BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 27 March 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா உட்பட 12 நாடுகள் தவிர்த்தது, 23 நாடுகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேறியது

 

ஜெனிவாவில் இன்று இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது நடந்த வாக்குப் பதிவை இந்தியா உட்பட 12 நாடுகள் தவிர்த்தது. ஆனாலும் 23 நாடுகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேறியது.

முதல் முறை இத்தகைய தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா தவிர்த்துள்ளது. 2009, 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில், இலங்கை போர் குற்றங்கள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூன்றுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தது.

இந்த முறை தீர்மானத்தை தவிர்த்ததைக் குறித்து, ஐ.நாவுக்கான இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா கூறியதாவது:

"இந்தத் தீர்மானம் ஒழுங்கற்று, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருப்பதால் இந்தியா இதை தவிர்க்கிறது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் உயர் ஆணையர் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து தலையிட்டு, விசாரணை நடத்தி, கண்காணிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த தீர்மானங்களைப் போல் இல்லாமல், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் உள்ளது.

இறையாண்மையில் தலையிடும் விதமாக இருக்கும் அணுகுமுறை எதிர்வினையை அளிக்கும் என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. சர்வதேச நாடுகள் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மற்று ஒத்துழைப்பு என்கிற அடிப்படை கொள்கையிலிருந்து விலகுவது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதித்து, பாதுகாக்க மனித உரிமைக் கவுன்சில் எடுத்து வரும் முயற்சிகளை குறைந்த்து மதிப்பிடுவதாகவே இருக்கும்" என்று அவர் கூறினார்.

ஜெ.ஆட்சிக்கு 'ஓவர்' என்று சொல்லுங்கள்-ஸ்டாலின்


அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோவை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி ஏற்பட வேண்டும். நாங்கள் தேர்தலுக்கு மட்டும் வந்து செல்லவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டையும் மக்களைப் பற்றியும் கருணாநிதி கவலைப்படுவார். ஆனால், ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்க வருவார். அதுவும் ஹெலிகாப்டரில் வருவார்.

அவர் வானத்தில் செல்லும் போது போலீஸார் கீழே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். "ஹெலிகாப்டரில் அம்மா புறப்பட்டு விட்டார் ஓவர்", "ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டார் ஓவர்" என போலீஸார் வயர்லெஸ்சில் கூறுவார் கள். அவரது ஆட்சிக்கு மக்கள் "ஓவர்" சொல்ல வேண்டும். நான் உங்களிடம் ஓட்டு கேட்க உரிமையோடு வந்திருக்கிறேன். தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2006-11-ம் ஆண்டில் பல்வேறு திட்டங்கள் அரக்கோணத்தில் செயல்படுத்தப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எந்த‌ திட்டங்களும் செயல்படுத்த வில்லை. திமுக ஆட்சியில் அரக்கோணம் நகராட்சியில் தொடங்கிய பாதாள சாக்கடை திட்டம் கிடப் பில் போடப்பட்டுள்ளது.

ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியலை நாங்கள் கேட்டோம், அவர்கள் தரவில்லை-சிதம்பரம்


கறுப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசிடம் தான் (சிதம்பரம்) கோரியதாகவும், ஆனால் அந்த நாடு, அப்பட்டியலை அளிக்க மறுத்துவிட்டதாகவும் சிதம்பரம் தற்போது நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து சிதம்பரம் கூறுகையில், கடந்த 2009ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து வெளியுறவு துறையிடம் கறுப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை கேட்டு கடிதம் எழுதியதாகவும், அதனை ஏற்றுக் கொள்ளாத சுவிட்சர்லாந்து, இந்தியர்களின் பட்டியலை வெளியிட மறுத்ததோடு, இந்தியாவின் இரட்டை வரி விதிப்பு முறையை தங்கள் நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்று சுவிட்சர்லாந்து பதில் அளித்ததாக‌ கூறினார்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில், சுவிட்சர்லாந்தின் பொது நிதி கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கருப்புப் பண விவகாரத்தை வெளிக்கொண்டுவர வற்புறுத்தப் போவதாக ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 

பிசிசிஐ இடைக்கால தலைவராக கவாஸ்கர்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது


ஐபிஎல் முறைகேடு விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து என்.சீனிவாசன் தாமாகவே பதவி விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. பதவி விலக தவறினால் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு எச்சரித்தது. இதை தொடர்ந்து சீனிவாசன் பதவி விலகியதை அடுத்து, ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரை பிசிசிஐ தற்காலிக தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அதே போல் ஐபிஎல் 7 போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம் பெறக்கூடாது என நீதிபதிகள் பரிந்துரைத்தனர். மேலும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய எந்த ஒரு நபரும் பிசிசிஐ-ல் அங்கம் வகிக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

 ஐபிஎல் சூதாட்ட சர்சை விவகாரத்தில் முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ இன்று உறுதியளித்துள்ளது. இருப்பினும், கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி, தீவிர பரிசீலனைக்குப் பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி அறிக்கையின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ உறுதியளித்துள்ளது.

நண்பர்கள், எதிரிகள் என யார் உங்கள் அருகில் வந்தாலும், அலெர்ட் செய்யும் 'ஆப்'




கிரிஸ் பேக்கர் மற்றும் ப்ரையன் மூர் என்ற இருவர், க்ளோக் என்ற ஸ்மார்ட் போனுக்கான அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். உங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் வேண்டாதவர்கள், அல்லது பார்க்க விரும்புவர்கள், பார்க்க வேண்டாம் என நினைப்பவர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து இரு மைல்கள் தூரத்திற்குள் வரும்போது,  இந்த க்ளோக் அப்ளிகேஷனில் உள்ள மேப்  உங்களுக்கு தெரியப்படுத்தும். இன்ஸ்டாகிராமில் ஒருவர் தெரிவிக்கும் 'லொகேஷன்' தகவலையே க்ளோக் பயன்படுத்துகிறது. அதனால், இன்ஸ்டாகிராமில், உங்களை யாராவது ப்ளாக் செய்து இருந்தால், அவர்களை பற்றி தகவல் உங்களுக்கு தெரிய வராது.

எதிர்பார்த்தது போலவே, இந்த க்ளோக் அப்ளிகேஷன் வெற்றியை அடைந்திருக்கிறது என கிரிஸ் பேக்கர் தெரிவித்து இருக்கிறார்.

ஜெ.வின் சொத்து பட்டியலை வெளியிட்ட கருணாநிதி


நேற்று சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா சொத்து பற்றிய விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு ஒரு ரூபாய்தான் சம்பளம் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகாத அவரது வழக்கறிஞருக்கு, அவரது ஒருநாள் சம்பளமான ரூ.65000 அபராதமாக  விதிக்கப்பட்டுள்ளதை கேள்விப்படும் போது ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் எவ்வளவு என்று அனைவருமே தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வழக்கறிஞரே அம்மையாரின் உண்மையான சொத்துக்குவிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் ஜெயலலிதாவின் சொத்துக்களாக வாலாஜாபாத்தில் 600 ஏக்கர், சிறுதாவூரில் 25 ஏக்கரில் பங்களா, நீலாங்கரையில் 2 ஏக்கர், கோடநாட்டில் 800 ஏக்கர், காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் 1190 ஏக்கர் ஸ்ரீவைகுண்டத்தில் 200 ஏக்கர், மற்றும் ஹைதராபாத்தில் 200 ஏக்கரில் தோட்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆனால் ஜெயலலிதாவோ தன்னை ஒன்றுமில்லாத ஏழை எனவும் பச்சைக்குழந்தை போலவும் தன்னை கருதி பிரச்சாரம் செய்து வருவகிறார்,” என்று கருணாநிதி பேசினார்.

தேர்தலில் என் ஆதரவு யாருக்கும் கிடையாது-அழகிரி


மு.க.அழகிரி,  நேற்று பழம்பெரும் திமுக பிரமுகர் எம்.கே.ஏழுமலையைச் சந்திக்க ஆரணிக்கு வந்தார். அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.கே. ஏழுமலையை அவரது இல்லத்தில் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது:

"திமுகவிலிருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. நான் இப்போதும் திமுகவில்தான் இருக்கிறேன். தற்காலிக நீக்கம் மற்றும் நீக்கம் செய்யும் முன் எனக்கு நோட்டீஸ் ஏதும் வழங்கவில்லை. எனக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கலைஞரிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள். தலைமையின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். யார் உள்ளே, யார் வெளியே என்பது ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.

வரும் தேர்தலில், என்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது, புதிய கட்சி எதுவும் தொடங்குவதாகவும் இல்லை. ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும், சுற்றுப்பயணம் செய்து எனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறேன். அதன் பின்னர் முடிவை அறிவிப்பேன். அதன் தொடர்ச்சியாகத்தான் ஆரணியில் பழம்பெரும் திமுக பிரமுகரும், எனது ஆதரவாளர் முருகனின் தந்தையுமான எம்.கே.ஏழுமலையைச் சந்திக்க வந்துள்ளேன்."

இவ்வாறு மு.க.அழகிரி கூறியிருந்தார்.

2004 ல் அதிமுகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்தது போல இப்போதும் விரட்டி அடிக்க வேண்டும்.

விழுப்புரம் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து நேற்று மாலை விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நமது ஒரே குறிக்கோள் அதிமுக, திமுக வெற்றிபெறக்கூடாது என்பது தான். இம்மாவட்டத்தில் கரும்பு அதிகம். கரும்பு இனிக்கிறது. ஆனால் விவசாயியின் வாழ்க்கை கசக்கிறது. இம்மாவட்டத்தில் பொன்முடியும், சி.வி.சண்முகமும் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் இம்மாவட்டம் வளர்ச்சி பெறவில்லை. அவர்கள் வளர்ச்சி பெற்று விட்டார்கள்.

30 ஆயிரம் நகைத் தொழிலாளர்கள் இம்மாவட்டத்தில் உள்ளனர். தமிழகத்தில் அதிக நகைத் தொழிலாளர்கள் கோவை மாவட்டத்திலும், அடுத்து விழுப்புரத்திலும் உள்ளனர். சிதம்பரம் அவரது தொகுதிக்கு மட்டும் ஸ்டார் ஸ்வர்ணா திட்டத்தை அமல்படுத்தினார்.

தேர்வு எழுதும் மாணவர்கள் படிக்கவே முடியவில்லை. மின்சாரமே இல்லை என்கிறார்கள். 2012-ல் நத்தம் விஸ்வநாதன் வானத்தில்தான் மின்வெட்டு இருக்கும் என்றார். அதனால்தான் அதிமுக வேட்பாளர்களை ஆங்காங்கு பொதுமக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ண யிக்கும் ஜெயலலிதா பெட்ரோல் டீசல் விலையை இதற்கு மேல் ஏற்றவிடமாட்டேன் என இலக்கு நிர்ணயிக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் தொழில், விவசாயம், கல்வி வளர்ச்சி இல்லாமல் மிகவும் பின் தங்கியுள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.தற்போது எல்லா இடத்திலும் வாகன சோதனை நடக்கிறது.

வானத்தில் ஹெலிகாப்டரில் செல்லும் ஜெயலலிதாவை எப்படி சோதனை நடத்துவது. கடிதப் புயல் கலைஞர் என்றால் ஜெயலலிதா கடித சூறாவளி என்று வைத்துக்கொள்ளலாம். எதற்கு எடுத்தாலும் கடிதம் எழுதுவது. ஏன் ஒருமுறை நேரில் சென்று பிரதமரை சந்திக்கலாமே? நானாவது பிரதமரைச் சந்தித்தேன்.

தமிழ்மக்களை வாழவைக்கவே இக்கூட்டணி. 2004 ல் அதிமுகவிற்கு ஒரு சீட் கூட கிடைக்காமல் செய்தது போல இப்போதும் விரட்டி அடிக்க வேண்டும்.

இவ்வாறு விஜய்காந்த் பேசினார்.

காங்கிரஸ் மனம் திருந்தினால், பொது மன்னிப்பு கொடுத்து ஆதரிப்போம்-கருணாநிதி


திமுக தலைவர் கருணாநிதி, தனது தேர்தல் பிரச்சாரத்தை சென்னையில் நேற்று தொடங்கினார். சிந்தாதிரிப் பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சென்னையின் மூன்று தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து கருணாநிதி பேசியதாவது:

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த விவரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பட்டியலிட்டுள்ளார். (ஜெயலலி தாவின் சொத்துப் பட்டியலை வாசித்தார்). ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறியவருக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது. ஆனால் அவர் எங்களைப் பார்த்து ஊழல் என்கிறார்.
காங்கிரஸ் மனம் திருந்தினால், பொது மன்னிப்பு கொடுத்து ஆதரிப்போம்-கருணாநிதி

சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை வாங்கிக் கொடுத்தேன். அதற்காக, வரும் ஆண்டில் சுதந்திர தினத்தன்று ஜெயலலிதா தேசியக் கொடியேற்றாமல் இருப்பாரா? அதுவரை அவரது ஆட்சி இருக்குமா என்று தெரியவில்லை. நாங்கள் போட்ட சாலையில், பாலத்தில்தான் அவர் தினமும் போயஸ் கார்டனிலிருந்து கோட்டைக்கு செல்கிறார்.

பல சைபர்களைப் போட்டு, ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னார்கள். இப்போது ஒவ்வொரு சைபராக விலகுகிறது. காங்கிரஸார் திமுகவை பழிவாங்கும் வகையில் நடந்து கொண்டனர். யாரைப் பழிவாங் கலாம் என்றுதான் அலைந்தார்கள். நன்றியை மறந்து விட்டு, நன்றி என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு நடந்து கொண்டனர். அதனால்தான் இன்றைக்கு தமிழகத்திலும் சரி, வேறு மாநிலத்திலும் சரி காங்கிரஸ் கட்சி அதாள பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

இந்த உலகத்தில் நல்ல முறையில் நல்லபடியாக வாழ வேண்டும் என்றால் நன்றி உணர்வு இருக்க வேண்டும். நன்றி உணர்வு இல்லாமல், கடந்த காலத்தில் நமக்கு கைதூக்கி விட்டவர்கள் யார் என்று எண்ணிப் பார்க்காமல், திமுக தோழர்களை, செயல்வீரர்களை நோக்கி காங்கிரஸார் நடவடிக்கை எடுத்ததால் இப்போது அனுபவிக் கிறார்கள்.

அப்படி அனுபவித்தாலும் அவர்களுக்கு நம்பிக்கையுடன் ஒன்று சொல்கிறேன். இதே காங்கிரஸார் நாளைக்கு மனம் வருந்தி, நாங்கள் மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், மதவெறி கொண்டவர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால், போனால் போகட்டும் என்று அவர்களை திமுக ஆதரிக்கும். அவர்கள் செய்த தீமைகளை பொறுத்துக் கொண்டு, இதுவரை செய்ததை எண்ணிப்பாராமல், அவர்களுக்கு பொது மன்னிப்பு தருவது என்ற முறையில் திமுக நடக்கும்.

அதே நேரத்தில் நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும், மனைவி யாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் அவர்களை திமுக மன்னிக்காது. அவர்களுடைய தவறுகளை மறவாது. எனக்கு கொள்கைதான் முக்கியம். குழந்தை குட்டிகளல்ல.

நான் பொதுவாழ்வுக்கு வந்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்வேனோ.. அதற்குள் தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டியவைகளை செய்து விட்டுத்தான் கண் மூடுவேன். அதுவரை பெரியார், அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை பேணி நடக்க, இந்த இயக்கத்தின் வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media