BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 29 April 2014

பாமக போட்டியிட்ட தொகுதிகளில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள்- ராமதாஸ்

பாமகவினருக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கும் வேளையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் வன்முறைகள் கவலையளிக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் இத்தகைய வன்முறைகள் நடத்தப்படுவது இயல்பான ஒன்றாக தோன்றவில்லை.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடி பகுதியில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் எடுத்துசென்ற அ.தி.மு.க.வினரை தடுத்ததற்காக பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதியமான் கோட்டை என்ற இடத்தில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை தடுக்க முயன்ற பா.ம.க.வினரை அந்த ஊர் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி அப்பாவி பா.ம.க.வினர் 3 பேரை கைது செய்திருக்கிறார். பென்னாகரத்திலும் இருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நெமிலி, ஆரணி தொகுதியில் நடுக்குப்பம், அவ்வையார் குப்பம் ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்னியர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக நியாயம் கேட்கச் சென்ற வன்னியர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூரில் வாக்களிக்க வந்த சென்னைஉள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றும் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாழாகியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதால் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் பா.ம.க.வினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஆளுங்கட்சியினரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல்துறை மூலம் பா.ம.க.வினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். தோல்வி பயம் காரணமாக இவ்வாறு செய்வது வாக்களித்த மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும்செயலாகும்.

எனவே, வட மாவட்டங்களில் நிகழும் வன்முறைகளை தடுப்பதுடன், அது குறித்து நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் - பாஜக இடையே மறைமுக உடன்பாடு: கேஜ்ரிவால்

வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, வாரணாசியில் குண்டர்கள் மூலம் மக்களையும் ஆம் ஆத்மி தொண்டர்களையும் அச்சுறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன என்று கூறியிருந்தார். மேலும் அவர் கூறியதாவது:

"மோடி போட்டியிடும் தொகுதியில் சோனியாவும், சோனியா போட்டியிடும் தொகுதியில் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ளாதது ஏன்?

ராபர்ட் வதேரா நில பேர விவகாரத்தில் நரேந்திர மோடி தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு அக்கறை இருந்தால், ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு, வதேராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?

அதேபோல், பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் மற்றும் அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பி வரும் காங்கிரஸ், அது குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் அழுத்தம் தராதது ஏன்?

பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கிறார்களே தவிர, எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதில் இருந்தே அவர்கள் கைகோத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுக உடன்பாடு உள்ளது.

டெல்லியில் ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானிக்கு எதிராக என்னால் வழக்குத் தொடர முடிந்தது. அப்படியிருக்க, கடந்த 4 மாதங்களாக வதேராவுக்கு எதிராக ராஜஸ்தானின் பாஜக அரசால் வழக்குப் பதிவு செய்ய முடியாதது ஏன்?

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் பேசி இருக்க வேண்டும் : ஜெய்ராம் மகேஷ் கவலை

காங்கிரசின் கிராம வளர்ச்சி துறை அமைச்சர் இன்று அளித்த பேட்டியில், காங்கிரசு கூட்டணியின் இரண்டாம் கட்ட ஆட்சி மக்களிடையே நன்றாக தொடர்பில் இல்லை . பிரச்சினைகளுக்கான பதில்கள் பலமாக இல்லை . பிரதமர் மற்றும் மற்ற தலைவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசி இருக்க வேண்டும் என்றார் . பிரியங்கா காந்தி நன்றாக பேசியும் மக்களிடையே நல்ல தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் , ஆனால் ராகுல் தான் கட்சி தலைவர் என்றார் .

தொலைகாட்சி நேரலை போது, தீயிட்டுக்கொண்டு கட்சி தலைவரையும் கட்டிப்பிடித்த தொண்டர்


லக்னோவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் 'ஜன்மத் 2014’ என்ற நேரலை விவாத நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரத்தில், விவாதம் தொடர்பாக உணர்ச்சிவசப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இளம் தொண்டர் ஒருவர், தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீயிட்டு பின் அங்கிருந்த பகுஜன் சமாஜ் தலைவர் கம்ரூசம்மா பவுஜீயை கட்டிப்பிடித்தார்.

தொண்டரின் இந்த செயலால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தீயிட்டுக் கொண்ட தொண்டர், துர்கேஷ் என்று அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவத்தில், துர்கேஷ் மற்றும் பகுஜன் தலைவர் பவுஜ் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

மோடியை மீண்டும் விமர்சித்தார் மம்தா !!

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மோடியும் மம்தா பானர்ஜியும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர் .

இன்று மம்தா அளித்த பேட்டியில் , மோடி பிரதமர் ஆனால் நாடு முழுவதும் தீக்கு இரையாக்கப் படும் .

ஏற்கனவே மோடியை கசாப்புக் கடைக்காரர் என மம்தா குறிப்பிட்டு இருந்தார் .

மோடியை பார்த்து கசாப்புக்காரர்கள் வெட்கப்படுகின்றனர்- லாலு பிரசாத் யாதவ்


ராஷ்டீரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ் " நாட்டில் உள்ள கசாப்புக்கடைக்காரர்கள் எல்லாம், நரேந்திர மோடியைப் பார்த்து வெட்கப்படுகின்றனர். மோடியா இந்நாட்டின் பிரதமர் ஆகப் போகிறார் என்று கசாப்புக்க்டைக்காரர்கள் திகைத்துள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 'குஜராத்தின் கசாப்புக்கடைக்காரரால் அவரது மனைவியையே பார்த்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் நாட்டை எப்படி கவனிப்பார்?' என்று கூறினார்.

முன்னதாக, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 'குஜராத் மாநிலத்தின் கசாப்புக்காரர்' என்று திரிணமூல் காங்கிரஸும், மம்தா பானர்ஜீயின் ஓவியம் தொடர்பாக பாஜகவும், ஒருவரை ஒருவர் சாடி வந்தது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் சிறப்புக் காட்சியை நரேந்திர மோடி பார்க்க ஏற்பாடு

சென்னையில் ரஜினியை சந்தித்து தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த குஜராத் மாநில முதல் மந்திரியும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மசாலா படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்றும், குறிப்பாக ரஜினியின் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தை பார்த்த பிறகு அவரது ரசிகர்களில் ஒருவராக மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கோச்சடையான்’ படத்தை பார்க்க மோடி சமீபத்தில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவருக்கான சிறப்புக் காட்சிக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  மே 8-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள சிறப்புக் காட்சியில் இப்படத்தை நரேந்திரமோடிக்கு திரையிட்டு காட்ட முடிவெடுத்துள்ளனர். இந்த சிறப்புக் காட்சியில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் படத்தைக் கண்டு ரசிக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டை ‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் மும்பை ஈரோஸ் இண்டர்நேஷனல் பிக்சர்ஸ் புரெடக்‌ஷன் நிறுவனம் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர, குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் மோடிக்காக இப்படத்தை திரையிட்டுக் காட்டப் போவதாகவும், இந்த சிறப்புக் காட்சியில் ரஜினி பங்கேற்க மாட்டார். படத்தின் இயக்குனர் சவுந்தர்யா அஷ்வின் இதில் பங்கேற்பார் என்று மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

16 வயது கர்ப்பிணி பெண்ணை அவளது தாயே வெட்டி கொலை


மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள முட்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று, அவளது நகைகளை திருடிச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் தாயார் சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறவே, சந்தேகப்பட்ட போலீசார்,  புகார் அளித்த அந்த பெண்ணின் தாயாரிடமே விசாரணை நடத்திய போது, அவர் அதிர்ச்சிகரமான உண்மையை ஒப்புக் கொண்டார். அதாவது , அவர் தனது மகள் 4 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், கருவுக்கு காரணமானவன் யார்? என்ற உண்மையை மறைத்து, கருவையும் கலைக்க மறுத்த அவளை உறங்கும் போது கோடாரியால் வெட்டிக் கொன்று விட்டு, கொள்ளையர்கள் மீது பழியை போட முயன்றதாகவும் ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து, அந்த பெண்னை கைது செய்த போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பிரேமலதா விஜயகாந்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா (வயது 48), சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்தேன். கடந்த 14-ந்தேதி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரசாரம் செய்தேன். அப்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரண தொகை வழங்கப்படவில்லை. இந்த நிவாரண தொகைகள் அனைத்தும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் உறவினர்களுக்கும், ஆளும் கட்சியினருக்கும், விவசாய நிலமே இல்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என்று பேசினேன். எனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு இவ்வாறு பேசினேன். ஆனால், நான் பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் விதமாக பேசியதாக ஈரோடு நகர அ.தி.மு.க. செயலாளர் செய்யது என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீது கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சரின் நிர்பந்தத்தால், என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் விதமாகத்தான் நான் பேசினேன். அமைதியை சீர்குலைக்கும் விதமாக எதுவும் பேசவில்லை. எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், பிரேமலதா விஜயகாந்திற்கு முன் ஜாமீன் வழங்கினார்.  மேலும்,  வழக்கு விசாரணைக்கு தேவைப்படும்போது மட்டும், கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழகத்தில் 3,793 வழக்குகள் பதிவு


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் மார்ச் 5-ந்தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அன்றிலிருந்து இதுவரை, பொது சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவது போன்ற விதிகளை மீறியதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 845 புகார்கள் வந்தன. அவற்றின் அடிப்படையில் 2,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தமிழகமெங்கும் வாகன விதிகளை மீறியதாக 262 வழக்குகள், ஒலிபெருக்கி விதிகளை மீறியதாக 20 வழக்குகள், சட்டவிரோதமாக கூட்டம் நடத்தியதாகவும், பேசியதாகவும் 81 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுத்ததாக 90 வழக்குகளும், மேலும் சில விதிமீறல்கள் தொடர்பாக 436 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆக மொத்தத்தில் பல்வேறு தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 3,793 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

உத்தரப் பிரதேசம் ஜான்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் உமா பாரதியை ஆதரித்து கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் அவர் பிரச்சாரம் செய்தார். அந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசியதாவது:

இந்தி டி.வி. ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான கபில் சர்மாவின் நிகழ்ச்சி விரைவில் நிறைவு பெற்றுவிடும் என்று கருதுகிறேன். ராகுல் காந்தியின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை ஒளிபரப்பினால் கபில் சர்மா காணாமல் போய்விடுவார். இப்போதைய தேர்தல் பிரச்சார சூடு எல்லாம் பறந்துபோய்விடும். பொழுதுபோக்குக்காக நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம். ராகுல் வீடியோக்களை பாருங்கள். நாள் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் மனஇறுக்கத்தில் இருந்தால் உடனடியாக ராகுலின் பேச்சு களை கேளுங்கள். அவரது கணித அறிவின்படி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையே 6 கோடிதான். இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 125 கோடி. அதையும் தாண்டி குஜராத்தில் 27,000 கோடி பணியிடங்கள் காலியாக இருப்பதாக ராகுல் கூறுகிறார். எந்த மாதிரியான நபரை தேர்தல் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது என்பது எனக்குப் புரியவில்லை.

இதேபோல் குஜராத்தில் லோக்ஆயுக்தா இருந்திருந்தால் நான் சிறைக்குச் சென்றிருப்பேன் என்று ராகுல் கூறியிருக்கிறார். குஜராத் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஒருவரை குற்றவாளியாக அறிவித்தது மாநில லோக்ஆயுக்தாதான் என்பதை ராகுலுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவரது மகன்கூட தற்போது மத்திய அரசில் அமைச்சராக உள்ளார். இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதே ராகுலுக்கு தெரியவில்லை.

குஜராத்தில் நர்மதா நதி அணைத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு மாநிலத்தில் பாஜக ஆட்சியை அசைக்க முடியாது. அதனால் அந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று சோனியாவுக்கு ஒருவர் (அகமது படேல்) ஆலோசனை கூறியுள்ளார். அதனால்தான் அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு இன்றுவரை அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறது. நான் டீ விற்றேனா, இல்லையா என்பது குறித்து விசாரிக்க சுமார் 100 பேரை எனது சொந்த ஊரான வட்நகருக்கு காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறு நரேந்திர மோடி பேசியிருந்தார்.

பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து !!

இன்று காலை 6.25 மணி அளவில் பிரதமர் அலுவலகத்தில் யுபிஎஸ்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் தீ பிடித்தது . விரைந்து வந்த ஆறு காவல்துறை வண்டிகள் தீயை அணைத்தனர் . யாருக்கும் காயம் ஏற்படவில்லை .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media