BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 March 2014

மும்பை டிசிஎஸ் பெண் ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் பின்னணி


மும்பையை சேர்ந்த அனுசுயா எஸ்தரின் உடல் அவர் கொலை செய்யப்பட்ட 11 நாட்களுக்கு பிறகு, அழுகிய நிலையில், அவரது பிணம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக, சந்திரா பான் சனா அல்லது சவுக்கியா என்ற 28 வயது நபர் ஒருவனை அம்மாநில போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவன் மீது திருட்டு மற்றும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து நாசிக்கிற்கு எஸ்தர் வந்தடைந்த பின், ர‌யில் நிலையத்தை விட்டு அவர் வெளியேறும்போது அவருக்கு அருகே சவுக்கியா நடந்து சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ம‌து அருந்திவிட்டு யாரிடமாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபடலாம் என எண்ணிக்கொண்டிருந்தபோது அதிகாலை நான்கு மணியளவில் நாசிக் ரயில் நிலையத்தில் தனியாக உட்கார்ந்திருந்த எஸ்தரிடம், அந்தேரியுள்ள உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் விட 300 ரூபாய் கேட்டதுடன், தனது செல்போன் எண்ணையும் அவரிடம் தெரிவித்ததாக போலீசார் நடத்திய விசாரணையின்போது கொலையாளி தெரிவித்தான். ஆனால், தன்னிடம் பைக் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்தர், அதில் ஏற மறுத்ததால், ஆத்திரம் அடைந்து அப்பெண்ணை சாலையின் மறுமுனைக்கு இழுத்துச்சென்று அவரை அடித்து கொன்றதாக அவன் ஒப்புக்கொண்டான்.

உமா மகேஸ்வரி அடுத்து, மும்பையில் டி.சி.எஸ் பெண் ஊழியர் கொடூரமாக கொலை, அழுகிய நிலையில் நெடுஞ்சாலையில் பிணம் கிடந்தது


சென்னை சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் பெண் ஊழியர் உமாமகேஸ்வரி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளே அடங்காத நிலையில், மும்பையிலும் ஒரு டிசிஎஸ் பெண் ஊழியர் எஸ்தர் அனுசுயா அதே போன்று கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

சென்னையில் கொல்லப்பட்ட உமாமகேஸ்வரியின் உடலை போன்றே எஸ்தரின் உடலும் 11 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 28 வயது சந்திரா பான் சனா அல்லது சவுக்கியா என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.  23 வயதான எஸ்தரின் தலையை சாலையில் மோதியும், அவர் அணிந்திருந்த துப்பட்டாவை கொண்டு அவரது கழுத்தை நெறித்து கொன்றதுடன், அவர் வைத்திருந்த கைப்பையையும் பறித்து சென்றுள்ளான், சவுக்கியா.

ரயில் டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு சீட் கிடைத்தால், இனி எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும்


ரயில்வே டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டிற்கு சீட் கிடைத்தால் இனி ரெயில்வே துறை சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று முதல் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாள் ஓன்றுக்கு நான்கு லட்சம் பயணிகள் பயன் பெறுவார்கள் மற்றும் இந்த சேவை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் அரசின் தாரக மந்திரம்: ஜெயலலிதா


இன்று காஞ்சிபுரத்தில் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசிய ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார். அப்பொழுது அவர், இந்தியாவை பாதுகாக்க பாதுகாப்புத்துறையும், முப்படைகளும் வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நமது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினை நவீன மயமாக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளை வீணடித்துவிட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு,  மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் செயல்படுகிறது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதுதான் காங்கிரஸ் அரசின் தாரக மந்திரம். 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என இந்த அரசின் ஊழல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது என்றும் தனது பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா கூறினார்.

வாஸ்து பார்த்து அமைக்கப்பட்ட மேடையில் இன்று முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார் ஜெயலலிதா


நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், த‌னது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் இன்று தொடங்குகிறார். மாலை 4 மணிக்கு நடக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கு ஆதரவு கேட்டுப் பேசுகிறார். கூட்டம் முடிந்ததும், சென்னைக்கு ஹெலிகாப்டரில் திரும்புகிறார்.

காஞ்சி புரத்தில் பிரச்சார மேடை அமைக்க முதலில் காந்தி ரோடில் உள்ள தேரடியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பிரச்சார மேடை வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும் என்று கட்சித் தலைமை விரும்பியது. இதனால் பிரச்சார மேடை, காமராஜர் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ந‌டைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள அனைத்து பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் செல்வார். ஒவ்வொரு முறையும் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பிவிடுவார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல்கட்ட பிரச்சாரத்தை ஜெயலலிதா சங்கரன்கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி நிறைவுசெய்கிறார்.

முகேஷ் அம்பானிக்கு இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடம்



சீனாவைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று  உலக பணக்காரர்களின் பட்டிலை வெளியிட்டுள்ளது. 68 நாடுகளைச் சேர்ந்த 1867 பெரும் கோடீஸ்வரர்களை அவர்களின் சொத்து மதிப்புக்கு ஏற்ப அந்த நிறுவனம் வரிசைப்படுத்தியுள்ளது.

இதில் ரூ.4,08,000 கோடி சொத்து மதிப்புடன் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி சர்வதேச அளவில் 41-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1,08,000 கோடியாகும். இதன்படி இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இந்தியரான லட்சுமி மிட்டல் ரூ.1,02,000 கோடி சொத்து மதிப்புடன் சர்வதேச அளவில் 49-வது இடத்தில் உள்ளார்.

சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ் அதிபர் திலிப் சிங்வி, விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஆகியோர் தலா ரூ.81,000 கோடி சொத்து மதிப்புடன் 77-வது இடத்தில் உள்ளனர்.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பல்லோன்ஜி மிஸ்திரி ரூ.72,000 கோடி சொத்து மதிப்புடன் 93-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 70 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களைவிட அதிகமாகும். உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 481 கோடீஸ்வரர்களும், சீனாவில் 358 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.

பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் 6 நகரங்களில் மும்பையும் இடம் பிடித்துள்ளது. அங்கு 33 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

முகநூலில் போட்டி போட்டு கொண்டு திட்டி கொள்வது, சண்டை போடுவதை விடுங்கள் - ஸ்டாலின்


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இணைந்துள்ளார். இணையதள பிரச்சாரம் குறித்து நேற்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

 மாறுபட்ட கருத்துகளைக் கொண்டு, இணைய தளத்தில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு பதிலளிப்பது, தனிமனித விருப்பு, வெறுப்பு அடிப்படையிலான செயல் பாடுகளேயன்றி, அவை கட்சிப் பணிகள் அல்ல. மாறாக ஊறு விளைவிக்கக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. எனவே, இத்தகைய செயல்பாடுகளை அனைத்து சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் தவிர்க்க வேண்டும். கட்சிக்கும், கருணாநிதிக்கும் பெருமை சேர்க்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மாற்றுக் கட்சியினரும் எதிரிகளும் நம் மீது சுமத்தும் அவதூறுகளை பொடிப்பொடியாக்கிடும் விதத்தில், உண்மைத் தகவல்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிய வேண்டும்.

பெரியார், அண்ணா போன்ற இயக்கத்தின் பெரும் தலைவர்களும் அவர்களுக்குத் துணையாக பாடுபட்ட தலைவர்களும், சமுதாய உயர் வுக்காக பாடுபட்ட வரலாற்று நிகழ்வுகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அரசிடம் வாதாடி, போராடி தமிழகத்துக்கு கருணாநிதி பெற்றுத்தந்த பலன் களையும் குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராஜபக்சே மன்மோகன் சந்திப்பு - ஏன் இப்படி என கருணாநிதி வேதனை


 மூன்று பேரின் விடுதலை குறித்த வழக்கில், குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை, அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்’என்றெல்லாம் கூறியிருக்கிறார். மாநில அரசுதான், இந்தப் பிரச்சினையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.

இலங்கையில் நடந்தது போர்க் குற்றங்கள்தான், அதுகுறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் கேட்கிறான். இந்த நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபரைச் சந்தித்துப் பேசுகிறார் என்பது தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media