BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 21 November 2014

தமிழரின் மருத்துவம் : வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி


1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்

(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.) இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.

இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும். இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!


எது உண்மையான உலக அதிசயம்


உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது, இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கா அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர், இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன்
கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி  வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும்
ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது  இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது  ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது, இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது, உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம், எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை  சிந்தித்து பாருங்கள் சரியாக கட்டாமல் சாய்ந்து போன ஒரு கோபுரம் உலக அதிசயமா ?அல்லது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக, மிக பிரம்மாண்டமாக நிற்கும் ஒரு கோபுரம் உலக அதிசயமா? சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக  உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம்.

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட எங்களுக்கு உரிமையுண்டு : கர்நாடக அமைச்சர்



காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உரிமை உள்ளது என்று அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.இது குறித்து புது தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குப் புறம்பான செயல்பாடுகளில் கர்நாடக அரசு ஈடுபடவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 192 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளன.அதேவேளையில், மழைப் பொழிவின் மூலம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு கிடைக்கும் கூடுதல் நீரைப் பயன்படுத்திக் கொள்ள கர்நாடக அரசுக்கு உரிமையுள்ளது. அந்தத் தண்ணீரை வீணாக்காமல் தேக்கி வைக்கவே மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

பழைய மைசூர் காவிரி டெல்டா பகுதிகள், பெங்களூரு நகரங்களின் குடிநீர்த் தேவைக்கு, அந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். புதிய தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விருப்ப மனுக்களைச் சமர்ப்பிக்க விதிக்கப்பட்டிருந்த கால அவகாசம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்றார் அவர்.

தில்லியில் 5 தமிழக மீனவர்களுக்கு வரவேற்பு



இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இந்தியாவின் ,அழுத்தத்தை தொடர்ந்து பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் எமர்சன், பி. அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லெட் ஆகியோர் வியாழக்கிழமை மாலையில் தில்லி திரும்பினர். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தில்லி வந்த அவர்களை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் வரவேற்றனர்.அண்டை நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அந்த நாட்டு அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் ஐந்து பேரும் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவர்களை வெளியுறவுத் துறை உயரதிகாரி சுசித்ரா தலைமையிலான குழுவினர் தனியார் வாகனத்தில் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.விமான நிலையம் அருகே உள்ள விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்ட அவர்களிடம் சர்வதேச நடைமுறைகளின்படி பிரகடனத்தில் அதிகாரிகள் கையெழுத்துப் பெற்றனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இந்தியாவில் மற்ற குடிமக்கள் போல சுதந்திரமாகச் செல்ல அனுமதித்த அதிகாரிகள், வியாழக்கிழமை இரவே ஐந்து பேரையும் தில்லியில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து தில்லியில் "தினமணி' நிருபரிடம் வெளியுறவு அதிகாரி சுசித்ரா கூறியதாவது: "தாயகம் திரும்பிய ஐந்து தமிழக மீனவர்களும் நலமுடன் உள்ளனர். அவர்களைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.மீனவர்கள் பேட்டி: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஐந்து தமிழக மீனவர்களும் அளித்த பேட்டி வருமாறு: "நாங்கள் அனைவரும் மறுபிறப்பு எடுத்து தாயகத்துக்கு திரும்பியுள்ளது போல உணருகிறோம். எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு காரணமாக எங்களை விடுதலை செய்ய கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்தனர். இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிறகே எங்களை விடுதலை செய்ய அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது. இந்தத் தருணத்தில் தாயகம் திரும்பியுள்ள எங்களின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை' என்றனர்.

கடைசிவரை நீடித்த குழப்பம் : கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களும் திருச்சி விமான நிலையம் வந்து அவரவர் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வர் என்று வியாழக்கிழமை காலையில் தகவல் வெளியானது. இதையடுத்து, தமிழகத்தில் மீனவர்களை வரவேற்க திருச்சி, சென்னையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், மீனவர்கள் ஐந்து பேரும் தில்லிக்கு அழைத்து வரும் தகவல் பிற்பகலில் உறுதியானது. இதையடுத்து, தில்லி சர்வதேச விமான நிலையத்தின் புற வாயில் வழியாக ஐந்து பேரும் அழைத்து வரப்படுவர் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஐந்து மீனவர்களை வரவேற்க தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருந்தனர். தமிழக அரசின் தில்லி பிரதிநிதி ஜக்கையனும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார். இந்த நிலையில், ஐந்து மீனவர்களும் தரையிறங்கிய பிறகு அவர்களை குடியேற்றச் சோதனைக்கு வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, முக்கியப் பிரமுகர்கள் அவசர காலத்தில் பயன்படுத்தும் வாயில் பகுதி வழியாக ஐந்து பேரையும் ரகசியமாக தனியார் வாகனத்தில் ஏற்றி அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்

2 ஜி விசாரணையிலிருந்து விலகியிருங்கள் : சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் தலையிடாமல் விலகியிருக்கும்படி, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.உத்தரவின் விவரம்: "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விசாரணை நடவடிக்கைகளில் புலனாய்வு அமைப்பின் உயரதிகாரி தலையிடுவதாக எழுந்துள்ள புகார்கள் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிரதிநிதிகளை தனது இல்லத்தில் ரஞ்சித் சின்ஹா சந்தித்த நிகழ்வுகளை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.இந்த விவகாரத்தில் தனது நிலையை விளக்காமல், பார்வையாளர் குறிப்பேடு ஆவணங்களை மற்றொரு விசாரணை அதிகாரி (டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி) பிரசாந்த் பூஷணிடம் அளித்ததாக நீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் தரப்பு பதிவு செய்ய முயன்ற குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லை.

இதுபோன்ற புகார்களைத் தெரிவிக்கும் முன்பாக, அதை நிரூபிக்கும் ஆதாரங்களை அவர் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான உத்தரவைப் பிறப்பித்தால் அது சிபிஐயின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, 2ஜி அலைக்கற்றை வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் ரஞ்சித் சின்ஹா தலையிடாமல் விலகியிருக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை மேற்பார்வை நடவடிக்கைகளை ரஞ்சித் சின்ஹாவுக்கு அடுத்த நிலையில் உள்ள உயரதிகாரி இனி கவனிக்க வேண்டும்' என்று உத்தரவில் தலைமை நீதிபதி தத்து குறிப்பிட்டார்.முன்னதாக, இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை காலையில் தொடங்கியதும் ரஞ்சித் சின்ஹாவின் வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆஜராகி கூறியதாவது: "ரஞ்சித் சின்ஹா வீட்டின் பார்வையாளர் குறிப்பேடுகளை பிரசாந்த் பூஷணிடம் சிபிஐ டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி அளித்ததாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை' என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

முகாந்திரம் உள்ளது: இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சிறப்பு வழக்குரைஞராக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆனந்த் குரோவர் நீதிபதிகளிடம் கூறியதாவது: "இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் பிரதிநிதிகளை ரஞ்சித் சின்ஹா சந்தித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என அந்த வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்த போது, அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ரஞ்சித் சின்ஹா செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலரின் பிரதிநிதிகளை ரஞ்சித் சின்ஹா தொடர்ச்சியாக அவரது வீட்டில் சந்தித்தது சந்தேகத்துக்குரிய நடவடிக்கையாகும். மொத்தத்தில் ரஞ்சித் சின்ஹாவின் செயல்பாடு யாருக்கோ சாதகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது' என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

"நீதிமன்ற ஆணையை மதிக்கிறேன்': "2ஜி வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்கிறேன்' என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கருத்துத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"சிபிஐயின் நற்புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படாமல் இருக்க நான் சில முயற்சிகளை மேற்கொண்டேன். இந்த விவகாரத்தில் அதே நோக்குடன் உச்ச நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கு எவ்விதச் சங்கடமும் இல்லை' என்றார். ரஞ்சித் சின்ஹா தனது பதவியில் இருந்து வருகிற டிசம்பர் 2ஆம் தேதி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ அதிகாரிகள் குழுவுக்கு தலைமை நீதிபதி கண்டிப்பு : சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிரான பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைப் பார்வையிட சிபிஐ அதிகாரிகள் குழு, உச்ச நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்திருந்த செயலை தலைமை நீதிபதி எச்.எல். தத்து கண்டித்தார்.இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, சிபிஐ சார்பில் வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் தொடர்ந்து ஆஜராவது குறித்து நீதிபதிகளிடம் விளக்கம் கேட்க ரஞ்சித் சின்ஹாவின் வழக்குரைஞர் விகாஸ் சிங் முற்பட்டார். அப்போது, பார்வையாளர் மாடத்தில் இருந்த சிபிஐ இணை இயக்குநர் அசோக் திவாரி தனது கையைத் தூக்கியபடி "இந்த விவகாரத்தில் நான் கருத்துக் கூற விரும்புகிறேன்' என்றார்.இதையடுத்து, அவரை வழக்குரைஞர் ஆஜராகும் பகுதிக்கு வரவழைத்த தலைமை நீதிபதி தத்து, "நீங்கள் ரஞ்சித் சின்ஹாவின் முகவரா? அல்லது அவரது ஊதுகுழலா?' என்று கேள்வி எழுப்பினார்.இதைத் தொடர்ந்து, பார்வையாளர் மாடத்தில் அமரும் வரிசையில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி எஸ்.கே.சின்ஹா உள்பட ஐந்து அதிகாரிகள் இருந்ததைப் பார்த்த தலைமை நீதிபதி, "எதற்காக இவர்கள் எல்லாம் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர்?' என்று கேட்டார். இதற்கு ரஞ்சித் சின்ஹாவின் வழக்குரைஞர் விகாஸ் சிங், "வழக்குரைஞர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் வந்துள்ளனர்' என்றார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தத்து, "சம்பந்தமில்லாமல் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்துக்குள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை' என்று கண்டிப்புடன் கூறினார். இதையடுத்து, சிபிஐ இணை இயக்குநர் அசோக் திவாரி உள்பட சிபிஐ அதிகாரிகள் அனைவரும் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media