BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 31 May 2014

"எங்கள் பிள்ளைகள் ஊர் மக்கள் முன்னே மரத்தில் தொங்கவிடப்பட்டது போல், குற்றவாளிகளையும் மக்கள் முன் தண்டிக்க வேண்டும்"

உத்தர பிரதேசத்தின் படான் கிராமத்தில், தலித் சகோதரிகள் இருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இருவரையும் ஊர் மத்தியில் இருந்த மாமரத்தில் கையிற்றில் தொங்கவிட்டனர். இதில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஒரு சிறுமியின் தந்தை கூறுகையில், “காவல்துறையின் உதவியை நாடினோம். அதில் ஒரு காவலர் இரண்டு மணி நேரத்தில் சிறுமிகள் வீடு திரும்பி விடுவார்கள் எனத் தெரிவித்தார். ஆனால், தூக்கில் தொங்கிய நிலையில்தான் அவர்கள் எங்களுக்கு கிடைத்தனர். இந்த சம்பவம் டெல்லியில், டிசம்பர் 16-ம் தேதி நடந்த சம்பவத்தை விட கொடூரமானது.

இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் மக்கள் முன்னே தூக்கிலிட வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஊர் மக்கள் முன்னே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தனர். அது போல அவர்களை மக்கள் முன் தண்டிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியினர் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும்-ஜி.கே.வாசன்


சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், "தமிழக காங்கிரஸ் கட்சியினர் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும். மக்களைவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய, இளைஞர்கள் புதிய ஆட்சி அமைய வேண்டும் என விரும்பியது ஒரு காரணமாக இருக்கலாம். தேசிய அளவிளான பிரச்சினைகளே காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணமாகின. இருப்பினும், தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு உண்மையான காரணங்களை கண்டறிய வேண்டும்." எனக் கூறினார்.

இதே போல் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் விடுத்துள்ள அறிக்கையில், "கட்சிக்குள் இருக்கும் நிறை, குறைகள் எதையும் நேரடியாகத் தெரிவியுங்கள்; பத்திரிக்கையில் அறிக்கை வெளியிட வேண்டாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள முக்கிய‌ பிரச்சினைகளை தீர்க்கக் கோரி பிரதமருக்கு விஜயகாந்த் கடிதம்


தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

 "மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பரிதவிக்கின்றனர். கிராமம், நகரம் என்றில்லாமல் அனைத்து மக்களும் குடிநீர் வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கி, அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யவேண்டும்.

தமிழகத்தில் 70%-க்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். சமீப காலமாக விவசாயத்திற்கு போதுமான நீர் ஆதாரம் இல்லாததால் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, நாட்டிலுள்ள நதிகளை தேசிய மயமாக்கி, அவற்றை இணைத்து, தமிழகத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தி, விவசாயம் பெருகவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் வழிவகை காண வேண்டும்.

தமிழகத்தில் கடுமையான மின்பற்றாக்குறையால் பெரும்பாலான மாவட்டங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதன் விளைவாக சிறு, குறு மற்றும் பெருந் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக லட்சக் கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து, வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலை போக்கிட மத்திய அரசின் தமிழ்நாட்டிற்கான மின் ஒதுக்கீட்டினை அதிகரித்து, தடையில்லா மின்சாரம் கொண்டு வந்து, தொழில் உற்பத்தியைப் பெருக்கி, படித்த, மற்றும் படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தின் தென் கடற்கரையோர மாவட்டங்களில் மணல் மற்றும் கனிம வள கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கான நிதி வருவாய் இழப்பு பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த கனிம வளங்களைப் பாதுகாக்க இன்னும் கடுமையான சட்டங்களைக் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் அன்றாடம் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை நமது நட்பு நாடு என்ற பெருந்தன்மையோடு இந்தியா நடந்து கொண்டாலும், இலங்கை அதை மதிப்பதில்லை. அங்கு வாழும் தமிழர்கள் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டு, மனதளவிலும், உடல் அளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிகளில் மீண்டும் குடியேற்றப்பட்டு, அனைத்து மனித உரிமைகளோடு, சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களும் நடத்தப்படுவதை தங்கள் தலைமையிலான அரசு ஏற்படுத்திட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தி, எல்லோருக்கும், எல்லா இடத்திலும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி தனியார்மயமாக்கப்பட்டதால், தரமான கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. எல்லோருக்கும் சமச்சீரான கல்வி வாய்ப்பு கிடைத்திட அரசுப் பள்ளி, மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் தரத்தையும் உயர்த்திட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், மேம்பாலங்கள் போன்றவை மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையால் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றப்படாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவைகள் மாநில நிர்வாகத்தின் கீழ் வந்தாலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைக் கருதி, தனி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில், மத்திய அரசு, மாநில அரசு, மற்றும் எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டுக் குழுவை அமைத்து, தமிழக அரசின் திட்ட செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துதலை தங்கள் தலைமையில் அமைந்துள்ள அரசு செய்யவேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஊழலற்ற, வளமான, வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்."

இவ்வாறு விஜயகாந்த் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதிஹாசனுடன், சுரேஷ் ரெய்னா டேடிங்கா? டிவிட்டரில் இதற்கு ரெய்னா சொன்ன பதில்


கடந்த சில தினங்களாக இணையத்தை வட்டம் அடித்த செய்தி இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா - கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலிக்கிறார்கள் என்பது தான்.

இச்செய்தி குறித்து ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கருத்தையும் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிடவில்லை. நீண்ட நாட்களாகவே இந்த செய்தி வெளியாகிக் கொண்டே இருந்தது. பலரும் அந்த செய்தியில் ஸ்ருதிஹாசனின் ட்விட்டர் தளத்தினை குறிப்பிட்டார்கள். ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் ஸ்ருதி வெளியிடாத காரணத்தினால் செய்தி உண்மையாக தான் இருக்கும் என்று கூறிவந்தார்கள்.

ஆனால் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இச்செய்தி குறித்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து கூறியிருக்கிறார். "நிறைய மீடியாக்கள் தகவல்களை உறுதிப்படுத்தாமல், செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். நான் இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் யாருடனும் டேட்டிங்கில் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

21 அமைச்சர்கள் குழுக்களையும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களையும் கலைக்க மோடி உத்தரவு


மத்திய அமைச்சர்கள் குழு, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "மத்திய அமைச்சகங்களுக்கும், இலாகாக்களுக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 21 அமைச்சர்கள் குழுக்களையும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களையும் கலைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் முக்கிய முடிவுகள் துரிதமாக எடுக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.

அமைச்சர்கள் குழுக்கள் முன் நிலுவையில் உள்ள விவகாரங்களில் இனி அமைச்சகமே முடிவு எடுக்கும்.

அமைச்சகங்கள் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் கேபினட் செயலரும், பிரதமர் அலுவலகமும் உதவி செய்வார்கள்.

விரைந்து முடிவுகள் எடுக்கும் வகையில் பிரதமர் மோடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்".

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் சிறுமிகளை பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்டது தொடர்பாக 2 போலீஸார் உட்பட, 5 பேர் கைது


உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிடப்பட்டு, கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 5-வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் பெயர் தெரியாத 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

2 போலீஸ் உட்பட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 போலீசாரும், பப்பு யாதவ், அவதேஷ் யாதவ் மற்றும் உர்வேஷ் யாதவ் ஆகிய 3 சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் உத்தர பிரதேச மாநில அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக விரைவு நீதிமன்றம் மூலம் உடனடியாக குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர மாநில அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சுயநலத்துக்காக சிவகங்கையில் மட்டும் தன் மகனுக்காகப் பிரச்சாரம் செய்த சிதம்பரம், கட்சியையே அழிக்கப் பார்க்கிறார்

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியையே அழிக்கப் பார்க்கிறார் என்று கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து 30-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று, தலைவர் பதவியிலிருந்து ஞான தேசிகனை நீக்க வேண்டும் என்று கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சியைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளது மிகப் பெரிய தவறு. அறிக்கை விட்டவர்கள், ஜூன் 6-ம் தேதி நடக்கவுள்ள மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தோல்விக்கான காரணங்களையும், தங்களுடைய கருத்துக்களையும் கட்சித் தலைவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம். அதை விடுத்து தன்னிச்சையாக அறிக்கை விடுவது ஏற்புடையது அல்ல.

இன்று கோரிக்கை விடுப்ப வர்கள், தேர்தலின்போது எந்தத் தொகுதிக்கும் சென்று பணியாற்ற வில்லை. இலங்கை பிரச்சினை, ராஜீவ் கொலையாளிகள் விடுதலை போன்ற பிரச்சினைகளின்போது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியான நிலை களில் இவர்களோ அல்லது இவர்களுக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களோ யாரும் குரல் கொடுக்கவில்லை.

ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதுதான் அகில இந்திய அளவில் பொருளாதார வீழ்ச்சியும், விலைவாசி உயர்வும் ஏற்பட்டு இன்று காங்கிரஸ் கட்சியின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்துள்ளது. அவசரப்பட்டு ஆந்திராவை இரண்டாகப் பிரித்து அங்கு காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை உண்டாக்கியவர் உள் துறை அமைச்சராக இருந்த சிதம்பரம்தான். கட்சிக்காக அல்லாமல் சுயநலத்துக்காக சிவகங்கை தொகுதியில் மட்டும் தன் மகனுக்காகப் பிரச்சாரம் செய்தவர் இன்று கட்சியையே அழிக்கப் பார்க்கிறார்.

கடந்த இரண்டரை ஆண்டு காலமாக கட்சியிலுள்ள எல்லா அமைச்சர்களையும் முன்னாள் மாநிலத் தலைவர்களையும் ஒருங் கிணைத்து கட்சியின் ஒற்று மையை வெளிப்படுத்தி தமிழகம் முழுவதும் கூட்டங்கள் போட்டவர் ஞானதேசிகன். காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளையும், மாவட்ட தலைவர்களையும் நியமித்து கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, தொண்டர் களை அரவணைத்துச் செல்லும் தலைவராக ஞானதேசிகன் விளங்குகிறார்.

எனவே, இதுபோன்ற அறிக்கை களை விடுவதன்மூலம் தமிழக காங்கிரஸ் கட்சியை பலவீனப் படுத்தாமல் கட்சியின் வளர்ச்சிக் காக அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலிருந்து ப.சிதம்பரத்தை மாநிலங்களவைக்கு அனுப்ப சித்தராமையா எதிர்ப்பு

கர்நாடகாவில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 4 பேரின் பதவிக்காலம் வருகிற ஜூன் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று  நடைபெற்ற போது, சிதம்பரம் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்குச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்பொழுது கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசுகையில், “கர்நாடகாவுடன் துளியும் தொடர்பில்லாத தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரத்தை இங்கிருந்து தேர்வு செய்தால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். ஏனென்றால் கன்னடர் களை புறக்கணித்துவிட்டு வேறு மாநிலத்தில் இருப்பவரை தேர்வு செய்தால் கட்சிக்குள்ளே குழப்பம் ஏற்படும். அவரைத் தேர்ந்தெடுப் பதற்கு பதிலாக கர்நாடகாவில் இருக்கும் தகுதியான தலைவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும்'' என கூறினார்.

திக்விஜய் சிங், 'அவர் (சிதம்பரம்) தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதைக் கணித்து போட்டியிடுவதைத் தவிர்த்தார். இதனால் கட்சிக்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டது'' என ஆலோசனை கூட்டத்தில் கூறியுள்ளார். 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media