BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 9 May 2014

நான் மோடியை ஜெயிலுக்கு அனுப்பி இருப்பேன் - மம்தா பானர்ஜி .

மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் மம்தா இன்று காங்கிரசு அரசையும் சேர்த்துக் கொண்டார் .

இன்று அளித்த பேட்டியில் , காங்கிரசு பயந்தாங்கோலிகள் , அவர்கள் பாஜக உடன் பேசி வைத்துக்கொண்டு ஆட்சியில் இருந்து விட்டனர் . ஆட்சியின் போது மோடியைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை . நான் இந்நேரம் காங்கிரஸ் இடத்தில் டில்லியில் இருந்தால் மோடியின் இடுப்பில் கயிறு கட்டி ஜெயிலுக்கு அனுப்பி இருப்பேன் . காங்கிரசு தவறு செய்துவிட்டது . முதலிலே கண்டித்து இருந்தால் இப்போது இப்படி நடந்து இருக்காது என்று கூறினார் .

வாரணாசியில் கடும் போட்டி !!

வாரணாசி தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிடுகிறார் . அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கெஜ்ரிவால் போட்டியிடுகிறார் . நாளையுடன் பிரச்சாரம் முடிவுபெற உள்ளதால் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர் . ஒவ்வொரு கட்சியினரின் பிரச்சாரம் கீழே ..

காங்கிரசு

நாளை கடைசி நாள் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி வாரணாசியில் ரோட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார் . இதை ராகுலின் அமேதி தொகுதியில் மோடி பிரச்சாரம் செய்ததற்கு பழிவாங்கும் விதமாக உள்ளதாக தெரிகிறது .

பாஜக :

பாஐகவின் பேரணிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்காத நிலையில் நேற்றைய தினத்தில் பாஜக தர்ணா நடத்தியது . இந்த தர்ணாவில் பலர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர் . பாஐக தலைவர் அளித்த பேட்டியில் ராகுல் காந்தி , கெஜ்ரிவால் என்ன நிகழ்ச்சி வேண்டுமானாலும் நடத்தி கொள்ளட்டும் . ஆனால் மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றார் .

ஆம்ஆத்மி :

கெஜ்ரிவால் இன்று வாரணாசி வீதி பிரச்சாரம் செய்தார் . அவர் அளித்த பேட்டியில் இது எங்களின் சண்டை இல்லை , ஊழலை ஒழிக்க விரும்பும் அனைவரின் சண்டை  என்றார் .


வாரணாசி தொகுதியின் சிறப்பு பார்வையாளராக தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நியமனம்


தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் பிரவீண் குமார். இவரது தலைமையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அமைதியாக ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்காக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் வாரணாசி தொகுதிக்கு சிறப்பு பார்வையாளராக பிரவீண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாரணாசியில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான மோடி களம் இறங்கியுள்ளார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் கேஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளை திறமையாக செய்வதற்கு சிரமமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட பிரவீண்குமாரை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

முல்லைப் பெரியாறு தீர்ப்பை நிறைவேற்ற கருணாநிதி எனக்கு அறிவுரை வழங்குவது நகைப்புக்குரியது- ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு,  பதில் தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்யாத தி.மு.க. தலைவர் கருணாநிதி, முல்லைப் பெரியாறு அணை குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனக்கு தற்போது அறிவுரை வழங்கியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, கேரள மாநிலத்திலும், தமிழகத்திலும் முல்லைப் பெரியாறு அணை குறித்து தனித் தனியாக இரு மாநில உயர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில் 14.2.1998 அன்று தி.மு.க. ஆட்சியிலே தான், இரண்டு மாநில வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அந்த மனுவின் மீது தான் உச்ச நீதிமன்றம் 142 அடி வரை அணையில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்று தமிழகத்திற்கு சாதகமாக 27.2.2006 அன்று தீர்ப்பளித்ததாக கூறி இருக்கிறார்.  

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட மனுத் தாக்கல் செய்யப்பட்டதைத் தவிர, கருணாநிதி இதற்கென வேறு எந்த முனைப்பான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.

உண்மை நிலை என்னவென்றால், கேரளாவைச் சார்ந்த ஒரு சில தனி நபர்களால் 1997 ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை தற்காலிகமாக குறைக்கப்பட்ட அளவான 136 அடிக்கு மேல் தமிழ்நாடு உயர்த்தக் கூடாது எனக் கோரி ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கு மாறாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை முன்பிருந்தபடியே முழு நீர் மட்ட அளவான 152 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு சில தனி நபர்கள் 1998 ஆம் ஆண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். கேரளா மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி மாற்றல் மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசும் ஒரு மாற்றல் மனுவை 1998 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

ஆனால், அதற்கு பிறகு மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சியில் இருந்த தி.மு.க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பின்னர், 2001 ஆம் ஆண்டு நான் 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தான், முல்லைப் பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற 8.4.2002 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்ததன் அடிப்படையில் தான் 27.2.2006 அன்று தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது என்பதை கருணாநிதிக்கு நினைவூட்டவும், தெளிவுபடுத்தவும் விரும்புகிறேன். எனவே, “முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல” என்ற பழமொழி கருணாநிதிக்குத் தான் முழுமையாக பொருந்தும். 

27.2.2006 ஆம் நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், கேரள அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வந்ததையடுத்து, முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 7.5.2014 அன்று தமிழகத்தின் உரிமையினை நிலைநாட்டக் கூடிய, நியாயமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.  

இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எனது தலைமையிலான அரசால் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த உடன், முல்லைப் பெரியாறு அணையைச் சார்ந்த பொதுப்பணித் துறை பொறியாளர்கள் அணையின் நீர்மட்டத்தினை உயர்த்துவதற்கான அனைத்து ஆரம்ப கட்டப் பணிகளை துவக்கி தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அணையின் நீர்மட்டம் 142 அடி என அணை மற்றும் உபரி நீர் வழிந்தோடிகளில் குறியீடுகள் செய்தும்;  மதகுகள் மற்றும் கதவணைகள் போன்றவற்றில் வண்ணம் பூசுதல்; கதவணைகளில் மசகு பூசுதல், பேபி அணையில் நடைபாதையை சீர்செய்தல் போன்ற ஆரம்ப கட்ட பணிகளை 8.5.2014 முதற்கொண்டே ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எனது உத்தரவின்படி, 8.5.2014 அன்றே உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள  மேற்பார்வைக் குழுவில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக, காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவரான இரா. சுப்ரமணியனை நியமித்து ஆணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மேற்பார்வைக் குழு உடனடியாக அதன் பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக, என்னுடைய உத்தரவின் பேரில், மத்திய நீர்வளக் குழுமம் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் மற்றும் கேரள அரசு அதன் பிரதிநிதியை நியமிக்க வேண்டியும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்து 8.5.2014 அன்றே மத்திய நீர்ஆதார அமைச்சக செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எனது தலைமையிலான அரசால் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளன.  அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவின் மேற்பார்வையில் 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. எனவே தான், தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் பிரதிநிதியை உடனடியாக நியமித்ததுடன், மத்திய நீர்வள குழுமத்தின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் பிரதிநிதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு மட்டும் தன்னிச்சையாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாது. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, இது நன்கு தெரிந்திருந்தும், மக்களை குழப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசினுடைய கடிதத்தின் மீது தற்போதுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், 16.5.2014-க்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அந்த ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கும். அப்போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, உடனடியாக மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் அந்தக் குழுவால் எடுக்கப்படும். 
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சனைகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டு, தற்போது தனக்குத் தானே மனக் கோட்டைக் கட்டிக் கொண்டு, மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அவரது கபட நாடகத்தை மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.  எனவே, தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான முல்லைப் பெரியாறு பிரச்சனையை இனிமேலும் அரசியலாக்கி ஆதாயம் காண முயற்சிக்க வேண்டாம்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னையில் நடக்கவிருந்த நான்கு ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு இடமாற்றம்


சென்னையில் நடைபெறவிருந்த நான்கு ஐ.பி.எல். போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இது தவிர மே 27 மற்றும் 28ல் அரையிறுதி போட்டிகளும் இங்கு நடைபெறுகின்றன. இந்த 4 போட்டிகளும் ராஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தின் கேலரிகள் திறப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது ‘ஹர ஹர மோடி‘ என ஒரு கும்பல் கோஷம்


உத்தர பிரதேச மாநிலம் டியோரியாவில் இன்று நடந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், பாஜக நரேந்திர மோடியை வாழ்த்தி ‘ஹர ஹர மோடி’ என்று கோஷமிட்டனர். இதனால் ராகுல் காந்திக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. உடனே போலீசார் கூட்டத்திற்குள் சென்று அந்த கும்பலை அப்புறப்படுத்தினர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச வீடு, இலவச மருத்துவம், ரேஷனில் கிலோ ஒரு ரூபாய் விலையில் அரிசி மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் நரேந்திர மோடி மீது வழக்கமாக கூறும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். மோடி பிரதமராக வந்தால் அவரது தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மோடி தோல்வியடைவது உறுதி: வாரணாசியில் பேசிய கேஜ்ரிவால்


வாரணாசி தொகுதியில் வரும் 12-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இத்தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் வாரணாசியை முற்றுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் கேஜ்ரிவால் பேசுகையில், ''வாரணாசி தொகுதியில் மோடி தோற்பது உறுதி. மேல்தட்டு அரசியலை வாரணாசி மக்கள் ஒதுக்கித் தள்ளுவார்கள். மோடியின் பேரணிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது தவறில்லை. மேலும், தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பா.ஜனதா போராட்டம் நடத்தியது அரசியல் நாடகம்'' என்று கூறினார்.

மணமேடையில் மணமகள் மீது துப்பாக்கிச்சூடு !! போபாலில் பரபரப்பு ..

மத்திய பிரதேசம் , போபாலில் ரோகித் மற்றும் ஜெய்ஸ்ரி  ஆகியோருக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது . திருமணத்திற்கு முன் நடந்த வரவேற்பு விழாவில் மணமகனும் , மணமகளும் அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தனர் . அப்போது ஒருவன் மணமகளை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டான் . அதிர்ச்சியடைந்த உறவினர் மணமகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் பரிதாபமாக செல்லும் வழியிலேயே மரணித்தார் .

சுட்ட நபரை போலிஸார் விசாரித்ததில் அவர் பெயர் அங்குராஜ் என்றும் , அவர் ஜெய்ஸ்ரி உறவினர் என்றும் தெரிய வந்தது . அங்குராஜ் கூறுகையில் ஜெய்ஸ்ரி தன்னை காதலித்து ஏமாற்றியதால் சுட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான் .

கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை; எனக்கு எதிராக சில சாட்சிகளை சி.பி.ஐ. சேர்த்துள்ளது- கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் வாக்குமூலம் டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று கனிமொழி எம்.பி. தனது வாக்குமூலத்தை நீதிபதி ஓ.பி.சைனி முன்பு பதிவு செய்தார்.

அவரிடம் அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமான பதிலை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:–

கலைஞர் டி.வி. தொடங்கப்பட்ட காலத்தில் 2007–ம் ஆண்டு ஜூன் 6–ந்தேதி முதல் 20–ந்தேதி வரை 2 வாரங்களுக்கு மட்டுமே அந்த நிறுவனத்தின் இயக்குனராக இருந்தேன். 20.06.2007 அன்று கலைஞர் டி.வி. இயக்குனர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன்.

அதன்பிறகு அந்த நிறுவனத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும் நான் தலையிட்டதில்லை. கலந்து கொண்டதும் கிடையாது. விலகிய பின்னர் அந்த நிறுவனத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

அந்த தொலைக்காட்சியின் அன்றாட நடவடிக்கையும் எனக்கு தெரியாது. இந்த வழக்கில் எனக்கு எதிராக சில சாட்சிகளை வெவ்வேறு நோக்கம் காரணமாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது. நான் கலைஞர் டி.வி. பொறுப்பில் இருந்து விலகி 18 மாதங்கள் கடந்த பிறகுதான் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ள கலைஞர் டி.வி.யில் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது.

இந்த பண பரிவர்த்தனை நடைபெற்ற 2008–ம் ஆண்டு டிசம்பர் முதல் 2011–ம் ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நான் எந்த வகையிலும் கலைஞர் டி.வி.யுடன் தொடர்பில் இருந்தது கிடையாது.

கலைஞர் டி.வி.யின் எந்த இயக்குனர் கூட்டத்திலும் நான் பங்கேற்றது இல்லை. எந்த ஆவணத்திலும் கையெழுத்து போட்டது இல்லை. ஆனாலும் என்னை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்ந்துள்ளது.

என் மீது தவறான வழக்கு போடப்பட்டு சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு நெருக்கடி இருந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி காலமானார்


மூத்த காங்கிரஸ் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஜனார்த்தன ரெட்டி காலமானார். அவருக்கு வயது 80. நிசாமஸ் மருத்துவ கழகத்தில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. ஜனார்த்தன ரெட்டி, கல்லீரல் நோய் காரணமாக சில தினங்களாக நிசாமஸ் மருத்துவ கழகத்தில் சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை இறந்தார். நெல்லூரில் பிறந்த ஜனார்த்தன ரெட்டி 1990 - 1992 காலகட்டத்தில் ஆந்திர முதல்வராக இருந்தார். மக்களவைக்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றினார். அவரது மனைவி ராஜலட்சுமியும் அமைச்சராக இருந்தார்.

ஜனார்த்தன ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த போதுதான் மாநிலத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்த தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பது தமிழர் பண்பாட்டின் மீதான அத்துமீறல்: சீமான்


 ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பது, தமிழரின் பண்பாட்டின் மீதான அத்துமீறலாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவத்:

"தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் களமிறக்கப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல வாரியம் கூறியதை ஏற்று, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எதிராக நிரந்தர தடை விதித்து இந்திய உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு உரிமை மீதான அப்பட்டமான அத்துமீறலாகும். இத்தீர்ப்பினை நாம் தமிழர் கட்சி வன்மையாக எதிர்க்கிறது.

இன்று, நேற்றல்ல... சிந்து சமவெளி நாகரீகம் செழித்து வளர்ந்திளர்ந்த காலத்தில் இருந்து தமிழர் வரலாற்றில் என்றென்றும் இடம்பிடித்து, தமிழினத்தின் வீர அடையாளமாக இருந்த ஜல்லிக்கட்டு எனும் பண்பாடு தொடர்பான விளையாட்டை, அதன் அடிப்படைகளில் இருந்து விளங்கிக்கொள்ள மறுக்கும் ஒரு மனப்பான்மையையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.

இதில் ஈடுபடுத்தப்படும் காளைகள், அதற்கென்றே கன்றிலிருந்து வளர்க்கப்பட்டவை என்கிற விவரங்களையெல்லாம் கொடுத்த பின்பும், இப்படியொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பது தமிழினத்தை அவமதிக்கும் செயலாகும்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் இன்று வரை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்பட்ட காளை ஒன்றாவது இறந்துள்ளது என்ற செய்தி இருக்கிறதா? துன்புறுத்தல் என்ற சொல்லை ஜல்லிக்கட்டு காளைகள் மீது மட்டும் விலங்கின நல வாரியம் பயன்படுத்துவது ஏன்?

கேரளத்தில் உணவிற்காக ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான மாடுகள் அடித்துக்கொல்லப்படுகிறதே? அது சரியா? கோயில் விழா என்ற பெயரில் பல யானைகள் கேரளத்தின் கோயில்களில் நிறுத்தப்படுவதும், அவைகள் மதம் பிடித்து மக்களை துரத்துவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறதே? இதனை ஏன் விலங்கின நல வாரியமும், உச்ச நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை?

இந்திய ராணுவத்தில் குதிரை படையும், ஒட்டகப் படையும் இருக்கின்றனவே, இப்படி போர்க் களத்தில் ஈடுபடுத்தப்படும் குதிரைகளும், ஒட்டகங்களும் அந்த விலங்குகள் பழக்குவது என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதில்லையா? இதெல்லாம் விலங்கின நல வாரியத்திற்குத் தெரியாதா?

தமிழ்நாட்டிற்கு வெளியே எது நடந்தாலும் அது சட்டப் பிரச்சனையாவதில்லை... ஆனால் தமிழனின் மொழி, பண்பாடு ஆகியன மட்டுமே இவர்களின் பார்வை உறுத்துகிறதே, அது ஏன்? இப்படிப்பட்ட நடவடிக்கைகள் யாவும் தமிழினத்தின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியாக நாம் தமிழர் கட்சி பார்க்கிறது.

இந்திய நாட்டில் இந்தி பேசும் மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தொன்றுதொட்டு வணங்கிவரும் கோயிலில் தமிழில் இறைவனை வழிபட எதிர்க்கும் தீட்சிதர்களுக்கு சாதகமான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கிறது.

இப்போது தமிழரின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கிறது. இந்திய அரசும், அதன் அதிகார மையங்களும் இப்படி தமிழ் தேசிய இனத்தின் மீது நடத்தும் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தமிழர்களை தனிமைப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியன் என்கிற உணர்வில் இருந்து அந்நியப்படுத்தியும் வருகிறது என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்கிறோம்" என்று சீமான் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம். வரும் 11-ம் தேதி இடிந்தகரை போராட்டம் தொடங்கி ஆயிரமாவது நாள்- உதயகுமார்


அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

`பூவுலகின் நண்பர்கள் அமைப்பு’ தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இப்போது மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என்ற நம்பிக்கையில் மனுவை தள்ளுபடி செய்ததாக கூறியிருக்கிறார்கள். அரசாங் கத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை இருந்தது என்றால், எதற்காக இதற்கு முன் 15 பரிந்துரைகளை கூற வேண்டும். பரிந்துரைகளை அரசு நிறைவேற்றாதபோது, அது குறித்து விசாரணை நடத்து வதுதான் முறையாக இருக் கும். அதை விடுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப் பப்பட்ட வழக்குகளை, தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. ஆனால், இதுவரை 101 வழக்குகளை தள்ளுபடி செய்ய வில்லை. அணு உலைக் கழிவு எங்கே கொட்டப் படுகிறது? அதற்கு எந்த வகை யில் பாதுகாப்பு செய்யப் பட்டுள்ளது என்ற சந்தேகங் களுக்கு விளக்கம் இல்லை.

கூடங்குளத்தில் இருந்து 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது என்கிறார்கள். ஆனால், அது எங்கு பயன் படுத்தப்படுகிறது என ஏன் சொல்லவில்லை? கூடங்குளம் அணு உலை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம். வரும் 11-ம் தேதி இடிந்தகரை போராட்டம் தொடங்கி ஆயிரமாவது நாள். அன்றைய நாளில் இடிந்த கரையில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அன்றைய தினம் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media