திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று பேசியதாவது:
காங்கிரஸ் அரசு செய்த பல்வேறு ஊழல்களில் மிகப் பெரும் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழலில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவை, நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக கருணாநிதி அறிவித்துள்ளார்.
தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்து, பின்னர் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் மூலம் சன் குழுமத்தில் 675 கோடி ரூபாய் முதலீடு செய்ய வழி வகுத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தயாநிதி மாறன். பி.எஸ்.என்.எல்.-லின் 300 தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக தனது வீட்டில் ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தயாநிதி மாறன். இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தயாநிதி மாறனை மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கருணாநிதி.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, "போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது" என்று கூறி உள்ளார் கருணாநிதி. அதாவது, அவர்கள் ஊழல் புரியவில்லை என்று அவர் சொல்லவில்லை. சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை தான் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி. இப்படிப்பட்ட தி.மு.க-விற்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடி பேசினார்.