நேற்று
கலைஞர் கருணாநிதி தனது கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டார் . அந்த அறிக்கையில்
மெட்ரோ ரயில் திட்டம் வேண்டாம் என்று சொன்ன முதல்வர் ஜெயலலிதா இப்போது மத்திய
அரசிடம் நிதி கேட்பது ஏன் என கேள்வி எழுப்பினார் .
கேள்வி:-மத்திய மந்திரி முண்டே பதவியேற்ற 10 நாட்களில் விபத்தில்
சிக்கி பலியாகி விட்டாரே?
பதில்:-மிகவும் சோகமான ஒரு சம்பவம் அது.
பா.ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரமோத்மகாஜன் சில ஆண்டுகளுக்கு
முன் இப்படித்தான் அசாதாரணமான முறையில் மறைந்தார். அவருடைய மைத்துனர்தான் தற்போது
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கோபிநாத் முண்டே.இந்தியாவின்
தலைநகரின் மத்திய பகுதியிலே முக்கியமான சாலை ஒன்றில் மத்திய மந்திரியின் ஒருவரின்
கார் விபத்துக்கு ஆளாகியுள்ளது.எளிய சாதாரண குடும்பத்தில் பிறந்தவரான முண்டே தனது
கடின உழைப்பின் காரணமாக முன்னேறியவர். அவரது மறைவு குறித்து தி.மு.க. சார்பில்
ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:- வல்லூர் அனல் மின்
நிலையத்தின் இரண்டாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறதே?
பதில்:- ஜெயலலிதா ஆட்சிப்
பொறுப்புக்கு வருவதற்கு முன்பு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்ட போதே அ.தி.மு.க.
ஆட்சிக்கு வருமானால் மூன்றே மாதங்களில் மின்வெட்டே இல்லாமல் செய்வோம் என்று
கூறித்தான் ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பிறகு பல முறை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், மின்துறை அமைச்சரும்
மின்வெட்டே இல்லாமல் செய்திடுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால்
மின்வெட்டுதான் நிறுத்தப்படவில்லை.
பெரிய, சிறிய தொழிற்சாலைகள் எல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு
காரணமாக மூடப்பட வேண்டிய நிலை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டது.
முதல்-அமைச்சர் விடுத்த அறிக்கையில், “பகீரத முயற்சிகளை எனது
தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்றாண்டுகளில்
சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட்
அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவுத்திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
அதாவது புதிய மின் உற்பத்தியை இவருடைய
தலைமையிலான அரசு கடந்த மூன்றாண்டுகளில் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளின் விளைவாக, 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின்
உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் முதல்-அமைச்சர், இந்தப் புதிய மின் உற்பத்தி நிறுவு திறனுக்கான மின் திட்டங்கள், எங்கெங்கே-எந்தெந்த தேதியில் இவர்களுடைய ஆட்சியினால் தொடங்கப்பட்டன என்று
விளக்கிடத்தயாரா?
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட
திட்டங்களிலிருந்துதான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கத்தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதாவினால் புதிதாகத்தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள்
எதுவும் இதுவரை தொடங்கப்படவும் இல்லை, அதிலிருந்து தற்போது
மின்சாரம் கிடைக்கவும் இல்லை. மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள்
போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த மின்சாரம் யாரிடமிருந்து
வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? அதற்காக முறைப்படி டெண்டர் கோரப்பட்டதா? இந்தப்
பிரச்சினைகளுக்கெல்லாம் அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமானால்
அனைவரும் விவரங்களைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
கேள்வி :- ஜெயலலிதா மீதான
வருமான வரி முறைகேடு வழக்கும் 15 ஆண்டு களுக்கு மேலாக நிலுவையில் உள்ளதே?
பதில் :- ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 199394ம் ஆண்டுக்கான தங்களது
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வில்லை. வருமான வரித் துறை பல முறை சம்மன்
அனுப்பியும் பதில் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை 2005ல் இவர்கள் மீது வழக்கு தொடுத்தது. உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி
செய்துவிட்டது. வருமான வரித்துறை உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. 2422006ல் வழக்கு நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஏ.கே.
மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா வக்கீல் 6 வாரம்
அவகாசம் வேண்டுமென்றார். அப்போது நீதிபதிகள் கூறியது என்ன தெரியுமா? நீதி பரிபாலன முறையை நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும்
எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்?
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நீங்கள்
இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்ன பதில் மனுவை உங்களால் தாக்கல் செய்ய
முடியும்? (ஜெயலலிதா வழக்கறிஞரைப் பார்த்து) உங்கள்
கட்சிக்காரர் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல
வேண்டுமென்று நாங்கள் இன்றைக்கே ஆணை பிறப்பிக்க விரும்புகிறோம். இவ்வாறு
உச்சநீதிமன்றம் தெரிவித்தும் கூட, வழக்கு இன்னமும்
முடியவில்லை என்பதுதான் வேடிக்கை. நாடகமே உலகம். தமிழ்நாட்டில் நடப்பதை யார்
அறிவார்?
கேள்வி:- 3-6-2014 அன்று பிரதமரைச்
சந்தித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த மனுவில் சென்னை மெட்ரோ ரெயில்
திட்டத்திற்கு மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்றெல்லாம்
கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே இந்த மெட்ரோ ரெயில் திட்டமே கூடாது என்றும் மோனோ
ரெயில் திட்டம் தான் தேவை என்றும் கூறி வந்தாரே?
பதில்:- “மெட்ரோ” திட்டத்தைத்
தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா தற்போது பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரெயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட
இரண்டாம் பாகப்பணிகளை நிறைவேற்ற ரூ.36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி
நாடப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
மெட்ரோ திட்டமே கூடாது என்று சொன்னவர்கள், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற
மறுத்தவர்கள், தற்போது டெல்லிக்குச்சென்று அதே மெட்ரோ
திட்டத்திற்கு நிதி வேண்டுமென்று கேட்கிறார்கள் என்றால், வாக்களித்த
மக்கள் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்ள வக்கற்றுப் போய் விட்டார்களா என்பதுதான்
நமக்குள்ள அய்யப்பாடு.