BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 27 November 2014

உணவே மருந்து : தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.


ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்? கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல.

அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம். சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க. அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே

வலிமையான சார்க் : மோடி வலியுறுத்தல்

சர்வதேச அளவில் "சார்க்' அமைப்பு வலிமையானதாக உருவெடுப்பதற்கு, உறுப்பு நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதற்காக பல்வேறு யோசனைகளையும் அவர் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை அங்கமாகக் கொண்ட "சார்க்' அமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மும்பையில், இதே தினத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலை நாங்கள் நினைவு கூர்ந்து வருகிறோம். இந்தத் தாக்குதலில் பலியானோரை நினைத்து நீங்காத துயரத்தில் உள்ளோம். பயங்கரவாதம் என்னும் அச்சுறுத்தல், தெற்காசியப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கே சவாலாக உள்ளது. பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, சார்க் நாடுகள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முழுவதும் நிறைவேற்றுவதற்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, வளத்தை ஏற்படுத்தி நம்பிக்கையை ஒளிரச் செய்வதற்கு நாம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பமாகும். நமது நாடுகள் அனைத்தும் பரஸ்பரம் பிற நாடுகளின் பாதுகாப்புக்கும், மக்களின் உயிருக்கும், நட்புறவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும், நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தெற்காசியப் பிராந்தியம் என்பது ஜனநாயகம் செழித்து விளங்கும் பிராந்தியமாகவும், ஈடு இணையில்லா இளைஞர் சக்தி கொண்டதாகவும், உறுதியான மாற்றம் மற்றும் வளர்ச்சியை எதிர்பார்க்கும் பிராந்தியமாகவும் திகழ்கிறது. எதிர்காலம் இந்தியாவுடையதே என்பது எனது கனவாகும். அதுபோல, இந்தப் பிராந்தியமும் உருவாக வேண்டும் என்பது எனது விருப்பமாகும். சார்க் தலைவர்களுக்கு பாராட்டு: ஒட்டுமொத்த உலகத்தின் வாழ்த்துகளோடு, பிரதமர் அலுவலகத்துக்கு நான் சென்றேன். ஆனால், என்னை இயங்கச் செய்தது என்னவோ, அண்டை நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள், எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுதான்.

எனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக, மத்திய கிழக்கில் இருந்து பசிபிக் வரையிலும், தெற்கு கடலோரப் பகுதியில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், ஒருமைப்பாடு என்னும் அலை ஆர்ப்பரித்து வருவதை நான் கண்டேன். தெற்காசிய வளர்ச்சிக்கு, பல்வேறு தடைகள் இருக்கின்றன. சிறிதும், பெரிதுமாக ஒரே மாதிரியான பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதேசமயம், நம்மிடம் உள்ள ஏராளமான வளங்கள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சார்க் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. இருந்தபோதிலும், சார்க் குறித்து நாம் பேசும்போது, குறை காணுதல், அவநம்பிக்கை ஆகிய 2 விமர்சனங்கள் தெரிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, குறை காணுதல் என்ற போக்கை நன்னம்பிக்கையாக மாற்ற நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் மோடி. மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அகமதுஜாய், பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கய் ஆகியோரும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசினர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பேசியதாவது:
பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன. பிற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவித்து, மறைமுகப் போரில் ஈடுபடுகின்றன. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசுகையில், "தெற்காசிய நாடுகள் தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, வறுமை நிலை, பிற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

தனது 15 நிமிட உரையில், பயங்கரவாதம் குறித்து நவாஸ் ஷெரீஃப் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி அஞ்சலி: இதனிடையே, மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினருக்கு, சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கம் மூலமாக மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அருகிலிருந்தும் விலகியிருந்தனர் !
சார்க் மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சார்க் மாநாட்டில் புதன்கிழமை கலந்து கொண்ட அவர்கள் இருவரும், பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டனர். மாநாட்டு மேடையில் கூட 2 இருக்கைகள் இடம் விட்டே அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையே மாலத்தீவு, நேபாள நாட்டின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மாநாட்டின்போது, மோடியும், நவாஸýம் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மாநாட்டில் பேசுவதற்காக மோடியை நவாஸ் கடந்து சென்றபோதும் கூட, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

ஆகையால், அந்த மாநாட்டையொட்டி மோடி, ஷெரீஃப் பேச்சுவார்த்தை நடைபெற சாத்தியமில்லை என்பது தெரிய வருகிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவிக்கையில், "மாநாட்டுக்கு இடையே, இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை. இதுதொடர்பாக பாகிஸ்தானிடம் இருந்தும் எந்தக் கோரிக்கையும் வரவில்லை' என்றார்.

தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு



தென் மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று நகர்ந்துள்ளது. இது இப்போது இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வியாழக்கிழமை தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பறவைக் காய்ச்சலைத் தடுக்க 12 அம்சத் திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு

பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலி காரணமாக, கேரளத்தில் இருந்து கோழி மற்றும் அது தொடர்பான பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் சுமார் 17,000 வாத்துகள் இறந்துள்ளன. இந்த வாத்துகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இவை பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு இறந்துள்ளன என்பதை மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் தமிழகத்துக்குப் பரவி விடாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
1. நமது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் எதுவும் இல்லை என்றாலும், இந்த நோய் எளிதில் பரவக்கூடியது என்பதால், கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட பொருட்களை மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகள் மூலம் சோதனை செய்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படவேண்டும்.

2. இவற்றில் எல்லையில் திருப்பி அனுப்ப சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், போக்குவரத்து ஆணையர், வணிகவரித் துறை ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள்.

3. கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்கள் மீது தெளிப்பான் மூலம் கிருமிநாசினி தெளிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு தேவையான தெளிப்பான், கிருமி நாசினிகள் கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவில் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

5. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 800 விரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும்.

6. தடுப்பு நடவடிக்கைப் பணிக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், தெளிப்பான்கள், கிருமி நாசினிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. இவை கூடுதலாக தேவைப்பட்டால், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் அவற்றை வழங்கும்.

7. கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கோழிச் சந்தைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

8. கோழி இனங்களின் உடல்நிலை குறித்த விவரம் நாள்தோறும் பெறப்பட்டு கண்காணிக்கப்படும்.

9. கேரள மாநிலத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வாத்து மற்றும் கோழிமுட்டைகள் பெறப்பட்டிருந்தால், அதன் விபரம் சேகரிக்கப்பட்டு, அவற்றை முழுவதுமாக அழித்துப் புதைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10. இடம் பெயரும் பறவைகளின் நடமாட்டத்தை பறவைகள் சரணாலயங்களில் தலைமை வனப் பாதுகாவலர் கண்காணிப்பார்.

11. கேரள மாநிலத்தில் நோய் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை கோழி மற்றும் கோழியினங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் ரயில் மூலம் கொண்டுவரப்படுவதை நிறுத்தும்படியும், தமிழ்நாட்டிற்குள் வரும் ரயில்களில் போதுமான அளவு கிருமிநாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யுமாறும் தென்னக ரயில்வே கேட்டுக் கொள்ளப்படும். கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமலிருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், அரசுத் துறை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை :-

12. பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்புக்காக, தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை மத்திய நோய் ஆய்வுக் கூடத்தில் இந்த கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044-24339097, செல்போன் எண்: 9445032504.

கடும் அமளிக்கிடையே நிறைவேறியது சிபிஐ இயக்குநர் தேர்வு மசோதா


நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கிடையே சிபிஐ இயக்குநர் தேர்வு தொடர்பான சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. "அங்கீகரிக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவரை சிபிஐ தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமித்துக் கொள்ளலாம். மேலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஐ இயக்குநரின் நியமனத்தை, போதிய உறுப்பினர்கள் இல்லை எனக் கூறி செல்லாததாக்கிவிட முடியாது' என்பன உள்ளிட்ட ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத காரணத்தால், இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு ஏற்படுத்தியது. கடும் அமளி: இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை புதன்கிழமை மத்தியப் பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். "சிபிஐ இயக்குநர் தேர்வு நடைமுறைகளிலிருந்து காங்கிரûஸ விலக்கி வைப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது காங்கிரûஸ இழிவுபடுத்தும் செயல்' என மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார். அரசின் இந்த மசோதா மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

"இந்த மசோதாவில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிபிஐ இயக்குநர் தேர்வு நடைமுறைகளை சுலபமாக்கும் வகையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதையடுத்து, கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media