BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 10 December 2014

உணவே மருந்து : பீட்ரூட்டின் மருத்துவப் பலன்கள்


'''பீட்ரூட் சாப்பிடு செல்லம்... ரத்தம் உடம்பில் ஊறும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிச் சொல்லி ஊட்டுவோம். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாகத் துணைபுரிகிறது. அந்தக் காலத்தில் ரோமானியர்கள் காய்ச்சல், மலச்சிக்கல், புண், தோல் பிரச்னைகள் ஆகியவற்றைச் சரிப்படுத்த, பீட்ரூட்டைப் பயன்படுத்தினர். ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, வீக்கங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்டது பீட்ரூட்.

பீட்ரூட்டின் மருத்துவப் பலன்கள் பற்றி புதுச்சேரியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ஸ்ரீதர் சொல்கிறார்... 'பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிட்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில், பீட்ரூட்டை வாரத்துக்கு நான்கு நாட்கள் சாப்பிட்டாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்ல பலனைத் தரும். பீட்ரூட் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், குழந்தைகள் அதன் நிறத்துக்காகவே விரும்பிச் சாப்பிடுவார்கள்' என்றவர், பீட்ரூட்டின் பலன்களைப் பட்டியலிட்டார்.

  • பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சம்பழச் சாற்றில் தோய்த்து சாப்பிட்டு வர, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.
  • பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
  • கல்லீரல் கோளாறுகளுக்கும், பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கும் பீட்ரூட் மிகச் சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால், அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும். 
  • பீட்ரூட்டை அரைத்துச் சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.
  • பல மாதங்களாக மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரவு படுக்கப் போவதற்கு முன், பீட்ரூட் சாறை நீருடன் கலந்து அரை டம்ளர் அருந்தலாம்.
  • பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
  • தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுக்கு இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால், பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
  • பீட்ரூட் சாறுடன், படிகாரத்தைப் பொடியாக்கிச் சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில் தடவ, உடனடியாகச் சரியாகும்.
  • தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால், கொப்புளங்கள் விரைவில் ஆறும்.
  • பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொரி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர, அனைத்தும் குணமாகும்.
  • புற்றுநோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகிவந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமையும் பீட்ரூட்டுக்கு உண்டு.

சத்யார்த்தி, மலாலாவுக்கு இன்று நோபல் பரிசு

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் புதன்கிழமை (டிச. 10) அந்தப் பரிசு வழங்கப்படவிருக்கிறது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறும் பரிசு வழங்கும் விழாவில் அவர்களிருவருக்கும் நோபல் பதக்கம், நோபல் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும், நோபல் பரிசுத் தொகைக்கான ஆவணங்களும் அவர்களிடம் அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.6.8 கோடி) இருவரும் பகிர்ந்துகொள்கின்றனர். இதுகுறித்து கைலாஷ் சத்யார்த்தி கூறுகையில், ""இந்தப் பரிசை இந்தியாவின் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் காணிக்கையாக்கவிருக்கிறேன்'' என்றார். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தனது குடும்பத்தினருடன் நடந்து செல்கிறார் கைலாஷ் சத்யார்த்தி (இடமிருந்து 3-ஆவது). நாள்: திங்கள்கிழமை.

தமிழ் மேம்பாட்டுக்கான திட்டங்களைத் தாருங்கள்

தமிழ் வளர்ச்சி-மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கைளைத் தந்தால், அவற்றைப் பரிசீலிக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மூ.ராசாராம் தெரிவித்தார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கலாசாரம், இலக்கியம், கலை தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கம், சென்னை பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், "ஆஸ்திரேலியாவில் தமிழர்' என்ற நூலை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் வெளியிட, செய்தி-தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மூ.ராசாராம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், ராசாராம் பேசியது: தமிழ் மொழியானது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாக இருந்த போதும், இப்போதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் பேசப்பட்டு வருகிறது. அதன் வடிவமைப்பு, இலக்கணம், பேச்சுவழக்கில் மாறுபாடுகள் ஏற்பட்டாலும், அதன் பழமைத்தன்மை இன்னும் மாறவில்லை.

சங்க இலக்கியங்களில் தமிழ் மொழி குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளதுடன், வர்த்தகம் குறித்த விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த மன்னர்கள் மற்ற நாடுகளுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகளை பட்டினப்பாலை தெளிவாக விளக்குகிறது. சோழ மன்னர்கள் அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தனர். ஐரோப்பா, மேற்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அப்போது அயல்நாட்டு வர்த்தகம் செய்யப்பட்டது. கப்பல் கட்டுமானம் என்பது அப்போது முக்கிய தொழிலாக இருந்தது. அயல்நாட்டு வர்த்தகமானது, அவர்கள் அந்த நாடுகளுக்குச் சென்று குடி அமரவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. குறிப்பாக, மியான்மர், மலேசியா, வியாட்நாம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு வணிகம் செய்வதற்காக தமிழர்கள் சென்று, அங்கேயே குடியிருந்தனர். தமிழர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்கள் தங்களது தாய்மொழியை மறக்காமல் இருக்கின்றனர். இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழியாக தமிழ் விளங்குகிறது. மலேசியாவிலும் தமிழ் மொழி பேசப்படுகிறது. பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என தமிழர்கள் இல்லாத நாடுகளே இல்லை.

அந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு வார இறுதி நாள்களில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அங்குள்ள தமிழ் ஆசிரியர்கள் இதனை ஒரு கௌரவப் பணியாகச் செய்து வருகிறார்கள். தமிழ் மொழி மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு காரணமாக, மொழிக்கு ஒரு சேவையைச் செய்யும் வகையில் தமிழை கற்றுக் கொடுக்கின்றனர். தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கென கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.300 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, மேம்பாட்டுக்கென உள்ள செயல் திட்டங்களை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புங்கள். தமிழ் ஆர்வலர்கள் அனுப்பும் இந்த பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராசாராம்.

தமிழக மீனவர்கள் 43 பேர் சிறைபிடிப்பு


தமிழக மீனவர்கள் 43 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்சந்திரன், ராஜ் ஆகியோரின் 2 படகுகளில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ரவிச்சந்திரன், கணேசன், இளையராஜா, பூபாலன் உள்பட 18 பேர் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர். மேலும், இதே மாவட்டத்தைச் சேர்ந்த கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்களோடு நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், செல்லியப்பன் என்ற சுப்ரமணி ஆகியோரது 2 படகுகளில் சென்ற மீனவர்களும் கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மொத்தம் 5 படகுகளைச் சேர்ந்த 43 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்ததாக காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் அரசுத் துறையினருக்கு வராத நிலையில், சுபாஷ்சந்திரன், ராஜ் என்பவரது படகில் சென்ற மீனவர்கள், கோட்டுச்சேரிமேடு மீனவ பஞ்சாயத்தார்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கைது செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்தனர். இதையடுத்து, இந்த கிராமப் பஞ்சாயத்தார்கள், காரைக்கால் மீன்வளத் துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தெரிவித்த மீன்வளத் துறை துணை இயக்குநர் ந. இளையபெருமாள், இது கிராமப் பஞ்சாயத்தார்கள் தெரிவித்த தகவல், அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றார்.

பலத்த பாதுகாப்புடன் திருமலை வந்தார் ராஜபட்ச


இலங்கை அதிபர் ராஜபட்ச பாதுகாப்பாக திருமலையை அடைந்தார். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை மாலை, ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வந்தார். பிறகு, ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிபேட் மூலம், திருப்பதி என்.டி.ஆர் மைதானத்துக்கு வந்த அவர், திருப்பதியிலிருந்து சாலை மார்கமாக திருமலைக்குச் சென்றார். திருமலைக்கு சென்ற அவரை, தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச் செண்டு அளித்து வரவேற்று, திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். புதன்கிழமை அதிகாலை, சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்கும் அவர், அதையடுத்து காலை 9.30 மணிக்கு தனி விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அவருடைய வருகையை ஒட்டி, சிறப்புப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கேரஹவுண்ட்ஸ் படையினர், வெடிகுண்டு அகற்றும் படையினர், மோப்ப நாய்ப் பிரிவு படையினர் என பலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இலங்கையில் ஹிந்து சமய கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி, பல ஹிந்துக்களை கொன்ற ராஜபட்ச ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரக்கூடாது என மதிமுக, ஆந்திர விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் உள்ளிட்டோர் திருப்பதி பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸôர் கைது செய்து ரகசியமாக வைத்துள்ளனர்.

ராஜபட்சவின் வருகையை முன்னிட்டு, திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாதாரண பக்தர்கள் திருமலையில் உலவ தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜபட்ச புதன்கிழமை, சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ளவுள்ளதால் அந்தச் சமயம் கோயிலுக்குள் அங்கப்பிரதட்சணம் செய்ய பக்தர்களுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

மீனவர் பிரச்னையில் மத்திய அரசு நாடகம் : மக்களவையில் அதிமுக குற்றச்சாட்டு

"தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய அரசும், இலங்கை அரசும் நாடகமாடுகின்றன' என்று மக்களவையில் அதிமுக குற்றம்சாட்டியது. இக்குற்றச்சாட்டை தற்போது மக்களவைத் துணைத் தலைவராக இருக்கும் மு. தம்பிதுரையே மக்களவையில் பகிரங்கமாக முன்வைத்ததைத் தொடர்ந்து, அவையில் இருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், எந்த விளக்கமும் அளிக்க முடியாமல் அமைதியானார். "இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள்' என்ற தலைப்பில் மக்களவையில் அதிமுக குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால் உள்ளிட்டோர் கொண்டு வந்த சிறப்புக் கவன ஈர்ப்பு நோட்டீஸூக்கு சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்தார். அப்போது "கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பது பொருத்தமாக இருக்காது' என்று குறிப்பிட்டார்.

இதனால், அதிருப்தி அடைந்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் சிறப்பு அனுமதி பெற்றுப் பேசியதாவது: மரண தண்டனை விவகாரம்: "முதலாவதாக, ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த போது "அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யானவை' என்று நமது வெளியுறவுத் துறை அறிவித்தது. தண்டனையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐவரும் விடுதலை செய்யப்படுவது உறுதி என்பதை அறிந்த மகிந்த ராஜபட்ச, பிரச்னையில் இருந்து தப்பித்துக் கொள்ள அவசர, அவசரமாக அனைவருக்கும் பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்துள்ளார்.

இலங்கை மீது புகார்: இரண்டாவதாக, இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமிழர் வாக்குகளை பெறுவதற்காக தமிழக மீனவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்கு மத்திய அரசும் துணைபோய் உள்ளது. கச்சத் தீவை மீட்க வேண்டும்: மூன்றாவதாக, கச்சத்தீவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைவிட நாடாளுமன்றமே முதன்மையானது. சட்டப்படி மேற்கொள்ளப்படாத ஓர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஏன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதிக்கக் கூடாது? இந்தியாவின் மேற்குவங்கத்துக்குச் சொந்தமான ஒரு சிறிய நிலப் பகுதியை வங்கதேச அரசுக்கு விட்டுக் கொடுக்க மத்திய அரசு இப்போது நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்ய முயற்சி எடுத்து வருகிறதே. அத்தகைய நடவடிக்கை, கச்சத்தீவு விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டதா? கச்சத்தீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை எப்படியாவது இந்தியா மீட்டே ஆக வேண்டும்' என்றார் தம்பிதுரை.

மத்திய அரசு விளக்கம்: முன்னதாக, அதிமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸூக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த விளக்கம் வருமாறு: "இலங்கைச் சிறையில் தற்போதுள்ள 38 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு பேசி வருகிறது. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு அந்நாட்டு அரசாங்கத்தின் மிக உயரிய அளவில் பேச்சு நடத்தியது. அதன் விளைவாக, ஐவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 82 படகுகள் உள்ளன. அவற்றை மீட்கவும் உரிய முறையில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மோசமான வானிலையால் இலங்கைக் கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர்கள் மூவரையும், சேதம் அடைந்த அவர்களது படகுகளையும் பழுது நீக்கி தாய்நாட்டுக்கு இலங்கைக் கடற்படை அனுப்பி வைத்தது. மோசமான வானிலையால் கடலில் வழி மாறிச் செல்லும் மீனவர்களின் படகுகளில் தானியங்கி முறையில் அடையாளம் காணும் கருவியைப் பொருத்தி, படகுகளின் நடமாட்டத்தைக் கண்டறியும் வசதி விரைவில் உருவாக்கப்படவுள்ளது' என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

கடற்படைத் தளம் அமைக்க வேண்டும்: ஆனால், இந்த விளக்கத்தால் திருப்தியடையாத டாக்டர் வேணுகோபால் பேசியதாவது: "தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் அடாவடித்தனம் இன்னும் தொடர்கிறது. தமிழக மீனவர்கள் 5 பேரின் சட்ட உதவிக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நிவாரணத்துக்காகவும் தமிழக அரசு இதுவரை ரூ.63.85 லட்சம் செலவிட்டுள்ளது. மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ரூ.20 லட்சத்தை தமிழக அரசு அனுப்பி வைத்தது. கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேசமயம், முந்தைய காலத்தில் திரிகோணமலையில் வல்லரசு நாடு ஒன்று கடற்படைத் தளம் அமைக்க முற்பட்ட போது அதை தமிழகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும், பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் எதிர்த்தனர். அதே அணுகுமுறையைக் கடைப்பிடித்து கச்சத்தீவை மீட்டு அங்கும், மன்னார் வளைகுடாவிலும் நமது கடற்படையின் தளத்தை ஏன் அமைக்கக் கூடாது? என்று வேணுகோபால் கேள்வி எழுப்பினார். இதேபோன்ற கருத்துகளை அதிமுக உறுப்பினர்கள் குமார் (திருச்சி), ஜெயவர்தன் (தென் சென்னை), கே. கோபால் (நாகப்பட்டினம்) ஆகியோரும் வலியுறுத்திப் பேசினர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சம்பால் தொகுதி பாஜக உறுப்பினர் சத்யபால் சிங்கும் இந்த விவாதத்தில் பங்கேற்று, "கச்சத்தீவு தொடர்பாக இலங்கையுடன் மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தம் குழப்பம் வாய்ந்தது. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

திகைப்பு: இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் அளித்த விளக்கத்தால் அதிருப்தியடைந்த தம்பிதுரை, இலங்கை அரசும், மத்திய அரசும் நாடகமாடுவதாகக் குற்றம்சாட்டிப் பேசினார். மக்களவைத் துணைத் தலைவராக இருக்கும் அவர் சுமத்திய குற்றச்சாட்டால் அவையில் இருந்த பாஜக உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் பதில் கூற முடியாமல் திகைத்தபடி இருக்கையில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media