BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 6 November 2014

ஐசிசி ஒரு நாள் அணிக்கு தோனி கேப்டன்: டெஸ்ட் அணியில் இந்திய வீரர்கள் இல்லை


இந்த ஆண்டுக்கான ஐசிசியின் ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் அணியில் இந்திய வீரர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒரு நாள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 2013 முதல் செப்டம்பர் 2014 வரையிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஒரு நாள், டெஸ்ட் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த ஆண்டுக்கான அணிகள் விவரம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 12 பேர் கொண்ட ஒரு நாள் அணிக்கு தோனி கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, முகமது ஷமி ஆகியோரும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளனர். ரோகித் சர்மா 12-ஆவது வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி தொடர்ந்து 7-ஆவது முறையாக ஐசிசியின் ஒரு நாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 1-3 என டெஸ்ட் தொடரில் மோசமாக தோற்றதனால்தானோ என்னவோ, இந்திய வீரர்கள் யாரும் டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. ஒரு நாள் அணி: (பேட்டிங் வரிசை) முகமது ஹஃபீஸ், குவின்டன் டி காக், விராட் கோலி, ஜார்ஜ் பெய்லி, டி வில்லியர்ஸ், தோனி (விக்கெட் கீப்பர், கேப்டன்), டுவைன் பிராவோ, ஜேம்ஸ் ஃபால்க்னர், டேல் ஸ்டெயின், முகமது ஷமி, அஜந்தா மெண்டிஸ். ரோகித் சர்மா.

டெஸ்ட் அணி: (பேட்டிங் வரிசை) டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், குமார் சங்ககரா, டி வில்லியர்ஸ், ஜோ ரூட், ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), மிச்செல் ஜான்சன், ஸ்டூவர்ட் பிராட், டேல் ஸ்டெயின், ரங்கனா ஹெராத், டிம் செளதி, ராஸ் டெய்லர்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த புவனேஷ்வர்:  இந்த ஆண்டுக்கான ரசிகர்களால் தேர்ந்தெடுக்கும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தேர்வாகியுள்ளார். இந்த போட்டியில் அவர் தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயினை பின்னுக்குத் தள்ளி, ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளார். 2010-இல் சச்சினும், கடந்த ஆண்டு தோனியும் இந்த விருதைப் பெற்றனர். இலங்கையின் சங்ககரா (2011,2012) தொடர்ந்து இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ளார்.

உணவே மருந்து : இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள்

இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி பெறும் எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.

3-வது முறையாகப் போட்டி : உச்ச நீதிமன்றத்திடம் ராஜபட்ச கருத்துக் கேட்பு

இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவது குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் அதிபர் மகிந்த ராஜபட்ச கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து ராஜபட்ச உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், மீண்டும் அவர் அதிபர் பதவியை ஏற்பதற்குத் தடையாக, சட்டச் சிக்கல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து இம்மாதம் 10-ஆம் தேதி, அல்லது அதற்கு முன்னதாக தெரியப்படுத்துமாறு கோரியுள்ளதாக இலங்கை ஊடகங்கள் புதன்கிழமை தெரிவித்தன. ராஜபட்சவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடையும் நிலையில், ஒரு ஆண்டுக்கு முன்னரே அவர் அதிபர் தேர்தலை நடத்த விரும்புவதாகத் தெரிகிறது.

தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, அவரது பதவிக் காலம் நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் நவம்பர் 18-ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படலாம். அந்தத் தேர்தலில் ராஜபட்ச மீண்டும் போட்டியிட முடியாது என எதிர்க் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உச்ச நிதிமன்றம் இந்த விவகாரத்தில் தெரிவிக்கும் கருத்து, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜப்பானின் உயரிய விருதைப் பெற்றார் மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் புதன்கிழமை ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதற்காக "தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாலோனியா ஃபிளவர்ஸ்' என்ற இந்த விருது மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. விருதைப் பெற்ற பிறகு மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் ஆகியோர் அந்நாட்டு மன்னர் அகிஹிடோ, அரசி மெஸிகோ ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 57 முக்கிய தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவராவார்.

முன்னதாக, இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து அவர் கூறியதாவது: ஜப்பான் அரசும், அந்நாட்டு மக்களும் என் மீது கொண்டுள்ள அன்பால் பெருமையடைகிறேன். இந்திய-ஜப்பான் உறவுகள் மேலும் மேம்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காகவே நான் பாடுபட்டேன். என்னுடைய ஆட்சிக் காலத்தில் மட்டுமல்ல, எனது பொதுவாழ்விலும் இதற்காகவே பாடுபட்டிருக்கிறேன் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார். பிரணாப், மோடி வாழ்த்து: இந்நிலையில், இந்த விருதைப் பெற்றுள்ளதற்காக மன்மோகன் சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம்: சவரனுக்கு ரூ.280 குறைந்தது



22 கேரட் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, இன்று 19,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.38 குறைந்து, 2,422க்கு விற்பனையாகிறது. கடந்த 15 நாட்களில் தங்கம் விலை 1448 குறைந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 1,280 குறைந்து 34,360க்கு விற்பனையாகிறது,

28,000 புள்ளிகளைத் தொட்டது மும்பை பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) புதன்கிழமை முதல்முறையாக 28,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது. புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாலும், மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாலும் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளதால், பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பணியாளர் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம், காப்பீட்டுச் சட்டம் ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை அறிவித்தார்.

மேலும், நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் சிலவற்றை தனியார்மயமாக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது, தொழில் துறையினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை 27,907 புள்ளிகளுடன் தொடங்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண், ஒரு கட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக 28,010 புள்ளிகளைத் தொட்டது.இருப்பினும் வர்த்தக முடிவில், சாதனை அளவாக 27,915 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது, முந்தைய தினத்தைவிட 55.5 புள்ளிகள் (0.20 சதவீதம்) அதிகமாகும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media