BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 23 April 2014

"மோடிக்கு வாக்களிக்க வேண்டாம்" : மாணவர்களுக்கு மும்பை கல்லூரி முதல்வர் ஈ-மெயில்

மும்பையை சேர்ந்த செயின்ட் சேவியர்ஸ் கல்லூரி முதல்வரான டாக்டர் மாஸ்கரன்ஹஸ் தங்களது மாணவர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலில் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அவர் அனுப்பிய மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது:

குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந்துள்ளது என்பது குறித்து மனித அபிவிருத்தி தொடர்பான அட்டவணை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறை அங்கு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உயர்கல்வி ஒரு கட்டத்திற்கு மேல் வளரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி என்பது எது? வியாபாரம் பெரிய அளவில் நடைபெறுவதா? அதிக லாபங்களை ஈட்டுவதா? உற்பத்தியில் சாதனை படைப்பதா? இதையா மக்கள் வளர்ச்சியாக கருதுகிறார்கள் என்றால் இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும்.

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் சரியாகவும், நியாயமான விலையில் கிடைப்பதே உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் இதிலெல்லாம் அம்மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வித சாதனையையும் நிகழ்த்தவில்லை. எனவே எதிர்காலத்தை தீர்மாணிக்கும் வகையில் மாணவர்கள் கவனமுடன் மோடிக்கு வாக்களிக்காமல் தவிர்க்கவேண்டும் என்று அந்த ஈ-மெயிலில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ஈ-மெயில் அனுப்பப்பட்டதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தேர்தல் ஆணையத்திலும் இது குறித்து புகார் அளித்துள்ளது.

விமான பயணத்தில் மொபைல், லேப்டாப்களை இனி சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை

பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால் இனிமேல்,  பணிப்பெண்கள் இவற்றை 'ப்ளைட் மோடில்' போடுமாறு கூறுவார்கள். அதனால், பயணிகள் தங்கள் மொபைல் போன்களையோ, லேப்டாப்களையோ சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை, ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் உற்சாகம் அளித்துள்ளது.

வதந்திகளைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்-நரேந்திர மோடி

மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோடி இது தொடர்பாகக் கூறியதாவது:

பாஜக ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து, பழங்குடியினரின் உரிமையைப் பறித்து விடும் என காங்கிரஸ் சொல்லி வருகிறது.

இதுபோன்ற பொய்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பழங்குடியினருக்கான உரிமைகளை காங்கிரஸோ பாஜகவோ அளிக்கவில்லை. பாபா சாகேப் அம்பேத்கர்தான் அவர்களுக்கு அளித்தார்.

இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்ராவ் காவித், இத்தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. நந்துர்பருக்கு அருகே யுள்ள குஜராத் கிராமங்கள் இப்பகுதியை விட கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளன.

1857-ம் ஆண்டு சுதந்திரப் புரட்சியின் போதிருந்து பழங்குடியினர் இத்தொகுதி யிலுள்ளனர்.

ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் பழங்குடியினருக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. வாஜ்பாய் அரசுதான் பழங்குடியினரை நினைவில் வைத்து, அவர்களுக்காக தனி அமைச்சகத்தை அமைத்தது. தனியாக பட்ஜெட் ஒதுக்கியது. மூன்று மாதங்களுக்கொரு முறை அது தொடர்பான அறிக்கையை அவர் பெற்றார்.

நான்கு மாநிலங்களில் உள்ள பாஜக அரசு, பழங்குடியினருக்கு நன்மை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினருக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி யுள்ளோம் என்றார்.

மோடி, ஆட்சிக்கு வந்தால் அவர் ரூ.5 லட்சம் கோடியாவது சம்பாதிப்பார்-கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த கேஜ்ரிவால், அமேதி மக்களை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஏமாற்றுவதாக தெரிவித்த அவர் பேசியதாவது:

"அமேதி மக்கள் தங்கள் தொகுதிக்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அமேதியில் வளர்ச்சிப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. உயரப் பறக்கும் ஹெலிகாப்டரை காண்பித்து உங்கள் தலைவர் அதோ செல்கிறார் என கைகாட்டுகின்றனர்.

அந்த நிலைமை வாரணாசி மக்களுக்கும் வந்துவிடக்கூடாது. ஹெலிகாப்டர் ஜனநாயகம் வேண்டுமா இல்லை மக்கள் பிரதிநிதி நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிபவராக இருக்க வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யட்டும்" என்றார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் விளம்பரங்களுக்காக கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். மோடி, விளம்பரங்களுக்கு ரூ.5000 கோடி செலவழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எங்கு திரும்பினாலும் மோடி, ராகுல் விளம்பரங்கள் தான் உள்ளன. மோடி, ஆட்சிக்கு வந்தால் அவர் ரூ.5 லட்சம் கோடியாவது சம்பாதிப்பார். ஆனால் என்னிடம் பணம் இல்லை. இனி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் யாரை தேர்ந்தெடுப்பது என்று. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் என் டேடி, அந்த லேடியல்ல; பொய்யான பிரச்சாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றும் இவர்கள் எல்லாம் கேடி-ஸ்டாலின்

தென்சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்" என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதுக்கோட்டையில் நடந்த‌ இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

சென்னையில் பேசியுள்ள ஜெயலலிதா, அறிவுஜீவி போல ஒன்றை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தை விட அதிக வளர்ச்சி பெற்றது தமிழ்நாடு என்று பேசியதுடன்,"குஜராத்துக்கு ஒரு மோடி என்றால், தமிழகத்துக்கு இந்த லேடி", என்று குறிப்பிட்டுள்ளார். நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழகத்தை பொறுத்தவரையில், தமிழக வளர்ச்சிக்கு காரணம் நமது தலைவர் கலைஞர்தான் என்று சுட்டிக்காட்டுவதுடன்," தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் அந்த லேடியல்ல, அதற்கு காரணம் என் டேடி, என்று தெரிவித்துக் கொள்ள விரும்பும், அதே சமயத்தில் பொய்யான பிரச்சாரங்களை சொல்லி" மக்களை ஏமாற்றும் இவர்கள் எல்லாம் கேடி", என்பதை அனைவரும் உணர்ந்து இருக்கிறார்கள், என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்."

இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான‌ கலவர வழக்கில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பெயர்களும் உள்ளன‌

கோப்ராபோஸ்ட் இணைய தளம் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜி வாலா, "1984-ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸார் பெயர்கள் மட்டும் இடம்பெறவில்லை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர் களின் பெயர்களும் அந்தப் பட்டி யலில் உள்ளன. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தேர்தல் ஏஜென்ட் டின் பெயரும் பட்டியலில் உள்ளது. அவர்களில் சிலர் வழக்கு களில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்." என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

1984 சம்பவம் மிகவும் துயரமானது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர்.

பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தற்போது சண்டீகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதன் கூட்டணி கட்சியான சிரோ மணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகள் சிம்ரன்ஜித் கவுர், பதின்டா தொகுதியில் போட்டியிடுகிறார். இருவரும் தேர்தலில் தோற்கப் போவது உறுதி.

இதை தெரிந்து கொண்ட பாஜக, சிரோமணி அகாலிதளம் தலைவர்கள் மக்களை குழப்பு வதற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகின்றனர். அவர்களின் வலையில் பஞ்சாப் மக்கள் விழமாட்டார்கள்.

இவ்வாறு ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

குஜராத்தில் இலவசங்கள், லஞ்சம், ஊழல் இல்லை; தமிழகத்தில் அதெல்லாம் இருக்கிறது-பிரேமலதா

வடசென்னை தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியன், மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் ரவீந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

தமிழகத்தில் வேதனை ஆட்சி தான் நடக்கிறது. சாதனை ஆட்சியாக இல்லை. தோல்வி பயத்தில் தான் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது. தோல்வி பயத்தில் திமுகவும், அதிமுகவும் ரூ.200, ரூ.300 கொடுத்து வாக்காளர் களைக் கவர முயற்சிக்கின்றன. ரூ.100-க்கும், பீர்-க்கும், சோறுக்கும் வாக்களிக்காமல், தொகுதி வளர்ச்சியை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம், நதிகள் இணைப்பு மூலம் மக்களுக்கு குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற் சாலைகளுக்குத் தேவையான தண்ணீர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும் என்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தையும், குஜராத்தையும் ஒப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். குஜராத்தில் மின்வெட்டே கிடையாது. தமிழகத்தில் அடிக்கடி மின் தடை. குஜராத்தில் பூரண மதுவிலக்கு. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை கள் இல்லாத தெருவே இல்லை. குஜராத்தில் நர்மதா நதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைத்து வறண்ட பூமியை வளமான பூமி ஆக்கியிருக்கிறார் நரேந்திர மோடி. அங்கு இலவசங்கள், லஞ்சம், ஊழல் இல்லை. தமிழகத்தில் அதெல்லாம் இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

மூன்றே மாதத்தில் மின் தட்டுப் பாட்டைப் போக்குவேன் என்றார் ஜெயலலிதா. மூன்று ஆண்டுகளாகியும் மின் தட்டுப்பாட்டு பிரச்ச‌னைக்கு தீர்வு காணப்படவில்லை.

தமிழகத்தில் 5 முனைப்போட்டி இருப்பதால், ஒவ்வொருவரின் வாக்கும் மிக முக்கியமானது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரும் வெற்றி பெறும் வகையில் புரட்சிகரமான தீர்ப்பைத் தந்து, திமுக, அதிமுகவுக்கு விடை கொடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

எனக்கு 90 வயது ஆகிறது. இடுப்பு ஒடிஞ்சி போச்சு. ஆனாலும் பிரச்சாரத்துக்கு வருகிறேன் என கருணாநிதி சொல்கிறார். இவரை யார் கூப்பிட்டது? -விஜயகாந்த்


தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம், நங்கநல்லூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணி, ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ.எம்.காமராஜ் ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது:

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட வேண்டாம். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 2 ஆண்டுகளில் குடிநீர், மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுப்போம். கூட்டணி கட்சிகளுக்குள் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.

மோடியை விட, இந்த லேடிதான் சிறந்தவர் என ஜெயலலிதா சொல்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் தடையின்றி மின்சாரம், தண்ணீர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது, இதுவரை எதுவும் வரவில்லை. இதுதான் லேடியின் சிறந்த நிர்வாகமா?

கடந்த 15 ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறார். மோடி அதுபோல எதுவும் செய்யவில்லையே. தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. நாளை மறுநாள் தேர்தல். இடையில் ஒரு நாள் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள அந்த ஒரு நாளில் நன்றாக சிந்தித்து, யோசித்து வாக்களியுங்கள்.

அம்மா உணவகம், அம்மா தண்ணீர் பாட்டில், அம்மா பார்மசி என அரசு வியாபாரம் செய்கிறது. சிறு வியாபாரிகள் செய்ய வேண்டியதை அரசு செய்து கொண்டிருக்கிறது. விலைவாசி எல்லாம் ஏறிவிட்டது. அதுவும் ஒரே நாளில் காய்கறிகளின் விலை ரூ.10 உயர்ந்துவிட்டது.

அதிமுக, திமுகவுக்கு ஊழல் செய்வதுதான் முக்கியம். எனக்கு 90 வயது ஆகிறது. இடுப்பு ஒடிஞ்சி போச்சு. ஆனாலும் பிரச்சாரத்துக்கு வருகிறேன் என கருணாநிதி சொல்கிறார். இவரை யார் கூப்பிட்டது. வீட்டிலேயே உட்கார வேண்டியதுதானே. உங்களுடைய குடும்பத்துக்காக நீங்கள் வருகிறீர்கள். அதேபோல, தோழியின் குடும்பத்துக்காக அந்த அம்மா வருகிறார். ரூ.100 மின்சாரக் கட்டணம் போய், தற்போது ரூ.300 மின்சார கட்டணமாக கட்டி வருகிறீர்கள். மக்கள் வறுமை யாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட் டுள்ளனர். நமக்கு தேவை மோடியா, லேடியா என்பதை மக்களே சிந்தித்து வாக்களியுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media