BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 31 October 2014

உணவே மருந்து : மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம். மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம். இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்

5 லட்சம் மாணவர்கள் 5 ஆயிரம் மரக் கன்றுகள் : இதுவே எனது இலக்கு


5 லட்சம் மாணவர்கள் 5 ஆயிரம் மரக் கன்றுகள்!: ஒரு கல்லூரிப் பேராசிரியரின் லட்சியக் கனவு, ‘ஐந்து லட்சம் மாணவர்களை சந்திக்க வேண்டும்; ஐயாயிரம் மரக் கன்றுகளை நட்டு மரமாக்க வேண்டும். இவை இரண்டுதான் எனது வாழ்நாள் லட்சியம்’’ என்கிறார் பேராசிரியர் கேப்டன் ஆபிதீன். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாஹிர் உசேன் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியரான இவர், 13 ஆண்டுகள் என்.சி.சி. ஆபீஸராக இருந்ததால் பெயருடன் கேப்டன் பட்டம் சேர்ந்துகொண்டது. விடுமுறை நாட்களில் தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் கிராமப் புற மாணவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் ஆபிதீன்.


“மாணவர்கள், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான திட்டமிடல் இல்லாமலேயே கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். அவர்களுக்காக, ‘என்ன, எங்கே, எப்படிப் படிக்கலாம்?’ என்ற தலைப்பில் 140 படிப்புகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து 2004-ல் ஒரு புத்தகம் எழுதி 500 மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தேன். அதுமட்டுமின்றி, பள்ளிகளுக்கே நேரில் சென்று 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘என்ன படிக்கலாம்.. என்ன படித்தால் எங்கெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கிறது, என்று தமிழகம் முழுவதும் வகுப்புகள் எடுத்து வருகிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் செல்லும்போது மரக்கன்றுகளையும் எடுத்துச் சென்று நடச் செய்வேன். கடந்த 10 வருடங்களில் சுமார் 200 வகுப்புகளை நடத்தி 1.30 லட்சம் மாணவர்களை சந்தித்திருக்கிறேன். எனது சர்வீஸ் முடிவதற்குள் 5 லட்சம் மாணவர் களை சந்தித்துவிட வேண்டும். 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துவிட வேண்டும். இதுதான் எனது லட்சியம் என்கிறார் ஆபிதீன். (தொடர்புக்கு.. 9965892706)

பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க ஈரான் வலியுறுத்தல்



அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னதாக, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருக்கிறது. ஈரானின் அணு ஆராய்ச்சியானது ஆயுதத் தயாரிப்புக்கு உதவும் வகையில் உள்ளது என்று அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிலைகளில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சிகள் குறித்த உடன்படிக்கையை நவம்பர் மாதம் 24-ஆம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென பி-5+1 என்று அறியப்படும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷியா மற்றும் ஜெர்மனி ஆகிய ஆறு நாடுகள் பி-5+1 நாடுகள் என்று அறியப்படுகின்றன. இந்நிலையில், குறிப்பிட்ட நாளுக்குள் உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பில்லை என்று ஈரானின் மூத்த தலைவர் ஒருவர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் பொரூஜெர்தி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரம்:

ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை படிப்படியாக நீக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அணு ஆராய்ச்சித் திட்டம் குறித்த உடன்படிக்கையானது நவம்பர் 24-ஆம் தேதி கையெழுத்திடப்பட வேண்டுமானால், ஈரான் மீதான பொருளாதாரத் தடை உடனடியாக முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்றார். உடன்படிக்கைப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு வந்துள்ள மேற்கத்திய அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாகக் கூறுகையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உடன்படிக்கை ஏற்படுவது சந்தேகம்தான் என்று குறிப்பிட்டார். ஈரான் தனது நிலைப்பாட்டை சற்று விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும் என்று அவர் கூறினார். ஈரானின் அணு ஆராய்ச்சித் திட்டம் மூலம், அந்நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறி வரும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஆராய்ச்சித் திட்டத்தை முடக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை முடக்குவதோடு, அணு ஆயுதத் தயாரிப்புக்கு உதவி வரும் இடங்கள் என்று சந்தேகிக்கும் ஆய்வு மையங்களை மூடி வருகின்றன. அந்நாட்டின் பல்வேறு ஆய்வு நிலையங்கள் தொடர்ந்து சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன. தனது அணு ஆராய்ச்சியை ஈரான் நிறுத்திக் கொள்ளுமானால், அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் படிப்படியாக நீக்கப்படும் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வருகின்றன.

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் "முரண்பாடு' : அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பு

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகளும் பாஜக தலைவர்களும் சந்தித்து, நாட்டில் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து விவாதித்தனர். புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களான கிருஷன் கோபால், சுரேஷ் சோனி, தத்தாத்ரேய ஹோஸ்போலே, பாஜகவைச் சேர்ந்த ராம்லால், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பானது, கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.

இச்சந்திப்பின்போது, நாட்டில் கல்விக் கட்டணங்கள் அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்த ஆர்எஸ்எஸ் சார்புடைய அமைப்புகள், அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்யுமாறு அமைச்சர் ஸ்மிருதி இரானியை வலியுறுத்தின. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக் கட்டணத்தை நெறிமுறைப்படுத்த மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர். நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துமாறும், கல்வித்திட்டத்தில் நல்லொழுக்கப் பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், நாட்டில் வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் உள்ள சில முரண்பாடுகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள், அமைச்சர் ஸ்மிருதி இரானியைக் கேட்டுக் கொண்டனர்.

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்களுக்கு மத்திய அமலாக்கத் துறை "சம்மன்'

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய பிறகு, அந்த நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் செய்த ரூ.742 கோடி அளவிலான முதலீடுகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. எனினும், இந்த அழைப்பாணையின்படி நிதிப் பரிவர்த்தனை, வங்கிக் கணக்குகள், வருமான வரித் துறை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மாறன் சகோதரர்கள் நேரிலோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ தாக்கல் செய்யலாம் என்று அமலாக்கத் துறை அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை தில்லியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனால், எப்போது இவர்கள் ஆஜராக வேண்டும் என்ற விவரத்தைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இந்தியாவில் தனக்குச் சொந்தமான ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகளை 2006-இல் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க, அப்போது மத்தியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐயிடம் 2011-இல் வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, 2011-ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்குப் பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செüத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட்ஸ் ஹோல்டிங்ஸ் (மொரீஷியஸ்), அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் (பிரிட்டன்) ஆகிய நான்கு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை கடந்த புதன்கிழமை சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி பரிசீலித்தார். இதையடுத்து, "சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதுவதால் அவற்றைப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர், நான்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிபதி சைனி ஒத்திவைத்தார். இதற்கிடையே, சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் செய்த முதலீடுகள் தொடர்பான நிதிப் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்திருப்பதாகக் கருதி, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது நிறுவனத்தில் நிர்வாகிகளாக உள்ள குடும்பத்தினர் ஆகியோரது சொத்துகளில் ரூ.742 கோடி அளவுக்கான சொத்துகளை முடக்கிவைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அமலாக்கத் துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்த முதலீடுகள் தொடர்பாக விசாரணைக்கு வரும்படி மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media