BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 1 November 2014

உணவே மருந்து : பப்பாளியின் மருத்துவ குணம்


இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் பப்பாளியில், வைட்டமின் ஏ, சி ஷ்மற்றும் இ ஆகியவை உள்ளன.

பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது. இதனால் உடல் பொலிவு பெறும். கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளி பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு. எளிதாகவும் கிடைக்க கூடியது. எனவே, பப்பாளி பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது.

2013-14-இல் அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை ரூ.4 லட்சம் கோடி

2013-2014 நிதி ஆண்டில் அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை 68 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 4.08 லட்சம் கோடி) என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் 17 உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில உள்நாட்டில் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. சில அமைப்புகள் வெளிநாடுகளில் மட்டும் உளவுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்புகளுக்காக அந்நாட்டு அரசு செலவிட்ட மொத்த தொகை குறித்த விவரங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

2013 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் வரையிலான கால அளவில், உளவு அமைப்புகளுக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதில் சிஐஏ அமைப்பு மட்டுமே 50.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 3.03 லட்சம் கோடி) செலவிட்டுள்ளது. ராணுவ ரீதியான உளவுத் தகவல் சேகரிப்புத் திட்டங்களுக்கு 17.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,04,400 கோடி) செலவிடப்பட்டது. அதற்கு முந்தைய 2012-2013 நிதி ஆண்டின்போதும், உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை சுமார் 68 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 4,08,000 கோடி). ஆயினும், அந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலில் ஒதுக்கீடு செய்த தொகை அதைவிட மிகக் கூடுதலாக இருந்தது.

அரசின் செலவுக் குறைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, பல லட்சம் கோடி மதிப்பில் உளவு அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு பின்னர் குறைக்கப்பட்டது. அமைப்புவாரியாகவும் பயன்பாட்டுவாரியாகவும் விரிவான செலவு விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 2010-2011 நிதி ஆண்டின்போது, அமெரிக்க உளவு அமைப்புகள் 80 பில்லியன் டாலர் (சுமார் 4,80,000 கோடி) செலவிட்டன என்பது குறிப்பிடத் தகுந்தது. அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவை நிதி ஆண்டாக அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைக்கப்பட்டுள்ளது; டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.69.59-இல் இருந்து, உள்ளூர் வரியையும் சேர்த்து ரூ.2.58 குறைக்கப்பட்டு ரூ.67.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தில்லியில் பெட்ரோல் விலை ரூ.66.65-இல் இருந்து, ரூ.2.41 குறைக்கப்பட்டு ரூ.64.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.74.21-இல் இருந்து ரூ.71.68 ஆகவும், மும்பையில் ரூ.74.46-இல் இருந்து ரூ.71.91 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.59.27-இல் இருந்து, ரூ.2.43 குறைக்கப்பட்டு ரூ.56.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.55.60-இல் இருந்து, ரூ.2.25 குறைக்கப்பட்டு ரூ.53.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் டீசல் விலை ரூ.60.30-இல் இருந்து ரூ.57.95 ஆகவும், மும்பையில் ரூ.63.54-இல் இருந்து ரூ.61.04 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.69.59-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67 ஆகவும், ரூ.59.27-க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் ரூ.56.84 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. மானியமில்லா சமையல் எரிவாயு விலை குறைப்பு: இதனிடையே, மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.18.50 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ.865ஆக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நான்காவது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2ஜி : அமலாக்கத் துறை வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது மத்திய அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகளை தில்லி சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, வினோத்குமார் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, சரத்குமார், தயாளு அம்மாள், கனிமொழி, பி. அமிர்தம் மற்றும் ஸ்வான் டெலிகாம் (தற்போது எடிசலாட் டிபி டெலிகாம்), குசேகன் ரியாலிட்டி, சினியூக் மீடியா என்டர்டெயின்ட்மென்ட், கலைஞர் டிவி, டைனமிக்ஸ் ரியாலிட்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்டிரக்ஷன்ஸ், கொன்வுட் கன்ஸ்டிரக்ஷன்ஸ் அன்ட் டெவலப்பர்ஸ், டிபி ரியாலிட்டி, நிஹார் கன்ஸ்டிரக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பிலும் அமலாக்கத் துறை தரப்பிலும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் அண்மையில் நிறைவடைந்தன.

நீதிபதி உத்தரவு: இதையடுத்து, இந்த வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிபதி சைனி பிறப்பித்த உத்தரவின் விவரம்: குற்றம்சாட்டப்பட்டோர் மீது அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகள், கலைஞர் டிவிக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாக நடந்தவை என்பதை நிரூபிக்க போதுமான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டப் பிரிவு 3,4 ஆகியவற்றின் கீழ் அமலாக்கத் துறை சுமத்திய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை, வாதங்கள் நவம்பர் 11 முதல் தொடங்கப்படும்' என்று உத்தரவில் சிறப்பு நீதிபதி குறிப்பிட்டார்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கியதும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்கள் சார்பில் வழக்குரைஞர்களும் வந்திருந்தனர். தயாளு அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவர் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க ஏற்கெனவே அவருக்கு ஜாமீன் வழங்கியபோதே சிறப்பு நீதிபதி சைனி விலக்கு அளித்திருந்தார். இதையடுத்து, தயாளு அம்மாள் சார்பில் வழக்குரைஞர்கள் சண்முகசுந்தரம், சுதர்சன் ராஜன் ஆஜராகினர். அவர்களிடம் "இந்த வழக்கில் நீங்கள் (குற்றம்சாட்டப்பட்டவர்கள்) குற்றம் செய்ததாகக் கருதுகிறீர்களா?' என்று சிறப்பு நீதிபதி சைனி கேட்டதும், "இல்லை' என்று வழக்குரைஞர்கள் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட உத்தரவை சிறப்பு நீதிபதி சைனி பிறப்பித்தார். வழக்கின் விவரம்: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு பிரதிபலனாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம், டி.பி. ரியாலிட்டி, குசேகான் ரியாலிட்டி, சினியுக் மீடியா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் திமுக ஆதரவு கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்ட ரூ.200 கோடி அளவிலான நிதியை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை என்று குற்றம்சாட்டி, மத்திய அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் மாதம் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீனில் செல்ல கடந்த மே மாதம் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தனியாக தொடர்ந்த ஊழல் வழக்கில் நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டோர், சிபிஐ தரப்பு வாதங்கள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி வாதங்களை வரும் நவம்பர் 10-ஆம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதற்கு மறுநாளான நவம்பர் 11-இல் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை முறைப்படி சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media