நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. தொழிலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வைகோ கூறுகையில், "மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் இத்தகைய போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது. இனி இதுபோன்ற கோர சம்பவங்கள் நடக்காமல், தொழிலாளர்களின் பாதுகாப்பை என்.எல்.சி. நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி ராஜா குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனைவி மற்றும் இரு குழந்தைகளை கண்ணீர்க் கடலில் மூழ்கடித்துவிட்டு உயிர் பலியான ராஜா குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலுர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர் தொழிலகப் பாதுகாப்பு படையினர் தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். இதனைப்போன்றே தொழிலாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வரலாற்றில் இதுவரை, நடந்திராத இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்வதுடன், தடியடி நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.
"மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நெய்வேலி தொழிலாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிகிறது. எனவே அவர்களை என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து அகற்ற வேண்டும். நிறுவனத்தின் பாதுகாப்புக்கென அந்த நிறுவனமே ஒரு தனி பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டும்.", என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துக் கொண்டார்.