BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 9 March 2014

போலீஸ் வாகனம் மோதிய‌ பெண்ணுக்கு இழப்பீடு தராததால், டிஜிபி அலுவலக பொருட்களை ஜப்தி செய்யப்படும் நிலை


சென்னையை சேர்ந்த கலைச்செல்வி என்பவரை, 2009-ம் ஆண்டு போலீஸ் வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவருக்கு இழப்பீடு கோரி சென்னையில் உள்ள சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் கலைச்செல்வி வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 802 இழப்பீட்டுத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை காவல் துறை அதிகாரிகள் நிறைவேற்றாததனால், கலைச்செல்வி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். இதுகுறித்து விசாரித்த சிறு வழக்குகள் நீதிமன்றம், டிஜிபி அலு வலகத்தில் இருந்து இழப்பீட்டுத் தொகை அளவு மதிப்புள்ள பொருட்களை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், கலைச்செல்வியின் வழக்கறிஞர்  டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பிய‌ நோட்டீஸ் அனுப்பினார். அதில்,  ‘நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்திக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜப்தியைத் தவிர்க்க வேண்டுமானால், நீதிமன்றம் உத்தரவிட்டபடி உரிய இழப்பீட்டுத் தொகையை எனது கட்சிக்காரருக்கு (கலைச்செல்விக்கு) வழங்கும்படி தங்கள் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, இலங்கையில் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப் படுத்தியுள்ளேன்- ராஜபக்சே

 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வ தேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பேசிய ராஜபக்சே, அந்த தீர்மானம் குறித்து எங்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. என்னையும், எனது அரசையும் குறிவைத்து சில சக்திவாய்ந்த நாடுகள் செயல்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் ஆணையர் நவநீதம் பிள்ளை சமீபத்தில் இலங்கை வந்திருந்தார். 4 நாள்கள் தங்கியிருந்த அவர் தவறான தகவல்களை திரட்டிச் சென்றார். இப்போது அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கிறோம்." என்றும் தெரிவித்தார்.

பிரிவினையை கோரிய விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, இலங்கையில் வசிக்கும் அனைவரும் வாழ்வதற்கான உரிமையை தான் உறுதிப் படுத்தியுள்ளதாகவும், மனித உரிமை தொடர்பான நடவடிக்கை அனைத்தையும் எடுத்துவருவதாகவும், காணாமல் போனவர்களை பற்றி விசாரிக்க குழு அமைத்துள்ளதாகவும் ராஜபக்சே தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்து விட்டது, மோடி இந்தியர் நலன் காக்க வந்துள்ளவர்- ராம் ஜெத்மலானி


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்காக வாதாடிய, ராம்ஜெத்மலானிக்கு ம.தி.மு.க வழக்கறிஞர் பேரவை சார்பில், நேற்று சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அப்பொழுது விழாவில் கலந்து கொண்டு தனது ஏற்புரையில் ராம் ஜெத்மலானி பேசியபோது, "இலங்கைத் தமிழர்களுக்கு ராஜிவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் மூலம் இந்திய அரசு துரோகம் செய்து விட்டது. இலங்கையில் போராடுவதற்கு, விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுத்ததே இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு தான். ஆனால் தற்போது அவர்களின் வாழ்வை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது." என்று அவர் கூறினார்.

மேலும், வரவிருக்கும் நாடாளுமன்ற‌ தேர்தலில் நரேந்திர மோடி அதிக ஆதரவு பெறுவார். அவர் இந்திய நலன் காக்க வந்துள்ளவர். ஆனால், காங்கிரஸ் பல தவறுகளை செய்து, ஆம் ஆத்மி கட்சி போன்ற குட்டிக்கட்சிகளின் போர்வையில் மறைக்கப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்த முடிவு பாராட்டுக்குரியது என்றும் மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கருத்து தெரிவித்தார்.

நாட்டை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் சாதுர்யம், சாமர்த்தியம், துணிவு அம்மாவிடமே இருக்கிறது- மதிரை ஆதீனம்


வெள்ளிகிழமை அன்று முதல்வர் ஜெயலலிதாவை ச‌ந்தித்து இருந்தார், மதுரை ஆதீனம்.   ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டி அவர் பேசியதாவது:

நாட்டை வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் சாதுர்யம், சாமர்த்தியம், துணிவு இவை அனைத்தும் அம்மாவிடம் இருக்கிறது. இந்தத் தேர்தலில் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் தான் பெருமளவில் வெற்றிபெறப் போகின்றன. அப்படியொரு சூழல் வரும்போது அம்மா பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது; அது காலத்தின் கட்டாயம். தென் இந்தியர்களை பிரதமராக வரவிட மாட்டார்கள் என்பதெல்லாம் மாயை. அம்மாவை வடக்கும் வரவேற்கும். அதன் தொடக்கம்தான் மம்தா பானர்ஜியும் அம்மாவும் தொலைபேசியில் உரையாடி இருப்பது. அம்மா பிரதமரானால் முல்லைப் பெரியாறு, காவிரி, ஈழம், கச்சத்தீவு இத்தனை பிரச்சினைகளுக்கும் விடிவு பிறக்கும்

இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார். மேலும், ஜெயலலிதாவிற்காக சமயப்பணிகளுக்கு நடுவே, நாற்பது தொகுதிகளிலும் சுமார் ஒரு மாத காலம் பிரச்சாரம் செய்யலாம் என்ற தீர்மானத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வருவதுபோல், கலைஞர் கூட்டணி கதவைத் திறந்தால், இன்னொருவர் அதை சாத்துகிறார்- அழகிரி


செய்தித்தாள் ஒன்றிற்கு அலைபேசியில் பேட்டி கொடுத்திருந்தார் மு.க.அழகிரி. அப்பொழுது தனக்கென சில கோரிக்கைகள் இருக்கிறதாகவும், அதை நிறைவேற்றினால் ஒழிய, திமுகவில் தான் மறுபடியும் இணைய வாய்ப்பில்லை என்று கூறினார்.  கம்யூனிஸ்ட்கள் திமுக அணிக்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு, அழகிரி கூறிய பதிலாவது:

"எம்.ஜி.ஆர். நடித்த‌ அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ‘அண்டாகா கசம் அபூகாகுகும் கதவை திறந்திடு சீசே’ என்று சொல்லுவார்கள். அதேமாதிரி ‘அண்டாகா கசம் அபூகா குகும் மூடிடு சீசே’ என்றும் ஒரு வசனம் வரும். திமுக-வில் இப்பொழுது அது மாதிரிதான் நடந்துக்கொண்டு இருக்கு. அதாவது கலைஞர் கூட்டணி கதவு திறந்து இருக்கிறது என்கிறார். இன்னொருவர் மூடி இருக்கிறது என்கிறார்.

தேமுதிக, திமுக கூட்டணியில் சேராதது அவர்கள் தலையெழுத்து என்றும் பதில் அளித்தார்.

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் பாமக

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் பாமக, இன்னும் சிறிது நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

இறந்து போனதாக கூறப்பட்டவர், மின் அதிர்ச்சி மூலம் திரும்ப உயிர் பெற்றார்



சவுதி அரேபியாவில் 90 வயது நிரம்பிய முதியவருக்கு, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் அருகாமையில் உள்ள கிளினிக் ஒன்றிற்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவ‌ர், முதியவருக்கு இதய துடிப்பு நின்று விட்டதால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறினார்.

எனினும், அந்த முதியவரை அவரது உறவினர்கள், நம்பிக்கையை இழக்காமல் அவரை ஒரு காரில் போட்டுக் கொண்டு 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர்கள் நின்றுப் போன முதியவரின் இதயத்தை மின்சார அதிர்ச்சியின் மூலம் மீண்டும் இயங்க வைக்க முயற்சித்தனர். தொடர்ந்து சில முறை மிதமான மின்சாரத்தை அவரது மார்புப் பகுதியில் செலுத்தியதில் இயக்கத்தை இழந்த இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

இவ்வாறு, இறந்து போனதாக கூறப்பட்ட 90 வயது முதியவர், மறுபடியும் உயிர் பெற்றதாக,  அரபு நாட்டில் செய்திகள் வெளியாகி இருந்தது.

கணவர், மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையம் முன்பு இளம் பெண்ணும், தாயும் போராட்டம்



விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஹேமா என்பவர், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய தன் கணவரையும், மாமியாரையும் கைது செய்ய வேண்டுமென்று, காவல் நிலையத்திற்கு முன்பு தன் தாயுடன்அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

தன் கணவர், மாமியார் மீது வரதட்சணை கேட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் ஹேமா புகார் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் முன் ஜாமீன் பெற்றிருந்ததால், போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

அதனால், ஹேமாவும், அவரது தாயார் அன்னமும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய வாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹேமா, "வரதட்சணை கேட்டு என்னை அடித்து தாய் வீட்டுக்கு கணவரும், மாமியாரும் அனுப்பிவிட்டனர். அவர்கள் மீண்டும் என்னை அழைத்து செல்வார்கள் என்று நினைத்திருந்துபோது விவாகரத்து கேட்டு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டடது. இதனால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. எனவே, கணவர் மூர்த்தி, மாமியார் அமுதா ஆகியோரை கைது செய்யும் வரை தர்ணா போராட்டத்தை கைவிட மாட்டேன்." என தெரிவித்தார்.

இச்சம்பவத்தால்ல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 1½ மணி நேரத்துக்கு பின்னர் போலீசார் இருவரிடமும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்து, அவர்களை எஸ்.பி அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

கத்தியை காட்டி, 4ம் வகுப்பு மாணவியை கற்பழித்தவன் கைது


புது டெல்லியில், வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த, நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை, சாக்லெட் வாங்கி தருவதாக கூட்டி சென்று, தன் அறைக்கு கூட்டி சென்றிருக்கிறான், 30 வயது உமேஷ். அறைக்குள், சிறுமியிடம் கத்தியை காட்டி, மிரட்டி கற்பழித்து விட்டு, வெளியே இதைப் பற்றி சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டி இருக்கிறான்.

வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, பெற்றோரிடம் நடந்ததை கூற, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், சிறுமியை மருத்துவமனைக்கு பரிசோதனை அனுப்பி வைத்து விட்டு, போலீசார் உமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மோடி பிரதமரானால், அமெரிக்கா விசா குறித்த கெடுபிடிகள் தளர்த்தப்படுமா?


குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு 2002ல், அம்மாநிலத்தில் நடந்த மதக்கலவரத்தை  காரணம் காட்டி அமெரிக்கா, விசா தருவதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அவர் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க அரசு சார்பில் பேசிய அமெரிக்க மாகாண துணைச் செயலர் நிஷா டெஸி பிஸ்வால் “உண்மையான ஜனநாயக நாடான இந்தியாவிலிருந்து வரும் எந்தவொரு தலைவரையும் அமெரிக்க அரசு வரவேற்கும். எனவே மோடி இந்தியாவின் உயரிய பதவியான பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரை அமெரிக்கா கண்டிப்பாக வரவேற்கும். அவரது விசா குறித்த கெடுபிடிகள் தளர்த்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை இக்கருத்திற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்:

“விசா குறித்த வரைமுறைகள் வழக்கமான முறையிலே நடைபெறும். நரேந்திர மோடி அவர்கள் விசா கேட்டு விண்ணப்பித்தால் அது குறித்து தக்கமுறையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மோடிக்கு விசா வழங்குவது பற்றி எங்களது அரசு யூக அடிப்படையில் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media