BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 10 April 2014

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ஜெராக்ஸ் காபி எடுத்து, சின்னத்தை மாற்றி பாஜக தங்கள் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது- ராகுல் காந்தி




ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது:

"காங்கிரஸ் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தலுக்கான பல வேலைகளை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னர், நாங்கள் ஏழை மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைவரையும் தேடிச் சென்று அவர்களது பிரச்சினைகளைக் கண்டறிந்தோம். குறைபாடுகளை தீர்க்க அவர்களது ஆலோசனைகளை பெற்று, அதன்மூலமே தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது. ஆனால் பாஜகவோ, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அப்படியே நகல் எடுத்து, அதில் காங்கிரஸ் சின்னத்தை மாற்றி, அக்கட்சியின் சின்னத்தை இணைத்து வெளியிட்டுள்ளது.

நாங்கள் மக்களை இணைத்து ஆட்சி செய்ய விரும்புகிறோம். பாஜக பெரிய தொழிலதிபர்களுக்காகவே ஆட்சி அமைக்க நினைக்கிறது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு. நாங்கள் தந்துள்ள வாக்குறுதிக்காக ஏற்கெனவே உழைக்க ஆரம்பித்துவிட்டோம். அவர்கள் ஆட்சி அமைத்த பிறகே அதற்கான வேலைகளை தொடங்க உள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தது. அந்தச் சட்டம்தான் அதிகாரிகளும், முதல்வர்களும் செய்த ஊழல்களை மக்கள் முன்னிலையில் கொண்டுவந்தது"

இவ்வாறு ராகுல் காந்தி பேசியிருந்தார்.

ஆண்கள் தவறு செய்வார்கள் தான், ஆனால் அவர்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டால் தூக்கில் இட கூடாது-முலாயம் சிங்

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது அவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றம் இழைப்போருக்கு, தூக்கு தண்டனை கொடுக்கும் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொராடாபாத்தில் பேசிய அவர், "ஆண்கள் தவறு இழைப்பார்கள் தான். அதற்காக அவர்களை தூக்கிலிட கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பிற்கு கொடுக்கப்படும் தூக்கு தண்டனையை ரத்து செய்வோம்" என்று கூறினார். தன்னுடைய கருத்திற்கு விளக்கம் அளித்த அவர், ஆண்களும் பெண்களும் நண்பர்களாக பழகுகின்றனர். தவறுதலாக ஏதாவது நடந்துவிட்டால், கற்பழிப்பு புகார் அளிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை நாங்கள் மாற்றுவோம். மேலும் இது போன்ற சட்டத்தை தவறுதலாக பயன்படுத்துவோரும் தண்டிக்கப் படுவதற்கு வழி செய்வோம் என தெரிவித்தார்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!

ராகுல், சோனியா போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் பிரியங்கா பிரச்சாரம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி இன்று டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரியங்கா, தன் தாய் சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் சகோதரர் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். மேலும், பா.ஜனதா கூறுவதுபோல் எந்த மோடி அலையும் வீசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

பிரியங்காவின் அரசியல் கூர்மை பற்றி 1990ல் ராஜீவ் காந்தி தன்னிடம் கூறியதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி சமீபத்தில் கூறியிருந்தார். இதனால் பிரியங்கா கட்சியில் முன்னிலைப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் பிரியங்காவும் பங்கேற்றார். எனினும், இப்போது பிரியங்கா தனது பிரச்சார திட்டத்தை விரிவுபடுத்த தயாராக இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

திமுகவிலிருந்து வைகோ வெளியேற, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் தான் காரணம்

தி.மு.க. பிரமுகர் இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட மு.க.அழகிரி, “திமுகவிலிருந்து வைகோ வெளியேற, தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் தான் காரணம்” என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

"வைகோ, தேனி தொகுதி மக்களுக்காக நிறைய பாடுபட்டுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் அவர் ஏராளமான போராட்டங்களை நடத்தி உள்ளார். அதை நம்பி, ம.தி.மு.க. இத்தொகுதியில் போட்டியிடுகிறது. அதுபோல, ஜே.எம். ஆரூண் எம்.பி-யும் இரண்டு முறை இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். அதனால், அவரும் மீண்டும் நிற்கிறார்.

ஆனால், திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கம் எதற்காக இந்தத் தொகுதியில் நிற்கிறார்? அவருக்கு என்ன தகுதி உள்ளது? அவரது ஒரே தகுதி, சாதனை கட்சி விட்டு கட்சி தாவுவதுதான். ம.தி.மு.க-வில் இருந்த அவரை மீண்டும் தி.மு.க-வுக்கு கொண்டு வந்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

வைகோ தி.மு.க-வை விட்டு வெளியேற முக்கியக் காரணம் இந்த பொன்.முத்துராமலிங்கம்தான். அவரை ஏற்றிவிட்டு ஏற்றி விட்டே, தனிக்கட்சி (ம.தி.மு.க) தொடங்க வைத்தார். பிறகு அவருக்கும் துரோகம் செய்துவிட்டு தி.மு.க. வுக்கு வந்துவிட்டார். "

இவ்வாறு அழகிரி கூறியிருந்தார்.

அதிமுகவில் இணைந்தார் திமுக எம்.பி. மற்றும் அழகிரி ஆதரவாளர் ஜே.கே.ரித்தீஷ்

திமுக ராமநாதபுரம் எம்.பி.யும், அழகிரியின் ஆதரவாளருமான ஜே.கே.ரித்தீஷ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருடன், ராமநாதபுரம் மாவட்டம் திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதியும் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின்போது, ரித்தீஷ், நாகநாத சேதுபதி இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா அதிமுக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், அழகிரியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார் ரித்தீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், திமுகவில் ஸ்டாலினின் கை ஓங்கியிருப்பதாகவும், அவர் கைக்காட்டியவர்களுக்கே திமுகவில் தேர்தலில் நிற்பதற்கான சீட் கிடைத்ததாகவும், அவரின் தலைமையை கட்சியில் உள்ளவர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

விசாரணை குழுவிடம் தோனி அளித்த பதில்களின் ஒலிநாடாவை வழங்க கோரி நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு

ஐபிஎல் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த முத்கல் குழு,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், ஐபிஎல் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது அவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய ஒலி நாடாவை தங்களிடம் வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது.

ஐபிஎல் சூதாட்ட புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு சூதாட்டத்தில் உள்ள தொடர்பு குறித்த விவரங்களை முத்கல் குழுவிடம் தெரிவிக்காமல் தோனி மறைத்து பொய்களைக் கூறியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, தோனி எந்த தவறும் செய்யவில்லை என்று பிசிசிஐ சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தோனி, சீனிவாசன் உள்ளிட்டோரது பேச்சு அடங்கிய ஒலி நாடாவை பிசிசிஐ கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு (வெள்ளிகிழமை) நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

'திருமணமானவர்' என நரேந்திர மோடி முதல் முறையாக வேட்புமனுவில் அறிவிப்பு



பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி மக்களவை தேர்தலில் போட்டியிட வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில், முதல் முறையாக தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது திருமணம் தொடர்பான கட்டத்தை பூர்த்தி செய்யவேண்டும் என்று கோவா மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சாந்தாராம் நாயக் கோரியிருந்தார்.

இதுவரை நரேந்திர மோடி போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும், வேட்பு மனு விண்ணப்பத்தில் திருமணம் குறித்த இடத்தை பூர்த்தி செய்யாமலேயே விட்டிருந்தார். முதல் முறையாக திருமணம் ஆனவர் என்றும், மனைவியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு 17 வயது இருக்கும் போது திருமணம் செய்து கொண்ட மோடி, திருமணம் ஆன இரு வாரங்களிலேயே மனைவியை விட்டு சென்று விட்டு, திரும்ப அவரிடம் செல்லவில்லை என்ற செய்தி, மகளிரிடையே அவருக்கான ஆதரவை குறைக்க வாய்ப்பு இருக்கிறது என சிலரால் எதிர்பார்க்கப்படுகிறது.   

மான் கராத்தேவிற்கு அளித்த வரிச்சலுகையை ரத்து செய்யக் கோரி வழக்கு

 ‘மான் கராத்தே’ படத்துக்கு வழங்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இது தொடர்பான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"‘தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்குத் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகையை அளித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் வெளியான ‘மான் கராத்தே’ என்ற திரைப்படத்துக்கும் தமிழக அரசு கேளிக்கை வரிச் சலுகை அளித்துள்ளது. ‘மான் கராத்தே’ என்ற பெயர் தமிழ் பெயர் அல்ல. மேலும் அந்தப் படத்தில் ஆங்கில பாடலும் மதுபானம் உட்கொள்வதை ஊக்குவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆகவே இப்படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை அளிக்கப்பட்டது விதிமுறைகளுக்கு மாறானதாகும். எனவே ‘மான் கராத்தே’ படத்துக்கு அளிக்கப்பட்ட கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்."

இந்த மனு விசாரணைக்கு நேற்று நீதிமன்றத்தில் வந்த போது,  ‘மான் கராத்தே’ படத்துக்கான கேளிக்கை வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள் வாதிட்டார். இதனையடுத்து இந்த மனுதொடர்பாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இம்மாதம் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

"ஓட்டு வேண்டுமெனில் எங்களுக்கு பெண் பார்த்து கொடுங்கள்"-ஹரியாணாவில் திருமணம் ஆகாதவர்கள் சங்கம்

ஹரியாணா மாநிலத்தில் பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி ஹரியாணாவில் 1,000 ஆண்களுக்கு 879 பெண்கள்தான் உள்ளனர். இதனால், ஹரியாணாவில் ஏராளமான ஆண்கள் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் விரக்தியில் உள்ளனர்.

திருமணமாகாதவர்கள் ஒன்று சேர்ந்து அவிவாஹித் புருஷ் சங்கதன் (விவாகமாகா தவர்கள் சங்கம்) என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க வரும்போது, இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள், “எங்களுக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்துக் கொடுத்தால், எங்கள் வாக்கு உங்களுக்குத்தான்” எனக் கூறி வருகின்றனர்.

இதுக் குறித்து பிபிபூர் கிராமத் தலைவர் சுனில் ஜக்லான் கூறுகையில், “பெண் சிசுக்கொலை மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. உடனடியாக இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், மிகவிரைவிலேயே மிக மோசமான பின்விளைவைச் சந்திக்க நேரிடும். ‘பெண்பார்த்துக் கொடு; வாக்களிக்கிறோம்’ என்ற அந்த கோரிக்கை வாசகம், அனைத்து இளைஞர்களும் திருமணத்துக்காகப் பெண் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லப் படவில்லை. பெண் சிசுக் கொலை பிரச்சினையை அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சொல்லியிருக்கிறோம்”, என்று கூறினார்.

தமிழர்கள் கலாச்சாரத்தையே சீரழிக்கின்றனர் அதிமுகவினர்- ஸ்டாலின்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் இரா.தாமரைச் செல்வனை ஆதரித்து திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது:

ஹெலிகாப்டரில் மேலே வரும் ஜெயலலிதாவை பார்த்து, வணக்கம் வைக்கும் அதிமுக அமைச்சர்களும், வேட்பாளர்களும், அவர் வானில் பறந்து வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டவுடனேயே வணக்கம் செய்ய துவங்கி விடுகின்றனர். அதுவும் அவர் வந்து இறங்கிவிட்டால் கீழே படுத்துகொண்டுதான் வணக்கம் வைக்கிறார்கள். இதுதான் கலாச்சாரமா, தமிழர்களின் கலாச்சாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது நம் தலைவர் கருணாநிதிதான். அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது திமுக ஆட்சியில்தான்.

இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் (அன்புமணி) மதவாத கூட்டணியில் போய் சேர்ந்திருக்கிறார்கள். அதுவும் அதை மெகா கூட்டணி என்கிறார்கள். மெகா கூட்டணி அல்ல. அது, சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் கடந்த முறை நமது கூட்டணியில் இருந்த போது இரண்டு பேர் அமைச்சர்களாக இருந்தனர். அதிலும் இந்த தொகுதியில் நிற்பவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். நாம் ஆட்சியில் இருந்தபோது சில சட்டமன்ற உறுப்பினர்களும், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிலர் இருந்தார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் சிலர் இருந்தார்கள். இதுவரை இந்த மாவட்ட மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட ஒடுக்கபட்ட சமுதாயத்தினருக்கு ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி ஆகியவற்றில் ஒரு சீட்டாவது வாங்கி கொடுத்திருக்கிறார்களா?"

இவ்வாறு ஸ்டாலின் பேசியிருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media