BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 11 April 2014

ராமர் கோவில் கட்டுவோம் என்றால் என்ன அர்த்தம்? இந்தியாவிலே மதக் கலவரத்தை உண்டுபண்ண போகிறோம் என அர்த்தம்- கருணாநிதி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வேட்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து, சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, பாஜகவின் ராமர் கோயில் கட்டுவது குறித்த தேர்தல் அறிக்கையை விமர்சித்து பேசினார். இது குறித்து அவர் பேசியதாவது:

பாஜக‌ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ராமர் கோயில் கட்டுவோம் என்கிறார்கள். ராமர் கோவில் கட்டுவோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவிலே மதக் கலவரத்தை உண்டுபண்ண என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் என்ற அந்த முறையிலேயே தான் நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம் என்று இப்போதே அதை தொடங்கி வைக்கிறார்கள்.

தயவு செய்து உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன் ராமர் எங்களுக்கொன்றும் விரோதி அல்ல; தனிப்பட்ட விரோதம் எனக்கும் ராமனுக்கும் கிடையாது. ஆனால் ராமர் கோயில் கட்டினால், அதற்காக பாபர் மசூதியை இடித்தால், அப்படி இடிப்பதற்கு ஜெயலலிதா போன்றவர்கள் ஆதரவு கொடுத்தால்,  ஏற்கனவே கொடுத்ததை போல, கரசேவைக்கு ஆதரவு கொடுத்தார்களே அந்த அம்மையார், அதைப்போல ஆதரவு கொடுத்தால் நாடு என்ன ஆகும் என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள்.

எங்களுக்கு ராமரோ, கிருஷ்ணரோ யாரும் தனிப்பட்ட முறையிலே எதிரிகள் அல்ல; விரோதிகள் அல்ல. ஆனால் அந்தக் கடவுள்களின் பெயரால், ம‌தத்தின் பெயரால், கலவரங்களை, அராஜகங்களை ஏற்படுத்துவதை இங்கே வீற்றிருக்கிற தோழமைக் கட்சிகளின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்: அதை நாங்கள் அனுமதிக்க முடியாது; அனுமதிக்கவே முடியாது; நிச்சயமாக அனுமதிக்க முடியாது."

இவ்வாறு கருணாநிதி பேசியிருந்தார்.

மோடிக்கு நடந்த திருமணம் குழந்தைப் பருவத்தில் நடந்தது; அவரை விமர்சனம் செய்பவர்கள், குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கின்றனரா?

மோடி திருமணமானவர் என முதல் முறையாக வெளியிட்டு இருப்பது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ரவி ஷங்கர் பிரசாத்  "நேரு குடும்பத்திலும் இந்திரா காந்தி குடும்பத்திலும் உள்ள விவகாரங்கள் குறித்து பாஜக நன்கு அறியும். எனினும், நாகரீகம் கருதி நாங்கள் அதை விமர்சனம் செய்வதில்லை" என்று கூறியுள்ளார்.

 பாஜகவின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கூறுகையில், "மோடியின் திருமண விவகாரம் தொடர்பாக ராகுல் விமர்சனம் மேற்கொள்ளும் முன் வேட்புமனு விவரங்களை நன்கு படித்திருக்க வேண்டும். மோடி உண்மையைதான் அதில் தெரிவித்துள்ளார். இதில் ஏதும் தவறில்லை. மேலும், இது குறித்த மோடியின் மனைவியே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெண்கள் அமைப்புகள் சில மோடி குறித்து விமர்சனம் செய்கின்றனர். நான் அவர்களிடம் கேட்க நினைப்பது, அவர்கள் குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கின்றனரா? என்று தான். மோடியின் திருமண விவகாரம் குறித்து அவரது சகோதரர் நேற்று எங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மோடிக்கு நடந்த திருமணம் குழந்தைப் பருவத்தில் நடந்தது என்று விளக்கியுள்ளார்" என்றார்.

மனைவி பெயரை மறைத்தவரா நாட்டின் பெண்களின் பாதுகாவலர்?- ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் டோடா மாவட்டத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மோடி சமீபத்தில் தான் திருமணமானவர் என்பதை வேட்பு மனு தாக்கல் செய்யும் போது முதல் முறையாக வெளியிட்டது குறித்து,  மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார். இது குறித்து அந்தப் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது:

"மோடி இதுவரை எத்தனை தேர்தல்களை சந்தித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், முதல்முறையாக அவரது மனைவியின் பெயரை வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பது பற்றி பேசிய மோடி, சொந்த மனைவியின் அடையாளத்தை வெளிப்படுத்த இவ்வளவு காலம் எடுத்துள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கூறும் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு மனைவி பற்றிய தகவலை அளிக்க இவ்வளவு காலம் ஆகிறது. மனைவி பெயரை மறைத்தவரா நாட்டின் பெண்களின் பாதுகாவலர்?" என்று கூறினார்.

மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் நிலை குறித்து பேசிய ராகுல், "கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது அவையில் இருந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள், எந்த மாதிரியான‌ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது செய்தித்தாள்களின் தெளிவாக வெளியானது. சத்தீஸ்கரில் 20,000 பெண்கள் மாயமாகியுள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள், அவர்கள் கதி என்னவென்று எதுவுமே ராமன் சிங் அரசுக்கு தெரியாத நிலையே" என்று ராகுல் காந்தி கூறினார்.

ஒரு நாள், கருணாநிதியை திமுகவை விட்டு வெளியேற்ற போகிறார், சகுனி வேலை பார்க்கும் ஸ்டாலின்-ஜே.கே.ரித்தீஷ்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.கே. ரித்தீஷ்., நேற்று முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை வழங்கினார்.

இதையடுத்து, ஜே.கே.ரித்தீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.

திமுகவை அண்ணா முதன் முதலில் உருவாக்கும் போது, திமுகவை யாராலும் அழிக்க முடியாது. திமுககாரனால்தான் திமுகவை அழிக்க முடியும் என்றார். தற்போது, அந்த வேலையை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.

என்றைக்காவது ஒரு நாள் கருணாநிதியை மு.க. ஸ்டாலின் வெளியேற்றுவார். தி.மு.கவை அழிக்கும் சகுனியாக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். திமுகவில் அவருடைய ஆதரவா ளருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவரு டைய ஆதரவாளர்கள்தான் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர். மு.க.அழகிரியின் முடிவு வலிமையாக இல்லை. உட்கட்சி தேர்தல் நேரத்தில் மு.க.அழகிரி வலிமையான முடிவு கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும். இப்போது கூட, அவரிடம் சொல்லி விட்டு தான் நான் அதிமுகவில் இணைந்துள்ளேன். நாடாளு மன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக் காது. என்னை போல் மேலும் சில நிர்வாகிகளும் அதிமுகவில் விரைவில் இணையவுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மின்தடை என்று கூறும் திமுக வுக்கு 2 முறை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போது இது தெரியவில்லையா? இதற்காக என்ன நடவடிக்கையை திமுக எடுத்தது? தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வாங்கக்கூட நடவடிக்கை எடுக்கவில்லையே.

இவ்வாறு நிருபர்களிடம் ஜே.கே.ரித்தீஷ் கூறினார்.

மனைவி இருப்பதையே மறைத்த மோடி, நாளைக்கு இன்னும் எதை மறைக்க மாட்டார்?-கருணாநிதி

சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில், மோடியை விமர்சித்து திமுக தலைவர் கருணாநிதி பேசியது:

நரேந்திர மோடி சுத்த சுய பிரகாசம்; அவரிடத்திலே எந்தவிதமான அப்பழுக்கும் இல்லை. அவர் எதையும் மறைக்க மாட்டார். எல்லாவற்றையும் திறந்து வைத்ததைப் போலத்தான் சொல்வார் என்று நேற்று வரையிலே சொன்னார்கள். இன்றைக்கு மாலை பத்திரிகையிலே பார்த்தால், அவருக்கு ஒரு துணைவியார் இருக்கிறார் என்ற செய்தியைக் கூட சில நாள் நரேந்திர மோடி நாட்டிற்குச் சொல்லவில்லை. இன்றைக்குத்தான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறார்.

"நான் தேர்தலுக்காக விண்ணப்பித்த மனுவில் அதைக் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமல் விட்டு விட்டேன்." என்று மோடி சொல்லியிருக்கிறார். 'நாமினேஷன்' பேப்பரில் தேர்தலுக்காக செய்கின்ற விண்ணப்பத்தில் குடும்பத்தாருடைய பெயரை எல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். நான் அப்படி செய்யத் தவறினால் மனைவியினுடைய பெயரையோ, மகளுடைய பெயரையோ குறிப்பிடத் தவறினால், அது தேர்தல் கமிஷன் - தேர்தல் ஆணையத்தின்படி குற்றம். அதற்கு வேறு பரிகாரம் எதுவும் இதுவரையிலே காணப்படவில்லை.

ஆனால், நரேந்திர மோடி தனக்கு திருமணமானதை இதுவரையில் சொல்லாமல் மறைத்தார் என்றால், இவர் பிரதமராக இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.  எப்படி இந்தத் தேர்தலிலே அவர் போட்டியிடப்போகிறார் என்பதெல்லாம் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய விவகாரம். எனவே நான் அதை தேர்தல் ஆணையத்திற்கு விட்டுவிடுகிறேன் அவர்கள் முடிவு செய்யட்டும்; எப்படி முடிவு செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

மனைவி இருந்தபோது அதை மறைக்கின்ற நம்முடைய நரேந்திர மோடி, நாளைக்கு இன்னும் எதை மறைக்க மாட்டார்? என்றெல்லாம் கேள்வி எழுந்தால் நாடு என்ன ஆகும்? நாட்டிலே ஆட்சி எப்படி நடைபெறும்? என்பதை தயவு செய்து இதுவரையிலே நரேந்திர மோடி பற்றி அவர் நல்லவர், வல்லவர் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சிந்தித்துப் பார்த்ததற்குப் பிறகு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு கருணாநிதி பேசியிருந்தார்.

தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் சட்டமன்ற கட்சித் துணைத் தலைவருமான பாலபாரதி, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடும் 18 தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இதற்கிடையே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா பிரதமராகும் சூழல் அமைந்தால் அவரை ஆதரிப்பீர்களா என்று கேட்கப்பட்ட போது, "தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை." என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா காங்கிரஸை விமர்சிக்கிறார். ஆனால், பாஜக-வை பற்றி எதுவுமே பேசுவதில்லை. சட்டமன்றத்தில் விஜயகாந்தை உட்காரவிடாமல் தொல்லை கொடுத்தார்கள். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக-வை கண்டபடி விமர்சிக்கிறார். ஆனால், அதிமுக தரப்பில் அவரைப் பற்றி எதுவுமே பேசுவதில்லை. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ‘மத்தியில் நல்லரசு அமைப்போம்’ என்று ஜெயலலிதா சொல்கிறார். ஆனால், ‘16 கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இடது முன்னணியில் சேர்ந்து ஆட்சி அமைப்போம்’ என்று சொல்லவில்லை. ஜெயலலிதா யாருடைய ஆட்சியில் அங்கம் வகித்து மாநில உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒன்றும் புத்தி பேதலித்துவிடவில்லை. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பாஜக ஆதரிக்கும் எந்த அரசுக்கும் நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.

இவ்வாறு பாலபாரதி கூறியிருந்தார்.

திமுகவிற்கு ஒரு நியாயம், அதிமுகவிற்கு ஒரு நியாயமா? தேர்தல் ஆணையத்திற்கு எதற்கிந்த பாரபட்சம்?

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

 2 ஜி ஊழலில் ராசா நிரபராதி என கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் சொல்லி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்றனர். 2 ஜி ஊழலில் திமுக ஆதாயம் அடையவில்லை என்றால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருந்தது ஏன். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்வதைப் போல் 50 பைசா செலவில் பேசக் கூடிய தொலைத்தொடர்பு சேவை வசதி பயன்பாட்டிற்கு வரவே இல்லை.

தற்போது, ரூ.113 கோடி வருமான வரியை தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை கருணாநிதி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கருணாநிதி, கை சின்னம் இல்லை எனக் கருத வேண்டாம், மதச்சார்பற்ற முறையில் ஆட்சி அமைந்தால் கையை குலுக்கி வரவேற்போம் என்கிறார். இதிலிருந்து, எங்கு அடித்தால் கருணாநிதிக்கு வலிக்கும் என காங்கிரஸ் கட்சி நன்கு புரிந்து வைத்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான விதிகள், கட்டுப்பாட்டால் பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளரை முன்நிறுத்த முடியவில்லை. தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத, இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான நடவடிக்கையால் நான் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளரை முன்னிறுத்த முடிய வில்லை, அவரது பெயரை உச்சரிக்க முடியவில்லை. மீறினால், கூட்டச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க் கப்படுமாம். நான் பேசுவதை கேட்க வரும் மக்களின் சொந்த செலவையும் வேட்பாளர் கணக்கில் சேர்த்து விடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல், ஜனநாயகத்தில் மக் களுக்கு எதிரானது.

ஆனால், திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் கூட்டங்களில் வேட்பாளர்கள் மேடை மீதுதான் உள்ளனர். திமுகவிற்கு ஒரு நியாயம், அதிமுகவிற்கு ஒரு நியாயமா? தேர்தல் ஆணையம் பார பட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.

திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவது நிச்சயம் சரியாக இருக்கும், அவர் ஒரு கடின உழைப்பாளி-குஷ்பூ

திமுகவிற்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் குஷ்பூ, ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், திமுகவுக்கு அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவது நிச்சயம் சரியாக இருக்கும் என்றும், அவரது உழைப்பை யாரும் குறை சொல்ல முடியாது என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "தளபதியின் உழைப்பை யாராலும் குறைசொல்ல முடியாது. அவரது கடின உழைப்பு, கட்சி யிலுள்ள அனைத்து தொண்டர் களுக்கும் தெரியும். அவர் தலைமைப் பதவிக்கு நிச்சயம் பொருத்தமானவர்தான். இது எழுதப்படாத உண்மை." என்று தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் தலைமை பொறுப்பிற்கு சரியானவர் என்று கூறிய குஷ்பூ, அழகிரி பற்றி தான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.

ஜெயலலிதா பிரதமர் ஆவது குறித்து கேட்கப்பட்ட போது, "ஒரு பெண், நாட்டின் பிரதமராக வந்தால் அது நாட்டுக்கும், பெண்களுக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெண் நாட்டுக்கு நல்லது செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.
கடந்த மூன்றாண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா, மக்கள் நலத் திட்டங்கள் எதையும் செய்யவில்லை. தேர்தல் நெருங் கும் நிலையில், சில இலவசத் திட்டங்களை காட்டினார்கள். கடந்த தேர்தலில் அவர் அளித்த எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை" என்று குஷ்பூ பதிலளித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media