BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 14 December 2014

உணவே மருந்து : இஞ்சியின் மகத்துவம்

இறைவனுடை படைப்புக்களின் மூலம் நேரடியாக விளையக் கூடிய பொருட்களிடம் எப்போதும் தொடர்பில் இருங்கள். மனிதனுடைய சொற்ப்ப அறிவுக்கு உட்பட்டு தயாரிக்கப் படும் உணவு பண்டங்களை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுங்கள். சாஸ், மையோனஸ், பீசா, பர்கர், சேன்வெஜ், மைதா,ஜீனி இதுபோல் உங்களுக்கு தெரிந்த இன்னும் பல பொருட்களை விட்டு உங்களை தடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்ட அலோபதி என்ற வைத்தியம் செய்யும் முறை இதன் பக்கமே நீங்கள் போக மாட்டீர்கள் இறைவன் நாடினால். இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் என்ற பேச்சுக்கே உங்கள் வாழ்க்கையில் இடம் கிடையாது.

முதல் டெஸ்ட் : வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் விராட் கோலி, முரளி விஜய் ஆகிய இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 517/7 ரன்களில் டிக்ளேர் செய்தது. இந்தியா 444 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. சனிக்கிழமை ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ததால், இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது மிச்செல் ஜான்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், "ரீப்ளே'யில் பந்து அவரது தோள்பட்டையில் பட்டுச் சென்றது தெரியவந்தது.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த புஜாரா 21 ரன்களில், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் பந்தில் வீழ்ந்தார். பின்னர் விராட் கோலியும், முரளி விஜயும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து முன்னேற, இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பினர். கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்தார் விராட் கோலி. அவருக்கு முரளி விஜயும் சிறந்த ஒத்துழைப்பை அளித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக 99 ரன்கள் எடுத்திருந்தபோது, நாதன் லியான் பந்தில் எல்டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து, ஐந்தாவது டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறினார் முரளி விஜய். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே டக் அவுட்டிலும், ரோஹித் ஷர்மா 6 ரன்களிலும் ஆட்டமிழந்து "கிலி' ஏற்படுத்தினர். ரித்திமான் சாஹா 16 ரன்களுடன் திருப்தி அடைந்தார். ஆனாலும், மறுமுனையில் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது எட்டாவது சதத்தை அடித்தார்.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி கடைசியாக நாதன் லியான் சுழலில் சிக்கினார். அவர் 175 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 141 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதற்கு பின் வந்த, கரண் ஷர்மா, முகமது ஷமி, வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இதனால், 315 ரன்களில் இந்தியா ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாதன் லியான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

தருமபுரியில் பள்ளிகளுக்கு இடையேயான டி.டி.சி.ஏ. கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் வருகிற டிச.18ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் எஸ்.மார்ட்டின்ராஜ் வெளியிட்ட அறிக்கை: இம்மாத கடைசி வாரத்தில் 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற உள்ளது. தருமபுரி வருவாய மாவட்டத்துக்குள்பட்ட பள்ளிகள் மட்டுமே பங்கேற்கலாம். வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் வருகிற டிச.18ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 94434-64935 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தொடர் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் 215 தனியார் பள்ளிகள்

கோவை மாவட்டத்தில் 215 நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் ஜி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சாவித்திரி, பொருளாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜி.கிருஷ்ணராஜ் கூறியது: கோவை மாவட்டத்தில் மொத்தம் 225 நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 140 பள்ளிகளுக்கு இந்த ஆண்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதேபோல் மொத்தம் உள்ள 248 மெட்ரிக் பள்ளிகளில் 75 பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தொடர்பான கோப்புகளைக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தால், விளக்கம் அளிக்கும்படி கேட்டு திருப்பி அனுப்புகின்றனர்.

அவர்கள் கேட்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பினால் வேறு ஏதேதோ காரணங்களைக் கூறி அவற்றை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். இதேபோல் மாநிலம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதுவது கேள்விக்குறியாகி உள்ளது. பாதிக்கப்படும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டால் அது சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மாறவும் வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கீகாரம் வழங்க முடியாது என்று காரணம் கூறுவதை ஏற்க முடியாது.

தொடக்கக் கல்வி, மெட்ரிக் அலுவலகங்களில் பொறுப்பு அலுவலர்களே இருப்பதால் இந்தப் பிரச்னை தொடர்பாக எங்களுக்கு சரியான விவரங்களை அறிய முடிவதில்லை. எனவே அனைத்து அலுவலகங்களுக்கும் நிரந்தர அலுவலர்களை நியமிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தொடர் அங்கீகாரம் வழங்கக் கோரி வரும் 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் தொடக்கக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர் அங்கீகாரம் கோரியும், கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத இலவச சேர்க்கைக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மாநிலம் முழுவதிலும் சுயநிதி பள்ளிகளின் ஆசிரியர்கள் தனியாரால் தாக்கப்பட்டு வருவதால், சுயநிதி பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக கிருஷ்ணராஜ் மேலும் கூறினார்.

அங்கீகாரம் நிறுத்தப்படவில்லை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்இதற்கிடையே தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை நிறுத்தி வைக்கவில்லை என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் ஆர்.பிச்சை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவரிடம் தொடர் அங்கீகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கோவையில் மட்டுமன்றி தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும், யாருடைய விண்ணப்பமும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். 25 சதவீத இலவச சேர்க்கை நடத்திய தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து அரசுதான் விளக்கம் அளிக்க முடியும். இது குறித்த அறிவிப்பை நாளிதழ்கள் மூலம் அரசே தெரிவிக்கும் என்றார் அவர்.

முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி : மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: முல்லைப் பெரியாறு பகுதியில் புதிதாக ஒரு அணையைக் கட்ட கேரள அரசு உத்தேசித்துள்ள இடத்தில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் கீழ்வரும் தேசிய வன விலங்குகள் வாரியமானது அனுமதி அளித்துள்ளதாக அதனுடைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வானது, கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு திட்டவட்டமாக தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழுவை நீதிமன்றம் அமைத்தது.

அணையை ஆய்வு செய்த அந்தக் குழுவானது அணை உறுதித்தன்மையுடனும், பூகோள ரீதியாகவும், வடிவமைப்பு வகையிலும் பலமாக இருப்பதாகத் தெரிவித்தது. மேலும், அணையின் நீர் அளவை 142 அடி வரை உயர்த்தலாம் எனவும், புதிய அணை கட்டும் கோரிக்கையை கேரள அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறியது. நீதிபதி தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றமானது முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கும் உத்தரவை கடந்த மே மாதம் அளித்தது. இந்த விவகாரம் முடிவுற்று, கேரளத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய அணை கட்டுவதற்காக தேசிய வனவலங்குகள் வாரியத்திடம் அந்த மாநில அரசு மீண்டும் விண்ணப்பித்துள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்த முழுவிவரங்களையும் தெரிவிக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்: முல்லைப் பெரியாறு அணையானது பூகோள, நீரியியல் ரீதியாக வலுவானது என கண்டறியப்பட்டதுடன், அணையில் நீரின் அளவை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள தமிழகத்துக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிதாக மற்றொரு அணையைக் கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமானது. எனவே, தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக்குழுவானது புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளத்துக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கடந்த 1886-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையானது தமிழக அரசுக்குச் சொந்தமாகும். அது மாநில அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையில் தமிழகத்துக்குள்ள உரிமையானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குத்தகை ஒப்பந்தம், அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் முடிவுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான அனுமதி கோரி மத்திய அரசின் எந்தத் துறைக்கு விண்ணப்பித்தாலும் அதன்மீது நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை உடனடியாக எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஆதார் எண் அவசியம்


வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்த விவரம்: ஆந்திர போக்குவரத்துத் துறையினர் மாநிலத்தின் முக்கியமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தனி கவுன்ட்டர்களை திறந்துள்ளனர். இவற்றில், பெட்ரோல். டீசல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் ஆதார் அட்டை எண், வாகனத்தின் பதிவெண், ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றை அளித்தால்தான் அவர்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் தரப்படும். ஆந்திர போக்குவரத்துத்துறையின் இந்த அதிரடித் திட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media