BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 13 May 2014

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க தீவிரவாதிகளின் நிபந்தனைகள் என்ன?

நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை 'போகோ ஹராம்' என்ற தீவிரவாத அமைப்பு கடத்தி சென்றிருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவம் களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று போகோ ஹராம் தீவிரவாதிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், கடத்தப்பட்ட மாணவிகளில் 130 பேர் மட்டும் அதில் தோன்றினர். அதில், அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் மறைத்த நிலையில் நீண்ட 'பர்தா' போன்ற உடை அணிந்திருந்தனர்.

வீடியோவில் தீவிரவாதிகளின் தலைவன் அபுபக்கர் ஷெகாவு தோன்றி பேசினான். அதில், "கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது இயக்கத்தை சேர்ந்த தோழர்களை (தீவிரவாதிகளை) உடனடியாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளை விடுதலை செய்ய முடியாது" என திட்டவட்டமாக கூறினார். ஆனால், இதற்கு நைஜீரியா அரசு மறுத்து விட்டது. தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என உள்துறை மந்திரி அப்பா மோரோ தெரிவித்துள்ளார்.

வீடியோவில் தோன்றிய அபுபக்கர் ஷெகாவு, "அல்லா மீது ஆணையாக கூறுகிறேன். எங்கள் தோழர்களை விடுவிக்கும் வரை, இந்த பெண்களை நீங்கள் மறுபடியும் பார்க்க முடியாது." என்று திட்டவட்டமாக கூறியதை அடுத்து நைஜீரியாவில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

போகோ ஹராம் என்றால், 'மேற்கத்திய கல்வி தடை செய்யப்பட்டுள்ளது' என்று பொருள். இந்த தீவிரவாத அமைப்பு, பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல கூடாது, திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என கூறியிருக்கிறது.

2014 நாடாளுமன்ற தேர்தல் நடத்த ஆன வரலாறு காணாத செலவு

நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மத்திய அரசு, வரலாறு காணாத அளவுக்கு ரூ. 3426 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது 131 சதவிகிதம் செலவு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1483 கோடி ரூபாய் பட்டுமே செலவானது. வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்ச்சி நடவடிக்கைகளை எடுத்ததால் செலவு தொகை அதிகரித்தாக கூறப்படுகிறது. வாக்குச்சீட்டு விநியோகமும் நாடு முழுவதும் நடைபெற்றதால் செலவுத்தொகை மேலும் அதிகமானது. 1952 ஆம் ஆண்டு ஒரு வாக்காளருக்கு 60 பைசா செலவழித்த தேர்தல் ஆணையம் 2009 ஆம் ஆண்டு 12 ரூபாய் செலவழித்தது குறிப்பிடத்தக்கது.

தன்னலம் கருதாத தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும்- ஸ்டாலின்


வரும் ஜீன் மாதம் 3ம் தேதி அன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாள். அதை சிறப்பாகவும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

தமிழ் இனம் காக்க, தமிழ் மொழி காக்க தன்னலம் கருதாது தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, ஒரு நாளும் ஓய்வின்றி உழைத்து வரும் நம் ஒப்பற்ற தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள், வரும் ஜுன் 3.

இந்த இனிய நாளில் தமிழகமே விழாக்கோலம் பூணுகின்ற வகையில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் நகரங்கள், மாநகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள், வார்டுகள் தோறும் வீதிக்கு வீதி கொடி, தோரணங்களை கட்டியும், ஒலிபெருக்கி அமைத்து கழகக் கொள்கைப் பாடல்களை ஒலிபரப்பச் செய்வதோடு, கழகக் கொடியேற்று நிகழ்ச்சிகளையும் அமைத்து, ஏழை, எளியோர்க்கு அறுசுவை உணவினையும், புத்தாடைகளையும் வழங்கி எழுச்சியோடு கொண்டாடிட வேண்டும்.

ஒரு மாத காலத்திற்கு தலைவரின் சிறப்புக்களை விளக்கி கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவற்றையும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்து அதன் வாயிலாக மக்கள் நலத் திட்டங்களை வழங்கிட வேண்டும்.

ஆதரவற்றோர் - முதியோர் இல்லங்களில் வசிப்போர்க்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதோடு, ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றாற்போல் கிராமப் புறங்களில் இலவச மருத்துவ முகாம்களையும், இரத்ததான முகாம்–கண்தான முகாம் போன்ற சிறப்பு முகாம்களையும் ஆங்காங்கே தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அமைத்திட வேண்டும்.

மாணவ, மாணவியர்க்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல், மகளிருக்கான கோலப் போட்டி–இசை நாற்காலி, இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடிப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளையும் மாவட்டம் முழுவதும் நடத்திட வேண்டும்.

10 மற்றும் 12–ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவச் செல்வங்களுக்கு இக்கூட்டம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை, பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்; கடந்த ஐந்து ஆண்டுகளில் 3328 மாணவ - மாணவியருக்கு ரூபாய் 1 கோடியே 98 இலட்சத்து 13 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 6வது ஆண்டாக இந்த ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்க உள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.


பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தனது வலைப்பதிவில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அனுபவப் பகிர்வு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருக்கும் சில கருத்துகள்:

"பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மன்மோகன் சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதியமைச்சராக பதவி வகித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன் சிங் பெற்றார். ஆனால், சோனியா காந்தியின் கீழ் மன்மோகன் சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. 

நிச்சயம் வரலாறு டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவுகூரும். அவரது செயலாற்றல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியது. மன்மொகன் சிங் நற்குணங்களை கொண்ட மனிதர், எந்த ஒரு முக்கிய விவகாரமாக‌ இருந்தாலும், தீர ஆராய்ந்து அது குறித்து தெளிவான பார்வையோடு மட்டுமே பேசுவார். எதையும் எளிமையாக கையாளும் தன்மை கொண்டவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நன்கு தேர்ந்தவராக அவர் திகழ்வார்.

அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அது தேசிய ஆலோசனை கவுன்சிலின் முடிவால் அல்லது ராகுல் காந்தி அந்த கோப்புகளை கிழித்து எறிந்ததால், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரால் செயலாற்ற முடிந்திருந்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேட்டை தடுத்திருக்க முடியும், 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டை நீதிமன்றம் அல்ல, அவரே நிராகரித்திருக்க முடியும்.

நாட்டை 10 ஆண்டுகாலம் வழிநடத்திய ஒரு தலைமை முடிவுக்கு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார்"

இவ்வாறு அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் சும்மா - ஓமர் அப்துல்லா !!

கடந்த ஒன்றரை மாதங்களாக ஒன்பது கட்டங்களாக நடந்த தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின . அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளனர் . 

இதுபற்றி கருத்து தெரிவித்த காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கூறுகையில் , தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஒரு பொழுதுபோக்காக மாறிவிட்டது . சில மாநிலங்களில் ஒவ்வொரு கணிப்பும் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்துடன் வெளியிட்டதை சுட்டிக்காட்டி ,இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நம்பகத்தன்மையை இழந்து விட்டனர் என்று குறிப்பிட்டார் .
 

புதிய இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறோம் - ஒபாமா



இந்தியாவில் தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வருகிற 16 ஆம் தேதி வரவிருக்கிறது . இதை நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் பல உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றன .

இன்று அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில் , புதிய அரசு ஆட்சியில் அமருவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் , அவர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் காலத்தை சிறப்பாக மாற்ற காத்திருக்கிறோம் . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை நடத்தி முடித்து , ஜனநாயகத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது . இதை செய்து காட்டிய இந்திய மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று கூறினார் .

குஜராத்தின் புதிய முதல் அமைச்சரை தேர்வு செய்ய இன்று ஆலோசனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில், தற்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த வாரமே புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக நரேந்திரமோடி குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகுவார். இதனால் குஜராத் மாநிலத்துக்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய‌ நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காந்திநகரில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வரை ஏகமனதாக தேர்ந்து எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய முதல்வர் பதவியை பெற குஜராத் வருவாய் துறை மந்திரி அனந்திபென் படேல், நிதி மந்திரி நிதீன்படேல் மற்றும் மந்திரி சவுரப்படேல் ஆகிய 3 பேர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆனால் முதல்வர் பதவியை பெற அனந்திபென் படேலுக்கே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவாக உள்ளனர். குஜராத்தில் 1998–ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக அனந்திபென் படேல் அமைச்சராக இருந்து வருகிறார். சாலை மேம்பாடு, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை என்று பல துறைகளில் பணியாற்றி நன்கு அனுபவம் பெற்றவர்.

மேலும் இவருக்கு நரேந்திர மோடியின் ஆதரவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- கர்நாடகா முதல்வர்


கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

கன்னடர்கள் தங்கள் தாய் மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.

தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர் கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய் மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப் படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூரிலும் பார்க்கலாம்.

என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத் திடுகிறேன்.

சில அதிகாரிகளிடம் இருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்க ளுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன் என்றார்.

விபத்தில் கால்களை இழந்த தமிழக மாணவிக்கு ரூ.31 லட்சம்: உச்ச நீதிமன்றம்


தமிழகத்தைச் சேர்ந்த மாணவி வி.மேகலா, 10-ம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்திருந்தார். கடந்த 2005-ல் நடந்த ஒரு வாகன விபத்தில் மேகலா இரண்டு கால்களையும் இழந்தார். நஷ்ட ஈடு கோரி அவர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.6.46 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, இழப்பீட்டுத் தொகை ரூ.18.22 லட்சமாக உயர்த் தப்பட்டது. இந்தத் தொகை போதுமானதல்ல என்று கூறி, மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு:

வாகன விபத்தில் இழப்பீடு வழங்கும்போது, உடல் உறுப்பு களின் இழப்பை மட்டும் கருத்தில் கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்டவரின் புத்திசாலித் தனம், அவரது எதிர்காலம், வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, வேதனை ஆகியவற்றை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, 10-ஆம் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார். அவர் தொழிற்கல்வி பயின்று அரசு அல்லது தனியார் வேலைக்குச் சென்றிருந்தால், நல்ல சம்பளம் பெற்றிருப்பார். எனவே, மாணவி மேகலாவுக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்தத் தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை கோடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா

தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை (மே 14) கோடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், கடந்த மாதம் 27-ம் தேதி சென்னையி லிருந்து விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார். 20 நாட்கள் கோடநாட்டில் தங்கியிருந்த முதல்வர் வரும் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், நாளை (மே 14) கோடநாட்டிலிருந்து சென்னை புறப்படுகிறார். டிசம்பர் மாதம் கோடநாடு வந்து ஒரு மாத காலம் தங்கியிருந்த முதல்வர் மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் கோடநாடு சென்றிருந்தார். தற்போது இருபது நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்புகிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக மிரட்டல்: 3 பேர் கைது


பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்துவதாக தொலைபேசியில் மிரட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், ரூ.20 லட்சம் பணம் கொடுக்கா விட்டால் உங்கள் கணவரை கடத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுபற்றி சுமா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடத்துவதாக மிரட்டல் விடுத்தோர் பேசிய அழைப்புகளை வைத்து துப்பு துலக்கிய போலீசார், இதுதொடர்பாக திருமலை என்பவர் மற்றும் அவரது நண்பர்கள் அருணாச்சல பாண்டியன், முத்துகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தையிடம் டிரைவராக வேலை பார்த்த திருமலை, தனது நண்பர்களுடன் சேர்ந்து இவ்வாறு மிரட்டியது தெரியவந்தது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media