இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு ஐ.பி.ல் சூதாட்ட நிகழ்வுகளில் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு வந்த ஜீ தொலைக்காட்சி சேனல் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக தோனி தாக்கல் செய்த மனுவில், 'கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி ஜீ நெட்வொர்க் தொலைக்காட்சி கடந்த சில வாரங்களாக செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எனது நற்பெயருக்கும் புகழுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆகவே, அந்த நிறுவனம் இது தொடர்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட தடை விதிக்க வேண்டும்.
மேலும், அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐபிஎஸ் ஜி.சம்பத்குமார் ஆகியோர் ரூ.100 கோடி நஷ்டஈடாகத் தரும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, தோனி் தொடர்பான செய்தியைத் தொடர்ந்து வெளியிட ஜீ தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2 வாரம் இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.