பல நூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில்
நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல், மனிதகுல வரலாற்றில் தன் மக்களின்
விடியலுக்காகப் போராடிய மாபெரும் வீரர், இந்திய விடுதலையில் பங்காற்றி,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு
எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற
ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து
வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால
வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய
அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது
மிகையாகாது.
பெரியார் கடந்து வந்த காலவரிசை:
1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
1885 – திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
1891 – பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
1892 – வாணிபத்தில் ஈடுபட்டார்
1898 – நாகம்மையாரை (அகவை-13) மணந்தார்.
1902 – கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
1904 – ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1907 – பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல்
நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து
மீட்புப்பணியாற்றினார்.
1909 – எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார். நவம்பர் 13 ஆம்
தேதி 1938ல் 5000க்கு மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப்
பெண்கள் மாநாட்டிலிலேயே "பெரியார்" என்ற பெயரால் அழைக்கப்படார். (குடி அரசு
இதழில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் 18.12.1927 வரை
குறிக்கப்பட்டு இருந்தது. 25.12.1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம்
வெட்டப்பட்டது)
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.
நினைவகங்கள்: தமிழக அரசு பெரியாரின் நினைவைப் போற்றும்
வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு
இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை
அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள்
கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய
வைக்கம் இடத்தில் தந்தைபெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை
பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை
அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி
அரங்கம் உள்ளது. நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.