உலகில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்து நடந்த நாள் 2004 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் தேதி ஆகும். தங்கள் போகப் போகிறது என தெரியாமல் அழகிய சிரிப்புடன் பிஞ்சு குழந்தைகள் எப்போதும் போல் பள்ளிக்கு வந்தார்கள். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி தான் அது. இந்த பள்ளியில் அன்று மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ, பள்ளி கட்டிடத்திற்கும் வேகமாக பரவியது.மாடியில் உள்ள கூரையின் கீழ் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது. தீ வேகமாக பரவியது. வகுப்பறை பூட்டப்பட்டு இருந்ததால் அங்கு யாரும் வெளியேற முடியவில்லை.
இதனால் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர், 18 குழந்தைகள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர் . இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குறுகலான அந்த கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தது. 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 700 மாணவ–மாணவிகள் படித்து வந்தனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமி, பள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதில் 3 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கபட்டனர்.
இந்த வழக்கு பத்து ஆண்டு விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 11 பேர் குற்றமற்றவர்கள் என்றும் விடுதலை செய்யப்பட்டனர். பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதிக்கு உள்பட 8 பேருக்கும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. என்ஜினீயர் ஜெயச் சந்திரனுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ. 52 லட்சத்து 57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையில் உயிரிழந்த 94 மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 50 ஆயிரமும், படுகாயம் அடைந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 25 ஆயிரமும், லேசான காயம் அடைந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 15 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
என்ன தண்டனை கொடுத்தாலும் அந்த 94 உயிர்கள் திரும்பி வரபோவதில்லை. இனியாவது இது போல தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.