BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 4 March 2014

ஏப்ரல் 1 முதல், தபால் நிலையங்களில் இருக்கும் வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் உயர்வு


தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள், ஒவ்வொரு நிதியாண்டும் மாற்றியமைக்கப் படுகின்றன. 2014-15ம் நிதியாண்டுக்கான சில வைப்பு தொகைகளுக்கு வட்டி அதிகரிக்கப் பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு வருட வைப்பு நிதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 8.2 சதவீத வட்டி, இனி 8.4 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதியும் 8.4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 5 வருட வைப்பு நிதிக்கான வட்டி 8.4 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக உயர்த்தப்படும். வருங்கால வைப்பு நிதி (8.7) உள்ளிட்ட பிற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் (4 சதவீதம்) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த வட்டி உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

எதிர்ப்புகளை மீறி, ராஜபக்சேவை சந்தித்தார் மன்மோகன் சிங்


மியான்மர் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அங்கு நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். இருவரும் ஈழத்தமிழர் நலன்கள், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சேவை மன்மோகன் சிங் சந்திக்கக்கூடாது என தமிழகத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் மற்றும் மக்களிடயே தோன்றிய எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் அவரை சந்தித்தது தமிழக  அரசியல் கட்சிகள்  மற்றும் பொது மக்களிடேயே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


7 பேர் விடுதலை எதிர்த்து மனு , பிரதமர்  இலங்கை அதிபரை சந்தித்தல் போன்றவற்றால், தமிழகத்தில் காங்கிரஸிற்கான எதிர்காலம் காணாமல் போய் கொண்டிருக்கிறது என நினைத்தால், லைக் போடுங்கள்!

உலக அளவில் பெண் தலைவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் ஒரே சர்வதேச விருது, இம்முறை இந்திய பெண்ணுக்கு!


ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட லட்சுமி என்பவருக்கு,  துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயரிய விருதை வழங்கை அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மனித உரிமை, பெண்கள் சம உரிமை, சமுதாய முன்னேற்றம் போன்றவற்றிற்காக துணிச்சலுடன் போராடும் பெண்களுக்காக‌ வழங்கப்படுகின்ற இவ்விருதை, அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமா வழங்க உள்ளார். 

இதுகுறித்து வாஷிங்டன் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2005-ஆம் ஆண்டு லட்சுமி என்ற பெண் புதுடெல்லியின் பரபரப்பான கான் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது அவருடைய நண்பரின் சகோதரர் ஒருவர், அவர்மீது ஆசிட் வீசியதில் படுகாயமடைந்தார். அதில் அவருடைய முகம் நிரந்தரமாக விகாரமானது. அதன் பிறகு, சமூகத்தில் இருந்து ஓடி ஒளியாமல், ஆசிட் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர அதற்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இதுதொடர்பாக தேசிய தொலைக்காட்சிகளில் அடிக்கடி தோன்றிய அவர், சட்டவிரோதமாக ஆசிட் விற்கப்படுவதை தடுக்க 27 ஆயிரம் கைழுத்துக்கள் அடங்கிய புகார் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, ஆசிட் விற்பனையின் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்தவும், மக்களவையில் இதுகுறித்த விவாதத்தை நடத்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

யூ.பி.எஸ்.சி தோ்வுகளை அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரு முறை எழுதலாம்


இந்திய குடிமைப் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை இந்த ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் என்றும், இரண்டு வருட வயது தளர்வு வழங்கப்படவுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்தியப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

புதிய விதிகளின்படி, யூபிஎஸ்சி தேர்வை அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 6 முறை (32 வயது வரை) எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும். இவர்களுக்கான அதிகபட்ச வயதுவரம்பு 35 வயதிலிருந்து 37 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓபிசி பிரிவினர் 35 வயது வரை 9 முறை எழுதலாம். ஓபிசி மற்றும் பொதுப்பிரிவை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் 45 வயது வரை 9 முறை எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தோ்வு வாய்ப்புகளில் வரம்பு இல்லை. அதே நேரம் அதிகபட்ச வயது வரம்பு 45-லிருந்து 47-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, நடைமுறைக்கு வரும் முதன்மைத்தோ்வு வரும் ஆகஸ்டு மாதம் 24ந்தேதி நடைபெற உள்ளது.

வெடிகுண்டு சம்பவங்களில் ஈராக், பாகிஸ்தானுக்கு அடுத்து, இந்தியாவிற்கு 3வது இடம்: தேசிய வெடிகுண்டு புள்ளி விவரங்கள் மையம்





வெடிகுண்டு சம்பவங்களில் ஈராக் மற்றும் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் இந்தியா உள்ளதாகவும், குண்டுவெடிப்புகளில் ஆப்கானிஸ்தானைவிட இந்தியாவில் அதிகம் பேர் இறந்துள்ளதாகவும் தேசிய வெடிகுண்டு புள்ளி விவரங்கள் மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 2013-ம் ஆண்டில் 212 முறை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 130 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 466 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் உலகில் 75 சதவிகித குண்டுவெடிப்புகள் பாகிஸ்தான், ஈராக் மற்றும் இந்தியாவில் நடந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலையில் அலட்சியம் காட்டிய 10 ஊழியர்கள் நீக்கம்; ஏர் இந்தியா அதிரடி நடவடிக்கை

சென்ற மாதம் 13-ம்தேதி டெல்லியிலிருந்து, சிகாகோ செல்லும் நீண்ட தூர விமானம் ஒன்று நான்கு பணிப்பெண்களின் வருகைக்காகக் காத்திருக்க நேரிட்டது. விமானம் கிளம்ப வேண்டிய நேரத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக ஒரு ஊழியர் வந்துசேர,  மற்றொருவரோ அருகிலுள்ள துபாய் போன்ற நகரங்கள் வரையிலுமே தன்னால் பறக்க முடியும் என்று கூறியுள்ளார். மீதி இரண்டு பேர் பணிக்கே வரவில்லை. இதனால் பயணிகள் காத்திருக்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் நான்கு பேரையும் ஏர் இந்தியா நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது.

கடந்த 20-ம்தேதி விமான ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பணிகளைத் துவங்கவில்லை என்றால் அவர்கள்மீது வேலைநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற அறிக்கையை ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியது. தங்களின் அரசியல் பின்புலத்தை பயன் படுத்திக் கொண்டு பெரும்பான்மையான ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று குறிப்பிட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த முறையும் இதுபோல் அலட்சியமாகச் செயல்பட்ட 5,6 பேரை கடந்த ஞாயிறன்று நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.

ஏர் இந்தியாவின் அதிரடி நடவடிக்கையை நீங்கள் வரவேற்பதென்றால், லைக் செய்யுங்கள்!

உமா மகேஸ்வரி கொலையை அடுத்து எச்சரிக்கை நடவடிக்கையாக இனி வெளிமாநில தொழிலாளர்களின் கைரேகைகள் பதிவு செய்யும் போலீசார்


கடந்த 13ம் தேதி, சென்னையில் உமா மகேஸ்வரியை, மேற்கு வங்காள கட்டிட‌ தொழிலாளர்கள் கொடூரமாக கொலை செய்தனர்.

ஒ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆந்திரா, பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பகுதியில் தங்கி உள்ளனர். மது, புகையிலை, பான்மசாலா பயன்படுத்தும் வழக்கம் அதிகம் உள்ள‌ இவர்கள், பகலில் கட்டிட வேலையும், இரவில் திருட்டு, வழிப்பறி மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

கேளம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து வரும் நகை-பணம் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால், போலீசாரின் சந்தேகப்பார்வை தற்போது வெளிமாநில கூலி தொழிலாளர்கள் மீது திரும்பி உள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி விஜயகுமார்,  இரவு 10 மணிக்கு மேல் சாலையில் நடந்து செல்லும் வெளிமாநில தொழிலாளர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களை பற்றிய தகவல்கள் மற்றும் கைரேகைகளை பதிந்து அனுப்பி வைக்கும்படி கேளம்பாக்கம், தாழம்பூர், திருப்போரூர் ஆகிய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 140 பேரிடம் இதுவரை கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என நினைத்தால், லைக் போடுங்கள்!

தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்கக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம், நாளை தர்ணா


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழி ஆக்குவதற்கான தீர்மானம் கடந்த 2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  இந்தத் தீர்மானத்துக்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கக் கோரி பகத்சிங், எழிலரசு, மாரிமுத்து ஆகிய வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் கடந்த 8 நாள்களாக வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான கோரிக்கையை வலியுறுத்தி, இன்று ஆர்ப்பாட்டமும், நாளை தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

2005க்கு முன் அச்சிட்டப்பட்ட‌ நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி மேலும் 9 மாதம் அவகாசம் நீட்டிப்பு


2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு மேலும் 9 மாதம் அவகாசம் அளித்துள்ளது . இதன் மூலம் வரும் 2015 ஜனவரி 1-ம் தேதி வரை, 2005-க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தின் கீழ்ப் பகுதியில். அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப் பட்டிருக்காது. அத்தகைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாகவும், அவற்றை ஏப்ரல் 1-ம் தேதி முதல் புழக்கத்துக்கு விடப்போவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 22-ம் தேதி அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கை பண மதிப்பைக் குறைக்கும் பொருட்டோ, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டோ எடுக்கப்பட்டதல்ல என்று அவர் தெரிவித்து இருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media