரி, கிடாகொஜிமா, மினாமி கொஜிமா, குபா, தாய்ஷோ ஆகிய 5 தீவுகளையும், மேலும் 3 சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. சீனாவில் இருந்து 200 கடல்மைல் கிழக்கிலும், ஜப்பானின் ஒகினவா தீவில் இருந்து 200 கடல் மைல் தென் வடக்கிலும் அமைந்துள்ளது. இவற்றில் உட்சுரி, கிடாகொஜிமா, மினாமி கொஜிமா ஆகிய 3 தீவுகளை 1932இல் ஜப்பானை சேர்ந்த தனியாரின் உரிமைக்கு வழங்கிய ஜப்பான் அரசு, சீனா அதற்கு உரிமை கோரி நெருக்கடி கொடுக்கத் தொடங்கிய நிலையில், தனியாரிடமிருந்து அத்தீவுகளை விலைக்கு வாங்கிவிட்டதாக 2012இல் அறிவித்தது. எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் இத்தீவுப் பகுதியில் செழிப்பாக இருப்பதாக ஆசியா மற்றும் தூரகிழக்கு நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார கமிஷன் 1969இல் கண்டுபிடித்துச் சொன்னது.

நேருக்கு நேர் : ஜப்பான் பிரதமர் அபே 2012இல் பதவி ஏற்றதில் இருந்தே சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதில்லை. 2013, செப்டம்பரில் ரஷியாவில் நடைபெற்ற ஜி20 நாடுகள் மாநாட்டின்போது இருவரும் சந்தித்து கைகுலுக்கியதுடன் சரி. இப்போது ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

பின்னணியில் அமெரிக்கா: செங்காக்கு தீவு விவகாரத்தில் ஜப்பானுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது அமெரிக்கா. செங்காக்கு தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியான குபா தீவை அமெரிக்கா ராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்துவதற்கு ஜப்பான் சில காலம் "வாடகைக்கு' விட்டிருந்தது கூடுதல் தகவல்.

5 தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற வாய்ப்பு

ஹெராயின் கடத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றும் வாய்ப்பு குறித்து ஆராயப்படும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியிடம் ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். ராமேசுவரத்தைச் சேர்ந்த எஸ்.மெர்சன், பி.ஆகஸ்டஸ், ஆர்.வில்சன், கே.பிரசாத், ஜே. லாங்லேட் ஆகிய 5 மீனவர்களும், இலங்கையைச் சேர்ந்த 3 பேரும் இலங்கை கடல்பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக ஹெராயின் கடத்தியதாக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து, கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழக மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீனவர்களின் உறவினர்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் சந்தித்து, இந்தியாவுக்கு அவர்களைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.
இலங்கையின் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரையும், அந்நாட்டுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே. சின்ஹா நேரில் சென்று சந்தித்தார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபட்சயின் செய்தித் தொடர்பாளர் மோகன் சமரனாநாயகே, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம், இந்தியா - இலங்கை இடையே 2010ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைப் பரிமாற்றம் செய்வது தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ், தமிழக மீனவர்கள் 5 பேரையும் இந்திய சிறைக்கு மாற்றும் வாய்ப்பு குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்' என்றார். ராஜபட்சவின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நல்ல முறையில் இருந்தது' என்று தெரிவித்தன. இதனிடையே, 5 தமிழக மீனவர்களின் சார்பில் வழக்கில் ஆஜராகி வரும் வழக்குரைஞர் எஸ். அனில் சில்வா கூறியதாவது: இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை, இந்தியாவுக்கு மாற்ற முடியாது. ஆனால், இலங்கை அதிபரோ அல்லது மேல்முறையீடு நீதிமன்றமோ, மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கும் பட்சத்தில், இந்தியச் சிறைக்கு அவர்களை மாற்றம் செய்வது கடினமாக இருக்காது என்றார்.

பொது மன்னிப்பு?: இலங்கையைச் சேர்ந்த மூத்த சட்ட வல்லுநர்கள் கூறியதாவது: 5 தமிழக மீனவர்களுக்கும், இலங்கை அதிபரின் பொது மன்னிப்பு கிடைப்பதற்கான நடவடிக்கையில், இந்தியா-இலங்கை நாடுகளிடையே உயர்நிலை அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கையில், இலங்கையைச் சேர்ந்த மூத்த அரசு வழக்குரைஞர்களும், இந்திய அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்' என்று தெரிவித்தனர். மேல்முறையீடு செய்ய நடவடிக்கை: இதனிடையே, 5 தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கையில் மீனவர்களின் வழக்குரைஞர் அனில் சில்வா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, திங்கள்கிழமை மேல்முறையீடு செய்வதாக இருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்களைக் கேட்பதற்காக மனுவை அவருக்கு அனுப்ப கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் முடிவுசெய்துள்ளது. இதனால், திங்கள்கிழமை மேல்முறையீடு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இலங்கை சட்டப்படி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு 14 நாள்கள் அவகாசம் உள்ளது. இந்த வழக்கில், எண்ணற்ற குறைபாடுகள் உள்ளன. இதனால், மேல்முறையீட்டில் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.

3 நாடுகளுக்கு மோடி இன்று பயணம்

ஜி-20, ஆசியான் உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்கும் வகையில் ஆஸ்திரேலியா, மியான்மர், ஃபிஜி ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை புறப்படுகிறார். முதல் கட்டமாக, மியான்மர் செல்லும் மோடி, அங்கு 12-ஆம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர், 13-ஆம் தேதி நடைபெறவுள்ள கிழக்காசிய மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் 15-ஆம் தேதி தொடங்கி, இரண்டு நாள்கள் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர், உலகப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட முக்கய விவகாரங்கள் குறித்து பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில், தங்கள் நாடுகளில் 5 சதவீதப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த ஜி-20 நாடுகள் உத்தேசித்துள்ளன. இந்த நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 16-இல் தொடங்கி 18-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின் சிட்னி, கான்பெரா, மெல்போர்ன் ஆகிய நகரங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற முறையில் மோடியின் இந்த சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டின் பிரதமர் டோனி அபோட்டுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாட்டு உறவுகள், உலக அளவில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். பின்னர், மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, சிட்னியில் உள்ள ஒலிம்பிக் பூங்காவில் இந்திய சமூகத்தினரிடையே மோடி உரையாற்றுகிறார்.

ஃபிஜி பயணம்: தனது 10 நாள் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, ஃபிஜி நாட்டுக்கு 19-ஆம் தேதி மோடி பயணம் மேற்கொள்கிறார். 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஃபிஜி நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். கருப்புப் பண விவகாரத்துக்கு முக்கியத்துவம்: ஜி-20 மாநாட்டில் கருப்புப் பண விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டெடுக்கும் விவகாரத்தின் முக்கியத்துவம் குறித்து ஜி-20 மாநாட்டில் எடுத்துரைப்பேன். எனது இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்தியத் தலைவர்களைச் சந்தித்து பேசவுள்ளேன் என மோடி தெரிவித்துள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media