BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 April 2014

அர்ஜீனா விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரை

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரைத்துள்ளது.

இதுபற்றி பிசிசிஐ-ன் பொது மேலாளர் ரத்னாகர் ஷெட்டி கூறுகையில், " அஸ்வின் அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வரும் ஏப்ரல் 30-தேதி பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசி நாள். வேறெந்த கிரிக்கெட் வீரரும் எங்கள் பரிந்துரைப் பட்டியலில் இல்லை" என்றார்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்து வருகிறது. இதுவரை 46 கிரிக்கெட் வீரர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சென்ற வருடம், இந்த விருதை விராத் கொலி பெற்றிருந்தார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 106 விக்கெடுகளையும் (79 போட்டிகள்) , டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் (79 போட்டிகள்) வீழ்த்தியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற காங்கிரஸின் புதிய வாக்குறுதிக்கு பாஜக எதிர்ப்பு


காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியான புதிய அறிவிப்பு ஒன்றில், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் துணைத் தேர்தல் அறிக்கை குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் கபில் சிபல், "பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதோ உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், அந்த மசோதா நிறைவேற்றபடும்.
இதனை காங்கிரஸ் தேர்தலுக்கான துணை அறிக்கையாக வெளியிடவில்லை. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் நடைபெற வேண்டிய நிலையில், நாங்கள் இதனை மக்கள் முன்னிலையில் தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை" என்றார்.

இதனிடையே காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், "மக்களவைத் தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் இதுபோன்ற வாக்குறுதிகளை வெளியிடுவது, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வாக்கினை பெறும் கடைசி நேர முயற்சி. தோல்வியை சந்திக்க இருக்கும் கட்சி இதுபோன்ற துணைத் தேர்தல் அறிக்கைகளை, கடைசி நேரத்தில் வெளியிடுவது ஒன்றும் புதிது அல்ல. மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்" என்றார்.

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அமலாக்கத் துறை இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் புரொமோட்டர் ஷாகித் பால்வா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவர்களுடன், இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞர் டிவியின் சரத்குமார் உள்பட மொத்தம் 19 பேர் குற்றம்சாட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ரூ.200 கோடி தொகையை, கலைஞர் டிவி நிறுவனத்துக்கு அளித்ததாக, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து டெல்லி நீதிமன்றம் இம்மாதம் 30-ம் தேதி முடிவு எடுக்கும்.

எந்தப் பிரச்சினை ஆனாலும் வலிய வந்து மூக்கை நுழைத்துக் கெடுதல் செய்வதே கருணாநிதிக்கு வாடிக்கை-வைகோ

பேரறிவாளன் உள்பட மூவர் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், திமுக தலைவர் கருணாநிதி வலிய வந்து கருத்து தெரிவித்தது சரியல்ல என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது:

"பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள எல்லாக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு முன்னர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறேன். தி.மு.க. அரசும் இதைச் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா அரசும் இதனை ஏற்கவில்லை.

எந்தப் பிரச்சினை ஆனாலும் வலிய வந்து மூக்கை நுழைத்துக் கெடுதல் செய்வதே கருணாநிதிக்கு வாடிக்கையான ஒன்றாகும்.

ஏழு பேரின் விடுதலையை, உலகெல்லாம் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நேரத்தில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதி அரசர் சதாசிவம், விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று சொன்னதைக் குறைகூறிக் குறுக்குச்சால் ஓட்டிய மகானுபாவர்தான் கருணாநிதி ஆவார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வில், இவர்கள் சிறையில் இருந்து விடுதலை பெறும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படிக் கிடைத்தாலும் அது காலம் கடந்த நீதிதான்" என்று வைகோ கூறியுள்ளார்.

முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது-ராமதாஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 7 பேரின் விடுதலை குறித்து வந்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.

இவற்றின் அடிப்படையில் தமிழக அரசு சற்று பொறுப்புடனும், பக்குவமாகவும் செயல்பட்டிருந்தால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபட் பயாஸ் ஆகிய ஏழு தமிழர்களும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள்.

மாறாக, தமிழக அரசு பொறுப்பின்றி செயல்பட்டதால் தான் 7 தமிழர்களின் விடுதலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.

7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதற்கான அரசியல் சட்ட அமர்வு 3 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கும் நிலையில், அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படுவதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன்பின் இந்த வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயலும் என்பதால் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக சற்று அதிக காலம் ஆகலாம்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாதங்கள் அவர்கள் சிறையில் வாட வேண்டும் என்பதே மனித உரிமை மீறல் ஆகும். இத்தகைய சூழலில் 7 தமிழர்களுக்கும் உடனடியாக ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய அவசியமாகும்.

இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசின் முன் உள்ளன. இந்த விவகாரத்தின் தமிழக மக்களின் உணர்வுகளை தாம் மிகவும் மதிப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார். அது உண்மையாக இருந்தால், குறைந்தபட்ச நிவாரணமாக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக இருட்டுச் சிறையில் வாடும் 7 தமிழர்களும் வெளியுலக சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் வகையில் இவர்களை எவ்வளவு காலத்திற்கு சிறை விடுப்பில் (பரோல்) அனுமதிக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜப்பான் வங்கியிடமிருந்து ரிலையன்ஸ் ரூ.3,500 கோடி கடன்


முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ஜப்பான் வங்கியிடமிருந்து 55 கோடி டாலர் (சுமார் ரூ. 3,500 கோடி) நிதியை கடனாக திரட்டியுள்ளது. இந்த நிதியை பெட்ரோ கெமிக்கல் ஆலையை விரிவுபடுத்தவும், புதிய எரிவாயு பிரிவைத் தொடங்கவும் அந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது . இந்த கடன் வசதி 12 ஆண்டுகளுக்கானது.

வெளிநாடுகளிலிருந்து நிதியைக் கடனாகப் பெறும் முயற்சியை ரிலையன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டிலிருந்து தொடங்கி தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது. இதற்காக ஏற்றுமதிக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  ஜப்பானிய வங்கிகளின் கூட்டமைப்பான ஜேபிஐசி-யிடமிருந்து நிதி கடனாக பெறப்பட்டுள்ளது.

மோடி நடத்திய ஊர்வலம் குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்


வாரணாசியில் வேட்புமனு தாக்கல் என்ற பெயரில் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடத்திய ஊர் வலம் தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் உத்தரப் பிரதேச மாநில அரசு புகார் தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான ஆனந்த் சர்மா, செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெறும் போது, வாக்காளர் களைக் கவரும் வகையில், வாக்குப்பதிவு செய்யும் நேரத்தில் வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துள்ளார். இந்நிகழ்ச்சி அனைத்து தொலைக் காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது. வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்க ளில் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளிலும் தொலைக்காட்சியில் மோடி தொடர்பான செய்தி வெளியிடப் பட்டுள்ளது. விதிமுறைகளை மீறிய நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு அமைதியாக இருந்து விடாமல், நரேந்திர மோடி உள்பட ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆனந்த் சர்மா கூறியிருந்தார்.

பாஜக ஊழலில் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டது-சோனியா காந்தி

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

குஜராத்தில் ஒரு நாளைக்கு ரூ.11க்கு மேல் வருவாய் ஈட்டினால் அவரை குஜராத் அரசாங்கம் ஏழையாகக் கருதாது. இதைவிட வேறு என்ன வேண்டும். இதுதான் சொர்க்கமா? பாஜகவினர் தங்களது பதவியைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றனர். ஏழைக ளைப் பற்றி யோசிப்பதில்லை.

பள்ளியிலிருந்து இடை நிற்கும் மாணவர்களின் விகிதம் நாட்டிலேயே குஜராத்தில்தான் அதிகம். குறுகிய மனப்பான் மையை யும், சமூகத்திற்கிடையே பிரிவி னையை உருவாக்குவதும் பாஜகவின் சித்தாந்தம். தேசத்தை ஒற்றுமைப்படுத்துவதும், பல்வேறு மதங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்து வதும் காங்கிரஸின் சித்தாந் தம். குரூரம் நிறைந்த பாஜகவின் சித்தாந்தம் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும். அதுபோன்ற கொள்கைகள் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப் பட்டுவரும் தேசத்தின் கொள்கை களைக் கூறுபோட்டு விடும்.

சமூகத்தில் அனைவரும் சமம் என்ற வலுவான ஜனநாயகக் கட்டட மைப்பில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. பிரிவினை வாத சக்திகளின் தவறான வழிநடத்தலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; அவர்களை வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

பாஜக ஊழலில் அனைத்து எல்லைகளையும் தாண்டி விட்டது. அக்கட்சியினர் காங்கிரஸ் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு களைக் கூறிவருகிறது. ஊழலுடன் தொடர்புள்ளவர்கள் மீது நேரடி நடவடிக்கையை காங்கிரஸ் எடுத்துள்ளது. பாஜக அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இவ்வாறு சோனியா கூறியிருந்தார்.

மோடியையும், கேஜ்ரிவாலையும் உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களாக பட்டியலிட்ட டைம் மேகசின், அவர்களை பற்றி கூறுவது என்ன?


உலகின் அதிக செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலை டைம் மேகசின் வெளியிட்டுள்ளது. இதில், நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால், கோவையைச் சேர்ந்த முருகானந்தம், எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகிய நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பற்றிய அறிமுகத்தையும் ‘டைம்’ கொடுத்துள்ளது.

அதில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைத் தலைமை தாங்குவதற்காக முன்னிறுத்தப்பட்டுள்ள பிளவை ஏற்படுத்தும் அரசியல் வாதி’ என மோடி பற்றிக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘துரிதமான நடவடிக்கை, தனியார்துறையை ஊக்குவித்தல், நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்காக மோடி புகழ் பெற்றவர் என்றும் கூறியுள்ளது. ஏதேச்சதிகாரத்துக்கும், இந்து தேசியவாதத்துக்கும் புகழ் பெற்றவர் மோடி என்றாலும், இந்தக் கவலைகள் மாற்றத்தை எதிர்பார்க்கும் தேசத்தின் முன் ஒரு பொருட்டாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

நவீன இந்திய அரசியல்வாதிகளில் எதிர்ப்பு அரசியலாளரான கேஜ்ரிவால், இந்திய அரசியலில் சக்திமிக்க மாற்றுநபர்’ எனக் குறிப்பிட்டுள்ளது டைம். ‘49 நாள்களில் அவரின் ஆட்சிய திகாரம் முடிவுக்கு வந்தாலும், அவருக்கு எதிரான பிரச்சாரங்களைப் பின்னுக்குத் தள்ளி தன்னை நிரூபித்திருக்கிறார். பைபிள் கதைகளில் வரும் கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெற்ற தாவீதைப் போல, பெரும் கட்சிகளை எதிர்த்து இந்திய அரசியலில் சிறப்பிடம் பிடித்திருக் கிறார்’ என்றும் டைம் கேஜ்ரிவாலை வர்ணித்துள்ளது.

மோடியின் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.1.5 கோடி, கேஜ்ரிவாலிடம் ரூ.2.14 கோடி

மோடி அறிவித்துள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.2.14 கோடி. இதில் அவரது மனைவியின் சொத்துகளும் அடங்கும்.

வாரணாசியில் மோடி நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவின்படி அவரது அசையும் சொத்து மதிப்பு ரூ.51 லட்சத்து 57 ஆயிரத்து 582 ஆகும். இதில் மோடியின் கைவசம் உள்ள ரொக்கம் ரூ.29,700 மற்றும் வங்கி வைப்பு தொகை உட்பட்டதாகும். இத்துடன் ரூ.1.35 லட்சம் மதிப்புள்ள 4 மோதிரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. குஜராத்தின் காந்தி நகரில் மோடிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீடு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக நகைகள் மற்றும் சொத்துகள் வாங்க வில்லை. 2012-13 ஆண்டுக்கான வருமானவரி தாக்கலில் தனது ஆண்டு வருமானம் ரூ.4, 54,094 எனக் குறிப் பிட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கலின்போது கேஜ்ரிவால் அளித்துள்ள விவரத்தின்படி அவரது கையில் இருக்கும் ரொக்கத் தொகை வெறும் 500 ரூபாய் மட்டுமே. எனினும் கேஜ்ரிவாலின் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.2.14 கோடி. இது, மோடியின் சொத்து மதிப்பை விட அதிகமானது.

கேஜ்ரிவாலிடம் உள்ள அசையாத சொத்துகளின் மதிப்பு ரூ.92 லட்சம். ஐ.ஆர்.எஸ். அதிகாரி யான அவரது மனைவி சுனிதாவி டம் ஒரு கோடி மதிப்புள்ள அசை யாத சொத்துகள் உள்ளன. கேஜ்ரி வாலுக்கு உத்தரப் பிரதேசத்தின் இந்திராபுரத்தில் ஒரு வீடும் (ரூ.55 லட்சம் மதிப்பு), ஹரியானாவின் ஷிவானியில் ஒரு வீடும் (ரூ.37 லட்சம் மதிப்பு) உள்ளதாகவும் அவரது மனைவிக்கு ஒரு கோடி மதிப்பிலான வீடு குர்காவ்னிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் கடன் இல்லை. வங்கி வைப்புத் தொகையாக கேஜ்ரிவாலிடம் ரூ.4 லட்சமும், அவரது மனைவியிடம் ரூ.17 லட்சமும் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. மோடி, கேஜ்ரிவால் இருவருக் கும் கடன் ஏதும் இல்லை. கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா விற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.30 லட்சம் மற்றும் உறவினர்களிடம் ரூ.11 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media