BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 11 December 2014

உணவே மருந்து : வாழைத்தண்டின் மருத்துவ குணங்கள்

வாழைத்தண்டு
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால் அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உலகின் மிக ஆபத்தான 8-ஆவது நாடு பாகிஸ்தான்


உலகின் மிக ஆபத்தான 10 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 8-ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் "இன்டெல்சென்டர்' என்று ஆய்வு நிறுவனம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகின் மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இராக் முதலிடத்தில் உள்ளது.
அதனையடுத்து நைஜீரியா இரண்டாவது இடத்திலும், சோமாலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் யேமன், சிரியா, லிபியா, பாகிஸ்தான், எகிப்து, கென்யா ஆகிய நாடுகள் உள்ளன. கிளர்ச்சி அபாயம், தகவல் பரிமாற்றங்கள், விடியோக்கள், புகைப்படங்கள், வன்முறைச் சம்பவங்கள், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சத்யார்த்தி, மலாலாவுக்கு நோபல் பரிசு

நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசஃப்சாயும் புதன்கிழமை பெற்றுக் கொண்டனர். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள சிட்டி அரங்கில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில், சத்யார்த்தி, மலாலா ஆகியோருக்கு நோபல் குழுத் தலைவர் தோர்ப்ஜான் ஜக்லண்ட், பரிசுகளை வழங்கிக் கெளரவித்தார்.

முன்னதாக, விழாவில் அவர் பேசியதாவது: அமைதிக்கான நோபல் பரிசை இரண்டு பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி; மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர். ஒருவர் ஹிந்து; மற்றொருவர் முஸ்லிம். இந்த இரண்டு குறியீடுகளும் இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை, சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று உலகுக்கு உணர்த்துகின்றன. வன்முறைகளையும், அடக்குமுறைகளையும் எந்த மதமும் நியாயப்படுத்தவில்லை. ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பெளத்தம் உள்ளிட்ட மதங்கள், உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றே போதிக்கின்றன. ஆனால், உயிர்களைக் கொல்வதற்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

"பல நோக்கங்களுக்காக நான் இறக்கலாம்; ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஒரு நோக்கமும் இருக்கக் கூடாது' என்ற மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, இவர்கள் இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் தோர்ப்ஜான் ஜக்லண்ட். நோபல் பரிசு: சத்யார்த்தி, மலாலா ஆகிய இருவரும் 175 கிராம் எடையிலான தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டனர். மேலும், 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.82 கோடி) தொகையை அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர். சத்யார்த்தி: விழாவில், நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட பிறகு சத்யார்த்தி (60) பேசியதாவது: தனித்து விடப்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகளின் மெளனத்தின் சாட்சியாக பேசுகிறேன். பல ஆண்டுகால உழைப்புக்குப் பிறகு, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. நாகரிக சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இடமே இல்லை. குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்றே அனைத்து மதங்களும் கூறுகின்றன.

ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமாக வளர வேண்டும் என்பதே எனது கனவாகும். அவர்களின் கனவுகளைச் சிதைப்பதைவிட மிகப்பெரிய வன்முறை எதுவுமில்லை என்றார் சத்யார்த்தி. குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பாற்றவும், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும், தனது பொறியாளர் பணியைத் துறந்தவர் கைலாஷ் சத்யார்த்தி. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி, 35 ஆண்டுகளில், நாடு முழுவதும் பட்டறைகளிலும், தொழிற்சாலைகளிலும் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்து வந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை இவர் மீட்டுள்ளார். மலாலா: பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடி வருபவர் மலாலா யூசஃப்சாய் (17). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பலத்த காயமடைந்து, உயிர் பிழைத்தவர். தலிபான் தாக்குதலுக்குப் பிறகும், குழந்தைகள் உரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் போராடி வருபவர்.

மிகக் குறைந்த வயதிலேயே நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்: 
நோபல் குழு தேர்வு: நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக, இவர்கள் இருவர் பெயரையும் நோபல் பரிசுக் குழு கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தேர்வு செய்து அறிவித்தது.

மோடி வாழ்த்து : நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி, மலாலா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். நோபல் பரிசு வழங்கப்பட்டவுடன் மோடி தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆஸ்லோ நகரில் நோபல் பரிசு வழங்கப்படும் நிகழ்வை, பெரு மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் நாடே கவனித்துக் கொண்டிருக்கிறது. சத்யார்த்திக்கு வாழ்த்துகள். சிறுவயதில் சாதனை புரிந்த மலாலாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.

தருண் விஜய்க்கு தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பினர் நேரில் நன்றி

நாடாளுமன்றத்தில் தமிழுக்காகவும், திருக்குறளுக்காகவும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய்யை தமிழக தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 பேர் குழுவினர் புது தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளையின் பொதுச் செயலரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான உடையார் கோயில் குணா உள்ளிட்ட 13 பேரும் தருண் விஜய் எம்.பி.யை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை பிற்பகல் நேரில் சந்தித்தனர். திருவள்ளுவர் தினத்தை மத்திய அரசுப் பள்ளிகளில் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அகில இந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் பொதுச் செயலர் இரா.முகுந்தன், தில்லி தமிழ்ச் சங்க இணைப் பொருளாளர் ஏ.ஜெயமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் கே.முத்துசாமி, வெ.முத்துக்குமார் உள்ளிட்டோரும் நன்றி தெரிவித்தனர். அப்போது, அவரிடம் 10 கிலோ எடையுள்ள ஓர் அடி உயரத்திலான திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினர். இதைத் தொடர்ந்து, மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனையும் அவர்கள் நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர். தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த துரை.இராசமாணிக்கம், குடியாத்தம் குமணன், தகடூர் தமிழ்க்கதிர், சி.க.மணி, செ.ப.சுந்தரம், ப.கோ.நாராயணசாமி, தாமரைப்பூவண்ணன், க.மல்லிகா, இல.தட்சிணாமூர்த்தி, மா.ராதாகிருஷ்ணன், உ.சிவகாமி, இரா.மும்தாஜ்பேகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தருண் விஜய் எம்.பி.யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை, தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவினர், தில்லி தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய தமிழ்ச் சங்கப் பேரவை பொதுச் செயலர் இரா. முகுந்தன் உள்ளிட்டோர்.

ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர போலீஸார் தடியடி

இலங்கை அதிபர் ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபட்ச வருகை குறித்து செய்தி சேகரிப்பதற்காக தமிழ்ப் பத்திரிகையாளர்கள் திருமலையில் கூடினர். அவர்களுக்கு செய்தி சேகரிக்க, ஆந்திரப் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதற்கு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை செய்தி சேகரிக்க அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆந்திரப் போலீஸார் தமிழ் பத்திரிகையாளர்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். அவர்களிடமிருந்த கேமராக்கள், மின் விளக்குகளையும் அடித்து உடைத்தனர். வனப்பகுதியில் தவிப்பு: பின்பு, தமிழ்ப் பத்திரிகையாளர்களை கைது செய்து, திருமலையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பாபவிநாசம் வனப்பகுதியில் விட்டுவிட்டு சென்றனர்.

மேலும், வனத்துக்குள் விடப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்கள், திருமலைக்கு திரும்ப வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அவர்களை ஆந்திரப் போலீஸார் தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர். மேலும், தனியார் டி.வி செய்தியாளர் குணசேகரை கைது செய்து, ஆர்ப்பாட்டம் செய்த ம.தி.மு.க.வைச் சேர்ந்த மல்லை சத்யாவுடன் அமர வைத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் தன் 2 பவுன் தங்கச் சங்கிலியை இழந்தார். இலங்கை அதிபர் ராஜபட்ச சென்ற பிறகு அவர்களை விடுவித்தனர். 3 போலீஸ் அதிகாரிகள்: தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீது தடியடி நடத்த ஏ.எஸ்.பி. ஸ்வாமி, டி.எஸ்.பி. சரத் சந்திரா, டி.எஸ்.பி. நரசப்பா ஆகியோர் உத்தரவிட்டனர். இது குறித்து, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் திருப்பதி எஸ்.பி.,கோபிநாத் ஜெட்டியிடம் புகார் அளித்தனர். இது குறித்து, அவர் விசாரணை நடத்தி இதற்கு காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்வதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்கு சித்தூர் பத்திரிகையாளர் சங்கமும், திருப்பதி பத்திரிகையாளர் சங்கமும் ஆதரவு அளித்தனர். மேலும், வியாழக்கிழமை பத்திரிகையாளர்கள் (ஆந்திரம், தமிழ்) போலீஸாரின் அராஜகத்தை கண்டித்து, பேரணி நடத்த உள்ளனர். வாகனங்களுக்கு தடை: இலங்கை அதிபர் ராஜபட்ச தரிசனம் முடித்து திரும்பி வெளியே வரும் வரை, ஏழுமலையான் கோயிலில் சாதாரண பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதியளிக்கவில்லை. மேலும், ராஜபட்ச திரும்பும் வரை திருமலை மலைப்பாதையிலும், பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. வி.ஐ.பி பிரேக் தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்களும், பல்வேறு சேவைகளுக்கு டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்களும், ஏழுமலையானை தரிசிக்க முடியாமல், திருப்பதியிலிருந்து ஏமாற்றத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்

பிசிசிஐ தேர்தல் ஒத்திவைப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகக் குழுத் தேர்தலை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிசிசிஐ நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் வரும் 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு குறித்த விசாரணை நிலுவையில் இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில், ஐபிஎல் விதிமுறைகளை மீறியவர்கள் மீது தண்டனை எடுப்பது குறித்து முடிவு செய்ய, உயர் நிலைக் குழு அமைக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ள இந்தக் குழுவுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவில் (பிசிசிஐ) சீனிவாசன் தொடர்ந்து இருக்க வேண்டுமா? அவருக்குச் சொந்தமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளலாமா? என்பது குறித்து ஆய்வு செய்யும் அதிகாரம் வழங்கப்படும் என நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சீனிவாசன் உறுதி: இந்நிலையில், நீதிபதிகள் தாக்குர், இப்ராஹிம் கலிஃபுல்லா அடங்கிய அமர்வு முன்பு இது தொடர்பான விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ஐ.பி.எல். விவகாரங்களில் தலையிடாமல், விலகியிருக்கப் போவதாக உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதேவேளையில், பிசிசிஐ நிர்வாகக் குழுத் தேர்தலில் போட்டியிட சீனிவாசனுக்கு அனுமதியளிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. விசாரணையின் போது, சீனிவாசனின் வழக்குரைஞராக ஆஜரான கபில்சிபல் கூறியதாவது. சீனிவாசன் குற்றமற்றவர் என்று உயர் நிலைக் குழு தெரிவிக்கும் வரை, ஐ.பி.எல். விவகாரங்களில் அவர் தலையிடாமல் விலகியிருப்பார்.

மேலும் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட அவரை அனுமதிக்க வேண்டும். வழக்கு விசாரணை முடியும் தேர்தலைத் ஒத்தி வைக்க வேண்டும் என்று வாதாடினார். பிசிசிஐ எதிர்ப்பு: உயர் நிலைக் குழு அமைப்பதற்கு பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழுவால் கிரிக்கெட் வாரியத்தின் தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.ஏ.சுந்தரம் வாதிட்டார். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்க வேண்டுமாயின், வாரியத்தின் ஆட்சிக் குழுதான் அதைச் செய்ய வேண்டும் என்றார் அவர். வழக்கு விசாரணையில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, "சோதிக்கப்படாத அறிக்கையை (முத்கல் குழு அறிக்கை) ஆதாரமாக எடுத்துக் கொண்டால், குருநாத் மெய்யப்பன் மீது தவறான அபிப்ராயம் தான் ஏற்படும்' என்றார்

இதற்கு நீதிபதிகள் கூறியதாவது: பிசிசிஐ, இந்தியா சிமென்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் குருநாத் மெய்யப்பனை சென்னை அணியின் நிர்வாகி என ஒப்புக் கொண்டனர். அதன்பிறகும், அணிக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றே குருநாத் கூறிவருகிறார். இந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தை முடித்து வைக்க சிறிது காலமாகும். எனவே பிசிசிஐ நிர்வாகக் குழுத் தேர்தலை ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்க உத்தரவிடுகிறோம். கிரிக்கெட் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை மாற்றாவிட்டால், அந்த விளையாட்டே சீரழிந்துவிடும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media