BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 23 May 2014

மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சே விடுத்த அழைப்பை நிராகரித்த விக்னேஷ்வரன்


நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பினை வடமாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரிஸ்க்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

"இலங்கையில் வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள், வடமாகாண சபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகள் இவற்றின் மத்தியில் இலங்கை அதிபரின் அழைப்பு வரவேற்கத்தக்கதே. எனினும் தங்களின் அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன். அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் இலங்கை அரசுக்கும், வடமாகாணத்திற்குமிடையில் மிக வலுவான உறவு இருப்பதாக இது எடுத்துக்காட்டக் கூடும்.

மேலும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடனே வாழ செய்து வருகின்றார்கள். வடமாகாண சபையைப் பொறுத்த வரையில் அதன் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலையாகும்.

இவ்வாறான தங்களின் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். எனினும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.

உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் மேலும் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால் தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் நடைமுறைபடுத்தப்படுவதோடு, எமது மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கேஜ்ரிவாலை ஜூன் 6 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு


'இந்தியாவின் மோசமான ஊழல் அரசியல்வாதிகள்' என்ற பட்டியலை அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த ஜனவரி 31-ம் தேதி வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி பெயரும் இடம்பெற்றிருந்தது. கேஜ்ரிவால் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கூறி அவர் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி கேஜ்ரிவாலுக்கு டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க ரூ.10 ஆயிரத்துக்கு இணையான பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு கேஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்த நிலையில், மே 22-ம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை நடைபெற்ற போது, மீண்டும் கேஜ்ரிவால் ரூ.10 ஆயிரத்துக்கு இணையான பிணைப் பத்திரத்தை தாக்கல் செய்ய மறுத்தார். இதனால், அவரை ஜூன் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடிக்க டெல்லி பெருநகர நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், அமிதாப்பிற்கு அழைப்பு


நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதீபா பாட்டீல்,  அப்துல் கலாம், நடிகர் சல்மான் கான், பாடகி லதா மங்கேஷ்கர்ஆகியோருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் இவர்களுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு சுமார் 2,500 பேர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அனைத்து நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற‌து. இவர்களது எண்ணிக்கை 777.  பதவியேற்கும் பிரதமர் மோடி 20 விருந்தாளிகளையும், பதவியேற்கும் அமைச்சர்கள் தலா 4 விருந்தாளிகளை அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல் குறித்து இந்திய தூதரிடம் பேசிய மோடி


 ஆப்கானிஸ்தானில் உள்ள ஹீராட் நகரில் இந்திய தூதரக அலுவலகத்தில், இன்று காலை நான்கு தீவிரவாதிகள் தூதரக அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்த இந்திய திபெத்திய எல்லை படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தினர். உடனடியாக ஆப்கானிஸ்தான் ராணுவமும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரிடம் பேசினார். அப்போது அங்குள்ள நிலை குறித்து அவர் விசாரித்தார். ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று மோடி உறுதி அளித்தார் . ஆப்கானில் உள்ள தற்போதைய நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு தூக்கில் தொங்கிய நபர்


கேரள மாநிலத்தை சேர்ந்த அபிலாஷ்(32) என்கிறவர் முகநூலில் வினோதமான விஷயங்களை படம் பிடித்து காட்டுவதில் அலாதி விருப்பம் கொண்டவர். நேற்று முன் தினம், வீட்டில் தூக்கு மாட்டுவது போல் செல்போனில் வீடியோ எடுத்து அதை முகநூலில் பதிவிட முயற்சி செய்தார்.

இதற்காக தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் செல்போனில் வீடியோவை ஆன் செய்து விட்டு, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டினார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேர் நகர்ந்தது. கயிறு இறுக்கி அபிலாஷ் மூர்ச்சையடங்கிபோனார்.

அவரது செல்போன் பழுதாகி இருப்பதால் அதை சீர் செய்யும் பணி நடைபெறுகிறது. அதன் பின்னர் தான் நடந்தவற்றின் முழு விவரங்களும் தெரிய வரும். அபிலாஷ் ஏற்கெனவே இதே போல் ஒருமுறை முகநூலில் பதிவிட்டிருந்தார். அதீத ஆர்வத்துக்கு தற்போது தன்னையே பலியாக்கியுள்ளார்.

இதே போல், திருச்சூரில், எட்வின் என்கிற 10ம் வகுப்பு மாணவர் முகநூலில் பதிவு செய்ய தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, மின்னல் வேகத்தில் வந்த ரயிலில் அடிபட்டு எட்வின் தலை துண்டானது. இதுகுறித்து, திருச்சூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமருக்கு பிரியாணி பரிமாறுவார் நரேந்திர மோடி: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கிண்டல்


கடந்த மார்ச் மாத இறுதியில் பாக்பத் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி, “கடந்த 2013-ல் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இரு இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம் கோழி பிரியாணி வழங்கி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது” எனக் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு வந்தால், அவருக்கு நரேந்திர மோடி கோழி பிரியாணி பரிமாறுவார் என நம்பலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார். அதே சமயம், மோடியின் சமரச நோக்குடைய உரையால் தான் மிகவும் கவரப்பட்டதாகவும் தரூர்,  ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு உங்களை வேண்டுகிறேன்.- மோடிக்கு வைகோ எழுதிய உருக்கமான கடிதம்


பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

'உங்கள் மகத்தான தலைமையின்கீழ், நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தின் ஒளிக்கதிர்கள் உலகெங்கும் பரவி உள்ளன. இந்த வேளையில் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குப் பொன்னானது. எனினும், உங்களுடைய விலைமதிக்க முடியாத நேரத்தை, கனத்த இருதயத்தோடு நான் எழுதி உள்ள கீழ்காணும் வரிகளைப் படிப்பதற்கு ஒதுக்கிட வேண்டுகிறேன்.

உங்கள் பதவிப் பிரமாண விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அழைக்கப்பட்டதாக அறிந்தவுடன், என் தலையில் இடி விழுந்ததுபோல் வேதனையுற்றேன்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை, ஆயுதம் ஏந்தாத அப்பாவிகளை, குழந்தைகள், பெண்கள், மூத்தோர் உள்ளிட்ட தமிழ் மக்களைக் கொன்று குவித்த மன்னிக்க முடியாத இனப்படுகொலையை நடத்தியவர்தான் மகிந்த ராஜபக்சே.

இந்த உண்மை, அசைக்க முடியாத சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பு ஆயத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோரமான படுகொலைகளை, ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று உறுப்பினர் குழு அறிக்கையாகத் தந்தது. எங்கள் தாய்மார்கள், சகோதரிகள், சிங்கள ராணுவக் கூட்டத்தினரால் கற்பழிக்கப்பட்டு, வெட்டிக் கொல்லப்பட்ட காட்சிகளை, லண்டனில் சேனல் 4 தொலைக்காட்சி ஆதாரங்களோடு காணொளிகளாக வெளியிட்டது. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் காணொளிக் காட்சிகளைப் பார்த்துக் கலங்கி அழுதார்கள்.

ஈழத்தமிழ் இனப்படுகொலையைச் சிங்கள அரசு நடத்துவதற்கு, சோனியா காந்தி இயக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முப்படை ஆயுதங்களைத் தந்து உதவியது. இந்தியக் கடற்படை, இலங்கைக் கடற்படையோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, பின்னால் இருந்து போரை இயக்கியது.

ஈழத்தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகும்.

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் அண்மையில் நடந்தது. அதில், அமெரிக்காவும், பிரிட்டனும் மற்றும் மூன்று நாடுகளும் தீர்மானம் கொண்டு வந்து, சிங்கள ராணுவம் நடத்திய படுகொலைகள் குறித்து, சுதந்திரமான சர்வதேச அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது.

ஆனால், அந்தத் தீர்மானத்தை எதிர்த்து, பாகிஸ்தானோடும், சீனாவோடும் சேர்ந்து கொண்டு இந்திய அரசு, வாக்கு அளித்துத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது.

இந்திய வெளி விவகாரத்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்துகொண்டு, ஈழத்தமிழர் பிரச்சினையில் துரோகம் இழைத்த அதே அதிகாரிகள்தான், வரப்போகின்ற உங்கள் அரசுக்கும் தவறான ஆலோசனைகளைத் தந்து, ராஜபக்சேவை பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கச் செய்து உள்ளனர்.

நியாயப்படுத்த முடியாத ஒரு விவாதத்தைச் சிலர் முன்வைக்கிறார்கள். இலங்கை அரசோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளாமல், எப்படி ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்?

இது முட்டாள்தனமான வாதம் ஆகும். இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்கள் 578 பேர், சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

லண்டன் மாநகரில், லிபியத் தூதரகத்தின் பாதுகாப்புப் படையினர், தவறுதலாகச் சுட்டதில் ஒரு பிரிட்டிஷ் போலீஸ் பெண்மணி கொல்லப்பட்டதற்காக, சில மணி நேரத்திற்கு உள்ளாக, லிபியாவுடன் தூதரக உறவுகளை இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் துண்டித்தார்.

பாகிஸ்தான் பிரச்சினையோடு இலங்கைப் பிரச்சினையை இணைத்துச் சிலர் பேசுகிறார்கள். இதுவும் தவறானது. இரண்டு பிரச்சினைகளும் முற்றிலும் வேறுபட்டவை. நான்கு யுத்தங்களில் பாகிஸ்தானோடு நாம் மோதி இருக்கின்றோம். பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட தீவிரவாதத்தால், இந்தியாவில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால், பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறிச் சென்ற இந்திய மீனவர்கள் ஒருவரைக்கூட பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொன்றது இல்லை.

இந்திய மக்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள, பாகிஸ்தானில் வாழும் மக்களை ஐம்பதுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றது இல்லை.

ஆனால், தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, சிங்கள அரசு ஈவு இரக்கம் இல்லாமல் படுகொலை செய்தது. தமிழ் இனத்தையே அழிப்பது என்ற கொலைவெறியுடன் ராணுவத்தை ஏவிப் படுகொலை செய்தது.

ஈழத்தமிழர் படுகொலையில் சிங்கள அரசுக்கு இந்தியா உதவக்கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டில் 19 தமிழ் இளைஞர்கள் தீக்குளித்து மரண நெருப்பை அணைத்து மடிந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் புத்தர் விழாவுக்கு மகிந்த ராஜபக்சே வந்தபோது, அதனை எதிர்ப்பதற்காக நானும் என் சகாக்களும் தோழர்களும் சாஞ்சிக்கே அணிவகுத்துச் சென்று போராடினோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

ராஜபக்சே டெல்லிக்கு வரப்போவதாக அறிவிப்பு வந்தவுடன் டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட என் தலைமையில் போராடிக் கைது செய்யப்பட்டோம். திருப்பதிக்கு ராஜபக்சே வந்தபோது அதை எதிர்த்துத் தமிழர்கள் போராடிக் கைதாயினர். லண்டனுக்கு ராஜபக்சே வந்தபோது அங்குள்ள தமிழர்கள் போராடி விரட்டி அடித்தனர்.

காமன்வெல்த் அமைப்பில் செயலாளராக இருக்கின்ற கமலேஷ் சர்மா என்பவரைப் பயன்படுத்தி இந்திய அரசு, ஒரு சதித்திட்டம் வகுத்து, இலங்கை அதிபர் ராஜபக்சேவை காமன்வெல்த் நாடுகளின் அரசுகள் கூட்டமைப்புக்குத் தலைவர் ஆக்கியது.

ஆனால், கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டுக்குத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் செல்லவில்லை. தமிழகத்தில் மாணவர்களும், கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ் மக்களும், எதிர்ப்புக் காட்டியதன் விளைவாக, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களும் கொழும்பு மாநாட்டுக்குச் செல்லவில்லை.

மிக முக்கியமான ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1998 ஆம் ஆண்டிலும், 1999 ஆம் ஆண்டிலும், வாஜ்பாய் அவர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை.

2004 ஆம் ஆண்டிலும், 2009 ஆம் ஆண்டிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்பு விழாவுக்கும் ராஜபக்சே அழைக்கப்படவில்லை.

உலகெங்கும் உள்ள தமிழர்களின் வேதனைக் கூக்குரலும், எங்கள் தமிழ்த் தாய்மார்கள், சகோதரிகளின் அழுகையும், விம்மலும், உங்களிடம் மன்றாடிக் கேட்க என்னைத் தூண்டுகிறது. எங்கள் தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடுகின்ற வகையில், உங்கள் பதவி ஏற்பு விழாவில் மகிந்த ராஜபக்சே பங்கு ஏற்க அனுமதிக்காதீர்கள்.

பொங்கி வரும் கண்ணீரோடு, கும்பிட்ட கரங்களோடு உங்களை வேண்டுகிறேன். பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கு ஏற்க விடாமல் தடுத்து, தமிழர்களுக்கு ஆறுதலான நம்பிக்கையைத் தாருங்கள் என்று தரணியெங்கும் உள்ள தமிழர்கள் சார்பில் எனது பணிவான வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை-பாஜக‌

பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

"மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளதற்கு எழும் ஆட்சேபங்களை பாஜக நிராகரிக்கிறது.

சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு ஜனநாயகத்தின் மகிழ்ச்சிமிகு கொண்டாட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கானதாகும்.இந்த கண்ணோட்டத்தில்தான் இந்த அழைப்பை நாம் கருதவேண்டும். புதிய பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சியில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கான பொறுப்புமிக்க அடையாளமாகவே சார்க் நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நாம் பார்க்க வேண்டும்.

இந்த உவகை மிக்க நிகழ்ச்சியில் நமது பக்கத்து நாடுகள் பங்கேற்பதை வரவேற்கிறோம்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அவர்களும் காரணத்தை புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை." என்றார் நிர்மலா சீதாராமன்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media