BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 12 May 2014

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு !!! தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை பெறும் என கணித்துள்ளனர் .

கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்பது கட்டங்களாக நடந்த தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின . டைம்ஸ்நவ், ஹெட்லைன்ஸ் டுடே, ஐ.பி.என்.லைவ், என்.டபுள்யூ எஸ், சி வோட்டர் ஆகியோர் தங்கள் கணிப்புகளை வெளியிட்டனர் .



அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர் . 


பாஜக
காங்கிரஸ்
மற்றவை
சி வோட்டர்
289
101
153
இந்தியா டுடே
261-283
110-120
150-162
ஏ.பி.ப்பி
278
93
172
டைம்ஸ் நவ்
249
148
146


இவ்வாறு அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் மோடிக்கே வெற்றி வாய்ப்பு பிராகாசமாக உள்ளதாக தெரிவிக்கிறது ..

வாரணாசி தொகுதியை மோடிக்காக விட்டுக்கொடுத்ததில் வருத்தம் இல்லை- ஜோஷி கருத்து


மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்ததில் வருத்தம் எதுவும் இல்லை என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் மற்றும் அந்த தொகுதியின், தற்போதைய, எம்.பி. முரளி மனோகர் ஜோஷி கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, "பாஜக தலைமையிலான கூட்டணிக்கு நாட்டில் பெரும் அலை வீசுகிறது. வெற்றியை தாண்டிய அதிக பெரும்பான்மை கிடைக்க போவது உறுதியாகி விட்டது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடுவதாக இருந்த வாரணாசி தொகுதியை பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்காக விட்டுக்கொடுத்து கான்ப்பூரில் போட்டியிடுவதில் வருத்தம் எதுவும் இல்லை” என்றார்.

ஆனால், இதற்கு முன்னதாக,  மக்களவைத் தேர்தலில் மோடி  வாரணாசியில் போட்டியிடுவதாக முடிவான செய்திகளை அடுத்து,  முரளி மனோகர் ஜோஷி அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்கல் முறையில் 24 மணி நேரத்திற்குள் திருமண பதிவுச் சான்றிதழ் பெறும் வசதி டெல்லியில் அறிமுகம்


திருமண பதிவுச் சான்றிதழை ‘தட்கல்’ முறையில் 24 மணி நேரத்துக்குள் பெறும் வசதியை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி மாநில அரசின் வருவாய்த்துறை செயலர் தரம் பால் இது தொடர்பாகக் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் 2006-ல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திருமணமான 60 நாள்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்வது டெல்லியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணச்சான்று அவசரமாகத் தேவைப்படுவோருக்கு தட்கல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் திருமண பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு ரூ. 10 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது” என்றார்.

வெல்டிங் வேலை பார்த்து ப்ளஸ் 2 தேர்வில் சாதனை படித்த மாணவர் பி.இ. படிக்க தருமபுரி மாவட்ட எஸ்.பி. உதவி

மதுரையை சேர்ந்த மிட்டாய் வியாபாரி இசக்கிமுத்துவின் மகன் மணிமாறன். பிளஸ் 2 தேர்வில் 1129 மதிப்பெண் பெற்று மதுரை மாநகராட்சி பள்ளிகள் அளவில் இரண்டாமிடம் பிடித்தார். குடும்ப வறுமையினால் 8-ம் வகுப்புடன் பாதியிலேயே படிப்பை நிறுத்திய மணிமாறன், அதன்பின் வெல்டிங் வேலை செய்து, அந்த வருமானம் மூலம் பிளஸ் 2 வரை படித்துள்ளார். இவர்  பி.இ. கம்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் குடும்பப் பொருளாதார சூழ்நிலை அதற்கு தடையாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதையறிந்த மதுரையின் முன்னாள் எஸ்.பி.யும், தற்போதைய தருமபுரி மாவட்ட எஸ்.பி.யுமான அஸ்ராகர்க், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மணிமாறன் விரும்பும் பாடப்படிப்பை பெற்றுத் தருவதாகவும், கல்விக்கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட பிற செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அஸ்ராகர்க் உறுதியளித்துள்ளார்.

இதேபோல் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் மற்றும் சில தனிநபர்களும் மணிமாறனுக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

இது குறித்து மாணவர் மணிமாறன் கூறுகையில், "உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி. எஸ்.பி. முயற்சியில் எனக்கு வெளியூரில் சீட் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். தற்போது என் குடும்பம் உள்ள சூழ்நிலையில், குடும்பத்தினரோடு இருந்து கொண்டு படிப்பதுதான் நன்றாக இருக்கும். வெளியூரில் சேர்ந்தால், என்னால் வெல்டிங் வேலை செய்து கொண்டே படிக்க முடியாது. மேலும் தந்தைக்கு உதவமுடியாமல் போவதுடன், குடும்பத்தையும் கவனிக்க முடியாது. எனவே கவுன்சலிங் மூலம் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை அனுமதி கிடைக்குமா என எதிர்பார்த்து வருகிறேன். ஆனால் கட்-ஆப் மதிப்பெண் 192 மட்டுமே உள்ளதால் அது சாத்தியமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் முயன்று வருகிறேன். அப்படி கிடைக்காவிட்டால், பிறர் உதவியின்பேரில் கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டியதுதான்' என்றார்.

காங்கிரசு வாரணாசி வேட்பாளர் அஜய் ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது !!!!

இன்று கடைசி கட்ட தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் வாரணாசியில் காங்கிரசு சார்பாக போட்டியிடும் அஜய் ராய் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது .

அஜய் ராய் தன் குடும்பதுடன் ராம்காந்த் நகரில் வாக்களிக்க வந்தபோது அவரது உடையில் காங்கிரசின் கை சின்னத்தைக் குத்தி இருந்தார் . இதை பாஜக மற்று ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கடுமையாக எதிர்த்தனர் . இதனால் அங்கிருந்த சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் தேர்தல் ஆனையத்திற்கு அறிக்கை அனுப்பினார் . இதனை தொடர்ந்து அஜய் ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .

அந்த சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் , நாம் யாவரும் அறிந்த தமிழகத்தின் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் அவர்கள் .

இதைப் போல பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது .

1000 நாட்களை எட்டிய அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்

இடிந்தகரையில் தொடர் போராட்டம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக அறவழியில் நடக்கும் இந்த போராட்டம் நேற்று 1000-வது நாளை எட்டியது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் பேரியக்கத்தின் 1000-வது நாளில் போராட்டக்காரர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பியவாறு தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்த்துக் கொண்டிருந்தனர்.

கூடங்குளம் அணுஉலை முற்றிலுமாக மூடப்படும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார் அணுசக்திக்கு எதிரான மக்கள் பேரியக்கத்தின் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான எஸ்.பி.உதயகுமார்.

ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்ட 1000 மெ.வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அணுஉலைகளில் முதல் அணுஉலையில் இதுவரை 900 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2011 ஆகஸ்ட்டில் இடிந்தகரையில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம் துவங்கியதில் இருந்து அரசியல் கட்சிகளின் ஆதரவு போராட்டத்திற்கு பெருகி வந்தது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தன.

வாரணாசியில் எனக்கும் மோடிக்கும் இடையேதான் போட்டி, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை போட்டியாகவே கருதவில்லை: கேஜ்ரிவால்


உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராயும் போட்டியிடுகின்றனர்.

மோடிக்கும், கேஜ்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இதனால், இத்தொகுதி நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று வாரணாசி தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்கு அருகில் செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால்: " தேர்தலில் மக்கள் பெருமளவில் வந்து வாக்களிக்க வேண்டும். வாரணாசி தொகுதியில் எனக்கும் மோடிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை ஒரு போட்டியாகவே கருதவில்லை" என்றார்.

வாரணாசி போட்டியில் அஜய் ராய்க்கு பங்கு இல்லை என கேஜ்ரிவால் கூறியிருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்: "களத்தில் இருக்கும் வேட்பாளர்களில் நான் மட்டும் தான் இம்மண்ணின் மைந்தன். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தெரியும்; மக்கள் தங்களுக்கு பணிபுரிய ஒரு உள்ளூர் வாசியையே தேர்வு செய்வார்கள்" என்று கூறினார்.

போரில் உயிரிழந்த விடுதலை புலிகளுக்கு பொது இடங்களில் நினைவஞ்சலி செலுத்த‌ இலங்கை அரசு தடை


இலங்கை உள்நாட்டுப் போரில் உயிரிழ‌ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொது இடங் களில் நினைவஞ்சலி செலுத்த இலங்கை அரசு தடை விதித்துள் ளது. இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப் பட்ட அமைப்பாகவே நீடிக்கிறது. ஆகவே, உள் நாட்டுப்போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்து வதை பொதுநிகழ்ச்சியாக அனுசரிக்க முடியாது. அது தடை செய்யப்படுகிறது. தனிப் பட்ட நபர்கள், போரில் உயிர் துறந்த தங்களின் அன்புக்குரியவர் களுக்கு மத சம்பிரதாய சடங்கு களின் அடிப்படையில் அஞ்சலி செலுத்தலாம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, உள்நாட் டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைக் கொண்டாடும் விதத்தில், கொழும்பு மத்தாராவில் மே 18ம் தேதி ராணுவ வெற்றி அணிவகுப்பு நடத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி 3 லட்ச கிலோ மீட்டர் பயணம் செய்து பிரச்சாரம், 5827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று சாதனை

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக கடந்த ஆண்டு அறிவித்ததை அடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளி யாவதற்கு முன்பே அவர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பிரச்சாரம் மேற் கொண்டார்.

அதாவது, ஹரியாணாவின் ரெவாரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணியில் தொடங்கிய இவரது பிரச்சார பயணம் உத்தரப் பிரதேச மாநிலம் பலியாவில் சனிக்கிழமை முடிவுக்கு வந்தது. இதுவரை 25 மாநிலங்களில் நடைபெற்ற 437 பொதுக்கூட்டங்கள், 3-டி தொழில் நுட்ப உதவியுடன் நடைபெற்ற 1,350 பேரணிகளில் மோடி பங்கேற் றுள்ளார். இதுதவிர, நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சுமார் 4,000 (தேநீர் கடை) குழுவினருடன் வீடியோ கான் பரன்ஸ் மூலம் மோடி கலந்துரை யாடி உள்ளார். மேலும், தான் போட்டியிடும் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதி களில் நடைபெற்ற பிரம்மாண்ட மான சாலைப் பேரணிகளில் பங்கேற்றுள்ளார் மோடி. தவிர, தேர்தலுக்கு முன்பு 21 மாநிலங் களில் 38 பேரணிகளில் பங்கேற்றுள் ளார்.

இதன்மூலம், 5 கோடி முதல் 10 கோடி மக்களை மோடி சந்தித்துள்ளதாகவும் இந்திய தேர்தல் வரலாற்றில் அதிகப்படி யான மக்களை சந்தித்த தலைவர் களில் ஒருவராக உருவெடுத்துள் ளதாகவும் பாஜக கூறியுள்ளது. அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக் கும் முக்கிய பகுதியான உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 பொதுக்கூட்டங்களில் மோடி உரையாற்றியுள்ளார்.

கர்நாடகாவில் 4, பிஹாரில் 3, தமிழகம், மகாராஷ்டிரா, அசாம், ஒடிசாவில் தலா 2 மற்ற மாநிலங்களில் தலா ஒரு பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்றுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

23 வயது பெண்ணை மூன்று வாலிபர்கள் கற்பழிக்க முற்பட்டு, தீயிலிட்டு சென்றனர்


மத்திய பிரதேச மாநிலத்தில், 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது அவர் வகுப்பில் படிக்கும் அங்கித், விஷால் மற்றும் அக் ஷய் என்ற மூன்று வாலிபர்கள், வீடு புகுந்து அவரை தீயிலிட்டனர். அவரது உடல் தீயில் 96%  சேதம் அடைந்ததால், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மூவரின் கற்பழிப்பு முயற்சிக்கு அவர் இணங்க மறுத்ததால், அவரை எரித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

பிரேத பரிசோதனையில், அந்த பெண்ணின் பிறப்புறுப்பு காயம் அடைந்திருந்ததாகவும், அதை வைத்து பார்க்கும் போது, அவர் எரிக்கப்படுவதற்கு முன்பு கற்பழிக்க பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அங்கித், விஷால் மற்றும் அக் ஷய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இன்று ஒன்பதாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் !!!

இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது . இன்றைய தேர்தல் 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது . இன்று மட்டும் 606 வேட்பாளர்களின் தலைவிதி நிர்ணயமாக இருக்கிறது .

இன்றைய கடைசி கட்ட தேர்தல் பீகாரில் 6 தொகுதியிலும் , உத்தரபிரதேசத்தில் 18 தொகுதியிலும் , மேற்கு வங்கத்தில் 17 தொகுதியிலும் நடைபெற இருக்கிறது .


இன்றைய நட்சத்திர வேட்பாளர்கள் :
மோடி மற்றும் கெஜ்ரிவால் மற்றும் அஜய் ராய் (வாரணாசி )

முலாயம் சிங் யாதவ் (அசாம்கார்)
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media